valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 31 December 2020


ஷீர்டி சாயி சத்சரிதம்

இந்த எளிய சாதகப்பறவை நிர்மலமான தண்ணீராகிய
ஆனந்தத்தையே நாடுகிறது. இந்த மாதவனுக்கு அதை
அளித்து உம்முடைய உறுதிமொழியை நிறைவேற்றுவீர்;
ஓ, உம்முடைய உறுதிமொழியை நிறைவேற்றுவீர்.


                                      ஆரதி செய்கிறோமே ......(பல்லவி)

கோசாவி பாபாவிடம் கேட்டார், "என்னிடம் இரண்டு ரூபாய்தான் இருக்கிறது. நான் எப்படி ஜாம்நேருக்குச் சென்று, வீட்டிற்குப் போய்ச் சேர முடியும்?

பாபா சொன்னார், "நீர் தைரியமாகக் கிளம்பும். உம்முடைய தேவைகள் அனைத்தும் ஏற்பாடு செய்யப்படும்". சாயி பாதங்களில் நம்பிக்கை வைத்து கோசாவி உடனே கிளம்பினார்.

பாபாவின் ஆக்ஞய்க்குத் தலைவணங்கி உதீ பிரசாதத்தை வாங்கிக்கொண்டு, காரியமே கண்ணாக பாபாவின் அனுமதியுடன் பாபகீர் உடனே புறப்பட்டார்.

இப்பொழுது இருப்பதுபோல் அப்பொழுது ஜாம்நேருக்கு இருப்புப்பாதைத் தொடர்பு கிடையாது. பிரயாணம் சுலபம் இல்லை. கோசாவியின் சித்தம் கலங்கியது.

ரயிலேறி ஜல்காங்வ் ரயில் நிலையத்தில் இறங்கி மீதி தூரத்தை நடந்தே கடக்க வேண்டும். 

ரயில் கட்டணம் ஒரு ரூபாய் பதினான்கு அணா; மிச்சம் இரண்டு அணாவை வைத்துக்கொண்டு மீதி தூரத்தை எவ்வாறு கடக்கமுடியும்?

இவ்விதமாகக் கலங்கிய கோசாவி, ஜல்காங்வ் ரயில் நிலையத்தில் இறங்கிப் பயணச் சீட்டைத் திருப்பிக்கொடுத்துவிட்டு வெளியே வந்தபோது, சிறிது தூரத்தில் ஒரு பியூன் தெரிந்தான்.

பியூன், "உங்களில் யார் ஷிர்டியிலிருந்து வரும் பாபுகீர் புவா என்று எனக்கு விவரம் சொல்லவேண்டும்" என்று வெளியே வரும் பிரயாணிகளைக் கேட்டுக் கொண்டிருந்தான்.

பியூன் தேடிக்கொண்டிருந்த நபர் தாமே என்று அறிந்த கோசாவி, முன்னுக்கு வந்து, "நான்தான் அது; உமக்கென்ன வேண்டும்?" என்று கேட்டார்.

பியூன் சொன்னான், "சாந்தோர்கர் உமக்காக என்னை அனுப்பியிருக்கிறார். வாருங்கள், சீக்கிரமாக குதிரைவண்டியில் ஏறுங்கள். அவர் உங்களுக்காக ஆவலுடன் காத்திருக்கிறார்."

புவா நிம்மதிப் பெருமூச்சு விட்டார். ஷிர்டியிலிருந்து நானாவுக்குச் செய்தி போயிருக்கும் போலிருக்கிறது. அதனால்தான், சரியான நேரத்திற்கு குதிரைவண்டி வந்திருக்கிறது. என்னுடைய பெரிய தொல்லை தீர்ந்தது.

மீசை, தாடி, கிருதாவெல்லாம் வைத்துக்கொண்டும் பளிச்சென்று முழுக்காற் சட்டை அணிந்துகொண்டும் பியூன், பார்ப்பதற்கு சாமர்த்தியசாலியாகத் தெரிந்தான். குதிரைவண்டியும் அழகாக காட்சியளித்தது. 



 

Thursday 24 December 2020

 ஷீர்டி சாயி சத்சரிதம்

'ஆரதி சாயி பாபா' என்ற இந்த ஆரதிப் பாட்டு ராமஜனார்தனர் இயற்றிய 'ஆரதி ஞான ராஜா' என்ற பாட்டைப் போலவே அமைந்திருக்கிறது. இரண்டுமே ஒரே விருத்தத்தில் (மெட்டில்) அமைந்தவை.


ராமஜனார்தனர் என்பவர் ஜனார்த்தன சுவாமியின் பக்தர். மாதவ் அட்கர் சாயி பாதங்களில் மூழ்கியவர். இந்தக் கவிதை பரிபூரணமாக சாயி பிரசாதம் நிரம்பியது. எந்த பஜனையும் இந்தப் பாட்டைப் பாடாமல் நிறைவுபெறாது.


இந்த ஆரதி பாபாவுக்கு பிடித்தமானதுங்கூட! இதை முழுமையாகக் கேளுங்கள். இந்தப் பாட்டு உதீயுடன் பாபாவால் அனுப்பப்பட்டது. பலனைப்பற்றி பிறகு தெரிந்துகொள்வீர்கள்; பாட்டைக் கேளுங்கள்.


ஆரதிப் பாட்டு

ஆரதி செய்கிறோமே, ஓ சாயி பாபா! ஜீவன்களுக்கு
சௌக்கியம் அளிப்பவரே, பாததூளிகளில் இவ்வடிமைக்கு
அடைக்கலம் தாருங்கள்; பக்தர்களுக்கு அடைக்கலம்
தாருங்கள். (பல்லவி)


மன்மதனை எரித்தவரே, சுய சொரூபத்தில் மூழ்கியவரே,
மோட்சத்தை நாடும் ஜனங்களுக்கு ஸ்ரீரங்கனாகத் தோன்றுகிறீர்;
ஸ்ரீரங்கனாகவே தோன்றுகிறீர்.

மனத்தின் பாவம் எப்படியோ, அப்படியே தேவரீர்
அளிக்கும் அனுபவமும். கருணைக்கடலே, உம்முடைய
மாயை அவ்விதமே, உம்முடைய மாயை அவ்விதமே.

உம்முடைய நாமத்தை ஜபம் செய்தால் சம்சார துக்கங்கள்
அழிந்துபோகின்றன. உம்முடைய செய்கை ஆழங்கான
முடியாதது! அனாதைகளுக்கு வழி காட்டுகிறீர்;
அனாதைகளுக்கு வழி காட்டுகிறீர்.

கலியுகத்தின் அவதாரமே, தேவரீர் குணமுள்ள பிரம்மமாக
அவதரித்திருக்கிறீர். ஓ, சுவாமி தத்த  திகம்பரரே!
தத்த திகம்பரரே.

வாரமொருமுறை வியாழக்கிழமையில் பக்தர்கள் பிரபுவின் பாதங்களை தரிசனம் செய்ய புனிதப் பயணம் செய்கிறார்கள்.
பிறவி அச்சத்தை நிவாரணம் செய்யுங்கள்; அச்சத்தை
நிவாரணம் செய்யுங்கள்.

உமது பாததூளிகளுக்குச் செய்யும் சேவையே என்னுடைய
பொக்கிஷம்; நான் உங்களை வேறெதுவும் கேட்கவில்லை.
ஓ, தேவாதிதேவா, தேவாதிதேவா. 

 


 



Thursday 17 December 2020



 ஷீர்டி சாயி சத்சரிதம்

ஷிர்டியிலோ, ஜாம்நேரில் என்ன நடந்துகொண்டிருந்தது என்பது ஒருவருக்கும் தெரியாது. ஆனால், எங்கும் செல்லும் வல்லமை பெற்ற, எல்லாம் அறிந்த சாயிக்கு இவ்வுலகில் நடப்பது எதுவும் தெரியாமல் இருக்கமுடியாதே!


பக்தனுடைய ஆத்மாவுடன் ஒன்றிவிட்ட பாபாவுக்கு நானாவின் இல்லத்தில் இருந்த அவஸ்தை தெரிந்தது. இளகிய மனத்தினரான சாயி என்ன செய்தார் என்று பாருங்கள்.


நானாவுக்கு உதீ அனுப்பவேண்டும் என்று பாபா விரும்பினார். கோசாவி ராம்கீர் புவாவுக்கு தம்முடைய கிராமத்திற்கு திரும்பவேண்டுமென்ற பலமான எண்ணம் திடீரென்று எழுந்தது!


அவருடைய சொந்த ஊர் காண்தோச் ஜில்லாவில் இருந்தது. ஆகவே, அவர் அங்கே செல்வதற்குண்டான ஆயத்தங்களை செய்துகொண்டு பாபாவை தரிசனம் செய்ய மசூதிக்கு வந்தார்.


பாபா ஜீவிதமாக இருந்தபோது, யார், எந்த வேலைக்காகச் செல்லவேண்டியிருந்தாலும் பாபாவின் பாதங்களை வணங்கி அனுமதி பெறாமல் யாரும் வெளியில் சென்றதில்லை.


திருமணமோ, உபநயனமோ, விதிமுறைகளின்படி சடங்குகளுடன் செய்யவேண்டிய விழாக்களோ, வேறு ஏதாவது விழாவோ, இவை சம்பந்தமாகச் செய்யப்பட்ட திட்டமிடுதலோ - அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் பாபாவின் அனுமதி, தவறாது பெறப்பட்டது.


பாபாவின் மனப்பூர்வமான அனுமதியும் உதீ பிரசாதமும் ஆசிகளும் இன்றி, எந்த விழாவும், விக்கினமின்றி நிறைவேறாது. இதுவே, சகலமான மக்களின் பூரணமான நம்பிக்கை.


இதுவே கிராமத்தின் வாழ்க்கை இயல்பாகிவிட்டது. இதை அனுசரித்து ராம்கீர் புவாவும் மசூதிக்கு வந்து பாபாவின் பாதங்களை வணங்கி, கிளம்புவதற்கு அனுமதி வேண்டினார்.


அவர் சொன்னார், "பாபா, நான் கான்தேச் ஜில்லாவிலுள்ள என்னுடைய கிராமத்திற்குச் செல்ல விரும்புகிறேன். ஆசிகளுடன் உதீயும்  அளித்து, உங்கள் சேவகனாகிய எனக்கு அனுமதியளியுங்கள்".


பாபுகீர் என்று பாபா செல்லமாக அழைத்த ராம்கீர் புவாவிடம் பாபா சொன்னார். "போம், உம்முடைய கிராமத்திற்கு குஷியாகப் போய் வாரும். வழியில் சிறிது ஓய்வு எடுத்துக்கொள்ளும்.-


"ஆகவே, முதலில் ஜாம்நேருக்குச் சென்று நானாவின் வீட்டில் தாங்கும். அவருடைய சமாச்சாரங்களை விசாரித்தபின், நீர் உமது வழியில் செல்லலாம்".


பாபா மாதவராவிடம் கூறினார், "சாமா, அக்கா இயற்றிய ஆராதிப்பாட்டை ஒரு காகிதத்தில் எழுது. அதை இந்த கோசாவியின் மூலம் நானாவுக்கு அனுப்பலாம்."


பிறகு அவர் கோசாவிக்கு உதீ கொடுத்தபின், ஒரு சிறிய உதீ பொட்டலமும்  கட்டி அவரிடம் கொடுத்தார். இவ்விதமாக பாபா நானாவுக்கு உதீ அனுப்பினார்.

"இந்த உதீ பொட்டலத்தையும் ஆரதிப் பாட்டையும் நானாவிடம் கொடும். அவருடைய குடும்ப க்ஷேமம் பற்றிக் குசலம் விசாரித்துவிட்டு உம்முடைய சொந்த ஊருக்குச் செல்லும்."




Thursday 10 December 2020


 ஷீர்டி சாயி சத்சரிதம்

இந்நிகழ்ச்சியிலாவது ஊதுவத்தியிலிருந்து விழுந்த விபூதி தேள்கொட்டுக்கு மருந்தாகப் பூசப்பட்டது. ஆனால், புழுதிமண்ணும் உதீயாக உபயோகப்படுத்தப்பட்ட போது அதே அனுபவத்தை அளித்தது.


ஒருவர் நெற்றியில் இடப்பட்ட  புழுதிமண், வேறு எங்கோ இருந்த நோயாளியை குணப்படுத்தியது!


வேறு கிராமத்தில் வசித்துவந்த தம் மகள் பிளேக் வியாதிக் கட்டிகளாலும் ஜுரத்தாலும் அவதிப்படுகிறாள் என்று தெரிந்து ஒரு தந்தை கவலையுற்றார்.

தந்தை பாந்தராவில் வசிக்க, மகள் வேறொரு கிராமத்தில் வசித்துவந்தாள். ஆகவே, அவர் நானாவுக்குச் (நானா கோவிந்த சாந்தோர்கருக்குச்) செய்தி அனுப்பினார்.


அவருக்காக நானா பாபாவிடம் பிரார்த்தனை செய்து அவரை இக் கவலையிலிருந்து விடுவிக்கவேண்டும் என்றும் பாபாவின் உதீ பிரசாதம் சிறிது அவருக்கு அனுப்ப வேண்டும் என்றும் கெஞ்சி, செய்தி அனுப்பினார்.


செய்தியைக் கொண்டுபோனவர் நானாவை வழியிலேயே  சந்தித்தார். நானா அப்பொழுது தம் மனைவியுடன் கல்யாண் என்னும் இடத்திற்கு போகக் கிளம்பிவிட்டிருந்தார்.


தாணே ரயில் நிலையத்திற்கு அருகில் அவருக்கு இச் செய்தி கிடைத்தது. நானாவின் கைவசம் அப்பொழுது உதீ இல்லை. ஆகவே, சாலையிலிருந்த புழுதி மண்ணில் ஒரு சிட்டிகை எடுத்துக்கொண்டார்.


சாலையில் நின்றவாறே சமர்த்த சாயியை மன்றாடிப் பிரார்த்தனை செய்தபின், திரும்பி, எடுத்த புழுதிமண்ணைத் தம் மனைவியின் நெற்றியில் இட்டார்.


அங்கோ, அந்த பக்தர் (தந்தை) வீட்டிலிருந்து கிளம்பி தம் மகள் வசிக்கும் ஊருக்குச் சென்றார். அங்கு அவருக்காக காத்திருந்த செய்தியைக் கேட்டு மகிழ்ந்தார்.


மூன்று நாள்களாக மகள் கடுமையான ஜுரத்தால் அவதிப்பட்டுப் பெரும்  வேதனையை அனுபவித்தாள். தந்தை சென்ற நாளுக்கு முந்தைய நாள்தான் ஜுரம் சிறிது இறங்கியிருந்தது.


பின்னோக்கிப் பார்த்தபோது, நானா சாயியைப் பிரார்த்தனை செய்தபின் புழுதி மண்ணை உதீயாக உபயோகித்த நேரத்திலிருந்துதான் மகளின் ஜுரம் குறைய ஆரம்பித்தது என்பதைத் தந்தை உணர்ந்தார்.


எப்படியும், இந்த வியாதியின் கதை விஸ்தாரமாக தக்க சமயத்தில் பிறகு சொல்லப்படும். உதீ சம்பந்தமான விவரத்தை மட்டும் இப்பொழுது சொன்னேன்.


பக்தனுக்கு மங்களம் அருள எப்பொழுதும் தயாராக இருந்த சாயி, பிரேமை மிகுந்த பக்தரான இதே நானா சாந்தோர்கருக்கு ஜாம்நேரில் மாம்லத்தாரக    உத்தியோகம் செய்துகொண்டிருந்தபோது அற்புதமொன்று செய்தார். அதைச் சொல்கிறேன்; கேளுங்கள்.


