valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 30 November 2023

 ஷீர்டி சாயி சத்சரிதம்


"'தங்களுடைய அருள் மலரும்வரை போதியைப் படிப்பது வீண் செயல். புரிந்துகொள்வது படிப்பதைவிடக் கடினம். இதை நான் மனந்திறந்து சொல்லுகிறேன்.'-

"பாபா சொன்னார், "போதி படிக்கும்போது நீர் அவரசரப்படுகிறீர். இப்பொழுது என்னருகில் உட்கார்ந்துகொண்டு நான் பார்க்குமாறு வாசியும்.'-

"நான் கேட்டேன், 'நான் என்ன வாசிக்கவேண்டும்?' பாபா என்னை, 'அத்யாத்மம் (தன்னையறியும் வித்தை) வாசியும்' என்று ஆணையிட்டார். நான் போதியைக் கொண்டுவரப் போனேன். உடனே, கண்விழித்துவிட்டேன்".

தேவ் நன்கு விழித்துக்கொண்டார். தம்முடைய கனவை ஞாபகப்படுத்திக்கொண்ட பிறகு அவருடைய மனத்தில் என்னென்னெ எண்ணங்கள் ஓடியிருக்கும் என்பதைக் கதைகேட்பவர்களே கற்பனை செய்து பார்க்கலாம்.

அவ்வளவு நாள்கள் கடந்த பிறகு, தேவ் ஆணையை நிறைவேற்றுகிறாரா என்றும், தினமும் தவறாது போதி படிக்கிறாரா என்றும், யார் கவலைப்படப்போகிறார்?

தேவ் விதிமுறைகளின்படி செயல்பட்டு தினமும் அப்பியாசம் செய்கிறாரா? படிப்பதில் தவறு ஏதாவது நேர்ந்தால் அதற்குக் காரணம் என்ன? - இவற்றையெல்லாம் யார் மேற்பார்வை செய்வார்?

வாசிப்பவர் எவ்வளவு கவனமாக இருக்கவேண்டும் என்பதிலும், எங்கு விசேஷமான ஈடுபாடு காட்டவேண்டும் என்பதிலும், இன்னும் பிற விஷயங்களிலும், சாயிமாதாவைத் தவிர வேறு யார் பிரத்யக்ஷமாக (கண்கூடாக) அக்கறை காட்டுவார்?

இதுவே சமர்த்த சாயியின் லீலை, எண்ணற்ற பக்தர்கள் இவ்வாறு ஆத்மானந்தக் கொண்டாட்டத்தை அனுபவித்ததை நான் என் கண்களால் கண்டிருக்கிறேன்.

கதை கேட்பவர்கள் குழுவே! நாம் அனைவரும் குருவின் பொற்கமலப் பாதங்களில் சரணடைவோமாக! அடுத்த அத்தியாயத்தின் நவீனத்தைத் தகுந்த காலத்தில் கேட்பீர்கள்.

ஸ்ரீ சமர்த்தரை நினைவில் வைத்துக்கொண்டு சத்பாவத்துடன் அவருடைய பாதங்களில் ஹேமாட் நமஸ்காரம் செய்கிறேன். பக்தியுடனும் விசுவாசத்துடனும் அவரை சரணடைகிறேன். அதுவே பிறவித் துன்பங்கள் அனைத்திலும் விடுதலை அளிக்கும்.

சாயியே ஹேமாடின் சுயநல நாட்டமெல்லாம். சாயியே ஹேமாட்டுக்கு ஆன்மீக லாபத்தை அளிப்பவர். வாழ்க்கையில் அடையவேண்டிய பேறுகளை அடையவைப்பவர் சாயியே. ஹேமாடின் உறுதியான நம்பிக்கை இதுவே.

எல்லாருக்கும் க்ஷேமம் உண்டாகட்டும்! ஞானிகளாலும் சான்றோர்களாலும் உணர்வூட்டப்பட்டு , சாயிபக்தன் ஹேமாட் பந்தால் இயற்றப்பட்ட, 'ஸ்ரீ சமர்த்த சாயி சத் சரித்திரம்' என்னும் காவியத்தில், 'கருணையும் அருள்மழையும்' என்னும் நாற்பத்தொன்றாவது அத்தியாயம் முற்றும்.


ஸ்ரீ சத்குரு சாயிநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.

சுபம் உண்டாகட்டும்.