valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 30 December 2021

 ஷீர்டி சாயி சத்சரிதம்

ஒவ்வொரு நாளும் இரவு நேரத்தில் இந்தப் பிரசங்கம் நடந்து, அவருடைய தூக்கத்தை பாழ்படுத்தியது. இந்த இன்னலை அவரால் தாங்கவும் முடியவில்லை.

இந்த மனிதர் மேற்சொன்ன இன்னலால் வதைபட்டார்; விடுபட வழி தெரியவில்லை. ஆகவே, நிவாரணம் பெற என்ன செய்யலாம் என்று தம் நண்பர் ஒருவரை ஆலோசனை கேட்டார். (நண்பர் சாயிபக்தர்)

"என்னைப் பொறுத்தவரை மஹாநுபாவரான சாயி மஹாராஜைத் தவிர வேறெந்த நிவாரணமும் தெரியவில்லை. முழுமையான விசுவாசத்துடனும் பக்தியுடனும் நீர் உதீயை ஏற்றுக்கொண்டால், அது தன்னுடைய சக்தியைத் தானே வெளிப்படுத்தும்."

எப்படி எப்படி சாயி பக்தர் சொன்னாரோ, அப்படி அப்படியே அவரும் செய்தார். அவருடைய அனுபவமும் அவ்வாறே இருந்தது. மறுபடியும் தந்தை கனவில் தோன்றவேயில்லை.

விதிவசத்தாலும் நற்செயலின் விளைவாகவும், ஆலோசனை கேட்ட நண்பர் ஒரு சாயிபக்தர். உதீயின் விசித்திரமான மஹிமையைப்பற்றி விவரித்துவிட்டுச் சிறிதளவு அவருக்கு அளிக்கவும் செய்தார்.

சாயிபக்தர் சொன்னார், "படுக்கப்போவதற்குமுன் சிறிது உதீயை நெற்றியில் பூசிக்கொள்ளவும், மீதியை ஒரு பொட்டலமாக தலையணையின் அருகில் வைத்துக்கொள்ளவும். ஸ்ரீசாயியை மனத்தில் வைக்கவும்.-

"பக்திபாவத்துடன் உதீயை அணுகவும். பிறகு அது விளைவிக்கும் அற்புதத்தை பார்க்கலாம். அது உடனே உம்மை இந்த இன்னலிலிருந்து விடுவிக்கும். உதீயினுடைய இயல்பான குணம் இதுவே."

மேற்சொன்ன செயல்முறையை அனுசரித்து, அன்றிரவு அவர் நிம்மதியாகத் தூங்கினார். கெட்ட கனவின் சாயலும் கிட்ட நெருங்கவில்லை; அவர் மிக்க ஆனந்தமடைந்தார்.

அந்த ஆனந்தத்தை யாரால் விவரிக்க முடியும்! அவர் உதீ பொட்டலத்தை தலையணையின் அருகிலேயே எப்பொழுதும் வைத்துக்கொண்டார். எப்பொழுதும் பாபாவின் நினைவாகவே இருந்தார்.

பின்னர், பாபாவின் நிழற்படம் ஒன்றை வாங்கி வியாழக்கிழமையன்று பூமாலை சமர்ப்பித்தார். படுக்கைக்கு மேலே சுவரில் அப்படத்தை மாட்டி பயபக்தியுடன் பூஜை செய்தார்.

தினமும் அப்படத்தை தரிசனம் செய்யும் பழக்கம் ஏற்பட்டது. தினமும் மானசீகமாக பூஜை செய்து ஒவ்வொரு வியாழனன்றும் பூமாலை சாத்தி வணங்கினர். அவரைப் பிடித்த பீடை ஒழிந்தது.

இந்த நியமநிஷ்டையைக் கடைபிடித்து எல்லா விருப்பங்களும் நிறைவேறப்பெற்றார். தூக்கமில்லாத இரவுகள், கெட்ட கனவுகள் பற்றியெல்லாம் மறந்தே போனார்.

இந்த சம்பவம் உதீயின் ஓர் உபயோகம். இன்னும் பெரிய அற்புதமான உபயோகமொன்றை விவரிக்கிறேன். மிக சங்கடமான சூழ்நிலையில் பிரயோகம் செய்யப்பட்டபோது,  நினைத்ததை நிறைவேற்றிக் கொடுத்த சம்பவம் அது. 




Thursday 23 December 2021

ஷீர்டி சாயி சத்சரிதம்


மனத்தில் எந்த எண்ணத்துடன் ஒருவர் வந்தாலும், சாயி அவருக்கு தரிசனம் தந்து அவருடைய பக்தியை வென்றுவிடுகிறார். இது சாயியின் அற்புதமான சக்தி.

ஆகவே, சாயியின் உதீ பிரசாதத்தையும் ஆசிகளையும் பெற்றுக்கொண்டு இருவரும் பம்பாய் திரும்பினர். விவாதங்கள் அனைத்தும் ஓய்ந்தன. சாயியினுடைய கியாதி எப்படியிருந்தது என்றால்,-

ஷிர்டியிலிருந்து புறப்படுவதற்கு முன் அவருடைய அனுமதியைப் பெற்றுக்கொள்ள வேண்டும். சாயியின் ஆக்ஞயைத் தாண்டுவது விக்கினங்களுக்கு அழைப்பு விடுவதாகும்.

உம்முடைய இஷ்டம்போல் ஷிர்டியிலிருந்து திரும்பினால், வழியில் கடக்கமுடியாத இன்னல்கள் தோன்றும்; கடைசியில் வெட்கமும் அனுதாபமும்தான் மிஞ்சும்.

ஷிர்டியிலிருந்து திரும்புவதென்பது மேற்சொன்னவாறே; எங்களுடைய கத்தியும் அதுவே. "நான் அழைக்காமல் எவரும் இங்கு வருவதில்லை." இது பாபாவின் திருவாய்மொழி.

"என்னுடைய விருப்பம் இல்லாது யார் அவருடைய வாயிற்படியைத் தாண்டமுடியும்? தம்மிச்சையாகவே யார் ஷிர்டிக்கு தரிசனம் செய்ய வர முடியும்?"

நம்முடைய ஓட்டங்கள் அனைத்தும் கிருபாமூர்த்தியான சமர்த்த சாயியின் ஆதீனத்தில் இருக்கின்றன. அவருடைய சித்தத்தில் கிருபை உதித்தால்தான் எவரும் தரிசனத்திற்கு வரமுடியும்.

ஷிர்டிக்குச் செல்வதற்கும் அங்கிருந்து திரும்புவதற்கும் இதுவே விதிமுறை. சாயியின் மனம் மகிழாமல், திரும்பிச் செல்வதற்கு அனுமதி கிடைக்காது; உதீயும் கிடைக்காது.

அவரை நமஸ்காரம் செய்து அனுமதி வேண்டும்போது அவர் உதீயுடன் ஆசியும் அளிப்பதே அனுமதி கொடுப்பதற்கு  ஒப்பாகும்.

இப்பொழுது விபூதியின் ஒரு நவீனமான அனுபவத்தையும் நெவாஸ்கரின் பகுதி பிரபாவத்தையும் மஹானுபவரான சாயியின் கிருபையையும் பற்றிச் சொல்கிறேன்; கேளுங்கள்.

பாந்தராவில் வாழ்ந்துவந்த காயஸ்தப் பிரபு ஜாதியைச் சேர்ந்த இல்லறத்தார் ஒருவரால் எவ்வளவு முயன்றும் இரவில் சுகமாகத் தூங்கமுடியவில்லை.