உதீயின் மஹிமை அபாரமானது. கதை கேட்பவர்களே! அந்த அற்புதத்தைச் சொல்கிறேன்; கேட்டு ஆச்சிரியப்படுவீர்கள்.


நானாவின் மகள் பிரசவ வேதனையால் துடித்துக்கொண்டிருந்தாள். எந்நேரமும் பிரசவம் ஆகலாம் என்ற நிலைமை, ஜாம்நேரில் நானாசாஹேப் சமர்த்த சாயியைத் தம்மால் இயன்ற வழிகளில் எல்லாம் கூவி அழைத்துக்கொண்டிருந்தார். 




Thursday 3 December 2020


 ஷீர்டி சாயி சத்சரிதம்

"போதும் இந்த ஏவலாள் உத்தியோகம். சுதந்திரமான வியாபாரம் இதைவிட எவ்வளவோ மேன்மையாக இருக்கும்". சிலகாலம் கழிந்த பின்னர், இறைவன் ஜனீக்கு கருணை புரிந்தான்.


அடிமைத் தொழிலும் பிறரைச் சார்ந்த வாழ்வும் அகன்றது. ஜனீ சுதந்திரத்தை அனுபவித்தார். சொந்தமாகவே உணவு வசதியுடன் கூடிய ஒரு தங்கும் விடுதியை ஆரம்பித்தார்.


'ஆனந்தாச்ரமம்' என்று அதற்குப் பெயர் வைத்தார். கடுமையாக உழைத்தார். நாளுக்குநாள் அவ்விடுதியின் புகழ் பரவி அவருக்கு மகிழ்ச்சியையும் மனநிறைவையும் அளித்தது.


பாபா சூசகமாகத் தெரிவித்தாவாறே அனைத்தும் நடந்ததை உணர்ந்து, சாயிபாதங்களில் விசுவாசம் வளர்ந்தது; நாள்கள் செல்லச் செல்ல திடமான பக்தியாக சொரூபம் ஏற்றது. பாபாவின் அறிவுரையைப் பின்தொடர்ந்த அனுபவம் ஜனீயின் மனத்தில் அழியாத சுவடுகளை விட்டுச் சென்றது.


சாயியின் திருவாய்மொழி அருளிய அனுபவம் ஜனீக்கு கிடைத்தது; அதன் பயனாக கேட்பவர்களுக்கு இப்பொழுது ஒரு காதை கிடைக்கிறது. அவருக்கு சாயியின் மீதிருந்த பிரேமை பெருகியது. சாயியின் செயற்கரிய செயல்கள் கற்பனைக்கு எட்டாதவை அல்லவோ!


அவருடைய பேச்செல்லாம் தம்மைப்பற்றியதுபோல் தோன்றும்; ஆனால், அவர் வேறொருவரைப் பற்றி பேசிக்கொண்டிருப்பார். இரவுபகலாக பாபாவுடன் இருந்தவர்கள் இந்த அனுபவத்தைப் பெற்றனர்.


பின்னர், ஒன்றன்பின் ஒன்றாக இவ்வனுபவங்கள் தொடர்ந்தன. நாராயண் ஜனீயின் பக்தியும் ப்ரேமையும் வளர்ந்தது. அவருடைய பக்திபாவத்தை வெளிப்படுத்தும் புத்தம் புதிய கதையொன்றைக் கேளுங்கள்.

ஒரு சமயம் நாராயண் ஜனீயின் நண்பர் ஒருவரைத் தேள் கொட்டிவிட்டது. அவர் வலியாலும் வேதனையாலும் துடித்தார். 

 

கொட்டுவாயில் தடவுவதற்கு பாபாவின் உதீயே சிறந்த மருந்து. ஆனால், எங்கே தேடியும் ஜனீக்கு உதீ கிடைக்கவில்லை.

நண்பருக்கு வேதனை பொறுக்கமுடியவில்லை; ஆயினும் உதீ எங்கும் கிடைக்கவில்லை. பாபாவின் நிழற்படத்தை நோக்கினார்; கருணை வேண்டினார் ஜனீ.


படத்தின் கீழே ஊதுவத்தியிலிருந்து விழுந்த சாம்பல் சிறிது இருந்ததை ஜனீ பார்த்தார். அக்கணமே அதை ரட்சிக்கும் உதீயாகவே நினைத்தார்.


அந்தச் சாம்பலிலிருந்து ஒரு சிட்டிகை எடுத்துத் தேள்கொட்டிய இடத்தில சாயிநாம மந்திரத்தைச் சொல்லிக்கொண்டே தடவினார். நம்பிக்கை எப்படியோ அப்படியே அனுபவம்; நம்பியவர்க்கு நடராஜா!


சாம்பலை விரல்களால் கொட்டுவாயில் பூசியவுடனே வேதனை, வந்தவழியே சென்று மறைந்ததென்று சொன்னால், கேட்பதற்கு நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். இருவரும் பிரேமையால் மனம் நெகிழ்ந்தனர். 




Thursday 5 November 2020



 ஷீர்டி சாயி சத்சரிதம்

தாமரையிலைத் தண்ணீரைப்போல், இந்த தேகம் ஒருநாள் கீழே விழும். ஆகவே, தேகாபிமானத்தை விட்டுத் தொலையுங்கள். இதைத்தான் பாபா உதீ அளிப்பதன் மூலம் தெரிவித்தார்.

இவ்வுலகமனைத்தும் சாம்பலால் போடப்பட்ட ஒரு கோலமே என்பதை உறுதியாக அறியவும். உலகமே ஒரு மாயை என்பதுபற்றிச் சிந்தித்து, உதீயின் சத்தியத்துவத்தை மட்டும் நம்புக.

உதீ, மண்ணே என்று தெரிந்துகொள்ளவும். உருவமும் பெயரும் உள்ள வஸ்துபொருள் எதுவாக இருந்தாலும் சரி, கடைசியில் மண்ணாகத்தான் ஆகவேண்டும். மாறுபாடில்லாத, என்றும் அழியாத மண்ணைப் பார்த்து, இவ்வுலகில் மற்ற பொருள்கள் அடையும் வளர்ச்சியும் மாறுபாடுகளும் தேய்மானமும் வெறும் பெயரளவிற்கே என்பதை அறியவும்.

பாபா குதூகலமான மனோநிலையில் இருக்கும்போது ஒரு பாட்டுப் பாடுவார். கதை கேட்பவர்களே! உதீயைப் பற்றிய இக் குறுஞ்செய்யுள் பாட்டை பயபக்தியுடன் கேளுங்கள்.

"நெஞ்சத்தைக் கிள்ளும் ராமன் வந்தான், வந்தானே; கோணி கோணியாய் உதீயை கொண்டுவந்தானே! (பல்லவி) மனதில் மகிழ்ச்சி அலைகள் பொங்கும்போது, பாபா இந்தப் பல்லவியைத் திரும்ப திரும்ப மிக இனிமையான குரலில் பாடுவார்.

சாராம்சம் என்னவென்றால், பாபாவின் துனீ மங்களம் தரும் உதீயை மூட்டை மூட்டையாக விளைவித்தது. மூட்டைகளைக் கணக்கு வைத்துக்கொள்ளும் அளவிற்கு சாமர்த்தியம் யாருக்கு இருந்தது?

உதீ அளிப்பதின் சூக்குமமான அர்த்தத்தையும் வெளிப்படையான அர்த்தத்தையும் உதீயின் ஆன்மீக மேன்மையையும் நன்கு அறிந்துகொண்ட  கதைகேட்பவர்கள், ஒளிவுமறைவு இல்லாத சுயநல நோக்கத்துடன் கேட்கலாம், "க்ஷேமமாக இவ்வுலகில் வாழ்வதற்க்கு உதீ ஏதும் உபயோகமாக இருக்குமா?"

நன்று, உதீக்கு இந்தப் பலனை அளிக்கும் குணமும் உண்டு. இல்லையெனில், அது எப்படி இவ்வளவு புகழ் அடைந்திருக்கும்? பரமார்த்த மார்க்கத்தில் விற்பன்னராகிய சாயி, ஆன்மீக லாபத்தையும் உலகியல் லாபத்தையும் சேர்த்தே அளிக்கிறார்.

உதீ யோகஷேமம் அளித்த காதைகள் அநேகம், அநேகம். விரிவுக்கு அஞ்சி ஒரு சில கதைகளை சுருக்கமாக சொல்கிறேன்.

ஒருகாலத்தில், ஜனீ என்ற குடும்பப் பெயரும் மோதீராம் நாராயண் என்ற பெயரும் கொண்ட ஒருவர் நாசிக்கில் வசித்துவந்தார். அவர் ஓர் இல்லறத்தவர். அவ்தீட்சியை உட்பிரிவைச் சேர்ந்த குஜராத்தி பிராமணர்.

ராமச்சந்திர வாமன் மோடக் என்பவர் பாபாவின் விசுவாசம் நிறைந்த பக்தர்களுள் ஒருவர். நாராயண் ஜனீ அவரிடம் வேலை செய்துவந்தார்.

பாபா ஜீவிதமாக இருந்தபோதே நாராயண் ஜனீ தம் தாயாருடன் தரிசனத்திற்கு சென்றிருந்தார்.
பாபா அத் தருணத்தில் தாமாகவே சூசகமாகத் தெரிவித்திருந்தார். "இப்பொழுதிலிருந்து நமக்கும் அடிமைத் தொழிலுக்கும் சம்பந்தைமில்லை.-

 


 

Thursday 29 October 2020


 ஷீர்டி சாயி சத்சரிதம்

விபூதியை பாபா எந்த உள்நோக்கத்தோடு அளித்தார்? இவ்வுலகில் கண்ணுக்குத் தெரியும் ஷிருஷ்டியெல்லாம் சாம்பல்தான் என்பதை அனைவரும் திட்டவட்டமாகத் தெரிந்துகொள்ளவேண்டும் என்பதே அவருடைய உள்ளக்கிடக்கை.

மனித உடலும் பஞ்சபூதங்களாலான ஒரு மரக்கட்டையே. சுகதுக்கங்களை அனுபவிப்பதற்காகவே வாழ்கிறது. அனுபவம் முடிந்தவுடன் பொத்தென்று கீழே வீழ்கிறது; சாம்பலாக்கப்படுகிறது. இதற்கு விதிவிலக்கே கிடையாது.

நீரும் நானும் இந்த நிலையில்தான் இருக்கிறோம். இதை உமக்கு ஞாபகப்படுத்தவும் இது விஷயமாக நீர் இரவுபகலாக விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும் என்பதற்காகவுமே நான் இந்த விபூதியை அளிக்கிறேன்.

அகில உலகமும் மாயையால் நிரம்பியது. பிரம்மமே சத்யம்; பிரம்மாண்டம் நிலையற்றது. உதீயே இவ்வுண்மைக்கு அற்புதமான அடையாளம். இது நிச்சயம் என்றறிக.

மனைவி, மக்கள், மாமன், மருமகன் - இவர்கள் யாரும் யாருக்கும் சொந்தமில்லை. அம்மணமாக இவ்வுலகுக்கு வருகிறோம்; அம்மணமாகவே இவ்வுலகிலிருந்து  வெளியேறுகிறோம். உதீயே இதை நமக்கு ஞாபகப்படுத்துகிறது.

உதீயைப் பூசிக்கொள்வதால் ஆதிவியாதி (பிறவிப்பிணி) தொலைந்துபோகிறது. உதீயின் மிக உயர்ந்த தத்துவார்த்தம் என்னவென்றால், 'விவேகத்தால் விளைந்த பற்றற்ற நிலை'.

நம்மால் முடிந்த தக்ஷிணை கொடுத்துப் பிரவிருத்தி மார்க்கத்திலிருந்து (உலகியல் உழற்சியிலிருந்து) விடுபட முடிந்தால், கொஞ்சங்கொஞ்சமாக நிவிர்த்தி மார்க்கத்தின் (விடுதலையடையும் பாதையின் ) குறிகள் தெரிய ஆரம்பிக்கும்.

பற்றற்ற நிலை கைக்கு கிடைத்தாலும் விவேகம் இல்லாதுபோனால், அது பயனின்றிப் போகும். ஆகவே, உதீயை மரியாதையுடன் பெற்றுக்கொள்ளுங்கள்.

விவேகத்தையும் பற்றற்ற மனப்பான்மையையும் இணைப்பது விபூதியையும் தக்ஷிணையையும் இணைப்பது போலாகும். இவ்விணைப்பு ஏற்படவில்லையெனில், பிறவியென்னும் நதியின் அக்கரை சேர்வது இயலாத காரியம்.

பெரியவர்களும் சிறியவர்களும் பாபாவை தரிசனம் செய்ய வந்தனர். பாபாவின் பாதங்களில் விநயத்துடன் வணங்கிவிட்டு வீடு திரும்புமுன், பாபா அவர்களுக்கு விபூதி அளித்தார்.

மசூதியில் தினமும் இரவுபகலாக குன்றாது துனீ எரிந்துகொண்டிருந்தது. பாபா பிடிப்பிடியாக ரட்சையை எடுத்து பக்தர்கள் விடைபெறும்போது அளித்தார்.

பக்தர்களின் தலைமேல் கைவைத்து, அதே சமயம் நெற்றியில் கட்டை விரலால் ரட்சை இட்டு மங்கள வாழ்த்தும் கூறி, துனீயின் சாம்பல் பிரசாதமாக அளிக்கப்பட்டது.

சாம்பல், ரட்சை, விபூதி, உதீ இவை நான்கும் வெவ்வேறு சொற்களாக இருப்பினும் வஸ்து (பொருள்) ஒன்றே. பாபா குறைவேதுமின்றி அபரிதமாக தினமும் அளித்த பிரசாதம் இதுவே.

சம்சார வாழ்க்கையும் உதீயைப் போன்றதே. நாமும் விபூதியாகிவிடும் நாள் வரத்தான் செய்யும். இதுதான் உதீயின் மஹிமை. இதை ஒருநாளும் மறக்க வேண்டா.  

 


 

Thursday 22 October 2020

                                                        ஷீர்டி சாயி சத்சரிதம்

                                             33 . உதீயின்பிரபாவம் (பகுதி 1 )

ஓம் ஸ்ரீ விநாயகனே போற்றி! ஸ்ரீ சரஸ்வதியே போற்றி!
ஸ்ரீ குருமஹாராஜனே போற்றி! குலதேவதைக்கும் ஸ்ரீ சீதாராமச்சந்திரனுக்கும் என்னுடைய பணிவான வணக்கங்கள். பூஜ்யகுரு ஸ்ரீசாயிநாதனை பக்தியுடன் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.


எந்த ஞானிகளின் கிருபைமிகுந்த கடைக்கண்பார்வை மலைபோன்ற பாவங்களை அக்கணமே எரித்துவிடுமோ, கலியுகத்தின் மலங்களைக் கழுவி அடித்துக்கொண்டு போகுமோ, அவர்களை வணங்குவமாக.


அவர்களை செய்யும் உபகாரங்களுக்கு நன்றிக்கடன் தீர்க்க எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும் போதாது. அவர்கள் இயல்பாக பேசுவதே நமக்கு நலந்தரும் உபதேசம்; அதுவே முடிவில்லாத பரம சுகத்தைக் கொடுக்கும்.


'இது என்னுடையது, அது அவருடையது' என்னும் எண்ணமே அவர்களுடைய சித்தத்தில் எழுவதில்லை. உலகியல் வாழ்வுக்கே உரித்தான பேதங்காட்டும் எண்ணங்களுக்கு அவர்களுடைய இதயத்தில் இடமில்லை.


