valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 28 June 2018

ஷீர்டி சாயி சத்சரிதம்

பாபா! தாங்கள் ஷிர்டிக்கு வந்ததும் இங்கேயே வசிப்பதும் ஷீர்டி செய்த சுகிர்தம் (நல்வினை) அன்றோ! தாங்கள் வாழ்வதால் ஷீர்டி புண்ணியத் தலம் ஆகிவிட்டது.

ஷிர்டி கிராமம் புண்ணியம் செய்தது. கிருபாமூர்த்தியான சாயி ஷிர்டியைத் தாம் வாழும் இடமாக அலங்கரித்து இக்கிராமத்திற்கு பாக்கியத்தையும் பேரதிர்ஷ்டத்தையும் வழங்கியிருக்கிறார்.

நீரே எனக்கு உணர்வூட்டி ஊக்கப்படுத்துகிறீர்; நீரே என்னுடைய நாவை அசைக்கிறீர். அவ்வாறிருக்க உம்முடைய புகழைப்பாட நான் யார்? நீரே வினையாற்றுபவரும் வினையாற்ற வைப்பவரும் அல்லீரோ!

தேவரீர் கூட்டுறவே எங்களுக்கு ஆகமங்களும் நிகமங்களும் ஆகும். தினந்தோறும் உங்களுடைய சரித்திரத்தை கேட்பதே எங்களை பாராயணமாகும்.

ஒரு கணமும் வீணாக்காமல் உமது நாமத்தை ஜபம் செய்வதே எங்களுக்கு கதாகீர்த்தனமாகும்; அதுவே எங்களது இடையறாத ஓதுகை; அதுவே எங்களுக்கு மன நிம்மதி.

உங்களுடைய வழிபாட்டில் இருந்து மனத்தைத் திருப்பி விடும் எந்தவிதமான சுகமும் எங்களுக்கு வேண்டா. ஆன்மீக மார்க்கத்தில் அதைவிடப் பெரிய வீழ்ச்சி ஏதுமுண்டோ?

எங்களுடைய ஆனந்தக்கண்ணீரே உமது பாதங்களை கழுவும் வெந்நீர்; சுத்தமான பிரேமையை சந்தனப்பூச்சு; தூய்மையான சிரத்தை உங்களுக்கு அணிவிக்கப் படும் ஆடை.

சடங்குகளுடன் கூடிய பூஜையை விட மேற்கூறியவிதமான மானசீக (மனத்தால் செய்யும்) பூஜையாலேயே உங்களை மகிழ்ச்சியடையச் செய்வோமாக.

அஷ்டபாவங்களையே நிர்மலமான எட்டு இதழ்களுடைய தாமரையாக ஒருமுகப்பட்ட தூய்மையான மனத்துடன் உமது பாதங்களில் சமர்ப்பித்து அதற்குண்டான பலன்களைப் பெறுவோம்.

எளிமையான விசுவாசமென்னும் கஸ்தூரி திலகத்தை நெற்றியில் இடுவோம். திடமான பக்தியை மேகலையாக அணிவிப்போம். பரிபூரண சரணாகதியாகத் தலையைப் பாதங்களின் கட்டைவிரல்களில் தாழ்த்துவோம். அசாதாரமான இப் பூஜையை மகிழ்ச்சியுடன் அனுபவிப்போம்.

அன்பை ரத்தினங்கள் பதித்த ஆபரணங்களாக அணிவிப்போம். பஞ்ச பிராணன்களை விசிறியாக்கி விசிறுவோம். உம்மிலேயே முழுமையாக மூழ்குதலை குடையாக ஆக்கி உஷ்ண நிவாரணம் செய்வோம். எல்லாரும் சேர்ந்து உமக்கு திருஷ்டி கழிப்போம்.

இவ்விதமாக நாங்கள் தங்களுக்கு சந்தனம், அக்ஷதை இத்தியாதி பொருள்களால் அஷ்டாங்கமாக பூஜையை ஆனந்தமாக செய்வோம். ஓ சாயி ராஜா! எங்களுடைய நன்மைக்காக தேவரீர் கடாக்ஷத்தை சம்பாதிப்போம்.