கண்களை மூடித் தூங்க ஆரம்பிக்கும்போது, காலஞ்சென்ற அவர் தந்தை கனவில் தோன்றி அவரை தினமும் தூங்கமுடியாமல் செய்வார்.

நல்லதும் கெட்டதுமான பழைய சங்கதிகளையெல்லாம் ஞாபகப்படுத்தி சாபங்களாலும் வசைமொழியாலும் அவரைத் துளைப்பார். ரகசியமானதும் பலகோணங்களுள்ளதும் பீடைபிடித்ததுமான விஷயங்களைக் கடுமையான இகழ்மொழியில் கொட்டுவார். 





 

Thursday 16 December 2021

 ஷீர்டி சாயி சத்சரிதம்


மஹாவிஷ்ணு ராமாவதாரத்தில் பொன்னாலான கணக்கற்ற பெண்ணுருவப் பிரதிமைகளை தானமாக கொடுத்தார். அதன் பலனைக் கிருஷ்ணாவதாரத்தில் பதினாறாயிரம் மடங்காக அனுபவித்தார்.

பக்தியும் ஞானமும் பற்றற்ற மனப்பான்மையும் இல்லாதவன் தீனன். அவனை முதலில் பற்றற்ற மனப்பான்மையில் நிலைநிறுத்திய பிறகே, ஞானத்தையும் பக்தியையும் அளிக்க வேண்டும்.

பாபா மக்களை தக்ஷிணை கொடுக்கவைத்தது, சிறிதளவாவது பற்றற்ற மனப்பான்மையை வளர்ப்பதற்காகவே. பின்னர் அவர்களை பக்திப் பாதையில் செலுத்தி ஞான பண்டிதர்களாகவும் ஆக்குகிறார்.

"நாம் ஏற்றுக்கொள்வதை போலப் பத்து மடங்காகத் திருப்பிக் கொடுத்துக் கொஞ்சம்கொஞ்சமாக ஞானமார்க்கத்தில் திருப்புவதைத் தவிர வேறென்ன நம்மால் செய்ய முடியும்?" (பாபா )

ஏற்கெனவே செய்துகூட தீர்மானத்தைத் தூக்கியெறிந்துவிட்டுத் தம்மிச்சையாகவே சேட்ஜி பாபாவின் கையில் பதினைந்து ரூபாய் தக்ஷிணை வைத்தார். அபூர்வமான செய்கை!

'நான் முன்பு பிதற்றியதெல்லாம் வியர்த்தம். நான் நேராக வந்ததே நல்ல செய்கை. என்னுடைய நேரிடையான அனுபவத்தின் மூலமாக சாதுக்கள் எவ்வகையானவர்கள் என்பதை எனக்கு நானே போதித்துக்கொண்டேன்.-

'சரியாகவும் திடமாகவும் சிந்தனை செய்யாது, இங்கு வரத் தேவையில்லை என்றும் வணக்கம் செலுத்தவேண்டா வேண்டும் நினைத்தேன். கடைசியில் அதை விருப்பப்பட்டே செய்தேன்! சாதுக்களின் செயல்கள் புரிந்துகொள்ள முடியாதவை!-

'எந்நேரமும் 'அல்லா மாலிக்' என்று உச்சாரணம் செய்துகொண்டிருப்பதவரால் சாதிக்க முடியாதது என்ன? ஆயினும், சாதுக்கள் செய்யும் அற்புதங்களைக் காணவே நான் விரும்பினேன். -

'ஓ, என் தீர்மானம் விருதாவாகப் போய்விட்டது. என் போன்ற ஒரு மனிதருக்கு நமஸ்காரம் செய்தேன். அவர் கேட்காமலேயே தக்ஷிணையும் கொடுத்தேன்.-

'என்னுடைய தற்புகழ்ச்சி அனைத்தும் வீண்! நானாகவே சாயியின் பாதங்களைப் பூஜிக்கும் பாவத்துடன் வணங்கினேன். இதைவிடப் பெரிய அற்புதம் உண்டோ?-

'சாயியின் திறமையை நான் எவ்வாறு விவரிப்பேன்? இவையனைத்திற்கும் காரணகர்த்தா அவரேயானாலும், வெளிப்பார்வைக்கு எதிலுமே சம்பந்தப்படாதவர்போல் காட்சியளிக்கிறார். இதைவிடப் பெரிய அதிசயம் என்ன இருக்க முடியும்?-

'ஒருவர் அவருக்கு வணக்கம் செலுத்தலாம், செலுத்தாமலும் இருக்கலாம்; தக்ஷிணை கொடுக்கலாம், கொடுக்காமலும் போகலாம். ஆயினும், தயாசாகரமும் ஆனந்த ஊற்றுமாகிய சாயி எவரையும் வெறுத்து ஒதுக்குவதில்லை.-

'பூஜை செய்யப்படுவதால் அவர் ஆனந்தமடையவில்லை, அவமதிப்பு செய்யப்படுவதால் துக்கப்படுவதில்லை. எங்கே ஆனந்தத்திற்கு இடமில்லையோ, அங்கே துக்கம் எவ்வாறு இடம்பிடிக்க முடியும்? இது பரிபூரணமாக இரட்டைச் சுழல்களிலிருந்து விடுபட்ட நிலையன்றோ!'

(141 லிருந்து 148 வரை 8 சுலோகங்கள் சேட்ஜியின் எண்ண ஓட்டம்)

 


 

Thursday 9 December 2021

 ஷீர்டி சாயி சத்சரிதம்


காகா தம்முடனேயே திரும்பிவிடவேண்டுமென்று அவர் விரும்பினார். பாபா இருவருக்கும் அனுமதியளித்து அவருடைய விருப்பத்தை நிறைவேற்றினார்.

இதுவும் சேட்ஜீயின் மனத்தில் இன்னுமொரு பணயம். ஆனால், பாபாவுக்கு இது எப்படித் தெரிந்தது? அவர் ஒரு சாதுவென்பதற்கு இது ஒரு முக்கியமான லக்ஷணம் (சிறப்பியல்பு). இதை தரம்சீ இப்பொழுது முழுமனத்துடன் ஒப்புக் கொண்டார்.

சந்தேகங்கள், அனைத்தும் நிவிர்த்தியாகிவிட்டன. சாயி ஒரு சாதுவென்பது மிகத் தெளிவாகிவிட்டது. அவருடைய மனத்தின் ஓட்டம் எப்படியிருந்ததோ அதற்கேற்றவாறே பாபா அளித்த அனுபவமும் இருந்தது.

எந்த எந்த மார்க்கத்தை எவரெவர் கடைபிடிக்க விரும்பினார்களோ, அந்த அந்த மார்க்கத்தில் அவரவரை பாபா வழி நடத்தினார். எல்லாருடைய ஆன்மீகத் தகுதிகளும் பாபாவுக்குத் தெரிந்திருந்தது. அதற்கேற்றவாறு அவரவருக்கு சாயியிடமிருந்து ஆன்மீக லாபம் கிடைத்தது.

வருபவன் விசுவாசமுள்ளவனாக இருக்கலாம்; குற்றம் கண்டுபிடிப்பவனாகவும் இருக்கலாம். சாயி இருவருக்கும் கிருபை செய்வதில் சமத்துவம் கண்டார். கருணை மிகுந்த சாயி மாதா ஒருவரை அணைத்தும் மற்றவரைப் புறக்கணித்தும் செயல்பட்டதில்லை.