கடந்த அத்தியாயத்தில் குரு மகிமையின் ஓர் அம்சத்தை கேட்டீர்கள். கதை கேட்பவர்களே! இந்த அத்தியாயத்தில் உதீயின் சக்தியைப் பற்றிக் கேளுங்கள்.


பாபா கேட்டு கேட்டு தக்ஷிணை வாங்கினார். அதை ஏழைகளுக்கும் எளியவர்களுக்கும் தருமம் செய்தார். மீதமிருந்த பணத்திற்கு விறகுகட்டைகளை வாங்கி குவியலாக சேமித்துவைத்தார்.


இவ்விதம் சேமித்த காய்ந்த விறகுகளை தமக்கெதிரில் இருந்த துனீயில் ஹோமம் செய்தார். அதிலிருந்து கிடைத்த அபரிதமான உதீ (சாம்பல்) பக்தர்களுக்கு அளிக்கப்பட்டது.


ஷிர்டியிலிருந்து வீடு திரும்பும் பக்தர்கள் பாபாவிடம் அனுமதி பெற வந்தபோது, அவர்களுக்கு உதீ அளிப்பது பாபாவின் பழக்கம். இது அனைவர்க்கும் தெரிந்திருந்தது.


வேறுவிதமாகச் சொன்னால், பாபா 'உதீ கொண்டு வா' என்று சொன்னாலே, வீடு திரும்ப அனுமதி கிடைத்துவிட்டதென்று அறிந்து பக்தர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.


ஆனால் , பக்தர்கள் ஷிர்டியில் தங்கும்வரை, காலையோ நண்பகலோ  மாலையோ எந்த நேரத்திலும் பாபா உதீ கொடுத்ததில்லை; வெறுங்கையுடன் தங்குமிடத்திற்கு திருப்பியனுப்பினார்.

இதுவே நித்திய கிரமமாக இருந்தது. இந்த உதீயின் தருமநெறிதான் என்ன? மசூதியில் எதற்காக எப்பொழுதும் எரிந்துகொண்டிருக்கும் அக்கினி? ஏன் இது ஒரு தினப்படி வழிமுறையாக இருந்தது?


 

Thursday 15 October 2020

 ஷீர்டி சாயி சத்சரிதம் 


"வினை விதைத்தவன் வினை அறுப்பான்; தினை விதைத்தவன் தினை அறுப்பான். என்னுடைய வார்த்தைகளை நினைவில் ஏற்றிக்கொண்டு செயல்படுபவன் விலைமதிப்பற்ற மகிழ்ச்சியை அனுபவிப்பான்." (சாயி சொன்ன கதை இங்கு முற்றும்)


ஹேமாட் சாயியை சரணடைகிறேன். இக் கதையின் விவரணம் அபூர்வமானது! சாயியே ஒரு காரியத்தைச் செய்யும்போது, 'என்னுடையது, நான்' என்னும் எண்ணங்கள் பிசுபிசுத்துப் போகின்றன. 


கதையை அளிப்பவர் அவரே; படிப்பவரும் அவரே; காதால் கேட்பவரும் அவரே; அவரே கதையை எழுதுகிறார். அவரே கதையை எழுதும் ஊக்க சக்தியையும் அளிக்கிறார். அர்த்த போதனையை அளிப்பதும் அவரே. 


சாயியே இக் கதையின் பாட்டுடைத் தலைவர்; சாயியே இக் கதையின் ருசியுமானவர். அவரே கதையை சொல்பவராகவும் கேட்பவராகவும் ஆகிறார். விளையும் ஆத்மானந்தத்தை அனுபவிப்பவரும் அவரே. 


ஆன்மீக முன்னேற்றத்தை நாடுபவர்கள் இவ்வினிமையான கதைகளை, 'கேட்டது போதும்' எனச் சொல்வாரோ? இந்த ஆனந்தத்தை அனுபவிக்கும் பக்தர்கள் பாக்கியசாலிகள். 


அடுத்த அத்தியாயத்தின் சாரம் உதீயின் அபாரமான மஹிமை. கதை கேட்கும் நல்லோரை பயபக்தியுடன் கேட்குமாறு வேண்டுகிறேன். 


சமர்த்த சாயி, கிருபையால் உந்தப்பட்டு தம்முடைய சரித்திரத்தை தாமே என் மூலமாக எழுதிக்கொண்டார் என்பதை, ஹேமாட் விநயத்துடன் சொல்ல விரும்புகிறேன். கதையோ அபூர்வமான ரசம் நிரம்பியது! 


எல்லாருக்கும் க்ஷேமம் உண்டாகட்டும்! ஞானிகளாலும் சான்றோர்களாம் உணர்வூட்டப்பட்டு, சாயி பக்தன் ஹேமாட் பந்தால் இயற்றப்பட்ட, 'ஸ்ரீ சமர்த்த சாயி சத் சரித்திரம்' என்னும் காவியத்தில், 'குரு மஹிமை வர்ணனை' என்னும் முப்பத்திரண்டாம் அத்தியாயம் முற்றும். 


ஸ்ரீ  சத்குரு சாயிநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும். 


சுபம் உண்டாகட்டும். 



Thursday 8 October 2020


ஷீர்டி சாயி சத்சரிதம் 


"ஒரு சிறுவன் ரூ.50 /- மதிப்பீட்டுக்கு வேலை செய்திருந்தான். இரண்டாமவன் ரூ.100 /- மதிப்பீட்டுக்கு வேலை செய்திருந்தான். மூன்றாமவன் ரூ.150 /- மதிப்பீட்டுக்கு வேலை செய்திருந்தான். என்னுடைய வேலை இம்மூவரின் வேலையைவிட இரண்டு மடங்காக மதிப்பிடப்பட்டது. -

"என்னுடைய கைத்திறமையை அறிந்த முதலாளி மகிழ்ச்சி அடைந்தார். என்மீது வாஞ்சைக்கொண்டு என்னை கௌரவப்படுத்தினார்.-

"அவர் எனக்கு ஓர் உடையைப் பரிசாக அளித்தார். ஒரு தலைப்பாகையும் உடல் முழுவதையும் தழையத் தழைய மறைக்கும் ஓர் ஆடையையும் (சேலை) அளித்தார். ஆனால், கொடுத்தவுடனே அதை நான் மூட்டை கட்டி ஒரு மூலையில் வைத்துவிட்டேன். -

"பிறர் கொடுப்பது நமக்கு எப்படி போதும்? எவ்வளவு கொடுக்கப்பட்டாலும் அது குறைவாகத்தான் இருக்கும். ஆனால், இறைவன் நமக்கு அளிப்பதோ முடிவில்லாத செல்வம். யுகம் முடிந்தாலும் முடியாத செல்வம். -

"என் சர்க்கார் (இறைவன்) கொடுப்பதே கொடுப்பது. மற்றவர்கள் கொடுப்பதை இதனுடன் எப்படி ஒப்பிட முடியும்? மரியாதைக்கு அவமரியாதையை பூஷணம் (அணிகலன்) ஆக்க முடியுமோ? -

"என் சர்க்கார், 'எடுத்துச் செல்லுங்கள்; எடுத்துச் செல்லுங்கள்!' என்று சொல்கிறார். ஆனால், எல்லோரும், 'கொடுங்கள்; எனக்கு மட்டும் கொடுங்கள்! என்று கேட்கின்றனர். ஆயினும், யாரும் நான் சொல்வதைக் கேட்பதில்லை; என்னுடைய வார்த்தைகளை லட்சியம் செய்வதில்லை.-

"என்னுடைய கஜானா நிரம்பிவழிகிறது; அனால், யாருக்குமே வண்டிகளை கொண்டுவரும் சிரத்தை இல்லை. தோண்டு என்று சொன்னால் யாரும் தோண்டுவதில்லை; ஒருவரும் பிரயத்தனம் செய்வதில்லை.-

"அந்தச் செல்வத்தை தோண்டியெடுத்து, வண்டி வண்டியாக எடுத்துச் செல்லுங்கள் என்று நான் சொல்கிறேன். ஆயினும், தன் தாயின் செக்கப் பொன்னான மைந்தனே இந்தக் கஜானாவை எடுத்துச் செல்வான். -

"பார்க்கப் போனால், நம்முடைய உடலின் கதியும் விதியும் என்ன? மண் மண்ணோடு சேரும், காற்று காற்றோடு கலந்துவிடும். இந்த நல்வாய்ப்பை நழுவவிட்டுவிட்டால், மறுபடியும் கிடைக்காது!

"ஆயினும் என் பக்கீரின் கலைகளும் என் பகவானின் லீலைகளை என் சர்க்காரின் லயமான செயல்பாடுகளும் ஒப்பற்றவை; தனித்தன்மை வாய்ந்தவை.-

"நானும் சில சமயங்களில் சில இடங்களுக்குச் செல்கிறேன். போய் அதே இடத்தில் ஓய்வாக உட்கார்ந்துகொள்கிறேன். ஆயினும் என் ஜீவன் மாயையில் சிக்கிக்கொண்டு சுழற்காற்றில் சிக்கிய காகிதப்பட்டம் போல் கீழ்நோக்கிப் பாய்கிறது.-

"இந்த மாயையிலிருந்து விடுபடுவது கடினமான காரியம். அது என்னை ஹீனனாகவும் தீனனாகவும் ஆகிவிடுகிறது. இரவுபகலாக என் மக்களைப்பற்றியே சிந்திக்க வைக்கிறது. 



Thursday 3 September 2020

 ஷீர்டி சாயி சத்சரிதம்

பாபா தாமே முந்திக்கொண்டு இப் பெண்மணியிடம் சொன்னார், "நாம் எதற்காகப் பட்டினி கிடைக்க வேண்டும்?-

"தாதா கேள்கரின் இல்லத்திற்கு சென்று சந்தோஷமாக பூரணப் போளிகளைச் செய்யும். குழந்தைகளுக்கு அளித்தபின் நீங்களும் திருப்தியாக சாப்பிடும்."

இதில் வேடிக்கை என்னவென்றால், அன்று ஹோலிப்பண்டிகை. தாதா கேள்கரின் மனைவி மாதவிலக்காகி, வீட்டினுள் சென்று எதையும் தொடமுடியாத நிலையில் இருந்தார். அன்றைய தினமே அதிர்ஷ்டவசமாக இப் பெண்மணி ஷிர்டிக்கு வந்து சேர்ந்தார்.

இப் பெண்மணியின் உபவாச உற்சாகம் கரைந்து போயிற்று. உபவாசம் இருப்பதற்கு பதிலாக அவரே சமையல் செய்ய நேர்ந்தது. ஆயினும் அவர் பாபாவின் ஆணையை மிகுந்த பிரேமையுடன் நிறைவேற்றினார்.

பாபாவின் சேவடிகளுக்கு வந்தனம் செய்துவிட்டு, தாதாவின் வீட்டிற்குச் சென்று பூரணப்போளியும் விருந்தும் சமைத்து மற்றவர்களுக்கு பரிமாறித் தாமும் உண்டார்.

எவ்வளவு சுந்தரமான காதை! உள்ளிடைக் கருத்து எவ்வளவு அழகாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறது! குருவின் வார்த்தைகளில் இதுபோல் ஸ்திரமான (ஆழ்ந்த) நம்பிக்கை வைப்பவர்களின் உத்தாரணம் வெகுதூரத்தில் இல்லை.

சமர்த்த சாயி இதே மாதிரியான கதையொன்று ஞாபகத்திற்கு வந்தபோது, அனைத்து பக்தர்களுக்கும் அதை எடுத்துரைத்தார். கதை கேட்பவர்களே! பயபக்தியுடன் கேளுங்கள்.

பரமார்த்த வாழ்வை விரும்பும் ஒருவர், பலமான முயற்சிகளை எடுப்பதற்கும் திடமான சாதனைகளை செய்வதற்கும் சொற்பமாக சாகசம் புரிவதற்கும் தயாராக இருக்கவேண்டும்.

ஞானிகளின் பாததீர்த்தமாகிய கதாமிருதத்தை   நம்முடைய நித்திய மங்களம் கருதி பருகவேண்டும். ஞானியரின் பாதங்களில் விநயத்துடன் சரணடைந்துவிட்டால், இதயம் பரிசுத்தமாகிவிடும். (சாயி சொன்ன கதை இங்கிருந்து ஆரம்பம்.)

"நான் சிறுவனாக இருந்தபோது கிடைத்ததை கொண்டு வாழ்க்கை நடத்தி, ஒரு சமயம் பிழைப்புக்காக வேலைதேடிப் புறப்பட்டேன். -

"நடந்து நடந்து பீட்காங்வுக்கு வந்துசேர்ந்தேன். அங்கே சிறிது ஓய்வெடுத்தேன். ஆனால், என்னுடைய பக்கீரோ எனக்கு ஆனந்தம் அளிக்கக்கூடிய வேறு திட்டம் வைத்திருந்தார். -

"அங்கு எனக்கு ஜரிகை வேலைப்பாடு செய்யும்  தொழில் கிடைத்தது. நான் அயராமல் உழைத்தேன். என்னுடைய உழைப்பிற்கு நல்ல பலன் கிடைத்தது. அது பக்கீரின் பராக்கிரமம் அன்றோ!-

"அங்கு எனக்கு முன்னர் நான்கு சிறுவர்கள் வேலை செய்துகொண்டிருந்தனர். திறமைசாலிகள் என்று பெயரெடுத்தவர். அவர்களும் என்னுடன் வேலை செய்தனர். 




Thursday 27 August 2020

 ஷீர்டி சாயி சத்சரிதம்

மஹாராஜின் பாதங்களுக்கு அருகில் மூன்று நாள்கள் உபவாசமாக உட்காருவது என்று மனத்தில் திடமாகத் தீர்மானம் செய்துகொண்டு வந்தார். கடைசியில், அவருடைய தீர்மானத்தை அவரே வைத்துக்கொள்ளும்படி ஆயிற்று!

பாபாவின் விதிமுறைகளின்படி, ஆன்மீக சாதனைகளை மேற்கொள்ள விரும்புபவர் முதலில் தம்முடைய சோளரொட்டிக்கு (உணவுக்கு) வழிசெய்துகொள்வது அவசியம். இப் பெண்மணியின் தீர்மானமோ அதற்கு நேர்மாறாக இருந்தது!

இறைவனைக் காண விரும்புபவர் முதலில் ஒரு சோளரொட்டித்துண்டாவது சாப்பிட வேண்டும். ஜீவன் சமாதானமடையாமல் தேவனைக் கண்டுபிடிப்பது எப்படி?

இந்த யுகத்தின் முடிவுரை முயன்றாலும் வெறும் வயிற்றுடன் இறைவனை அடைய முடியாது. சாயியை பொறுத்தவரை உபவாசம் போன்ற உடலை வருத்தும் செயல்களை அவர் என்றுமே அனுமதித்ததில்லை.

மஹராஜ் உள்ளுணர்வால் அனைத்தயும் (பெண்மணியின் உபவாச சங்கற்பம்) முந்தைய தினமே அறிந்திருந்தார். தாதா கேள்கரிடம் சொன்னார். -

"வரப்போகும் ஹோலிப் பண்டிகை போன்ற நன்னாளில் என்னுடைய குழந்தைகள் பட்டினி கிடப்பார்களா? அதை நான் அனுமதிப்பேனா? அதை பார்த்துக்கொண்டு நான் இங்கு உட்கார்ந்திருப்பேனா?

சாயியின் திருவாய்மொழி இவ்வாறு வெளிப்பட்ட அன்றைக்கு மறுநாளே இப்பெண்மணி ஷீர்டி வந்துசேர்ந்தார்.

