ஷீர்டி சாயி சத்சரிதம்
47. பாம்பும் தவளையும்
ஓம் ஸ்ரீ விநாயகனே போற்றி! ஸ்ரீ சரஸ்வதியே போற்றி!
ஸ்ரீ குரு மஹாராஜனே போற்றி! குலதேவதைக்கும் ஸ்ரீ சீதாராமச்சந்திரனுக்கும்
என்னுடைய பணிவான வணக்கங்கள். பூஜ்யகுரு ஸ்ரீசாயிநாதனை
பக்தியுடன் ஸ்ரீம் தாழ்த்தி வணங்குகிறேன்.
எந்த முகத்தை ஒருகணம் பார்த்தாலே அனந்த ஜென்மங்களிலும் ஏற்பட்ட துன்பங்களும் துயரங்களும் அழியுமோ, எந்த வதனம் பரமானந்தத்தின் பிறப்பிடமோ, அந்த மங்களகரமான சாயியின் முகம் புனிதமானது.
சாயியின் கிருபைகூர்ந்த கண்வீச்சு கர்மபந்தங்களிலிருந்து உடனே விமோசனம் அளிக்கிறது. ஆத்மானந்த புஷ்டியை பக்தர்கள் ஒருகணமும் தாமதமின்றி பெறுகின்றனர்.
எவருடைய கிருபைகூர்ந்த கண்பார்வைக்கு எதிரில் கர்மங்களும் அகர்மங்களும் முடிச்சு அவிழுமோ , அவருடைய அருளெனும் சூரியவொளியில் உலகியல் வாழ்வெனும் மின்மினிப்பூச்சி ஒளியிழந்துபோய்க் காணாமற்போகிறது.
உலகமக்களின் பாவங்களையெல்லாம் கங்கைநதி கழுவித் தள்ளுகிறாள். இச் செய்கையால் தானே மாசடைகிறாள். தன்னை அந்த அசுத்தத்திலிருந்து விடுவித்துக்கொள்ளும் பொருட்டு, சாதுக்களின் பாதத்துளிக்காக (அடிபொடிக்காக) கங்கை ஏங்குகிறாள்.
'ஓ, எப்பொழுது சாதுக்கள் என்னுடைய கரையில் திருவடி பதிப்பார்கள்? எப்பொழுது அவர்கள் என்னுடைய தீர்த்தத்தில் ஸ்நானம் செய்வார்கள்?" என்று கங்கை ஏங்குகிறாள். அவ்வாறு நடைபெறாவிட்டால், தன்னுடைய பாவங்கள் விலக வழியில்லாமல் போகும் என்பதை அவள் நிச்சயமாக அறிவாள்.
சான்றோர்களே, அதுமாதிரியான சாதுக்களில் மகுடமணியான சமர்த்த சாயியின் திருவாய்மொழி இது என்பதை நன்கு அறிந்து, தூய்மையளிக்கும் இக் கதையை மிகுந்த பக்தியுடன் கேளுங்கள்.
இக் கதையின் மகத்துவம் என்னவென்றால், கேட்பவர் ஞானியாக இருப்பினும், அஞ்ஞானியாக இருப்பினும், கேட்பவரின் கர்மபந்தங்களை அறுத்து வீழ்த்தும் பரம பாவனமான (தூய்மையளிக்கும்) கதை இது!
எல்லாருடைய கண்களின் ஒளியும் எல்லாருடைய காதுகளின் ஒலியுமான சாயி, தாமே என்னுடைய இதயத்துள் புகுந்துகொண்டு இக் கதையைச் சொல்கிறார்.