valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Friday 21 June 2019

ஷீர்டி சாயி சத்சரிதம்

மற்றவர்களுக்கெல்லாம் என்றும்போல் சாயிநாதர். ஆனால், அவ்வம்மையாரின் கண்களுக்கோ ஜானகிகாந்தர் (ஸ்ரீராமர்), அவருடைய கண்களிலிருந்து ஆனந்தக் கண்ணீர் பெருகுவதைக் கண்டு மக்கள் ஆச்சரியமடைந்தனர்.

இரண்டு கைகளையும் கொட்டிக்கொண்டு ஆனந்தக் கண்ணீர் பெருக்கும் அபூர்வமான காட்சியைப் பார்த்துக் குழுமியிருந்தவர்கள் வியப்படைந்தனர்.

வியப்படைந்தது மட்டுமின்றி, விஷயம் என்னவென்று அறிந்துகொள்ளவும் ஆர்வமுற்றனர். ஏன் இந்த ஆனந்தக்கண்ணீர்? அவருக்கு மாத்திரம் பிரேமையின் ஆவேசம் எங்கிருந்து வந்தது?

பின்னர், மாலை நான்கு மணியளவில் அவ்வம்மையார் ஆனந்தத்தால் நிரம்பிய மனத்துடன் தம்மிச்சையாகவே, சாயி தமக்கு ஸ்ரீராமராக தரிசனம் தந்த அற்புத லீலையை கணவரிடம் விவரித்தார்.

"நீலோத்பலப் பூவைப் போன்ற நிறமுடையவரும் பக்தர்களின் ஆசைகளை கற்பக விருட்சத்தைப் போல் நிறைவேற்றுபவரும் பரதனுக்கு மூத்தவரும் தசரதருக்குப் புத்திரரும் சீதாமணாளருமான ஸ்ரீராமரை நான் கண்டேன்.-

"நான் கண்டது, மஞ்சள் பீதாம்பரம் அணிந்து கிரீட குண்டலங்களுடன் ஜொலித்துக் கொண்டு வனமாலையும் அணிந்த, நான்கு புஜங்களுடன் கூடிய ஜானகி காந்தரையே.-

"கைகளில் சங்கு - சக்கரம் - கதை, மார்பில் ஸ்ரீவத்சம் என்றழைக்கப்படும் மரு, கழுத்தைச் சுற்றிக் கௌஸ்துப மாலை, இவற்றை அணிந்துகொண்டவரும் புருஷோத்தமரும் உள்ளங்கவரும் உருவமுடையவரும் அப்பாலுக்கும் அப்பாற்பட்டவருமாகிய ஸ்ரீராமரை கண்டேன்."-

அவர் மேலும் சொன்னார், "ஈடிணையற்ற லீலைகள் புரிவதற்காக மனித அவதாரம் ஏற்ற மஹாவிஷ்ணுவும், ஜானகியின் இதயத்தில் குடிகொண்டு மகிழ்விப்பவருமான ஸ்ரீராமரை நான் வில்லேந்திய கோலத்தில் கண்டேன்.-

"வெளிப்பார்வைக்கு அவர் ஒரு பக்கீராக தோன்றலாம்; வீடுவீடாகச் சென்று பிச்சையும் எடுக்கலாம். எனக்கு அவர் ஜானகியின் மனத்தைக் கவர்ந்த, வில்லேந்திய ஸ்ரீராமராகவே தெரிந்தார்.-

"மேலும், அவர் மேலெழுந்த வாரியாகப் பார்த்பதற்கு ஒரு அவலியாக (முஸ்லீம் முனிவராக) இருப்பினும், மற்றவர்களுக்கு எப்படித் தோன்றினாலும், எனக்கு ஜானகியின் மனத்தைக் கவர்ந்த கோதண்டபாணியாகவே தெரிந்தார்."

அவ்வம்மையார் பரமபக்தியும் பாவமும் கொண்டவர்; கணவனோ பணத்தாசை பிடித்த சுயநலவாதி. "பெண்ணினம் இப்படித்தான் பேசும். ரகுபதி (ஸ்ரீராமர்) இந்த இடத்தில் இப்பொழுது எப்படித் தோன்ற முடியும்?

"நம்பிக்கையுள்ள வெகுளிகளுக்கு மனத்தில் என்ன இருக்கிறதோ அதுவே காட்சியாகத் தெரிகிறது. நாமெல்லாம் சாயியைப் பார்த்துக்கொண்டிருந்தபோது இவளுக்கு மட்டும் எப்படி ராமரூபம் தெரிந்தது?"