இப் பெண்மணியின் குடும்பப் பெயர் கோகலே. ஏற்கெனவே விவரித்த வாறு, அவர் உபவாஸத் தீர்மானத்துடன் வந்தார். தாம் கொண்டுவந்திருந்த அறிமுகக் கடிதத்தை கொடுத்துவிட்டு தாதா கேள்கரின் இல்லத்தில் தம்முடைய மூட்டையை வைத்தார்.

காசீபாய் காணீட்கர் என்ற கேள்கரின் நெருங்கிய உறவினர், இப் பெண்மணிக்கு பாபாவை தரிசனம் செய்துவைக்குமாறு கேட்டுக்கொண்டு அறிமுகக் கடிதம் கொடுத்திருந்தார்.

ஷீர்டி வந்துசேர்ந்த பிறகு, உடனடியாக பாபாவை தரிசனம் செய்வதற்காக இப் பெண்மணி சென்றார். தரிசனம் முடிந்து சிறிது ஓய்வெடுப்பதற்கு முன்னரே பாபா இப் பெண்மணிக்கு உபதேசம் செய்ய ஆரம்பித்தார்.

எவ்வளவு ஆழமாக ஓடும், எண்ணங்களாக இருந்தாலும் சரி, எல்லாருடைய எண்ணங்களையும் பாபா அறிந்திருந்தார். இவ்வுலகில் அவர் அறியாதது ஒன்றுமேயில்லை!

"உணவு மஹாவிஷ்ணு ரூபம்; உண்பவரும் மஹாவிஷ்ணு ரூபம். உபவாசம் இருப்பது, சமைக்காத உணவைத் தின்பது (அவல், பழங்கள் போன்றவை) பட்டினி கிடப்பது, நீரும் அருந்தாமல் கிடப்பது - எதற்காக இந்த வீண் சிரமங்கள்?-

 


 

Thursday 20 August 2020

 ஷீர்டி சாயி சத்சரிதம்

சாமர்த்தியசாலிகளான வித்தைகாட்டிகள் வந்தனர். பவானி அம்மனின் பெயரில் தானியங்கள் பிச்சையெடுத்து, 'கோந்தல் திருவிழா' நடத்தும் கோந்தலிகளும் மிகுந்த பிரேமையுடன் பாபாவை தரிசனம் செய்ய வந்தனர்.

குருடர்கள், நொண்டிகள், கான்பாடேக்கள், ஆண்டிகள், குருநானக் பக்தர்கள், நாடோடிப் பாடகர்கள், தீவட்டி யேந்திகள் - இவர்களனைவரும் பக்தியும் அன்பும் நிறைந்து சமர்த்த சாயியிடம் பறந்தோடி வந்தனர்.

முரசு கொட்டுபவர்கள், குறி சொல்பவர்கள், முடவர்கள் - கழைக் கூத்தாடிகளுங் கூட அங்கு வந்து தங்களுடைய திறமையைக் காட்டினார். பாபாவின் சமூகத்திற்குத் தக்க தருணத்தில் பிரேமை மிக்க வண்ஜாரியும் வந்து சேர்ந்தார்!

வைராக்கியமே உருவெடுத்தவர்; பற்றற்றவர்; ஏகாந்தி; சங்கம் விரும்பாதவர்; சுயநலமில்லாதவர்; விருப்பு வெறுப்பற்றவர்; பக்தர்களின்பால் செலுத்தும் அன்பில் இணையில்லாதவர். சாயியின் ஆகிருதியைக் (உருவத்தைக்) காணக் கண் கோடி வேண்டும்.

இப்பொழுது, ஏற்கெனவே நடந்த நிகழ்ச்சிகளின் பின்னணியில் பிரதமமான காதையை விட்ட இடத்திலிருந்து தொடருவோமாக, கேட்பவர்கள், சிதறாத கவனத்தைக் கொடுங்கள்.

பாபா என்றும் பட்டினி கிடந்ததில்லை; மற்றவர்களையும் பட்டினி கிடக்க அனுமதித்ததில்லை. பட்டினி கிடப்பவரின் மனம் சாந்தமாக இருக்காது; அவர் எப்படி பரமார்த்த (ஆன்மீக) சாதனைகளை ஏற்கமுடியும்?

வெறும் வயிற்றுடன் தேவனை அடையமுடியாது. ஆகவே, முதலில் ஆத்மாவைத் திருப்திசெய்யுங்கள். இந்த உபதேசத்தை அளிக்கும் மற்றுமொரு கதை சொல்கிறேன்.

உச்சிவெயில் வேளையில் சூடு தாங்காமல் புழுதி புரளும்போது, 'அன்னம் பிரம்மம்' என்னும் உபநிஷத வாக்கியம் பளிச்சென்று மனதிற்கு விளங்குகிறது.

அந்தக் கடுமையான வேளையில் சில கவளங்களாவது அன்னம் கிடைக்கவில்லையென்றால், உடலுறுப்புகள் பலமிழந்துபோய் அவற்றின் கடமையைச் செய்ய மறந்துவிடுகின்றன.

பசிக்கு உணவளித்து ஜீவனை சாந்தப்படுத்தாமல் கண்கள் எப்படி இறைவனைக் காண முடியும்? வாய் எப்படி இறைவனின் புகழைப் பாடும்? காதுகள் எப்படி அதைக் கேட்கும்?

சாராம்சம் என்னவென்றால், உடலின் சகல அங்கங்களும் சக்தி பெற்றிருந்தால்தான் பக்தி பண்ணமுடியும். அங்கங்கள் அன்னமின்றி சீர்குலைந்து போகும்போது ஆன்மீகப் பாதையில் நடைபோட முடியாது.

ஆனால், தேவைக்கு அதிகமாக உண்பதுவும் நன்றன்று. மிதமான போஜனமே நன்மையை விளைவிக்கும். கடுமையான உபவாசம் எப்பொழுதும் பயங்கரமான சுகவீனத்தையே விளைவிக்கும்.

சாயிதரிசனம் செய்யப் பேராவல் கொண்டு தாதா கேள்கருக்கு ஓர் அறிமுகக் கடிதம் வாங்கிக்கொண்டு ஒரு பெண்மணி ஷிர்டிக்கு வந்தார். 


Thursday 13 August 2020

 ஷீர்டி சாயி சத்சரிதம்

தாய், தந்தை, குரு இவர்களிடமிருந்து பாடம் பெறாமல் தருமவழிபற்றிய ஞானத்தைப் பெறமுடியாது. அதுவும் ஒருவருடைய கல்வி முயற்சியைச் சார்ந்தது. அனுஷ்டானம் (கற்றபின் அதற்குத் தக்க நிற்றல்) இல்லையெனில் கற்றதனைத்தும் வீண்.

அவர்களுடைய ஆசிமொழிகள் அவசியம் தேவை. 'தாயைத் தெய்வமாக வழிபடு; தந்தையைத் தெய்வமாக வழிபடு; குருவைத் தெய்வமாக வழிபடு; இந்த உபநிஷத வசனம் அனைவர்க்கும் தெரிந்த ஒன்றே;

இம்மூவரையும் வழிபடுவது; யாகங்களை செய்வது, வேதம் ஓதுவது, தானம் செய்வது - இவையே ஜனன மரணச் சுழலைத் தாண்டுவதற்கு உயர்ந்த சாதனங்கள்.

இவையனைத்தும் மனத்தைப் பரிசுத்தமாக்கி கொள்ளும் சாதனைகள். இவற்றைச் செய்யாமல், ஆத்மாவெனும் வஸ்துவை அடையமுடியாது. இவையில்லாது நடத்தும் வாழ்க்கை வியர்த்தம்.

உடலும் மனமும் ஐம்புலன்களும் புத்தியும் காட்டமுடியாது மகத்தான ஆத்ம சொரூபத்தை குருவருள் காட்டமுடியும்.

பிரத்யக்ஷமாகப் பார்ப்பதையும் அனுமானம் செய்வதையும் பிரமாணமாக ஏற்றுக்கொள்ளமுடியாத நிலையில், குருவைத் தவிர வேறெவரால் அதை உள்ளங்கை நெல்லிக்கனிபோல் தெளிவாகக் காண்பித்து கொடுக்கமுடியும்?

அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்று புருஷார்த்தங்களை  சிரமப்பட்டால் அடைந்துவிடலாம். நான்காவதாகிய உச்ச புருஷார்த்ததை (வீடு / மோட்சம்) குருவின் அருளின்றி எவ்வளவு முயன்றாலும் அடையமுடியாது.

ஷீர்டி ஞானியின் தர்பாருக்கு ஜோசியர்கள் வணக்கம் செலுத்த வந்தனர். செல்வர்களுக்கும் பெருங்குடி மக்களுக்கும் ஆயுள்பற்றியும் நடக்கப்போவதை பற்றியும் வரும்பொருள் உரைத்தனர்.

செல்வச் செழிப்பிலும் அதிகாரத்திலும் புரண்ட அரசர்கள், கோமான்கள் - துறவேற்றுப் பிச்சையெடுத்து பிழைத்த பைராகிகள், கோசாவிகள் - அனைவரும் பாபாவை தரிசனம் செய்ய ஆவலுடன் வந்தனர்.

ஜபம் செய்பவர்கள், தவம் செய்பவர்கள், விரதம் ஏற்றுக்கொண்டவர்கள், சந்நியாசிகள், யாத்திரிகர்கள், புனிதத் தலைவாசிகள், பரிவாரங்களுடன் பாட்டுக்காரர்களும் நாட்டியக்காரர்களும்  - இவர்களனைவரும் ஷிர்டிக்கு தரிசனத்திற்காக வந்தனர்.

"இவரே, எங்களுக்குத் தாயும் தந்தையும் ரட்சகரும் ஆவார்; இவரே எங்களை ஜனனமரணச் சுழலிருந்து விடுவிப்பார்" என்று சொல்லிக்கொண்டு மஹார்களும் சாயி தர்பாருக்கு வந்து, வணக்கம் செலுத்தினர்.

நெற்றியில் பட்டையாக விபூதியணிந்து லிங்கத்தைக் கழுத்தில் கட்டிக்கொள்ளும் ஜங்கமரும், பிச்சை வாங்கும் சோளத்தின்மீதே கண்ணாக வருவார். அவர் அளிக்கும் காட்சி பார்ப்பதற்கு சுவாரசியமானது.  



Thursday 6 August 2020

ஷீர்டி சாயி சத்சரிதம் 

ஞானமார்க்கி, 'என்னைத் தவிர கடவுள் யாராவது இருக்கமுடியுமா? பரிபூரணமாக ஞானம் பெற்ற நானே சச்சிதானந்தம்' எனச் சொல்கிறார். 

பக்திமார்க்கத்தில் செல்பவர், அவருடைய அன்பான பக்தி விசேஷத்தால் தம்முடைய ஞானத்தைப் பறைசாற்ற மாட்டார். அவர் தம்முடைய உடலையும் மனத்தையும் செல்வத்தையும் சுவாமியிடம் சமர்ப்பித்து விடுகிறார். அவர் தம்மையும் தம்மிடம் இருப்பதனைத்தையும் சுவாமியிடம் ஒப்படைத்துவிடுகிறார். 

'இது என்னுடைய சாதனை; இது என்னுடைய அதிகாரத்தின் காம்பீர்யம்;இது என்னுடைய புத்திசக்தியின் வைபவம்' என்று அவர் கர்வத்தால் உப்புவதில்லை.

என்ன நடக்கிறதோ, அது இறைவனின் ஆணைப்படியே நடக்கிறது. அவரே தூக்கிவிடுகிறார்; அவரே தள்ளியும் விடுகிறார். அவரே சண்டையிடுகிறார்; அல்லது மற்றவர்களைச் சண்டையிடவைக்கிறார். அவரே காரியங்களை செய்பவரும் செய்யவைப்பவரும் ஆவார். 

செயல்புரியும் அதிகாரத்தை சுவாமியின் கைகளில் ஒப்படைத்துவிட்டு, பக்தன் 'அடியார்க்கும் அடியேன்' என்றும் சுபாவத்தை சுவீகரித்துக்கொள்கிறான். பக்தன் எப்பொழுதும் சுவாமியின் ஆதீனத்தில் வாழ்கிறான். அவனுக்கென்று தனியான இருப்பு ஒன்றும் இல்லை. 

அந்த நான்கு புத்திசாலிகளுக்கு அவர்கள் எதைத் தேடினார்களோ அது இதுவரை வெளிப்படவில்லை. விளக்கமாகச் சொல்கிறேன்; கேளுங்கள்.

அவர்கள் அனைவரும் கனபாடிகள் (வேதபடிப்பில் உச்சநிலை); சடங்குச் செல்வர்கள். தங்களுடைய பாண்டியத்தைப் பற்றி உள்ளூர கர்வம் கொண்டிருந்தனர். புத்தக அறிவை பீத்திக்கொண்டிருந்தபோது இறைவனைப்பற்றி பேச்சு எழுந்தது. 

எந்த திட்டத்தால், எந்த வழியால், எந்த யுக்தியால், நம்முடைய பாண்டித்யத்தை உபயோகிக்கலாம்? இறைவனை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரமாகப் பேட்டி காணவேண்டும் என்பது ஒன்றே அவர்களின் நோக்கம். 

என் ஸ்ரீசாயியும் அந்நால்வரில் ஒருவர். பர பிரம்மமேயானவரும் வைராக்கியம் விவேகமும் உருவெடுத்து வந்தவருமான சாயி, எதற்காக இந்த விவேகமற்ற செயலை ஏற்றுக்கொண்டார்?

கதைகேட்பவர்கள் இந்த சந்தேகத்தை எழுப்பலாம். ஈதனைத்தும் உலக மக்களுக்கு போதனை செய்வதற்காகவும் அவர்களுடைய நன்மைக்காவுமே செய்யப்பட்டது. பக்தர்களை உத்தாரணம் செய்வதற்காகவே வந்த பாபாவை இச்செயல் எப்படி மாசுபடுத்த முடியும்?

தாமே ஒரு அவதாரியாக இருந்தும், வண்ஜாரிக்கு மரியாதை செலுத்தினார். 'அன்னம் பிரம்மம்' என்பதை நிர்த்தாரணம் செய்யும் வகையில் அவரளித்த உணவை உண்டார். 

அதேசமயம், சமர்ப்பிக்கப்பட்ட உணவை நிராகரித்து அவமானம் செய்தவர்கள் கேடுறுகிறார்கள் என்பதைக் காண்பித்தார். பண்டிதர்களின் கதையை மேற்கொண்டு சொல்லி, குருவின்றி எவரும் ஞானம் பெற இயலாது என்பதை விளக்கினார். 




Thursday 30 July 2020

ஷீர்டி சாயி சத்சரிதம்

இதற்கு மாறாக, ஞானம் பெறுவதற்காக ஒரு குருவை வேண்டுமானால் அமர்த்தலாம். தக்ஷிணை கொடுத்தே செல்வம் கரையுமே தவிர, நல்லுபதேசம் என்ன கிடைத்ததென்று பார்த்தால், கடைசியில் பூஜ்யம் ஒன்றே தெரியும். மிஞ்சுவது தன்னிரக்கம் ஒன்றே.-

பாஷாண்டியாகவே வளர்ந்து, யோக்கியரைப் போலவும் நாணயமானவரைப் போலவும் நடித்து, மனிதசக்திக்கு மீறிய ரகசிய ஞானத்தைப் பற்றி டம்பம் அடித்துக்கொள்பவரால் சிஷ்யனுக்கு என்ன அளிக்க முடியும்?

