ஷீர்டி சாயி சத்சரிதம்
கொஞ்சங்கொஞ்சமாகக் கண்கள் மலர்ந்தன. உடலின் அங்கங்கள் மெதுவாக அசைய ஆரம்பித்தன. சுவாசமும் திரும்பியது; வயிறு மேலும் கீழும் போய்வருவது நன்கு புலனாகியது.
முகத்தில் மலர்ச்சி உதயமாகியது. கண்கள் முழுமையாகத் திறந்தன. அசைவற்ற நிலை மறைந்தது. உயிர்த்து எழுந்ததன் லக்ஷணங்கள் (அடையாளங்கள்) நன்கு தெரிந்தன.
மறந்துபோன தேகவுணர்வு மறுபடியும் ஞாபகத்திற்கு வந்தது போலவும், காணாமற்போன புதையல் திரும்பக் கிடைத்தது போலவும், இந் நிகழ்ச்சி தோன்றியது. பொக்கிஷம் மறுபடியும் திறந்துகொண்டது!
சாயி விழித்தெழுந்ததுகண்டு எல்லாரும் மகிழ்ச்சியடைந்தனர். தெய்வாதீனமாக ஒரு விக்கினம் உடைந்தது கண்டு ஜனங்கள் ஆச்சரியத்தில் மூழ்கினர்.
பகத் (மகால்சாபதி) பாபாவின் முகத்தைக் குதூகலத்துடன் பார்த்தார். சாயியும் மௌனமாகத் தலையை அசைத்தார். மௌலவீயும் பக்கீரும் முகம் வெளுத்தனர். இவ்வாறாக, ஒரு பயங்கரமான நிகழ்வு தவிர்க்கப்பட்டது.
மௌலவீயின் துராக்கிரஹத்தைக் (அத்து மீறும் செயலைக்) கண்டு, பாபாவின் ஆணையைப் பாலனம் செய்யாது பகத் விட்டிருந்தாலோ, அல்லது தமது உறுதிப்பாட்டிலிருந்து லவலேசம் (சிறிதளவு)தளர்ந்திருந்தாலோ, பயங்கரமான விளைவு ஏற்பட்டிருக்கும்.
43 வருஷங்களுக்கு முன்னரே சமாதி நடந்துவிட்டிருக்கும். அவருடன் உரையாடுவது எங்கே? மனோஹரமான தரிசனந்தான் எங்கே?
உலகத்திற்கு உபகாரம் என்ற காரணத்துக்காகவே சாயீ சமாதி நிலையை விடுத்து சாதாரண நிலைக்குத் திரும்பி வந்தார். பக்த ஜனங்களும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.
பக்தர்களின் நன்மைக்காக உழைத்துக் களைப்படைந்தவர் பரமானந்தத்துடன் லயிப்பதற்காகச் சென்றார். ஆர் குறிப்பிட்ட நேரத்துக்கு முன்னதாகவே விழித்தெழுவது எப்படி சாத்தியம்? அவருடைய லீலை அளப்பறியது!
பாபா இவ்வாறு இயல்பான நிலைக்குத் திரும்பியது கண்டு பக்த ஜனங்கள் ஆனந்தமடைந்தனர். தரிசனம் செய்யக் குதித்தோடி முண்டியடித்தனர். இவ்வாறாக, புனருஜீவினம் (மீண்டும் உயிர்பெற்று எழுதல்) அனைவரையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியது.
ஆக, பாபாவின் நிர்யாணம்பற்றிய நிறைவுபெறாத காதை, இன்று என் நினைவுக்கு எட்டியபடி சம்பூர்ணமாக எடுத்துரைக்கப்பட்டுவிட்டது.
கதைகேட்கும் எல்லாருக்கும் சொல்கிறேன். ஒருகணம் உங்கள் மனத்தையே கேள்வி கேளுங்கள். நாம் ஏன் மகிழ்ச்சியடையவோ சோகமடையவோ வேண்டும்? இரண்டுமே ஆதாரமற்றதும் விவேகமற்றதுமான செயல்கள் அல்லவோ?
தேகமும் இந்திரியங்களும் பொருந்திய ஓர் அமைப்பு - மூன்றரை முழ நீளமுள்ள பாரவண்டி - இது மட்டும்தானா நமது சாயி? இந்த பிரமையை வேருடன் களைந்தெறியுங்கள்.