ஆகவே அவர்கள் இருவரும் புறப்படும் சமயத்தில் பாபா காகாவைப்  பதினைந்து ரூபாய் தக்ஷிணை கேட்டார். மேலும் அவரிடம் சொன்னார், -

"எனக்கு யார் ஒரு ரூபாய் தக்ஷிணையாகக் கொடுக்கிறாரோ, அவருக்கு நான் பாத்து மடங்காகத் திருப்பிக் கொடுக்கவேண்டும். -

"நான் யாரிடமாவது எப்பொழுதாவது இனாம் வாங்கிக்கொள்வேனா என்ன? நான் எல்லாரிடமும் தக்ஷிணை வாங்கிக்கொள்வதில்லை. பக்கீர் யாரைச் சுட்டிக்காட்டுகிறாரோ, அவரிடம்தான் தக்ஷிணை என்ற பேச்சே எழுகிறது.-

"பக்கீரும் யாருக்குக் கடன்பட்டிருக்கிறாரோ, அவரைத்தான் கேட்பார். அதுமாதிரியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு தக்ஷிணை கொடுப்பவர், பின்னர் அறுவடை செய்ய இப்பொழுது விதை விதைக்கிறார்.-

"அறவழியில் நடந்து தான தருமங்களைச் செய்யும் பணக்காரனுக்கே செல்வம் நலன் பயக்கிறது. ஏனெனில், இவ்விரண்டும்தான் உண்மையான ஞானத்தை அளிக்கின்றன. -

"கஷ்டப்பட்டு சம்பாதித்ததை இஷ்டம்போல் போகங்களுக்காகவும் வீண் செலவுகளாகவும் நாசம் செய்து, தருமம் செய்வதில் நாட்டமில்லாது வாழ்பவர்கள் ஏராளம், ஏராளம்!-

"கஷ்டப்பட்டுப் பைசா பைசாவாக அற்புதமான சேலம் சேர்த்து, அதை புலனின்ப நாட்டவழியில் செலவழிக்காத மனிதனே சந்தோஷமாக வாழ்கிறான்".

"கொடுக்காதவன் உயர்வதில்லை" என்னும் மறைமொழியை எல்லாரும் அறிவர். முன்பு கொடுத்தது பாபாவின் எதிரில் நிற்கிறது; ஆகவே அவர் தக்ஷிணை கேட்கிறார். 




Thursday 2 December 2021

 ஷீர்டி சாயி சத்சரிதம்


பேச்சு இந்த ரீதியில் நடந்தது! தரம்ஸீ  தாம் நிச்சயம் செய்துகொண்டுவந்ததை எல்லாம் விசிறியடித்துவிட்டு பாபாவின் பாதங்களில் தம்மிச்சையாகவே விழுந்தார். பிறகு, இருவரும் வாடாவிற்குத் திரும்பினர்.

மத்திய ஆரத்தி நடந்து முடிந்தது. இருவரும் வீடு திரும்பும் பயணத்திற்குத் தயார் செய்ய ஆரம்பித்தனர். பாபாவிடம் அனுமதி கேட்கும் நேரம் நெருங்கியது. இருவரும் மசூதிக்குச் சென்றனர்.

தரம்ஸீ அப்பொழுது காகாவிடம் சொன்னார், "நான் வீடு திரும்ப அனுமதி வேண்டப் போவதில்லை. அனுமதி உமக்குத்தான் வேண்டும். ஆகவே நீர்தான் அனுமதி கேட்கவேண்டும்." இதைக் கேள்வியுற்ற மாதராவ் சொன்னார், -

"காகா வீடு திரும்புவது என்பது நிச்சயமில்லை. ஒரு முழுவாரம் கழிந்தாலொழிய அவருக்கு அனுமதி கிடைக்காது. நீங்களே அனுமதி கேட்பதுதான் நல்லது!"

ஆகவே, மூவரும் மசூதிக்குச் சென்று அமர்ந்தபோது, அவர்களின் சார்பாக மாதவராவ் அனுமதி கேட்டார். ஆனால், பாபா ஒரு கதை சொல்ல ஆரம்பித்தார். அமைதியான மனத்துடன் கவனமாகக் கேளுங்கள்.

"சஞ்சல புத்தியுடைய மனிதன் ஒருவன் இருந்தான். அவனுடைய இல்லத்தில் தனமும் தானியங்களும் மற்றப் பொருள்களும் ஸம்ருத்தியாக (ஏராளமாக) நிரம்பிக் கிடந்தன. உடலிலும் மனத்திலும் வியாதியோ வெக்கையோ ஏதும் இல்லை. ஆயினும் அவன் உபாதைகளை தேடினான். -

"அவசியமில்லாமல் தலைமேல் பாரத்தை ஏற்றிக்கொண்டு இங்குமங்கும் அலைந்தான். அவன் மனத்தில் அமைதியில்லை. ஒரு நேரம் பாரத்தை இறக்கிக் கீழே வைப்பான்; உடனே அதைத் தூக்கிக்கொள்வான். அவனால் மனத்தைச் சலனமில்லாமல் செய்ய முடியவில்லை. -

"அவனுடைய அவஸ்தையைப் பார்த்து என் இதயம் கனிந்தது. நான் அவனிடம் சொன்னேன், 'உன்னுடைய மனத்தை நிலைபெறச்செய்து ஏதாவதொன்றில் நிறுத்து; அது எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும்!-

"நீ அனாவசியமாக அலைகிறாய். உன்னுடைய மனத்தை ஏதாவது ஒன்றில் நிலைபெறச் செய்". இந்த வார்த்தைகள் தரம்ஸீயைத் தேள் போல் கொட்டின. அது தமக்காகச் சொல்லப்பட்ட அறிவுரையே என்று புரிந்துகொண்டார்.

எத்தனை வைபவங்கள் இருந்தபோதிலும், எக் காரணமும் இன்றிக் கவலையால் பீடிக்கப்பட்டவராகத் தமக்குத் தாமே இன்னல் தேடிக்கொண்டார்.

செல்வமும் சமூக கௌரமும் ஏராளமாக இருந்தும் மனத்தில் அமைதி இல்லை. துக்கங்களையும் இன்னல்களையும் கற்பனை செய்துகொண்டு கவலையில் மூக்கிவிடுவார்.

இந்தக் கதை சாயியின் திருவாய்மொழியாக வெளிவந்தவுடன் சேட்ஜி  மிகுந்த வியப்படைந்தார். இதுதான் என்னுடைய மனோநிலை, என்றெண்ணி மிகுந்த பயபக்தியுடன் இக் கதையைக் கேட்டார்.

காகாவுக்கு அவ்வளவு சீக்கிரம் அனுமதி கிடைக்குமென்பது நடக்காத கதை. அதுவும் பிரயாசை இல்லாமலேயே கிடைத்ததுபற்றி தரம்ஸீ சந்தோஷமடைந்தார்.  




Thursday 25 November 2021

 ஷீர்டி சாயி சத்சரிதம்

திராட்சைகளில் விதை இல்லாமற்போனது கண்டு, தரம்சீ வியப்பிலாழ்ந்து தமக்குத்தாமே சொல்லிக்கொண்டார்.

"என்னுடைய மனத்தில் இருந்ததை அறிந்து, இந்த திராட்சைகள் விதையுள்ளனவாகவும் கழுவப்படாதனவாகவும் இருந்தபோதிலும், எனக்கு சாயி கொடுத்தவை விதையற்றனவாகவும் நன்மையளிப்பானாகவும் இருந்தன.