வெளிப்பார்வைக்கு மடி ஆசாரங்களை கடைப்பிடிப்பவர். ஆனால், அகமுதிர்ச்சி இல்லாதவர்; சுயமாக அனுபவம் பெறாதவர்; இவருடைய பாடசாலை உபயோகமற்றது.-

எங்கு வார்த்தை ஜாலமும் புத்தக அறிவும் மிகுந்திருக்கிறதோ, எவர் தம்முடைய பெருமையில் தாமே மகிழ்ந்துபோகிறாரோ, எங்கு பிரம்ம ஞான அனுபவம் இல்லையோ, அங்கிருந்து சிஷ்யன் என்ன லாபம் பெறுவான்?-

எவருடைய போதனை சிஷ்யனின் இதயத்தைத் தொடவில்லையோ, எவருடைய சாட்சியும் நிரூபணமும் சிஷ்யனின் மனத்தில் உறுதியான நம்பிக்கையைத் தோற்றுவிக்க முடியவில்லையோ, அவருடைய பாடத்தால் யாருக்கு என்ன பயன்? அது உள்ளீடற்ற வெறும் பிதற்றலன்றோ!-

என் குரு, தியான முறையில் என்னை உபாசனை செய்யவைத்து எனக்கு உண்மையான ஞானக்கருவூலத்தைக் காட்டினார். நான் அதைத் தேடி அலையவேண்டிய அவசியமே ஏற்படவில்லை. மற்றப் பொருளை அறியவும் நான் முயற்சி ஏதும் எடுக்கவில்லை.-

உட்பொருளும் மறைபொருளும் தம்மைத்தாமே வெளிப்படுத்திக்கொண்டன. பிரயாசை (முயற்சி) ஏதும் செய்யாமலேயே அவை என் கைக்கு வந்துசேர்ந்தன. இதுவே குருவருள் செய்யும் அற்புதம்! தேடல்கள் அனைத்தும் அங்கேயே அப்பொழுதே ஒரு முடிவுக்கு வந்தன!

குருராயர் என்னைத் தலைகீழாகத் தொங்கவிட்டபோதே, நான் எங்கனம் ஆனந்தமடைந்தேன் என்பதைப் புரிந்துகொள்ளும் சக்தி அவருக்கே உண்டு."
(உருவகக் கதை இங்கு முற்றும்)

ஞானியரின் நடைமுறை, உலகியல் நடைமுறைக்கு எதிராகத்தான் இருக்கும். அவர்களுடைய ஞானம் அனுபவத்தால் விளைந்தது. இங்கு நிஷ்டை ஒன்றே பிரமாணம்; குருவின் கிருபை ஒன்றே  சாதனம்.

சடங்குச் செல்வர்களுக்கு விதிகளும் தடைகளும் கட்டுமானங்களும்; பண்டிதர்களுக்கு வித்யா கர்வம்; யோகிகளுக்கோ டம்பமே படுகுழி. ஆகவே, விசுவாசத்தை விடுத்தால் வேறெதுவும் இங்கே செல்லுபடியாகாது.

பண்டிதர்கள் கல்விச் செருக்கால் குருடர்கள் ஆகின்றனர். அவர்கள் அகங்காரத்தின் வடிவமே ஆவர். சாதுவோ பண்டிதர்களைக் கண்டால் ஓட்டம் பிடிக்கிறார்; அவர்களுடைய சங்கத்தை விரும்புவதில்லை. 


Thursday 23 July 2020

ஷீர்டி சாயி சத்சரிதம் 

என்னுடைய கைகளோ வாயோ நீர்மட்டத்தை எட்டாதவரையில் என்னைக் கிணற்றினுள் தொங்கவிட்டார். -

கிணற்றங்கரையில் ஒரு மரம் இருந்தது. கயிற்றின் மறு நுனி அந்த மரத்தில் கட்டப்பட்டது. குருராயர் சஞ்சலம் ஏதுமின்றி எங்கோ சென்றுவிட்டார். அவர் எங்கே சென்றார் என்பதை யாரறிவார்?-

இவ்வாறு நான்கைந்து மணி நேரம் கழிந்தது; அதன் பின் குரு திரும்பி வந்தார். உடனே என்னை வெளியே எடுத்து, 'நீ நலமாக இருக்கிறாயா?' என்று கேட்டார்.-

நான் பதில் சொன்னேன், 'நான் ஆனந்தம் நிரம்பிவழிந்தேன். நான் அனுபவித்த சுகத்தை என் போன்ற பாமரன் எப்படி வர்ணிக்க முடியும்?'-

குருராயர் என்னுடைய பதிலைக் கேட்டு மகிழ்ச்சியடைந்தார். அவர் என்னுடைய முதுகை வாஞ்சையுடன் தடவிக்கொடுத்து, என்னைத் தம்முடன் வைத்துக் கொண்டார். -

இதை நான் (பாபா) உங்களிடம் சொல்லும்போதே என் மனத்தில் அன்பு அலைமோதுகிறது. பின்னர் குரு என்னைத் தம்முடைய பாடசாலைக்கு அழைத்துச் சென்றார். தாய்ப்பறவை தன் குஞ்சைச் சிறகுகளுக்குள் வைத்துக் காப்பாற்றுவதை போல் என்னை அரவணைத்துப் பாதுகாத்தார். -

ஆஹா! குருவின் பாடசாலை எவ்வளவு கவர்ச்சிகரமானது! நான் என் பெற்றோர்களின் பாசப்பிணைப்பையே மறந்துவிட்டேன். மோகம், மமதை ஆகிய சங்கிலிகளிலிருந்து சுலபமாக விடுபட்டேன்-

கெட்டஆசாபாசங்கள் சகலமும் அறுக்கப்பட்டன. ஆன்மீக முன்னேற்றத்தை தடை செய்யும் பந்தம் வெட்டப்பட்டது. குருவின் உருவத்தைக் கண்களிலேயே நிறுத்தி அவரை அணைத்துக்கொள்ள விரும்பினேன். -

குருவின் பிரதிபிம்பம் எந்நேரமும் கண்களில் வாசம் செய்யாவிட்டால், கண்களை இரண்டு மாமிசக் கோலங்களாகத்தான் கருதவேண்டும். அவருடைய பிம்பம் கண்களில் நிலைக்காதுபோகுமானால், நான் குருடனாக இருப்பதே நல்லது. குருவின் பாடசாலை எனக்கு அவ்வளவு சிறப்பாக அமைந்தது. -

ஒருமுறை அந்தப் பாடசாலையில் காலெடுத்து வைத்தபின், திரும்பிப் போக வேண்டும் என்று நினைக்கும் தூரதிருஷ்டசாலி எவனும் உளனோ! குருராயரே எனக்கு வீடும் குடும்பமும் பெற்றோரும் ஆனார்.-

மற்ற இந்திரியங்களோடு மனமும் சேர்ந்துகொண்டு தம் தம் இடங்களை விட்டுவிட்டு குருவின்மேல் தியானம் செய்வதற்காக என் கண்களில் வந்து தங்கின.-

குருவுக்குப் புறம்பாக வேறெதுவுமின்றி, எல்லாமே குருவாகித் தெரியுமாறு குருவை மாத்திரம் தியானத்தின் இலக்காகக் கொண்டு செய்யப்படும் தியானம், 'அனன்னிய அவதானம்' (மன ஒருமைப்பாடு) என்றழைக்கப்படும்.-

குருவின் சொரூபத்தை தியானம் செய்யும்போது மனமும் புத்தியும் உறைந்து போகின்றன. ஆகவே, அவருடைய திருவடிகளுக்கு வணக்கம் செலுத்திவிட்டு சத்தமில்லாத மௌனத்தில் கரைந்து விட வேண்டும்.-


Thursday 16 July 2020

ஷீர்டி சாயி சத்சரிதம் 

'உண், என்று வேண்டி, யாராவது ஒரு சோளரொட்டித்துண்டு அளித்தால், அதை உங்களுடைய காரியத்தை நிர்விக்கினமாக (இடையூறின்றி) முடித்துக்கொடுக்கும் சுபசகுணமாகக் கருதி ஏற்றுக்கொள்ளுங்கள்.-

'இப்பொழுது சொற்பமாக ஆகாரத்தை உட்கொள்ளுங்கள். சிறிது இளைப்பாறி உடலையும் மனத்தையும் திடப்படுத்திக்கொள்ளுங்கள்'. ஆனால், மற்ற மூவரும் இந்த நல்ல வார்த்தையை நிராகரித்துவிட்டனர். ஏதும் உண்ணாமலேயே மறுபடியும் அங்கிருந்து கிளம்பினர்.-

தேடலில் வெற்றி பெறாமல் நாங்கள் உணவுண்ணப் போவதில்லை, என்று சொல்லிக்கொண்டு அவர்களுடைய முரண்டுக்கு அவர்களே பலியானவர்கள்.-

எனக்கோ நல்ல பசி; தொண்டையும் வறண்டு போயிருந்தது. மேலும், நான் வண்ஜாரியின் உலகியல் நடப்பிற்கு அப்பாற்பட்ட பிரேமையைக் கண்டு அவர்மீது வாஞ்சடையுடன் பெருமதிப்புக் கொண்டேன்.-

மெத்தப் படித்த பண்டிதர்களாகிய எங்களுக்குக் கருணையோ இரக்கமோ இல்லை. செல்வராக இருந்தாலும், எச்சிற்கையால் காக்கை ஒட்டாதவர் எத்தனையோ பேர்.-

ஆனால், காட்டில் சந்தித்த மனிதரோ தாழ்குலத்தோர்; வண்ஜாரி சாதி; படிப்பறிவில்லாதவர்; அந்தஸ்தில்லாதவர். ஆயினும், 'கொஞ்சம் சோளரொட்டியும் வியஞ்சனுமும் (உணவுக்குரிய கறிகள்) சாப்பிடுங்கள்' என்று வேண்டிக்கொள்ளும் அளவிற்கு அவருடைய இதயத்தில் இயல்பாகவே எவ்வளவு பிரேமை இருந்திருக்கவேண்டும்!-

லாபம் கருதாது இவ்விதமாக அன்பு செலுத்துபவரே சிறந்த புத்திமான். ஆகவே, அவருக்கு மரியாதை செலுத்துவதே உயர்ந்த ஞானத்தை அடையும் உத்தமமான மார்க்கம் என்று நான் உணர்ந்தேன். - 

ஆகவே நான் மிகப் பணிவுடன் வண்ஜாரி அளித்த கால் ரொட்டியைத் தின்று சிறிது தண்ணீரும் குடித்தேன். ஆஹா! எவ்வளவு மகிழ்ச்சிகரமான நிகழ்ச்சி நடந்தது!-

எங்கிருந்தோ, எதிர்பாராமலேயே குருராஜர் தோன்றினார். எங்களிடம் கேட்டார், 'எதற்காக இந்த வாதப்பிரதிவாதங்கள்?" நான் அப்பொழுது அவரிடம், நடந்த விருத்தாந்தத்தை சொன்னேன்.-

'நீங்கள் என்னுடன் வருகிறீர்களா? நீங்கள் எதைத் தேடுகிறீர்களோ அதை உடனே உங்களுக்கு காட்டிக்கொடுக்கிறேன். ஆனால், என்னுடைய சொல்லுக்கு கட்டுப்பட்டவனே தான் விரும்பியதை அடைவான்.'- (குருராஜர்)

மற்ற மூவரும் இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை; அனால், நான் அவருடைய அழைப்பை சிரம் தாழ்த்தி ஏற்றுக்கொண்டேன். மற்ற மூவரும் அங்கிருந்து வெளியேறினர். குருராயர் என்னை மட்டும் தம்முடன் அழைத்துக்கொண்டு சென்றார்.-

அவர் என்னை ஒரு கிணற்றுக்கு அழைத்துச் சென்று கால்களை ஒரு கயிற்றால் கட்டி கிணற்றினுள் என்னைத் தலைகீழாகத் தொங்க விட்டார். -



Saturday 11 July 2020

ஷீர்டி சாயி சத்சரிதம்

'வெயிலின் கடுமை அதிகமாக இருக்கும் இந்நேரத்தில் நீங்கள் எதற்காக, எங்கே செல்கிறீர்கள்?' நாங்கள் பதில் சொன்னோம், 'காட்டிலும் காட்டின் உட்பகுதிகளிலும் தேடப் போகிறோம் .'-

வண்ஜாரி கேட்டார், 'நீங்கள் எதைத் தேடப்போகிறீர்கள்?' நாங்கள் பதில் சொன்னோம். 'ரகசியமான விஷயங்களை வெளிப்டையாகப் பேசுவது நல்லதில்லை '.-

நாங்கள் அவசரமாக இங்குமங்கும் அலைந்து தவித்ததை பார்த்த வண்ஜாரி மனம் கனிந்தார். அவர் சொன்னார் , 'வனம் அணுகுவதற்கு கடுமையானது; வனத்தின் உட்புறத்தை நன்கு தெரிந்துகொள்ளாமல், இஷ்டம் போல், அலையக் கூடாது. -

'இம்மாதிரி வனங்களுக்குள் போய்வருவதற்கு எப்பொழுதும் ஒரு வழிகாட்டியைத் துணையாக வைத்துக்கொள்ளுங்கள். உச்சிவெயில் வேளையில் ஏன் இந்த சாகசச் செயல்? எதற்காக இந்த சிரமும் ஆயாசமும்?-

'விருப்பமில்லையென்றால் உங்களுடைய ரகசியத் தேடல்பற்றி ஏதும் சொல்ல வேண்டா.  ஆனால்,சிறிது நேரம் உட்காரவாவது செய்யுங்கள். ஒரு சோளரொட்டி  துண்டாவது தின்றுவிட்டுத் தண்ணீர் குடியுங்கள். அதன் பிறகு விருப்பம் போல் செல்லுங்கள். மனத்தில்  சிறிது பொறுமைக்கு இடம் கொடுங்கள்.

அவர் எங்களை மனப்பூர்வமாக கேட்டுக்கொண்டார். ஆயினும் நாங்கள் அவருடைய வேண்டுகோளைத் தூக்கியெறிந்துவிட்டு, அவருடைய அறிவுரையை கேட்காமல் எங்கள் வழி  சென்றோம். ஆனால், பின்னர்க் காட்டினுள் சோர்வுற்றுக் களைத்துப் போனோம்.-

ஓ, நாங்கள் புத்திசாலிகள் அல்லோமோ! நாங்களே வழியை கண்டுபிடிப்போம். வழிகாட்டி எதற்காகத் தேவை?' கர்வத்தால் நாங்கள் இவ்வாறு நினைத்தோம்.-

ஆனால், காடோ மிக விஸ்தீரமானது; வானளாவி ஓங்கியும், பருத்தும் வளர்ந்த மரங்கள் நிறைந்து சூரிய ஒளிக்கதிர்களும் உள்ளே புகமுடியாதபடி இருந்தது. இவ்விடத்தில் வழியின்  போக்கை எவ்வாறு கண்டுபிடிக்க முடியும்?-

இங்குமங்கும் சுற்றிச் சுற்றி பயனின்றித் திரிந்து, திக்குத்  தெரியாமல் மாட்டிக் கொண்டோம். பின்னர் தெய்வ பலத்தால், எங்கிருந்து கிளம்பினோமோ அங்கேயே வந்து சேர்ந்தோம்.-

தெய்வம் எங்களை வந்த வழியே திருப்பி அனுப்பியது. மறுபடியும் அதே வண்ஜாரியை சந்தித்தோம். அவர் சொன்னார், 'நீங்கள் தவறான பாதையைத் தேர்ந்தெடுத்தீர்கள் போலிருக்கிறது; சிலசமயங்களில் புத்தியின் சாதுர்யம் செல்லுபடியாவதில்லை!-

'எடுத்த காரியம் சிறியதாக இருப்பினும் பெரியதாக இருப்பினும் வழிகாட்டுவதற்கு ஒருவர் தேவை. மேலும், வெறும் வயிற்றுடன் எதையும் கண்டுபிடிக்க முடியாது. புத்தியும் மிரண்டுபோய்த் தடுமாறும்.-

'இறைவனால் திட்டமிடப்படாது, நீங்கள் வழியில் யாரையும் சந்திக்க முடியாது. ஆகவே, கொடுக்கப்பட்ட அன்னத்தை நிராகரிக்க வேண்டா; உணவுத் தட்டை ஒருபொழுதும் கையால் ஒதுக்கித்த தள்ளாதீர்.-

Friday 20 March 2020

ஷீர்டி சாயி சத்சரிதம்

குதர்க்கத்தை முழுமையாக உதறித் தள்ளுக; இல்லையெனில் அது உங்களை வழி மடக்கும். கர்வத்தைக் காலால் மிதித்து நாசம் செய்க; அதன் பிறகே அக்கரை சேரமுடியும்.

