valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 8 September 2022

 ஷீர்டி சாயி சத்சரிதம்


சிலர் வைரம் கட்டிய முத்துமாலைகளைக் கழுத்தில் அணிவித்தனர். சிலர் நெற்றியில் திலகமிட்டனர். இவ்வாறான சின்னச் சின்ன விஷயங்களை அனுமதித்தது பாபா அவர்களுக்குச் செல்லம் கொடுத்தார்.

எல்லாச் சிங்காரிப்புகளும் முடிந்து, முது மாலைகள் கழுத்தில் ஜொலிக்க, தலைமேல் மகுடம் வைக்கப்பட்டவுடன் வீசிய சோபை காண்பதற்கு மிக அற்புதமாக இருந்தது.

நானாசாஹேப் நிமோன்கர் குஞ்சலங்கள் தொங்கும் மஞ்சள் நிறத் துணிக்குடையை பாபாவின் மேல் தலைக்குமேல் பிடித்துக்கொண்டு பிடியுடன் சேர்த்துக் குடையைச் சக்கரம் போல் சுழற்றிக்கொண்டேயிருப்பார்.

பாபுசாஹெப் ஜோக் குருவின் பாதங்களை அலம்பியபின் அர்க்கியம் பாத்யம் ஆகிய உபசாரங்களை மிகுந்த பக்தியுடன் செய்வார். பிறகு, விதிமுறைகளின்படி பாபாவுக்கு பூஜை செய்வார்.

முன்னால் ஒரு வெள்ளித்தட்டை வைத்து அதில் பாபாவின் பாதங்களை எடுத்துவைத்து மிகுந்த மரியாதையுடன் தம்முடைய இரண்டு கைகளாலும் அலம்புவார்.

குங்குமப்பூக் குழம்பைப் பேலாவில் எடுத்துக்கொண்டு குழம்பை பாபாவின் கைகளுக்குப் பூசுவார். பின்னர் உள்ளங்கையில் ஒரு பீடாவை வைப்பார். ஈதனைத்தையும் பாபா புன்னகை மலர்ந்த முகத்துடன் பார்த்துக்கொண்டிருப்பார்.

அரியணையில் பாபா அமர்ந்திருக்கையில் தாத்யாவும் மற்றும் சிலரும் பாபாவின் கைகளைப் பிடித்துக்கொண்டு அவர் ஆசுவாசமாக உட்கார்ந்திருக்க உதவி செய்வர். பிறகு அவருடைய பாதங்களை மரியாதையுடன் வணங்குவர்.

சாவடியின் தரை பல தடவைகள் தேய்த்துப் பெருக்கிச் சுத்தம் செய்யப்பட்டு ஸ்படிகம் போல் நிர்மலமாக மின்னியது. சாயியின் அன்பில் கட்டுண்டவர்களாக சிறுபிள்ளைகளிலிருந்து வயோதிகர்கள்வரை எல்லாரும் அங்கு வந்தனர்.

பாபா அவ்வாறு 'காதியில்' (அரியணையில்) சாய்ந்துகொண்டு உட்கார்ந்து கொண்டிருக்கையில் இருபுறங்களிலும் சவரிகளும் (சாமரங்களும்) விசிறிகளும் வீசப்பட்டன.

பிறகு, மாதவராவ் புகையிலையைக் கசக்கிச் சிலீமைத் தயார் செய்வார். அதைத் தாத்யா பாடீலிடம் கொடுப்பார். தாத்யா சிலீமை உறிஞ்சிப் புகையைவைத்துக்கொடுப்பார்.

புகையிலையில் ஜுவாலை வந்தவுடன் தாத்யா சிலீமை பாபாவின் கையில் கொடுப்பர். ஒருதடவை புகைத்த பிறகு, பாபா சிலீமை மகால்சாபதியிடம் கொடுப்பார்.

சிலீம், புகையிலை தீர்ந்துபோகும் வரை மகால்சாபதி, சாமா (மாதவராவ்), தாத்யா, என்று மாற்றி மாற்றிச் சுற்றிவரும்.

அந்தச் சிலீம் மகா பாக்கியசாலி. உயிரற்ற ஜடப்பொருளாக இருந்தபோதிலும் எவ்வளவு பாக்யம் பெற்றது அந்த சிலீம்! உயிருள்ளவர்களாகிய நம்மாலும் சிலீமின் சேவைக்கு இணையாக சேவை செய்யமுடியுமோ?