valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Friday 15 November 2019

ஷீர்டி சாயி சத்சரிதம்

"நீங்கள் இப்பொழுது வருவதாக இருந்தால், குதிரைவண்டி வெளியே தயாராக நிற்கிறது." குசால்பாவு ஆனந்தம் நிரம்பியவராக தீக்ஷிதருடன் ஷிர்டிக்கு வந்தார்.

தாத்பரியம் என்னவென்றால், குசால்பாவு வந்ததால் பாபாவின் ஆவல் நிறைவேறியது. பாபாவின் லீலையைக் கண்டு குசால்பாவுவும் ஆனந்தக்கண்ணீர் வடித்தார்.

பம்பாயில் வசித்துவந்த, ராம்லால் என்ற பெயர்கொண்ட பஞ்சாபி பிராமணர் ஒருவருக்கு கனவில் பாபாவின் தரிசனம் கிடைத்தது.

ஆகாயம், காற்று, சூரியன், வருணன் போன்ற இயற்கை தெய்வங்களின் அனுக்கிரஹ சக்தியால் நமக்கு உள்ளுலக, வெளியுலக ஞானம் கிடைக்கிறது. இது விழித்திருக்கும் நிலை.

உடலுறுப்புகள் அனைத்தும் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும்போது (தூக்கத்தில்), விழிப்பு நிலையில் செய்த செய்கைகளால் மனத்தில் ஏற்பட்ட சுவடுகள் உயிர்பெற்று, ஏற்றுக்கொள்வபவரையும் ஏற்றுக்கொள்ளத்தக்க விஷயங்களையும் பொறுத்து, மறுபடியும் மனத்திரையில் ஓடுகின்றன. இதுவே கனவுகளின் குணாதிசயம்.

ராம்லாலின் கனவோ விசித்திரமானது! அவர் எப்பொழுதுமே பாபாவை தரிசனம் செய்ததில்லை. பாபாவின் உருவத்தைப்பற்றியோ குணங்களைப்பற்றியோ எதுவேமே தெரியாது. ஆனால், பாபா அவரிடம் சொன்னார், "என்னைப் பார்க்க வாரும்".

கனவில் தெரிந்த உருவத்தை வைத்துக் கணித்தால், அவர் ஒரு ஞானியாகத் தென்பட்டார். ஆனால், அவர் எங்கு வசித்தார் என்பது ராம்லாலுக்கு தெரியவில்லை. விழித்துக்கொண்ட ராம்லால், ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கினார்.

அவர் போக விரும்பினார். ஆனால், இடமோ விலாசமோ தெரியவில்லை. தரிசனத்திற்கு எவர் அழைத்தாரோ, அவருக்குத்தான் திட்டம் என்னெவென்று தெரியும்!

அன்றைய தினமே பிற்பகல் வேளையில் ஒரு தெரு வழியாக நடந்துபோனபோது ஒரு கடையில் இருந்த படத்தை பார்த்துத் திடுக்கிட்டார்.

கனவில் பார்த்த உருவம் இதுவே என்று ராம்லால் நினைத்தார். உடனே, கடைக்காரரிடம் விசாரிக்க ஆரம்பித்தார்.

நிழற்படத்தில் உருவத்தின் லட்சணங்களை கவனமாகப் பார்த்தபின், "இவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்?" என்று கடைக்காரரை விசாரித்தார். "இது ஷிர்டியில் இருக்கும் சாயி" என்று அறிந்துகொண்ட பிறகே நிம்மதியடைந்தார்.

மற்ற விவரங்களை பிறகு தெரிந்துகொண்டார். பின்னர் ராம்லால் ஷிர்டிக்குச் சென்றார். பாபா மஹாசமாதி அடையும்வரை அவருடன் இருந்தார்.

பக்தர்களின் விருப்பங்களை பூர்த்திசெய்வதும், அவர்களை தரிசனத்திற்கு  அழைத்து அவர்களுடைய உலகியல் தேவைகளையும் ஆன்மீகத் தேடல்களையும் நிறைவேற்றிவைப்பதுமே பாபாவின் மனோரதமாக இருந்தது.

அவர், விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறிய நிலையில், விருப்பம் என்று எதுவும் இல்லாதவர்; சுயநலமற்றவர்; அஹங்காரமில்லாதவர்; பற்றற்றவர்; பக்தர்களின் ஆசைகளை நிறைவேற்றுவதற்காகவே அவதாரம் செய்தவர்.