இப்பொழுது, பாபாவே சொன்ன சிறப்பானதொரு கதையைக் கேளுங்கள். குருவின் திருவாய்மொழியான இவ்வமுதத்தை அருந்திப் பரமானந்தத்தை அடையுங்கள்.

(சாயியின் திருவாய்மொழியாக வெளிவந்த உருவக கதை இங்கு ஆரம்பம்) "ஒரு சமயம் நாங்கள் நால்வர் ஏற்கெனவே போதிகளையும் புராணங்களையும் படித்து ஞானம் பெற்றிருந்ததால், பிரம்ம (முழுமுதற்பொருள்) நிரூபணம் செய்ய ஆரம்பித்தோம். -

எங்களில் ஒருவர் கீதையிலிருந்து ஒரு சுலோகத்தை மேற்கோள் காட்டி, 'ஒருவன் தன்னுடைய முயற்சியாலேயே தன்னை உயர்த்திக்கொள்ள வேண்டும். இதற்காக வேறெவரையும் சார்ந்து இருத்தல் தகாது' என்று வாதம் செய்தார்.-

அவருக்கு மற்றொருவர் பதிலுரைத்தார், 'யாருடைய மனம் அவருக்கு அடங்கி இருக்கிறதோ அவரே பாக்கியசாலி. ஆகவே, தன்னைத் தவிர வேறெதுவும் இவ்வுலகில் இல்லை என்றறிந்த சங்கல்பங்களையும் விகல்பங்களையும் சூன்யமாக்கிவிட வேண்டும்.'-

மூன்றாமவர் சொன்னார், 'எல்லாமே அழியக்கூடியன (அநித்தியம்); மாறுதல் அடைந்துகொண்டேயிருக்கும். மாறுதல் ஏதும் அடையாததே அழியாதது (நித்தியம்). நித்தியம் எது, அநித்தியம் எது என்ற சிந்தனையை எப்பொழுதும் செய்து கொண்டிரு.'-

நான்காமவர் புத்தக ஞானத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. சாஸ்திரவிதிகளின்படி வாழ்க்கை நடத்தி, மனம், பேச்சு, உடல், பஞ்சப் பிராணன்கள் அனைத்தையும் குருபாதங்களில் சமர்ப்பணம் செய்துவிடுவதையே நம்பினார். -

குருவே இவ்வுலகின் உள்ளும் வெளியும் பரவியிருக்கும் நகரும் நகராப் பொருள்களில் உறைந்திருக்கும் இறைவன், என்று மனத்துள் நிர்த்தாரணம் செய்வதற்கு ஆழமானதும் அசைக்க முடியாததுமான விசுவாசம் (நிஷ்டை) அவசியம். -

வெறும் சாஸ்திர நிபுணர்களோ, வாதத்தில் மட்டும் வல்லவர்களோ, எதையும் உரித்துப் பார்த்து ஆராய்ச்சி செய்பவர்களோ, சொப்பனத்திற்குக்கூட ஞானத்தை அடைய முடியாது. இங்கே தேவையானது சுத்தமான விசுவாசமுள்ள பக்தன்.-

இவ்வாறாக, நான்கு புத்திசாலிகளும் (நாங்கள்) அதைத் தேடிக் கண்டுபிடித்து விடலாம் என்றெண்ணித் தேட ஆரம்பித்தோம். வேதனையேதும் இல்லாத சுதந்திரமான மனத்துடன் சொந்த புத்தியாலேயே கண்டுபிடிக்க வேண்டும்.-

மூன்று பேர்கள் மனத்திலும் இந்த இச்சையே மேலோங்கியது. ஆயினும் காட்டில் இஷ்டம்போல் திரிந்துகொண்டிருந்தபோது, வழியில் ஒரு 'வஞ்சாரியைச் சந்தித்தோம். அவர் எங்களைக் கேட்டார், - (நான்காமவர் சாயி)


Friday 13 March 2020

ஷீர்டி சாயி சத்சரிதம்

அஞ்ஞானத்தால் செய்யப்பட்ட தீவினைகளால் விளைந்ததும் தோன்றா நிலையில் விதையுள் மறைந்திருப்பதும் பௌதிகமான இருப்பு ஏதும் இல்லாததுமான இம் மரம் ஒவ்வொரு கணமும் ஒவ்வொரு குணத்தை ஏற்பதுபோல் தெரிகிறது.

இயல்பாகவே அனர்த்தத்தை (கேடுகளை) விளைவிக்கக்கூடிய இம் மரம் அஞ்ஞானத்தில் பிறந்தது. ஆவல்களும் ஆசைகளும் ஏக்கங்களும் தண்ணீராக மாறி, இம்மரத்தைச் சுற்றிச் தேங்குகின்றன; செழிப்பூட்டுகின்றன.

மனைவி, மக்கள், தனம், தானியம் போன்ற பரிவாரங்களை உடைய இம் மரம், மனிதர்களின் மனதில் 'உடலே நான்' என்ற புத்தியுடன் தன்னை ஒன்றுபடுத்திக் கொண்டு அடையாளம் காட்டுவதால், அதையே ஆதாரமாகக்கொண்டு வாழ்கிறது.

சம்சார வாழ்வென்ற இம் மரத்தின் கிளைகள், சகலமான பிராணிகளின் லிங்கபேதத்தால் (ஆண்-பெண் பேதம்) விளைந்தவையே. கர்ம வாசனைகளும் பந்தங்களுமாகிய கீழ்நோக்கி வளரும் விழுதுகளால் தாங்கப்பட்டு, இம் மரம் பரந்து விரிந்து செழிக்கிறது.

சுருதி, ஸ்மிருதி ஆகிய இலைகளால் மூடப்பட்டு, ஐம்புலன்களாகிய கொழுந்துவிட்டு வளரும் இளந்தளிர்களால் செழிப்புற்று, யாகம், தானம் போன்ற சடங்குகளாகிய மலர்கள் பூத்துக் குலுங்கும் இம் மரம், இரட்டைச் சுழல்களெனும் (இன்பம் - துன்பம், வெப்பம் - குளிர் போன்ற இரட்டைகள்) சாறு நிறைந்தது.

இம்மரத்தின் பழங்களுக்கு கணக்கேயில்லை; சகலருக்கும் இம் மரமே பிழைக்கும் வழி ஆகி விட்டது. பூலோகத்திலும் புவர்லோகத்திலும் இம் மரம் இல்லாத இடமே இல்லை.

சிலசமயங்களில் பாடும் கூத்தும் வாத்திய இசையும்; சிலசமயங்களில் விளையாட்டும் சிரிப்பும் அழுகையும் - இவ்வாறே இந்த மிகப் பழமையானதும் தலைகீழானதும் அரச மரம்.

உருவத்தை ஏற்றுக்கொண்ட பிரம்மத்தின் மாயையால் விளைந்த இம் மரத்தைப் பற்றற்ற மனப்பான்மை என்னும் கோடரியால் வெட்டி வீழ்த்திவிடலாம். சத் பாவமே இதற்கு மூலாதாரமென்றும் ஜோதியே இதன் சுபாவமென்றும் அறிக.

பிரம்மமே சத்தியம், சர்வாதாரம். இவ்வுலகம் சொப்பனத்தை போன்றதொரு மாயை. இவ்வுலகத்திற்கு ஆரம்பமும் இல்லை; முடிவும் இல்லை; ஆதாரமும் இல்லை. இந்நிலையில் அது தன்னைத்தானே எப்படிக் காப்பாற்றிக்கொள்ள முடியும்?

பற்றற்றவர்கள் எதை அடைய பலமாக முயற்சி செய்கிறார்களோ, ஞானிகள் எதன்மீது காதல் கொள்கிறார்களோ, மோட்சநாடிகள் இதைத் தேடுகிறார்களோ, சாதகர்கள் எதை நாடுகிறார்களோ -

அதை அடைய விரும்புவர் ஞானிகளின் பாதங்களில் சரணடைந்து, குதர்க்கத்தை வேருடன் களைந்தெறிந்துவிட்டு அவர்களுடைய சொற்படி நடக்கவேண்டும்.

மனத்தின் தாவல்களை மூட்டைகட்டி  வைத்துவிட்டு புத்தியின் சாமர்த்தியத்தையும் போலி ஞானத்தையும் ஒதுக்கிவைத்துவிட்டு சங்கத்தை விடுத்துப் பற்றற்று, குருபாதங்களையே லட்சியமாகக் கொள்ளவேண்டும்.


Friday 6 March 2020

ஷீர்டி சாயி சத்சரிதம்

ஆன்மீக முன்னேற்றத்தை நாடுபவர் திடமான மனத்துடன் அப்பியாசங்களை மேற்கொண்டு சாகசங்கள் பல புரியவேண்டிய பாதையில் புகுந்து, என்றும் நிலையானதும் உயர்வானதுமான இலக்கை அடையவேண்டும்.

மேற்சொன்ன நிகழ்ச்சிகளை விவரிக்கும், அமிருதத்தைவிட ருசியான இக் கதைக்கொத்து, கேட்பவர்களின் மனத்தில் அன்பு தோய்ந்த பக்தியை எழுப்பும்; துக்கங்களை முடிவுக்கு கொண்டுவரும்.

கேட்கவேண்டும் என்று அவலுற்றவர்களுக்கு, இங்கிருந்து விரியும் கதை திருப்தியைத் தரும். சொல்பவருக்கும் கேட்பவர்களுக்கும் ஆத்மானந்தத்தை அளிக்கும். கேட்பவர்கள் அனைவருக்கும் நிறைவு தரும்.

பிரேமை நிரம்பியதும் இவ்வுலக இயல்புக்கு அப்பாற்பட்டதுமான இக் கதையை சாயி என்னை எழுதவைப்பார். மூடனும் பாமரனும் ஆகிய நான் ஒவ்வொரு கட்டத்திலும் மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைவேன்!

கங்கையின் தரிசனத்தால் பாவமும், சந்திர உதயத்தால் வெப்பமும் எவ்வாறு விலகுகின்றனவோ, அவ்வாறே சாயியின் திருவாய்மொழியாக வெளிவந்த இக்கதை பாவத்தையும் துன்பங்களையும் அழித்துவிடும்.

தாம் எவ்வாறு தம் குரவை தரிசனம் செய்தார் என்ற விவரத்தை சாயியின் வாய்மூலமாகவே வெளிவந்தவாறு சொல்கிறேன்; கேளுங்கள்; கவனத்துடன் கேளுங்கள்.

வேதங்களையும் வேதாகங்களையும் அத்யயனம் (மனப்பாடம்) செய்தாலும் ஸ்மிருதியையும் (வாழ்க்கைநெறி நூல்களையும்) சாஸ்திரங்களையும் திரும்பத் திரும்ப வாசித்தாலும் குருவின் அருளின்றி ஞானம் பிறக்காது. இதர முயற்சிகள் அனைத்தும் வீண்.

முதலில் தோன்றா நிலையில் இருந்த ஸம்ஸாரமென்னும் விருட்சம், பிறகு பார்வையால் தோற்றுவிக்கப்பட்டது. ஜனன மரண சோகத்தால் நிறைந்த இம்மரம் அழியக்கூடியது.

இதை வெட்டி வீழ்த்திவிடலாம்; அழியக் கூடியது; ஆகவே மரம் என்று அழைக்கப்படுகிறது. இது ஒருசமயம் தோன்றா நிலையிலிருந்து , பின்னர்த் தோற்றுவிக்கப்பட்ட உலகியல் வாழ்க்கை. ஆகவே, விஸ்தாரமான மரம் இதற்கு உவமையாகச் சித்தரிக்கப்படுகிறது.

இப்பொழுது கண்களுக்குப் புலப்பட்டு பின்னர் அழியக்கூடிய இந்த சம்சார விருட்சத்தின் வேர்கள் மேலே இருக்கின்றன! அபாரமான கிளைகளின் எண்ணிக்கையும் வியாபகமும் கற்பனைக்கு அப்பாற்பட்டது.

ஒவ்வொரு கணமும் இம் மரம் மேலும் மேலும் கப்புகளை விட்டுக்கொண்டு விரிந்துகொண்டே போகிறது. தூரத்திலிருந்து பார்க்க ரமணீயமாக (அழகாக) இருக்கும் இம்மரம், அணைத்துக்கொண்டால் அங்கமெல்லாம் முள்மயம்!

வாழைத்தண்டைபோல் இம்மரம் வைரம் இல்லாதது. ஆசைகளும் ஏக்கங்களுமாகிய தண்ணீரை விட்டு வளர்ப்பவர்களை கெட்டியாகப் பிடித்துக்கொள்ளும் கானல் நீர்; கந்தர்வ நகரம் (மாய உலகம்). 


Friday 28 February 2020

ஷீர்டி சாயி சத்சரிதம்

32 . குரு மஹிமை - சாயி திருவாய்மொழி

ஓம் ஸ்ரீ விநாயகனே போற்றி! ஸ்ரீ சரஸ்வதியே போற்றி!
ஸ்ரீ குருமஹாராஜனே போற்றி! குலதேவதைக்கும் ஸ்ரீ சீதாராமச்சந்திரனுக்கும் என்னுடைய பணிவான வணக்கங்கள். பூஜ்யகுரு ஸ்ரீசாயிநாதனை பக்தியுடன் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.

கடந்த அத்தியாயத்தில், சந்நியாசி விஜயானந்தர் நிர்வாணம் (முக்தி) அடைந்ததையும் பாலாறும் சாயியின் திருவடிகளில் கலந்ததையும் விவரித்தேன்.

அதுபோலவே, தாத்யாசாஹெப் நூல்கரும் மிக உன்னதமான பக்தராகிய மேகாவும் சாயியின் கண்முன்னே உடலை உகுத்த விவரமும் சொல்லப்பட்டது.

கொடிய மிருகமாகிய புலியொன்று உயிர்நீத்த பாணி இதையெல்லாம்விடப் பெரிய அற்புதம். செவிமடுத்தவர்கள் இதை விவரமாக கேட்டார்கள்.

இப்பொழுது வந்தடைந்திருக்கும் அத்தியாயத்தில், பாபாவே திருவாய்மொழிந்து வர்ணித்த விருத்தாந்தமொன்றைச் சொல்கிறேன். கேட்பவர்கள் அமோகமாக நன்மை அடைவார்கள்.

ஒருசமயம் காட்டில் இருந்தபோது, பாபா சற்றும் எதிர்பாராதவிதமாக குருதரிசனம் பெற்றார். குரு விளைவித்த அற்புதங்களை கவனத்துடன் கேளுங்கள்.