அவர் ஆச்சரியத்தால் செயலிழந்து போனார். பழைய சந்தேகங்களும் எதையும் உரித்துப்பார்க்கும் ஆர்வமும் எங்கோ ஓடி மறைந்தன. அவருடைய அகங்காரம் வீழ்ந்தது; மனத்தில் ஞானியின் மேல் பிரீதி பொங்கியது.

ஏற்கெனெவே செய்துகொண்ட  சங்கற்பங்கள் விலகின. சாயிபிரேமை இதயத்தில் பொங்கியது. ஷீர்டி செல்லவேண்டுமென்ற ஆவலும், செய்துகொண்ட தீர்மானமும் நல்லதற்காகவே என்று நினைத்தார்.

பாபாசாகேப் தர்க்கடும் அப்பொழுது சாயி பாபாவின் அருகில் அமர்ந்திருந்தார். அவருக்கும் சில திராட்சைகள் கிடைத்திருந்தன.

ஆகவே தரம்சீ அவரைக் கேட்டார், "உங்களுடைய திராட்சைகள் எப்படி இருந்தன? தர்கட் "விதையுள்ளவை" என்று சொன்னபோது சேட் அதிசயத்தால் வியந்துபோனார்.

பாபா ஒரு ஞானி என்னும் அவருடைய நம்பிக்கை உறுதியாகியது. மேலும் திடப்படுத்திக்கொள்வதற்காக ஒரு கற்பனை அவருடைய மனத்தில் உதித்தது. அவர் தமக்குள்ளேயே சொல்லிக்கொண்டார். "நீர் அசல் சாதுவாக இருப்பின் அடுத்ததாக திராட்சை பெரும் முறை காகாவினுடையதாக இருக்கவேண்டும்".

பாபா பல பேர்களுக்கு திராட்சை விநியோகம் செய்து கொண்டிருந்தார். ஆனால், மேற்சொன்ன எண்ணம் சேட்டின் மனத்தில் உதித்தவுடனே, அடுத்த சுற்றைக் காகாவிடமிருந்து ஆரம்பித்தார். சேட் அற்புதம் கண்டார்!

சாது என்பதற்குண்டான இந்த அறிகுறிகளும் பிறர் மனம் அறியும் சக்தியும் தரம்சீ சேட்டுக்கு பாபாவை சாதுவாக ஏற்றுக்கொள்ளப் போதுமான முகாந்தரங்களாக அமைந்தன.

மாதவராவும் அப்பொழுது அங்கு இருந்தார். விளக்கம் சொல்வது போன்று அவர் பாபாவிடம் சொன்னார், "காகாவின் எஜமானர் ஒரு சேட் உண்டே - அவர் இவர்தான்!"

"யார்? யாரென்று சொன்னாய்? இவர் எப்படிக் காகாவின் யஜமானராக இருக்க முடியும்? காகாவின் எஜமானர் வேறு யாரோ ஆயிற்றே!" என்று பாபா உடனே பதிலளித்தார். இந்த வார்த்தைகளைக் கேட்ட காகாவின் இதயம் பூரித்தது.

இதில் வினோதம் என்னவென்றால், பாபா துனீயருகே நின்றுகொண்டிருந்த ஆப்பா என்று பெயர் கொண்ட ஒரு சமையற்காரரை  இந்தக் கேலியில் இழுத்துவிட்டதுதான்.

பாபா சொன்னார், "இந்த சேட் இவ்வளவு தூரம் வந்திருப்பதென்னவோ உண்மைதான். இந்த சிரமத்தை இவர் எனக்காகப் படவில்லை. ஆப்பாவின் மேல் கொண்ட பிரேமையால்தான் இவர் ஷிர்டிக்கு வந்திருக்கிறார்".

 


 

Thursday 11 November 2021

 ஷீர்டி சாயி சத் சரிதம்

பாபாசாகேப் தர்கட் என்ற பக்தரும் அங்கும் உட்கார்ந்திருந்தார். விஷய ஆர்வம் கொண்ட சேட் தரம்ஸீ  அவரை என்ன விசாரித்தார் என்பதைக் கேளுங்கள்.

"இங்கு என்ன கண்டீர், திரும்பத் திரும்ப வருவதற்கு?" தர்கட் பதிலுரைத்தார், "நாங்கள் தரிசனம் செய்ய வருகிறோம்". சேட் குறுக்குச்சால் ஓட்டினார், "ஆனால், இங்கு அற்புதங்கள் நிகழ்கின்றன என்று நான் கேள்விப்பட்டேனே?"

ஆகவே, தர்கட் சொன்னார், "என்னுடைய பாவனை அதுவன்று. மனத்தில் ஆழமாக எதை விரும்பியவாறு வருகிறோமோ அந்தக் காரியம் சித்தியாகிறது."

காகா பாபாவின் பாதங்களில் விழுந்து திராட்சையை கைகளில் சமர்ப்பித்தார். மக்கள் ஏற்கனவே கூடியிருந்தனர். பாபா திராட்சையை பக்தர்களுக்கு விநியோகம் செய்ய ஆரம்பித்தார்.

மற்றவர்களுக்கு அளித்ததைப் போலவே தரம்ஸீ  சேட்டுக்கும் சில திராட்சைகளை கொடுத்தார். ஆனால், தரம்ஸீக்கு இந்த ஜாதி பிடிக்காது; விதையற்ற ஜாதியே பிடிக்கும்.

விதையுள்ள திராட்சையே அவருக்குப் பிடிக்காது. பிள்ளையார் சுழி போடும்போதே பிரச்சினை எழுந்துவிட்டது! அவற்றை எப்படித் தின்பது என்பதே அவருடைய பிரச்சினை. வேண்டா என்று ஒதுக்குவதற்கும் மனோதிடம் இல்லை.

திராட்சையை நன்கு கழுவாமல் தின்னக்கூடாது என்று குடும்ப டாக்டர் தடைவிதித்திருந்தார்; தாமே கழுவுவதும் முறையான செயல் அன்று. நானாவிதமான கற்பனைகள் மனத்தில் உதித்தன.

ஆனாலும், வந்தது வரட்டுமென்று திராட்சைகளை வாயில் போட்டுக்கொண்டார். விதைகளைப் பாக்கெட்டில் போட்டுக்கொண்டார்! ஒரு சாது வாழும் இடத்தில் எச்சில் விதைகளை எறிந்து அவ்விடத்தின் புனிதத்தை களங்கப்படுத்த அவர் விரும்பவில்லை.

சேட் தமக்குள்ளேயே பேசிக்கொண்டார், "இவர் ஒரு சாது. ஆயினும் எனக்கு விதையுள்ள திராட்சை பிடிக்காதென்பது இவருக்குத் தெரியவில்லை. ஏன் எனக்கு இவற்றை பலவந்தமாகக் கொடுக்கவேண்டும்?"

இந்த எண்ணம் அவருடைய மனத்தில் ஓடிக்கொண்டிருந்தபோதே, பாபா அவருக்கு இன்னும் சில திராட்சைகளைக் கொடுத்தார். அவையும் விதையுள்ள ஜாதி என்றறிந்த சேட் அவற்றை வாயில் போட்டுக்கொள்ளாமல் கையிலேயே வைத்திருந்தார்.

அவருக்கு விதையுள்ள திராட்சை பிடிக்காதுதான்; ஆயினும், அவை பாபாவின் கையால் கொடுக்கப்பட்டவை. தரம்ஸீ தர்மசங்கடத்தில் மாட்டிக்கொண்டார்; என்ன செய்வதென்றே தெரியவில்லை.

