ஷீர்டி சாயி சத்சரிதம்
வீரபத்ரப்பா எதையும் கொடுக்க விரும்பவில்லை. சனபசப்பாவும் விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லை. இருவரும் சூடான வாக்குவாதத்தில் இறங்கினர். பின்னர் இருவரும் என்னிடம் வந்தனர்.
நான் அவர்கள் இருவரிடமும் சொன்னேன், "அந்த நிலத்தின் பூரண உரியமையாளர் சங்கரரே. வேறு எவருக்கும் அது உபயோகப்படாது. ஆகவே, நீங்கள் இருவரும் வீணாகப் பேராசையில் மூழ்கவேண்டா.-
"நிர்ணயிக்கப்பட்ட விலை, சங்கரரைப் பிரீதி செய்ய அர்ப்பணம் செய்யப்பட்ட நிலத்தினையுடையதுதான் என்பது சர்வ நிச்சயம். கௌரியைத் தவிர வேறு எவனாவது இப் பணத்திற்கு ஆசைப்பட்டால், அவன் பட்டினி கிடந்தது சாக நேரிடும்.-
"இறைவனின் சம்மதிமின்றி இந்தப் பணத்தை எவனாவது தொட்டால், அவன் இறைவனின் கோபத்திற்கு காரணமாவான். ஏனெனில், இந்தச் செல்வம் சம்பூரணமாக இறைவனுடையது."
அந்த நிலம் பூஜாரிக்குச் சொந்தம். பூஜாரியின் வாரிசான கௌரிக்குதான் நிலத்தின்மேல் உரிமை உண்டு. வெளியார் இது விஷயமாக என்ன செய்யமுடியும்? செல்வம் முழுவதும் கௌரிக்கே சொந்தம்.
ஆகவே, நான் அவர்கள் இருவரிடமும் சொன்னேன், "செல்வம் கௌரியினுடையது என்பதை ஒப்புக்கொண்டு அவளுடைய அனுமதியின்படி நடந்தால்தான் நீங்கள் இருவரும் பேறுபெற்றவர்கள் ஆவீர்கள். -
"அப்படியின்றி அவளுடைய விருப்பத்திற்கு எதிராக நீங்கள் நடந்தால், அது இறைவனுக்கு சம்மதமாகாது. இந்த விவகாரத்தில் சுதந்திரமாகச் செயல்படுவதற்கு வீரபத்ரபாவுக்கு எந்த அதிகாரமும் இல்லை."
நான் என்னுடைய புடம்போட்ட அபிப்பிராயத்தை இவ்வாறு வெளிப்படுத்தியதால், வீரபத்திரன் என்மேல் கடுங்கோபம் கொண்டான்; என்னை இகழ்ந்து பேசினான்.
அவன் சொன்னான், "பாபா, என் மனைவியின் சொத்து உரிமையை நிர்த்தாரணம் செய்தபின், மொத்தப் பணத்தையும் விழுங்கிவிட்டு சுகமாக வாழலாம் என்ற சுயநல நோக்கம் உங்கள் மனத்தில் இருக்கிறது."
அவன் அவ்வாறு பேசியதைக் கேட்ட நான் வியப்பால் பேச்சிழந்துபோனேன்! அல்லாமியாவின் செயல்கள் கற்பனைக்கெட்டாதவை அல்லவோ! ஆகையால், நான் எதற்காக வருத்தப்பட வேண்டும்?
வீரபத்ரப்பா என்னிடம் இவ்வாறு பேசினான். வீட்டிலோ மனைவியின்மேல் கடுஞ்சினங்கொண்டு நெருப்பைக் கக்கினான். ஆகவே, பிற்பகலில் அவள் தரிசனம் செய்ய வந்தாள்; என்னிடம் கெஞ்சினாள்.
"பாபா, வேறெவரோ சொன்ன வார்த்தைகளைக் கேட்டு எனக்குக் கிருபை செய்யாது அலட்சியப்படுத்திவிடாதீர்கள். பயபக்தியுடன் நான் வேண்டுகிறேன். உங்கள் மகளாகிய என்னிடம் இரக்கம் காட்டுங்கள்."
அவள் அவ்விதம் கெஞ்சியத்தைக் கேட்டு நான் அவளுக்கு மீண்டும் பூரணமாக உறுதியளிக்கும் வகையில் சொன்னேன், "என்னுடைய கிருபையால் உனக்கு எழுகடலையும் பரிசளிப்பேன் (ஏழு கடல்களையும் தாண்டிவந்து உன்னைப் பாதுகாப்பேன்). நீ சிறிதும் வருத்தப்படாதே."