சாயியே திருவாய்மொழிந்ததும் பக்தி, சிரத்தை, முக்தி, இம்மூன்றையும் அளிக்கக்கூடியதுமான மிக அற்புதமான இக் காதையை என் போன்ற பாமரன் எவ்வாறு போதுமான அளவிற்கு விவரிக்க முடியும்?

அதுபோலவே, பாபாவை தரிசனம் செய்துவிட்டு மூன்று நாள்கள் ஷிர்டியில் தங்கி உபவாசம் இருக்கவேண்டும் என்ற விரத சங்கல்பத்துடன் வந்த ஒரு பெண்மணியை,-

விரதத்தை விடுத்து, பசியைக் கிளப்பிவிடுவதும் இனிமையானதுமான பூரணபோளியைச் செய்யவேண்டிய சூழ்நிலையை பாபா எவ்விதம் உருவாக்கினார் என்பதையும் சொல்கிறேன்.

போளியைச் சமையல் செய்ய வைத்ததுமல்லாமல், மனம் நிறையும்வரை  உண்ணவும் வைத்தார். பாரோபகரமாக நம்முடலைத் தேய்ப்பது போற்றத்தக்கது என்பதை அப் பெண்மணிக்கு விளங்கவைத்தார் பாபா.

உபவாசம் இருப்பதைவிடப் பாரோபகாரச் செயல்கள் மங்களம் தருபவை என்பதை, வாழ்நாளில் என்றுமே மறக்க முடியாதவாறு அப்பெண்மணியின் மனத்தில் பதியவைத்தார்.   



Friday 21 February 2020

ஷீர்டி சாயி சத்சரிதம் 

புலியே அவர்களுக்குப் பிழைக்கும் வழி; புலியே அவர்களுடைய குடும்பங்களைக் காப்பாற்றியது. ஆகவே, புலி இறந்தவுடன் அவர்களுடைய முகங்கள் சோகத்தால் கூம்பின. இது இயற்கையே. 

பிறகு, அவர்கள் மஹாராஜைக் கேட்டனர், "இப்பொழுது நாங்கள் எந்த வழியில் செல்வது? புலியை எப்படி புதைப்பது? உங்களுடைய கைகளாலேயே அதற்கு நற்கதி அளியுங்கள்".

மஹராஜ் கூறினார், "சோகப்படாதீர்கள்; புலியின் முடிவு இங்கேதான் ஏற்படவேண்டுமென்று இருந்தது. மேலும் அவனும் மஹா புண்ணியவான். அவனுக்கு அத்தியந்தமான சௌக்கியம் கிடைத்தது.-

"தகியாவைத் தாண்டி, அங்கே, அங்கே ஒரு சிவன் கோவில் இருக்கிறது! இவனை அங்கே எடுத்துச்சென்று நந்திக்கருகில் புதைத்துவிடுங்கள்.-

"அவ்விடத்தில் புதைத்தால் இவன் நற்கதி அடைவான். உங்களுடைய கடனிலிருந்தும் பந்தத்திலிருந்தும் விடுபடுவான்.- 

"போன ஜென்மத்தில் உங்களுக்கு கடன்பட்டதால், கடனை அடைப்பதற்காகவே புலியாக ஜென்மம் எடுத்தான். இன்றுவரை உங்களுடைய பிடியில் சிக்கியிருந்தான்."

தர்வேசிகள் புலியைத் தூக்கிக்கொண்டு சிவன் கோயிலுக்கு அருகில் சென்றனர். நந்திக்குப் பின்னால் ஒரு குழி தோண்டிப் புலியைப் புதைத்தனர். 

புலி ஒரு கணத்தில் மரணமடைந்தது என்னே ஆச்சரியம்! இந்நிகழ்ச்சி இத்தோடு முடிந்துபோயிருந்தால், எப்பொழுதோ மறந்துபோயிருக்கும். 

ஆனால், அன்றிலிருந்து சரியாக ஏழாவது நாள் பாபாவும் தேகவியோகம் அடைந்து விட்டார். ஆகவேதான், இந்நிகழ்ச்சி மறுபடியும் மறுபடியும் ஞாபகத்திற்கு வருகிறது. 

அடுத்த அத்தியாயம் மேலும் சுவாரசியமானது. பாபா தம் குருவை ஆராதனை செய்ததையும் அபிமானித்ததையும் விரிவாகச் செய்ததையும் விளக்குகிறார். 

ஹேமாட் சாயிநாதரை சரணடைகிறேன். குருவின் கைகளால் தலைகீழாக தொங்கவிடப்பட்ட பாபா, குருவின் கிருபையை எவ்விதமாக சம்பாதித்தார் என்பதைக் கேளுங்கள். 

எல்லாருக்கும் க்ஷேமம் உண்டாகட்டும்! ஞானிகளாலும் சான்றோர்களாலும் உணர்வூட்டப்பட்டு, சாயி பக்தன் ஹேமாட் பந்தால் இயற்றப்பட்ட, 'ஸ்ரீ சமர்த்த சாயி சத்சரிதம்' என்னும் காவியத்தில், 'தரிசன மஹிமை' என்னும் முப்பத்தொன்றாவது அத்தியாயம் முற்றும். 

ஸ்ரீ சத்குரு ஸாயிநாதர்க்கு அர்ப்பணம் ஆகட்டும். 

சுபம் உண்டாகட்டும். 


Friday 14 February 2020

ஷீர்டி சாயி சத்சரிதம்

ஒரு ஞானியின் பாதங்களில் மரணமடையும் பிராணி உடனே உத்தாரணம் செய்யப்படுகிறது. புலிக்கு இந்த ஜென்மத்தில் விளைந்த மிகப் பெரிய லாபம் அதுவே.

பாக்யசாலியாக இல்லாவிட்டால், ஒரு பிராணி ஞானியின் கண்முன்னாக உயிர்நீத்து முக்தியடைய முடியுமா?

ஒரு சாதுவின் கண்முன்னாக மரணமடைவதென்பது, குடித்த விஷம் அமிருதமாக மாறியது போன்ற அதிருஷ்டமன்றோ! அவ்விதமான மரணத்தில் மகிழ்ச்சியும் இல்லை; துக்கமும் இல்லை.

இந்தப் பிராணியின் மரணம் ஒரு ஞானியின் கண்ணெதிரிலும் அவருடைய பாதங்களிலும் ஏற்படுகிறதோ, அந்தப் பிராணி பெரும்பேறு பெற்றது. ஏனெனில் அதனுடைய உடல் ஸ்ரீகிருஷ்ணனுக்கு அர்ப்பணமாகி மறுபிறவியே இல்லாமற் போகிறது.

ஞானிகளின் சந்நிதியில் ஏற்படும் மரணம் மரணமேயன்று; அது வைகுண்ட சுகம். அவ்வாறு மரணமடைபவர் யமலோகத்தை ஜெயித்துவிடுகிறார்; மறுபிறவி என்னும் சோகம் அவருக்கில்லை.

ஞானியரின் கண்களுக்கெதிராக உடலை உகுத்தவர்கள் மறுபடியும் பிறப்பதில்லை. அச் செய்கையே பாவங்களை நிவிர்த்திசெய்து மோட்சகதியை அளித்துவிடுகிறது.

ஞானியரைத் தலையிலிருந்து கால்நகம் வரை பார்த்துக்கொண்டே தேகத்தை வீழ்த்துவதை மரணமென்று எப்படிச் சொல்லமுடியும்? இல்லவேயில்லை; அது மரணமிலாப் பெருவாழ்வே!

இந்நிகழ்ச்சியை ஏற்கனவே விதிக்கப்பட்டதாக கருதினால், இப் புலி முன்ஜன்மத்தில் ஒரு புண்ணியவானாக இருந்திருக்கவேண்டும். கல்விச் செருக்கினால் ஒரு ஹரிபக்தரை அவமானம் செய்திருக்கலாம்.

அவருடைய சாபத்தால் கொடிய மிருகமாகப் பிறந்திருக்கலாம். அதே ஹரிபக்தர் சாபவிமோசனம் அளித்ததால் பாபாவின் சரணங்களை அடைந்திருக்கலாம். ஹரிபக்தர்களின் செயல்கள் அபிநவம் (என்றும் புதியவை) அல்லவோ!

சாபவிமோசனம் பெற்றதால்தான், புலிக்கு சாயிதரிசனம் கிடைத்ததென்று எனக்குத் தோன்றுகிறது. தரிசனம் பாவங்களை எரித்து பந்தங்களை அறுத்துத் துன்பங்களுக்கும் ஒரு முற்றுப்புள்ளி வைத்தது. அதன் பயனாக, புலி வெளித்தூண்டுதலின்றி தானாகவே உத்தாரனம் பெற்றது.

பூரணமான சௌபாக்கியம் இன்றி, ஞானியின் கண்ணுக்கெதிராக மரணம் எப்படி ஏற்படும்? புலியைப் பொறுத்தவரை, முக்குணங்களும் முத்தாபங்களும் நாசமாகி, இறைவனுடன் ஒன்றிவிட்டது.

இவ்விதமாக, பூர்வ கர்மானுபந்தத்தினால் விளைந்த கொடிய தேகத்தின் சம்பந்தம் அறுந்தது; பிணைத்துவைத்த இரும்புச் சங்கலிகளும் அறுந்தன! இறைவன் செயல்படும் வழிவகை இவ்வாறே.

சாதுக்களின் மற்றும் ஞானியரின் பாதங்களில் அன்றி, மோட்சப் பாதையை வேறெங்கே காணமுடியும்? புலிக்கு அது கிடைத்தபோது தர்வேசிகள் திருப்தியடைந்தனர்.  


Friday 7 February 2020

ஷீர்டி சாயி சத்சரிதம்

தர்வேசிகள் மூவர் இருந்தனர். புலியை வைத்துத்தான் அவர்களுடைய ஜீவிதம் நடந்துகொண்டிருந்தது. ஊர் ஊராகச் சென்று, புலியைக் காட்டிக் காசு வாங்கி வாழ்க்கை நடத்தினர்.

அந்தப் பிராந்தியத்தில் ஊர் ஊராகச் சென்று கொண்டிருந்தபோது, பாபாவின் லீலைகளை பற்றிக் கேள்விப்பட்டனர். ஆகவே, தர்வேசிகள் நினைத்தனர், "நாம் அவரை தரிசனம் செய்வோம். புலியையும் அங்கே கொண்டுசெல்வோம்.-

"அவருடைய பாதங்கள் கேட்டதைக் கொடுக்கும் சிந்தாமணி; அஷ்ட மகா சித்திகளும் அவரை நமஸ்காரம் செய்கின்றன; நவநிதிகள் பாததீர்த்தம் வேண்டி அவருடைய காலடியில் புரளுகின்றன. -

"ஆகவே, நாம் அவருடைய பாதங்களை வணங்கிப் புலியை ஆசீர்வாதம் செய்யச்சொல்லி வேண்டுவோம். ஞானியின் ஆசிகளால் நாம் எல்லாருமே மங்களமடையவோம்."

தர்வேசிகள் இந்த நோக்கத்துடன் புலியை மசூதியின் வாயிலுக்கருகில் வண்டியிலிருந்து இறக்கினர்.  சங்கிலிகளைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு வாயிலில் காத்திருந்தனர்.

புலி இயல்பாகவே ஒரு பயங்கரமானதும் கொடூரமானதுமான காட்டு மிருகம்; இந்தப் புலிக்கு வியாதி வேறு கண்டிருந்தது. ஆகவே, புலி நிலைகொள்ளாமல் தவித்தது. எல்லாரும் இந்தக் காட்சியை வேடிக்கைப் பார்த்தனர்.

தர்வேசிகள் படியேறிச் சென்று பாபாவிடம் புலியின் நிலைமைபற்றித் தெரிவித்தனர். அவருடைய சம்மதம் பெற்றபின் வாயிலுக்குத் திரும்பிவந்தனர்.

புலி தப்பித்து ஓடிவிடாமலிருக்கச் சங்கிலிகள் இறுக்கப்பட்டன. பிறகு, தர்வேசிகள் மிக ஜாக்கிரதையாகப் புலியை பாபாவின் சந்நிதிக்கு கொண்டுவந்தனர்.

படியை தப்பித்து ஓடிவிடாமலிருக்கச் சங்கிலிகள் இறுக்கப்பட்டன. பிறகு தர்வேசிகள் மிக ஜாக்கிரதையாகப் புலியை பாபாவின் சந்நிதிக்கு கொண்டுவந்தனர்.

படியை நெருங்கியபோது புலி சாயியின் ஜோதிமயமான உருவத்தைப் பார்த்தது. புலி மனத்துள்ளே நடுங்கியது ஏன் என்று கடவுளுக்குத்தான் தெரியும்! மிக மரியாதையாகத் தலையை கவிழ்த்துக்கொண்டது.

ஆஹா, என்னே அந்த அற்புதம்! பரஸ்பரமாகப் பார்வைகள் சந்தித்தபோது, புலி படியேறிக்கொண்டே பாபாவை அன்புடன் உற்றுப்பார்த்தது.

உடனே வாலின் நுனியைத் தூக்கி மூன்று தடவைகள் பூமியில் அடித்தது. சேஷ்டை ஏதும் செய்யாமல் சாயிபாதங்களில் தன் வியாதி பிடித்த உடலைச் சாய்த்தது.

ஒருமுறை பயங்கரமாக உறுமிவிட்டு அக்கணமே அவ்விடத்திலேயே உயிர் நீத்தது. புலி உயிர் நீத்த பாணியை கண்ட சகல ஜனங்களும் வியப்படைந்தனர்.

ஒருவிதத்தில் தர்வேசிகள் சோகமுற்றனர். அதே நேரத்தில், வியாதியால் பீடிக்கப்பட்ட புலி மரணமடைந்தாலும் முக்தியடைந்ததைக் கண்டு மனம் தேறினர்.

சாதுக்களின், ஞானிகளின் கண்ணெதிரில் மரணமடைவதென்பது புண்ணியம் சேர்க்கும். புழுவாய் இருந்தாலென்ன, பூச்சியாய் இருந்தாலென்ன, புலியாய் இருந்தாலென்ன? எல்லாப் பாவங்களிலிருந்தும்  உடனே விமோசனம் கிடைக்கறது.

புலி போன ஜென்மத்தில் தர்வேசிகளுக்குக் கடன்பட்டிருக்கும். அது தீர்ந்தவுடன் புலிக்கு விடுதலை கிடைத்தது. சாயிபாதங்களில் தேகத்தை உகுத்தது. விதியின் விளையாட்டு நமக்கு விளங்காது!. 


Friday 31 January 2020

ஷீர்டி சாயி சத்சரிதம்

ஆயினும் ஷிர்டியே அவருக்கு மத்திய கேந்திரமாக விளங்கியது. எங்கே சென்றாலும் திரும்பத் திரும்ப ஷிரடிக்கே வந்தார். கடைசியில் பரம புனிதமான ஷிர்டியிலேயே தம்முடலை உகுத்தார்.

பூர்வ புண்ணிய பலத்தால் சாயியின் பார்வைக்குட்பட்டு, அவருடைய பாதங்களில் மூழ்கி பயமே இல்லாமல் மரணத்தைச் சந்தித்த மாங்கர் மஹா பாக்கியசாலி.

தாத்யாசாஹெப் நூல்கரும் பெரும்பேறு பெற்றவர்! பக்த சிகாமணியான மேகாவும் பெரும்பேறு பெற்றவர்! இவர்கள் இருவரும் ஷிர்டியில் பஜனை பாடிக்கொண்டிருந்தபோதே உடலை உகுத்தனர்.