அவருக்கு திராட்சைகளை வாயில் போட்டுக்கொள்வதற்கு விருப்பம் இல்லை. ஆகவே, அவற்றைக் கைக்குள் அடக்கிக்கொண்டார். திடீரென்று பாபா சொன்னார், "அவற்றைத் தின்றுவிடும்". சேட்ஜீ  இந்த ஆணையை நிறைவேற்றினார்.

"அவற்றைத் தின்றுவிடும்" என்று பாபா சொல்லி முடிக்குமுன்பே சேட் அவற்றைத் தம் வாயில் இட்டுக்கொண்டார். அவையனைத்தும் விதையற்றவையாக இருந்தன! சேட் ஆச்சரியத்தில் மூழ்கினார்.  

 


 

Thursday 28 October 2021

 ஷீர்டி சாயி சத்சரிதம்

ஏற்கெனவே விவரிக்கப்பட்ட சிநேகிதர் செய்ததைப் போன்று ஐவரும் காகா மஹாஜனியுடன் ஷிர்டிக்குக் கிளம்பினார். அவரிடம் சொன்னார்,

"நீர் ஷிர்டிக்குப் போனால் அங்கேயே முகாம் போட்டுவிடுகிறீர்; ஆனால், இம்முறை அது சரிப்படாது. நீர் என்னுடன் திரும்பிவிட வேண்டும். இது நிச்சயம் என்று அறிவீராக."

காகா பதில் கூறினார், "இதோ பாரும், அது என்னுடைய கைகளில் இல்லை". இதைக் கேட்ட தரம்ஸீ, துணைக்கு இன்னொருவரையும் அழைத்துக்கொண்டார்.

"ஒரு வேளை காகா திரும்பிவர முடியாமற்போகலாம் துணையின்றிப் பயணம் செய்யக்கூடாது." சேட் இவ்வாறு நினைத்து இன்னொருவருரையும் அழைத்துக்கொண்டார். மூன்று பேராக ஷிர்டிக்கு கிளம்பினர்.

இம்மாதிரியாக எத்தனையோ விதமான மனிதர்கள் உண்டு. அவர்களையெல்லாம் தம்மிடம் இழுத்துவந்து அவர்களுடைய சந்தேகங்களையும் தவறான நம்பிக்கைகளையும் பாபா நிவர்த்தி செய்தார்.

அவர்கள் வீடு திரும்பித் தங்களுடைய அனுபவங்களை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்வர்; அல்லது மற்றவரின் உதவி கொண்டு அதை எழுதியும் வைப்பர். இதெல்லாம் மக்களை நல்ல பாதையில் கொண்டுவருவதற்காகவே.

தாத்பரியம் (ஆழ்ந்த கருத்து) என்னவென்றால், இவ்வாறு சென்றவர்கள் தரிசன சுகத்தால் திருப்தியடைவார்கள். கிளம்பும்போது மனப்போக்கு எப்படி இருந்திருந்தாலும் சரி, கடைசியில் பரமானந்தம் அடைந்தனர்.

'விஷய ஆர்வத்தாலும் உட்புகுந்து நேரில் பார்க்க விரும்பிய ஆவலாலும் அவர்களாகவே ஷிர்டிக்குச் சென்றார்கள்' என்று நாம் சொல்லலாமே தவிர, உண்மை என்னவோ வேறுவிதமாக இருந்தது. அவர்கள் பாபாவின் காரியசாதனைக்காகவே ஷிர்டிக்குச் சென்றனர்.

அவர்களுக்கு அந்த உள்ளுணர்வைக் கொடுத்தவரே பாபாதான். அதன் பிறகே அவர்களால் வீட்டை விட்டுக் காலடி எடுத்துவைக்க முடிந்தது. அவர்களுடைய இயல்பான மனோபாவத்தை மேலும் கிளறிவிட்டு, அவர்களை ஆன்மீகப் பாதையில் திருப்பினார் பாபா!

பாபாவின் திட்டங்களை யாரால் அறிய முடியும்? அறிய முயன்றவர்கள் அவதிக்குள்ளானார்கள்! ஆனால், நீங்கள் அகங்காரத்தை விடுத்து, அவருடைய காலடியில் புரண்டால், அளவுகடந்த ஆனந்தம் அனுபவிப்பீர்கள்.

தேவர்கள், இருபிறப்பாளர்கள் (அந்தணர்), குரு, இவர்களைக் காணச் செல்லும்போது வெறுங்கையுடன் போகக்கூடாது. ஆகவே, காகா, போகும் வழியில் இரண்டு சேர் திராட்சை (சுமார் 560 கிராம் ) வாங்கி கொண்டார்.

திராட்சையில் விதையற்ற ஜாதியும் உண்டு . ஆனால், விதையுள்ள ஜாதிதான் அப்பொழுது கிடைத்தது. காகா அதையே வாங்கிக்கொண்டார்.

வழியெல்லாம் சந்தோஷமாகப் பேசிக்கொண்டே மூவர் கோஷ்டி ஷீர்டி போய்ச் சேர்ந்தது. மூவரும் ஒன்றாக பாபா தரிசனத்திற்காக மசூதிக்குச் சென்றனர்.  



Thursday 21 October 2021

 ஷீர்டி சாய் சத்சரிதம்

அவருக்கு இன்னொரு சுவாரசியமான அனுபவமும் உண்டு; கேட்பதற்குகந்தது. பல மாதங்களாக அவருக்கு ஒரு குதிகாலில் வலி இருந்தது.

ஷீர்டி செல்வதற்கு முன் பல மாதங்களாக இந்த வியாதியை அனுபவித்து வந்தார். ஷீர்டி சென்று வந்த பிறகு இந்தப் பாதிப்பு குறைந்தது; சில நாள்களில் அடியோடு மறைந்தது.


இதே மாதிரியான நிகழ்ச்சியொன்றில், ஞானியின் சக்தியைச் சோதிக்க முயன்ற ஒருவர் தம்முடைய விருப்பத்திற்கு மாறாக, ஞானியின் பாதங்களில் பணிய வேண்டி நேர்ந்தது. அந்தக் காதையை இப்பொழுது கேளுங்கள்.

மேலும், அவருடைய விருப்பத்திற்கு மாறாகவும் ஏற்கெனவே செய்திருந்த திடமான தீர்மானத்திற்கு நேரெதிராகவும் தக்ஷிணை கொடுக்கவேண்டுமென்று மோகங்கொண்டு தக்ஷிணை கொடுத்த காதையைக் கேளுங்கள்.

டக்கர் தரம்சீ ஜெடாபாயி என்னும் பெயர் கொண்ட, பம்பாய் நகரத்தில் வாழ்ந்த, சட்ட சம்பந்தமான ஆலோசகர் ஒருவருக்குப் பூர்வபுண்ணிய பலத்தால் சாயிதரிசனம் செய்யவேண்டுமென்ற ஆவல் ஏற்பட்டது.

அவர் காகா மஹாஜனியின் எஜமானர். ஒருவருக்கொருவர் நல்ல பரிச்சயம் இருந்தது. ஆகவே, அவர் நேரிடையாக ஷிர்டிக்குச் சென்று பாபாவை பிரத்யக்ஷமாகப் பேட்டி காணவேண்டுமென்று நினைத்தார்.

