valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 1 November 2018

ஷீர்டி சாயி சத்சரிதம்

"மேலும், இந்தப் போதியின் மொழியோ சமஸ்க்ரிதம். என்னுடைய பேச்சும் உச்சரிப்பும் குறைபாடுடையன. பேச்சில் கிராமவாடை ; உச்சரிப்பில் மெருகில்லை. கூட்டெழுத்தை உச்சரிக்கும்போது நாக்குக் குழறி, பேச்சு தெளிவிழந்து போகிறது".

பாபாவினுடைய செயல், சண்டை மூட்டிவிடுவதற்காகவே குறிவைக்கப்பட்டது என்று சாமா நினைத்தால் போலும். அந்தோ பாபாவுக்குத் தம்மீது இருந்த அன்பையும் அக்கறையையும் அவர் உணர்ந்தாரில்லை.

"என் சாமா ஒரு கிறுக்கன் போலும்! ஆனால், எனக்கு அவன்மேல் ஆசையும் பாசமும் உண்டு. என்னுடைய இதயத்தில் ஒரு தனியிடம் பிடித்துவிட்டான். அதுவே என் அன்புதோய்ந்த அனுதாபத்திற்கு காரணம்.-

"என்னுடைய கைகளாலேயே இந்த விஷ்ணு சஹஸ்ர நாம் மாலையை அவன் கழுத்தில் இடுகிறேன். உலகியல் தொல்லைகளில் இருந்தும் துயரங்களில் இருந்தும் இது அவனை விடுவிக்கும். இந்த நாமாவளியைப் பாராயணம் செய்வதில் அவனுக்கு ஆவலை உண்டு செய்கிறேன்.-

"நாமம் மலைபோன்ற பாவங்களையும் அழிக்கும்; நாமம் தேகாபிமானத்தை உடைக்கும்; நாமம் கோடிக்கணக்கான தீயநாட்டங்களை நாசம் செய்து நிர்மூலமாக்கும்.-

"நாமம் காலனின் கழுத்தை நெறிக்கும்; ஜனனமரணச் சுழலிருந்து விடுவிக்கும். இவ்வளவு மஹிமை வாய்ந்த விஷ்ணு சஹஸ்ர  நாமாவளியின் மீது சாமா ஆர்வத்தையும் ஆசையையும் அன்பையும் வளர்த்துக்கொள்ள வேண்டும். -

"பிரயத்தனமாக, செய்கிறோம் என்ற உணர்வுடன் செய்யப்படும் நாமஜபம் மிக உன்னதமானது. பிரயத்தனம் இன்றிச் செய்யப்படும் நாமஜபமும் சோடைபோவதில்லை. எதிர்பாராமல் நாக்கில் தொந்திரனாலும், நாமம் தன்னுடைய பிரபாவத்தை வெளிப்படுத்தும். -

"நம்மைப் பரிசுத்தமாக்கிக்கொள்ள நாமஜெபத்தைவிட சுலபமான வழி வேறெதுவும் இல்லை. நாமமே நாக்குக்கு அணிகலன்; நாமமே ஆன்மீக வாழ்வைச் செழிப்பாகும் உரம். -

"நாமத்தை தியானம் செய்வதற்கு நீராடல் தேவையில்லை. நாமம் சடங்குகளுக்கும் சாஸ்திர விதிகளுக்கும் உட்பட்டதன்று. நாமம் எல்லாப் பாவங்களையும் அழிக்கும். நாம என்றும் எப்பொழுதும் பவித்திரமானது.-

"என்னுடைய நாமத்தை இடைவிடாது ஜபம் செய்துவந்தால், அக்கறை சேர்ந்து விடுவீர்கள்; வேறு உபாசனை ஏதும் தேவையில்லை; அதுவே மோக்ஷத்தை அளிக்கும்.-

"எவர் என்னுடைய நாமத்தை சதாசர்வகாலமும் ஜபிக்கிறாரோ, அவர் எல்லாப் பாவங்களில் இருந்தும் விடுபடுகிறார். எனக்கு அவர் மிகச் சிறந்த மனிதரைவிடச் சிறந்தவராகின்றார்."

பாபாவின் இதயத்தில் ஆழமாகப் பதிந்திருந்த எண்ணமும் நோக்கமும் இவையே. அதற்கேற்றவாறே அவர் செயல் புரிந்தார். வேண்டா, வேண்டா, என்று சொன்னபோதிலும் சாமாவின் பாக்கெட்டில் போதியைத் திணித்துவிட்டார்!