இறுதிச் சடங்குகளைச் சரிவர நடத்துவதில் பாபாவுக்கு இருந்த அக்கறையும் பக்தர்களிடம் பாபா வைத்திருந்த நட்புறவையும் மேகாவின் மரணம் எடுத்துக்காட்டியது. மேகா ஜென்மம் எடுத்ததன் பயனை ஏற்கெனவே அடைந்துவிட்டார்.

பக்தர்கள் புடைசூழ ஷீர்டி கிராம மக்கள் மேகாவின் உடலை தகனம் செய்யச் சென்றபோது, பாபாவும் சுடுகாடுக்குச் சென்று மேகாவின் உடலின்மேல் பூமாரி பொழிந்தார்.

மாயையின் பிடியில் சிக்கிய சாதாரண மனிதன் துக்கப்படுவதுபோல் இறுதிச்சடங்கு நடந்துமுடிந்தபோது பாபா கண்ணீர் சிந்தினார்.

பிரேமையுடன் தம்முடைய கைகளாலேயே பிரேதத்தை பூக்களால் மூடினார். கருணை மிகுந்த குரலில் துக்கத்தை ஆற்றிக்கொண்டே மசூதிக்குத் திரும்பினார்.

மானிதஜாதியைக் கைதூக்கிவிட்டு எத்தனையோ ஞானியரை பார்க்கிறோம். அனால், ஓ, சாயி பாபாவின் மகத்துவத்தை யாரால் வர்ணிக்க முடியும்!

புலி பயங்கரமான மிருகம் அன்றோ? அதற்கு மனிதர்களைப்போல் ஞானம் உண்டா என்ன? ஆனால், அதுவும் பாபாவின் பாதங்களில் சரண் புகுந்தது! பாபாவின் செயல்கள் புரிந்துகொள்ளமுடியாதவை அல்லவோ!

இது சம்பந்தமாக ஒரு ரம்மியான காதையைக் கேளுங்கள். பாபாவின் எங்கும் நிறைந்த தன்மையையும் அவர் எல்லா உயிர்களையும் சமமாக மதித்ததையும் காண்பீர்கள்.

ஷிர்டியில் ஒருசமயம் ஓர் அற்புதம் நிகழ்ந்தது. பாபா மஹாசாமதி அடைவதற்கு ஏழு நாள்களுக்கு முன்பு, மசூதி வாசலில் ஒரு வண்டி வந்து நின்றது.

வண்டியின் பின்புறத்தில் கனத்த இரும்புச் சங்கிலியால் கழுத்தில் பிணைக்கப்பட்டு பெரியதொரு புலி இருந்தது.

புலி ஏதோ வியாதியால் அவதிப்பட்டது. தர்வேசிகள் எல்லா உபாயங்களையும் செய்து பார்த்துவிட்டனர். கடைசியில், ஒரு ஞானியை தரிசனம் செய்வதே சிறந்த வைத்தியம் என்று தீர்மானித்தனர். 


Friday 24 January 2020

ஷீர்டி சாயி சத்சரிதம்

"நான் தாதருக்கு போகவேண்டுமென்று விரும்பினேன். ஆனால், முக்கியமான வேலையொன்று இங்கிருப்பது திடீரென்று ஞாபகத்திற்கு வந்தது. ஆகவே, என்னுடைய தாதர் பயணத்தை ரத்து செய்துவிட்டேன்."

பணம் கொடுத்தாலும் வரிசையில் நின்று சிரமப்பட்டு வாங்கவேண்டிய பயணச் சீட்டு சுலபமாக கைக்கு வந்ததுபற்றி மாங்கர் மகிழ்ச்சியடைந்தார்.

சீட்டுக்குப் பணம் கொடுப்பதற்காகாப் பாக்கெட்டிலிருந்து பணத்தை எடுத்துக்கொண்டுஇருந்தபோது, விவசாயி திடீரென்று கூட்டத்தினுள் முண்டியடித்துப் புகுந்து காணாமல் போய்விட்டார். அவர் எங்கே சென்றார் என்பதை மாங்கரால் கண்டுபிடிக்க முடியவில்லை.

விவசாயியைத் தேட பாலாராம் பலமாகப் பிரயத்தனம் செய்தார். அனைத்து முயற்சிகளும் பயனற்றுப் போயின. இதற்கிடையே ரயில் வண்டி வந்துவிட்டது.

காலில் செருப்பில்லாமல், தலையில் ஒரு வேட்டியை முண்டாசாகக் கட்டிக்கொண்டு, கம்பளியைப் போர்த்துக்கொண்டு வந்த அந்த விவசாயி சகோதரர் யார்?

பயணச் சீட்டின் கட்டணம் சிறிதென்று சொல்லமுடியாது. அதையும் அவர் ரொக்கமாகத் தம்முடைய பாக்கெட்டில் இருந்து எடுத்துக்கொடுத்தார். ஏன், ஓ, எதற்காக இந்த தாட்சிண்ணியத்தின் பளுவை நான் சுமக்க வேண்டும்? இந்தப் புதிர் எனக்குப் புரியவில்லையே!

தோற்றத்தில் விவசாயி, ஆயினும் இவ்வளவு உதார குணமா! பணத்தாசை என்பதே கிடையாதா? யார் இந்த விவசாயி? கடைசிவரை இப்புதிர் விடுபடவே இல்லை;  மாங்கரின் மனம் குடைந்தது.

ஆச்சரியத்தில் நிரம்பிய மாங்கர், விவசாயி எந்நேரமும் வரலாம் என்ற நம்பிக்கையுடன் ரயில் புறப்படும்வரை ரயில் பெட்டியின் கதவுக்கு அருகில் வெளியே நின்று கொண்டிருந்தார்.

ரயில் புறப்பட்டபோது, இனிமேல் தேடிப் பயனில்லை என்று தெரிந்து கைப்பிடிக்கம்பியை பிடித்து, எகிறிக்குதித்துப் பெட்டியில் ஏறினார்.

கோட்டையில் பிரத்யக்ஷமான சந்திப்பு. வேறுவிதமாக இருந்தபோதிலும் இங்கும் சாயி சந்திப்பு. விவசாயி அணிந்திருந்த விசித்திரமான உடை மாங்கரின் மனத்தைக் குறுகுறுக்க செய்தது.

பின்னர், இந்த சத்தான பக்தர் சாயி பாதங்களில் பூரணமாக காதல் கொண்டு, திடமான சிரத்தையுடனும் பக்தியுடனும் அவருடைய வாழ்நாளை ஷிர்டியில் கழித்தார்.

ரீங்காரம் செய்துகொண்டே தாமரை மலையின் மகரந்தத்தை சுவைக்கச் சுற்றிச் சுற்றி வரும் தேனியைப் போல, சாயி நாமத்தைச் சொல்லிக்கொண்டே சாயியை சுற்றிச் சுற்றி வந்தார். பாலராம்ஜி அவ்விதமாகவே ஷிர்டியில் வாழ்ந்தார்.

எப்பொழுதாவது பாபாவின் அனுமதி பெற்றுக்கொண்டு முக்தாராம்ஜி என்ற சக பக்தருடன் ஷிர்டியை விட்டு வெளியே செல்வார்.

Monday 20 January 2020

ஷீர்டி சாயி சத்சரிதம்

அந்த ரம்மியமான இடத்தையும் பளிங்கு போன்ற சுத்தமான நீரையும் மந்தமாருதத்தையும் (தென்றலையும்) கண்டு மிக்க மகிழ்ச்சியடைந்தார்.

சாயியால் ஆணையிடப்பட்டிருப்பினும், சாயியை எங்கோ வைத்துக்கொண்டு, அவர் விதித்தவாறும் சொல்லிக்கொடுத்த முறையிலும் மாங்கர் தம்முடைய தவத்தை ஆரம்பித்தார்.

பாபா புரிந்த விந்தையைப் பாருங்கள்! அந்தக் கோட்டையில் மாங்கர் தவத்தில் மூழ்கி இருந்தபோது, பாபா பிரத்யக்ஷமாக தரிசனம் அளித்தார். மாங்கர், கண்களுக்கு எதிரே பாபாவை தரிசனம் செய்தார்.

சமாதி நிலையில் தரிசனம் கிடைப்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை. ஆனால், மாங்கரோ ஆசனத்தில் அமர்ந்திருந்தபோது விழித்த நிலையிலேயே  சமர்த்தரைக் கண்டார்.

கண்ணால் கண்டது மட்டுமல்லாமல், பாலராம் சாயியைக் கேட்டார், "பாபா, என்னை ஏன் இங்கு அனுப்பினீர்கள்?" பாபா என்ன பதில் கூறினார் தெரியுமா?

"ஷிர்டியில் இருந்தபோது அநேக எண்ணங்கள் உமது மனத்தில் அலைகளாக எழும்பி மோதின. ஆகவே, உம்முடைய சஞ்சலமற்ற மனத்தைக் கோட்டைக்குப் போகும்படி நியமித்தேன். -

"நிலம், நீர்  ஆகிய பஞ்ச பூதங்களால் ஆகியதும் மூன்றரை முழம் நீளமுள்ளதுமான இவ்வுடலுக்கு வெளியேயோ, ஷிர்டிக்கு வெளியேயோ நான் இல்லை என்று நினைத்திருந்தீர்.-

"ஆனால், இப்பொழுது உம்மெதிரில் நிற்கும் நான்தான் ஷிர்டியிலும் இருக்கிறேன். இதை நீரே அமைதியான மனத்துடன் நிதானமாக நன்கு பார்த்துக்கொள்ளும். இந்நிமித்தமாகவே உமக்கு இப்பாடம் புகட்டினேன் என்றும் அறிவீராக."

உத்தேசம் செய்த காலம் கடந்தபின், மாங்கர் மச்சீந்திரக்கட்டை விடுத்துத் தம்முடைய இடத்திற்கு கிளம்பினார்.

அவருடைய வாசஸ்தலமான பாந்த்ராவிற்கு போகலாம் என்று நினைத்தார். ஆகவே, பூனாவிலிருந்து தாதர்வரை ரயில்வண்டியில் பயணம் செய்ய முடிவுசெய்தார்.

பூனா ரயில் நிலையத்தை அடைந்தார். பயணசீட்டு வாங்கவேண்டிய நேரம் வந்தவுடன், சீட்டு வாங்கும் முகப்புக்குச் சென்றபோது ஓர் அற்புதம் நிகழ்ந்தது!

இடுப்பில் லங்கோடு கட்டி ஒரு கம்பளியைப் போர்த்துக்கொண்டு விவசாயியை போல் ஆடையணிந்திருந்த, முன்பின் தெரியாத பிரயாணி ஒருவரை முகப்புக்கருகில் கண்டார்.

பயணசீட்டு வாங்கிக்கொண்டு விவசாயி திரும்பியபோது அவருடைய பார்வை பாலாராமின் பார்வையைச் சந்தித்தது. விவசாயி பாலாராமை நோக்கி நடந்தார்.

"நீங்கள் எங்கே போகிறீர்கள்" என்று விவசாயி பாலாராமைக் கேட்டார். "தாதருக்கு" என்று பாலாராம் சொன்னவுடன், "இதை நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள்" என்று சொல்லிக்கொண்டே பாலாராமிடம் பயணசீட்டைக் கொடுத்தார். அவர் மேலும் சொன்னார், -


Friday 10 January 2020

ஷீர்டி சாயி சத்சரிதம்

மாங்கர் சாயியின் திருவாய் மொழியைக் கேட்டு அவருடைய ஆணையை சிரமேற்கொண்டு, பாதங்களில் சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்தார்.

மிகுந்த விநயத்துடன் மாங்கர் பதில் கூறினார், "உங்களுடைய தரிசனம் கிடைக்காத இடத்தில உட்கார்ந்துகொண்டு நான் என்ன செய்யப் போகிறேன்?-

"இங்கே தினமும் உங்களை தரிசனம் செய்வேன்; பாத தீர்த்தம் அருந்துவேன்; இயல்பாகாவே இரவுபகலாக உங்களுடைய சிந்தனையில் மூழ்குவேன். அங்கோ, நான், நான்மட்டும் ஓர் ஆண்டிப் பயலைப் போல் வாழ்வேன்.-

"ஆகவே, பாபா, நீங்கள் இல்லாமல் அங்கு நான் என்ன லாபம் பெறுவேன்! என்னை ஏன் அங்கு அனுப்புகிறீர்கள்?"

"சிஷ்யனுக்கு குருவின் வார்த்தைகளில் அணுவளவும் சந்தேகமோ கோணல் சிந்தனையோ ஏற்படக்கூடாது' என்று நினைத்த மாங்கர், அடுத்த கணமே விகற்பத்தை விடுத்து, சங்கற்பம் செய்துகொண்டார்.

மாங்கர் கூறினார், "பாபா, என்னை மன்னித்துவிடுங்கள். என்னுடைய எண்ணங்கள் அற்பத்தனமான புத்தியிலிருந்து எழுந்தவை. என்னுடைய சந்தேகங்களைப்பற்றி  நானே வெட்கப்படுகிறேன். எனக்கு இந்த சந்தேகம் வந்திருக்கவேகூடாது.-

"நான் உங்களுடைய நாமத்தை சதா ஜபம் செய்பவன்; ஆக்ஞயை சிரமேற்கொள்பவன். உங்களுடைய அருள் சக்தியால் நான் அந்த கோட்டையிலும் சந்தோஷமாக இருப்பேன். -

"அங்கும் உங்களையே தியானம் செய்வேன்; உமது கருணை பொங்கும் உருவத்தையே மனத்திரையில் நிறுத்துவேன். உங்களைப்பற்றிய நினைத்துக்கொண்டிருப்பேன்.-

"உங்களிடம் அனன்னியமாக(வேறெதிலும் நாட்டமில்லாத) சரணடைந்து, வருவதையும் போவதையும் உங்களுடைய கையில் ஒப்படைத்துவிட்ட பிறகு, நான் ஏன் எதைப்பற்றியும் கவலைப்படவேண்டும்?-

"உங்களுடைய ஆக்ஞய்யின் சக்தியே எனக்கு அங்கும் சாந்தியளிக்கும். உங்களுடைய மகத்தான சக்தியினுள் அடைக்கலம் புகுந்த நான் ஏன் வீணாகக் கவலைப்படவேண்டும்?"

சமர்த்த சாயி சனாதன பிரம்மம். அவருடைய வார்த்தைகளே நமது தலையெழுத்தாகும். எவர் அவருடைய வார்த்தைகளில் விசுவாசம் வைக்கிறாரோ, அவர் பூரணமான அனுபவத்தை பெறுவார்.

பாபா அப்பொழுது மாங்கரிடம் சொன்னார், "மனத்தை நிலைப்படுத்திக்கொண்டு  நான் கூறுவதைக் கவனமாக கேளும். விகற்பமான எண்ணங்கள் வேண்டா.-

"உடனே கிளம்பி மசிந்தரகட்டுக்குப் போம். தினமும் மூன்று முறைகள் தியானம் செய்யும். காலக்கிரமத்தில் ஆத்மானந்தத்தால் நிரம்புவீர்".

இவ்வாறு உறுதியளிக்கப்பட்ட மாங்கர் மௌனமானார். "தீனனாகிய நான் என்ன சொல்ல முடியும்" என்று நினைத்து, கோட்டைக்குப் போவதற்குத் தயாரானார்.

மறுபடியும் சாயிபாதங்களை வணங்கிவிட்டு உதீ பிரசாதத்தையும் பெற்றுக்கொண்டு தெளிவான மனத்துடன் மச்சீந்திர பவனுக்கு கிளம்பினார். (அங்கு போய்ச் சேர்ந்தபின்)