காகா மஹாஜனி, டக்கர் ஜீயின் நிறுவனத்தில் நிர்வாக குமாஸ்தாவாக உத்தியோகம் செய்துவந்தார். தம்முடைய விடுப்பு அனைத்தையும் அடிக்கடி ஷீர்டி சென்று வருவற்காகவே உபயோகித்தார்.

ஷிர்டிக்குப் போனால் நேரத்தோடு திரும்பி வருவாரா என்ன! எட்டு நாள்கள் அங்கே தங்கிவிட்டு வருவார். கேட்டால், பாபா அனுமதியளிக்கவில்லை என்று காரணம் சொல்லுவார்! "இதுவும் ஒரு வேலை செய்யும் ரீதியா?" என்று நினைத்து எஜமானர் எரிச்சலைடைவது வழக்கம்.

"இதென்ன ஞானிகளின் நடைமுறை! இந்த அனாவசியமான தடபுடலெல்லாம் எனக்குப் பிடிக்கவில்லை!" இந்த சாயி விவகாரத்தை ஒரு மாதிரியாக முடிவுகட்ட வேண்டுமென்று தீர்மானித்து, ஹோலிப் பண்டிகை விடுமுறையின்போது ஷிர்டிக்கு கிளம்பினார்.

'தான்' என்று அஹங்காரத்தாலும் பணத்திமிராலும் நிரம்பிய அந்த சேட், "ஞானிகளும் நம்மைப்போன்ற மனிதர்கள்தாமே; அவர்களை நாம் எதற்காக வாங்கவேண்டும்?" என நினைத்தார்.

மெத்தப்படித்த பண்டிதர்களையும் சாஸ்திர விற்பன்னர்களையும் மண்டியிடவைத்த சாயியின் ஆன்மீக, தார்மீக சக்தியின் முன்பாகக் கேவலம் தரம்சீயின் தீர்மானம் எவ்வளவு நேரம் தாக்குப்பிடிக்க போகிறது?

ஆயினும், அவர் நினைத்தார், "குருட்டு நம்பிக்கை நன்றன்று; ஆகவே நானே உண்மையைக் கண்டுபிடித்துக்கொள்கிறேன்". இவ்வாறு மனத்துள் தீர்மானம் செய்துகொண்டு அவர் ஷிர்டிக்குப் போக ஆயத்தங்கள் செய்தார். 




Thursday 14 October 2021

 ஷீர்டி சாயி சத்சரிதம்

"உமக்கும் எனக்கும் நடுவே பேதம் கற்பிக்கும் தேலி யின் சுவரை இடித்து நிரவிவிடுங்கள். ஒருவரையொருவர் சந்திக்க உதவும் வழி அகலமாகத் திறந்து கொள்ளும்".

பிறகு, அவர்கள் வீடு திரும்புவதற்கு பாபா அனுமதியளித்தார். ஆனால், இருண்ட வானத்தைப் பார்த்த மாதவராவ், "போகும் வழியில் இவர்கள் மழையில் மாட்டிக்கொள்வார்கள் போலிருக்கிறதே" என்று பாபாவிடம் சொன்னார்.

பாபா பதில் கூறினார், "இவர்கள் தைரியமாகக் கிளம்பட்டும். மழையைப் பார்த்து வழியில் பயப்படுவதற்கு ஏதும் இல்லை".

ஆகவே, இருவரும் பாபாவின் பாதங்களுக்கு வந்தனம் செய்துவிட்டுப் போய்க்குதிரை வண்டியில் உட்கார்ந்தனர். காற்றில் நீர்மூட்டம் அதிகரித்தது; வானத்தில் மின்னலடித்தது; கோதாவரி நதியின் பெருக்கம் அதிகமாகியது.

வானம் கடகடவென்று கர்ஜித்தது. நதியைப் படகினால் கிடைக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டது. ஆனாலும், காகாவுக்கு பாபா அளித்த உறுதிமொழியின் மீது முழு நம்பிக்கை இருந்தது.

நண்பருக்கோ, எப்படி சௌகரியமாகவும் பத்திரமாகவும் வீடு போய்ச் சேர்வது என்பதே பெருங்கவலை. வழியில் நேரக்கூடிய சங்கடங்களை கற்பனை செய்து, 'ஏன் இங்கு வந்தோம்' என்றெண்ணி வருத்தப்பட்டார்.

எப்படியோ அவர்கள் பத்திரமாகவும் சுகமாகவும் நதியைக் கடந்தபின் பம்பாய்க்கு ரயில் ஏறினர். அதன் பிறகே மேகங்கள் மழையைக் கொட்ட ஆரம்பித்தன. இருவரும் பயமேதுமின்றி பம்பாய் சென்றடைந்தனர்.

காகாவின் நண்பர் வீட்டிற்குத் திரும்பிக் கதவுகளையும் ஜன்னல்களையும் திறந்துவிட்டார். உள்ளே மாட்டிக்கொண்டிருந்த சிட்டுக்குருவி ஒன்று வேகமாகப் பறந்து வெளியே சென்றது. வீட்டினுள் இரண்டு சிட்டுக்குருவிகள் இறந்து கிடந்தன.

அன்னமும் பானமும் இல்லாததால் இறந்துபோன சிட்டுக்குருவிகளை பார்த்த அவர் மனமுடைந்து சோகமானார்.

"ஷிர்டிக்குப் போவதற்குமுன் ஜன்னலைத் திறந்துவைத்துவிட்டு போயிருந்தால், அவை காலனின் பிடியில் சிக்கியிருக்கமாட்டா. பாவம்! அதிருஷ்டக்கட்டைகளான இவ்விரண்டு சிட்டுக்குருவிகள் என் கைகளில் இறக்கும்படி ஆயிற்று.-

"பறந்துபோன சிட்டுக்குருவியைக் காலனிடமிருந்து காப்பாற்றுவதற்காகவே பாபா எங்களுக்கு இன்றே வீடு திரும்புவதற்கு அனுமதி அளித்தார் போலும்" என்று நினைத்தார்.

"இல்லையெனில் எப்படி உயிரோடிருக்கும்? ஆயுள் முடியும்போது இதுதானே கதி. ஒரு சிட்டுக்குருவியாவது பிழைத்ததே!"


------------------------------------------------------------------------------------------------------------------------

தேலி என்னும் மராட்டிச் சொல்லுக்கு வாணியர் என்று பொருள். பாபா இச்சொல்லையும் மளிகைகடைக்காரர் என்ற சொல்லையும் விரும்பத்தகாத மனித குணங்கள் என்னும் பொருள்பட உருவக பாஷையில்  உபயோகப்படுத்தினார். எண்ணெயின் கொழகொழப்பும் பிசுபிசுப்பும் ஒட்டிக்கொள்ளும் தன்மையும் உலகியல் பிணைப்புகளுக்கு உருவகப்படுத்தப்பட்டன போலும்! 




Thursday 7 October 2021

 ஷீர்டி சாயி சத்சரிதம்

ஓ, அச்சொற்களின் மோகனசக்திதான் என்னே!  காகாவின் நண்பர் வியப்படைந்த மனத்தினராய், "இவை என் தந்தையின் சொற்களே! குரலும் எனக்கு நன்கு பழக்கப்பட்டது!" என்று சொன்னார்.

காலஞ்சென்ற தந்தையின் பேச்சைப் போன்றே வெளிவந்த வார்த்தைகள் நண்பரின் இதயத்தைத் தொட்டுவிட்டன. ஏற்கெனவே செய்துவைத்திருந்த தீர்மானங்களை விசிறியடித்துவிட்டு பாபாவின் பாதங்களில் தலைசாய்த்தார்.

பின்னர், பாபா காகாவிடம் மட்டும் தக்ஷிணை கேட்டார்; காகா மகிழ்ச்சியுடன் தக்ஷிணை கொடுத்தார். இருவரும் திரும்பினர். மறுபடியும் பிற்பகல் வெளியில் மசூதிக்குச் சென்றனர்.

இருவரும் சேர்ந்தே சென்றனர்; இருவருமே பம்பாய்க்கு திரும்ப வேண்டும். காகா வீடு திரும்புவதற்கு அனுமதி கேட்டார். பாபா மறுபடியும் தக்ஷிணை கேட்டார்.

இம்முறையும் பாபா, "எனக்குப் பதினேழு ரூபாய் கொடு" என்று காகாவை மட்டுமே கேட்டார். நண்பரை ஏதும் கேட்கவில்லை. நண்பரின் மனம் உறுத்தியது.

காகாவிடம் நண்பர் கிசுகிசுத்தார், "பாபா ஏன் உங்களைமட்டும் தக்ஷிணை கேட்டகிறார்? காலையிலும் உங்களைத்தான் கேட்டார்; இப்பொழுதும் உங்களை மட்டுமே கேட்கிறார்.-

"நான் உங்களுடன் சேர்ந்து இருக்கும்போது தக்ஷிணைக்கு என்னை ஏன் விலக்கிவிடுகிறார்?" காகா மெல்லிய குரலில் பதிலுரைத்தார், "பாபாவிடமே இந்தக் கேள்வியைக் கேளுங்கள்".

திடீரென்று பாபா காகாவைக் கேட்டார், "என்ன? நண்பர் உம்மிடம் என்ன சொல்கிறார்?" நண்பர் இப்பொழுது நேரிடையாகவே பாபாவைக் கேட்டார், "நான் உங்களுக்கு தக்ஷிணை கொடுக்கலாமா?".

பாபா பதில் சொன்னார், "உம்முடைய மனத்தில் கொடுக்க வேண்டுமென்ற விருப்பம் இல்லை; ஆகவே, நான் கேட்கவில்லை. இப்பொழுது உமக்குக் கொடுக்க விருப்பமிருந்தால் கொடுக்கலாம்."

பாபா கேட்டபோதெல்லாம் காகா தக்ஷிணை கொடுத்தது பற்றி நண்பர் அவரிக் குற்றம் சாட்டுவது வழக்கம். இப்பொழுதோ, பாபா கேக்காமலேயே தக்ஷிணை கொடுக்கட்டுமா என்று அதே மனிதர் கேட்கிறார்! காகா ஆச்சரியமடைந்தார்.

பாபா "விருப்பமிருந்தால் கொடுக்கலாம்" என்று சொன்னவுடனே நண்பரால் தாமதிக்க முடியவில்லை. உடனே பதினேழு ரூபாயை பாபாவின் பாதங்களில் (பாபா கேட்காமலேயே) வைத்தார்.

பாபா அப்பொழுது அவரிடம் சொன்னார், "போவதற்கு என்ன அவசரம்? ஒரு கணம் உட்காரும்". பிறகு பாபா அவருடைய பேதபுத்தியைச் சீர்படுத்துவற்காக இனிமையான வார்த்தைகளால் உபதேசம் செய்தார். 




Thursday 30 September 2021

 ஷீர்டி சாயி சத்சரிதம்

நாக்கு ஒரு சுவையை அனுபவிக்கும்போது சாயி சுவையுடன் கலந்துவிடுகிறார். இதன் பிறகு, சுவையும், நாக்கும், சுவைக்கும் செயலும் ஒன்றாகிவிடுவதில் அதிசயம் என்ன இருக்கிறது?

கர்மேந்திரியங்கள் அனைத்தின் கதியும் இதுவே. அவையெல்லாம் சாயியை சேவித்தால், கர்மவினைகள் அனைத்தும் அழியும். செயல்களின் விளைவுகளிலிருந்து விடுதலையும் கிடைக்கும்.

காவியம் நீண்டுகொண்டே போகிறது; இது சாயியின் பிரேமையால் விளைந்ததே. நாம் இப்பொழுது ஏற்கெனவே கோடிகாட்டப்பட்ட விஷயங்களுக்கு திரும்பிச் சென்று விட்ட இடத்திலிருந்து தொடர்வோமாக.

அருவ வழிபாட்டில் தீவிர நம்பிக்கை வைத்து உருவ வழிபாட்டிற்கு முதுகைக் காட்டுபவராக இருந்த நபர் ஒருவர், என்ன இருக்கிறதென்று தெரிந்துகொள்ளும் ஆர்வப்பசியால் மட்டுமே உந்தப்பட்டு ஷிர்டிக்குச் செல்ல உற்சாகம் கொண்டார்.

ஆகவே அவர் சொன்னார், "சாது தரிசனம் செய்வதற்கு மட்டுமே நாம் ஷிர்டிக்கு வருவோம். அவருக்கு வணக்கம் செலுத்தமாட்டோம்; தக்ஷிணையும் கொடுக்க மாட்டோம்".

"இந்த இரண்டு நிபந்தனைகளுக்கும் ஒத்துக்கொண்டால்தான் நாம் ஷிர்டிக்கு வருவோம்". நண்பர் இதற்கு ஒத்துக்கொண்டவுடன் அந்த நபர் ஷிர்டிக்குத் தெம்புடன் கிளம்பினார்.

நண்பரின் பெயர் காகா மஹாஜனி; பாபாவின் மீது பவித்திரமான பக்தியும் பிரேமையும் வைத்திருந்தவர். அந்த ஆசாமியோ சந்தேகங்களும் தவறான நம்பிக்கைகளும் நிரம்பிய பாத்திரம்.

இருவரும் ஒரு சனிக்கிழமை இரவு பம்பாயிலிருந்து கிளம்பி ஞாயிற்றுக்கிழமை காலையில் ஷீர்டி வந்துசேர்ந்தனர்.

சாயிதரிசனம் செய்வதற்கு இருவரும் உடனே மசூதிக்கு சென்றனர். அப்பொழுது என்ன நடந்ததென்பதை கவனமாக கேளுங்கள்.

காகா மஹாஜனி மசூதியின் முதற்படியில் கால் வைத்தவுடனேநண்பரைத் தூரத்திலிருந்தே பார்த்துவிட்ட பாபா, மதுரமான குரலில் கேட்டார், "நீர் ஏன் வந்தீர் ஐயா?"

அன்பு ததும்பிய இவ்வார்த்தைகளை கேட்ட காகா மஹாஜனியின் நண்பர் சூக்குமமான குறிப்பை உடனே அடையாளம் கண்டுகொண்டார். வாக்கியத்தின் அமைப்பும் வார்த்தைகள் உச்சரிக்கப்பட்ட பாணியும் அவருக்குத் தம் தந்தையை நினைவூட்டின.

"நீர் ஏன் வந்தீர் ஐயா?" என்ற வார்த்தைகள் வெளிவந்த ஸ்வரம் (நாதம்) காகா மஹாஜனியின் நண்பரை வியப்பில் ஆழ்த்தியது.

இனிமையான அந்தக் குரல் அவருக்குத் தம் (காலமான) தந்தையை ஞாபகப்படுத்தியது. குரலும் வார்த்தைகள் வெளிவந்த பாணியும் அவருக்குச் தந்தையினுடையதை போலவே இருந்தன. பாவனைச் செயல், பூரணமாக யதார்த்தமாகவும் துல்லியமாகவும் இருந்தது. 








Thursday 23 September 2021

 ஷீர்டி சாயி சத்சரிதம் 


"எது எப்படியிருப்பினும், நான் ஷிர்டிக்குச் சென்று அவரைப் பேட்டி காண்பேன். ஆனால், பாதங்களுக்கு வந்தனம் செய்யமாட்டேன்; தக்ஷிணை கொடுக்கவும் மாட்டேன்".

எவரெவரெல்லாம் மனத்தில் இந்தக் குதர்க்க வாதத்தை திடப்படுத்திக்கொண்டு கிளம்பினாரோ, அவரெவரெல்லாம் தரிசனயோகம் கிடைத்தபின் சாயியை சரணடைந்தார்கள்.

எவரெவரெல்லாம் சாயியைக் கண்ணால் கண்டார்களோ, அவரவரெல்லாம் தங்களுடைய நிலையில் உறுதியாக நின்றனர். மறுபடியும் சந்தேகங்கொண்டு திரும்பிப் பார்க்கவே இல்லை. சாயிபாதங்களில் மூழ்கிவிட்டனர்!

அவர்கள் தீர்மானம் செய்துகொண்டு வந்ததை அறவே மறந்து குற்றவுணர்ச்சியால் பாதிக்கப்பட்டு சாயிபாதங்களை வணங்கினர்.

'தன்னுடைய மார்க்கமே சிறந்தது' என்னும் அளவுக்குமீறிய மதாபிமானம் நல்லடக்கம் செய்யப்பட்ட கதை இந்த அத்தியாயத்தில் சொல்லப்படுகிறது. பயபக்தியுடன் கேளுங்கள்; ஜீவனுக்கு அத்தியந்த சுகம் கிடைக்கும்.

அதுபோலவே, பாலா நெவாஸ்கர் எவ்வாறு ஒரு நல்ல பாம்பை பாபா வாகவே கருதிப் ப்ரீதியுடன் நடந்துகொண்டார் என்பதுபற்றியும் கேளுங்கள். மேலும், இந்த அத்தியாயம் உதீயின் சூக்குமமான சக்தியைப்பற்றியும் பேசுகிறது.

கதை கேட்பவர்களே! எனக்கு கிருபை செய்யுங்கள். நான் கேவலம் சாயியின் ஆக்கினைக்கு கட்டுப்பட்ட ஓர் அடிமை. அவருடைய ஆணையை பயபக்தியுடன் நிறைவேற்றத்தான் எனக்குத் தெரியும். அதிலிருந்து எழுந்ததே இச் சரித்திரத்தின் ஒவ்வொரு எழுத்தும்.

அவருடைய பாதங்களைப் பார்த்துக்கொண்டே அவற்றிலிருந்து அலையலையாக எழும்பும் கவிதைகளை அவருடைய பவித்திரமான சரித்திரம் என்னும் குடத்தில் மேலும் மேலும் நிரப்பும் செயலில் ஈடுபட்டிருக்கிறேன்.

நாமெல்லாம் தாய் ஆமையின் அன்பார்ந்த பார்வையொன்றாலேயே போஷாக்கு பெரும் ஆமைக்குட்டிகள். நமக்கு எப்போதும் பசியில்லை; தாகமுமில்லை; களைப்புமில்லை. எந்நேரமும் திருப்தியுள்ளவர்களாகவே இருக்கிறோம்.

கடைக்கண் பார்வையொன்றே போதும்; நமக்குச் சோறும் வேண்டா, நீரும் வேண்ட. அன்பான பார்வையே நம் பசியையும் தாகத்தையும் தணித்துவிடுகிறது. அதை எப்படித் தகுந்த அளவிற்குப் புகழமுடியும்?

கிருபாசமுத்திரமான சாயிராயரே நம்முடைய காட்சி அனைத்தும். இந்நிலையில், காட்சிப்பொருள், காண்பவன், காட்சி - இந்த முக்கோண பேதம் மறைந்து, மூன்றும் ஒன்றாகிவிடுகின்றன.

அதுபோலவே, நாம் சருமத்திலும் தொடுவுணர்ச்சியிலும் சாயியின் பிரகாசத்தைக் காண்கிறோம். மூக்கிலும் வாசனையிலும் அவ்வாறே சாயி உறைகிறார்.

காதில் ஓர் ஒலி விழும்போது சாயியின் உருவம் உடனே வெளிப்படுகிறது. கேள்வி, கேட்பவர், கேட்கும் செயல் - இம்மூன்றும் ஒன்றாகிவிடுகின்றன. 





Thursday 16 September 2021

 ஷீர்டி சாயி சத்சரிதம்

35 . சோதிக்க வந்தவர்களைக் கையாண்ட விநோதமும் உதீயின் அற்புத சக்தியும்

ஓம் ஸ்ரீ விநாயகனே போற்றி! ஸ்ரீ சரஸ்வதியே போற்றி!
ஸ்ரீ குருமஹாராஜனே போற்றி! குலதேவதைக்கும் ஸ்ரீ சீதாராமச்சந்திரனுக்கும்
என்னுடைய பணிவான வணக்கங்கள். பூஜ்யகுரு ஸ்ரீ சாயிநாதனை
பக்தியுடன் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.

கடந்த அத்தியாயத்தின் முடிவில் கோடிகாட்டிய கதைகளை இந்த அத்தியாயத்தில் தொடர்கிறேன். அமைதியான மனத்துடன் கேளுங்கள்.

தன்னுடைய பாதையே உயர்ந்தது என்று நினைத்து தன்னுடைய மதத்தின் உட்பிரிவின்மேல் வைக்கும் அளவுக்குமீறிய அபிமானத்தை விட பயங்கரமானதும் தாண்டமுடியாததுமான விக்கினம், ஆன்மீக முன்னேற்றத்திற்கு வேறெதுவுமே இல்லை.

"நாங்கள் உருவமற்ற கடவுளைத் தொழுபவர்கள். உருவமுள்ள கடவுளே அனைத்து பிரேமைகளுக்கும் மூலகாரணம். ஞானிகளும் சாதுக்களும் கூட மனிதர்கள்தாமே? இவ்வாறிருக்க, அவர்களை பார்த்தால் நாம் ஏன் வணக்கம் செலுத்த வேண்டும்?-

"அவர்களுக்கு நமஸ்காரம் செய்யக்கூடாது; தக்ஷிணையும் கொடுக்கக்கூடாது. அவர்களுக்கு மரியாதை ஏதும் செய்யக்கூடாது. ஏனெனில் அது பக்தியை கேலி செய்வதாகும்."

ஷிர்டியைபற்றிச் சிலர் சிலவிதமாகவும், வேறு சிலர் வேறுவிதமாகவும், பலர் பலவிதமாகப் பேசினார்கள். ஆனால், அவை எல்லாவற்றையுமே நாம் விழுங்கிவிட முடியாது.

சிலர் சொன்னார்கள், "தரிசனத்திற்குப் போனால் சாயிபாபா தக்ஷிணை கேட்கிறார். சாதுக்கள் திரவியத்தை சம்பாதிக்க முயலும்போது அவர்களுடைய சாதுத்துவம் அடிபட்டுவிடுகிறதன்றோ!

"குருட்டு நம்பிக்கை நல்லதன்று. பிரத்யக்ஷமாக அனுபவம் கிடைத்த பிறகே நான் என்னுடைய மனத்தில் எவ்வழி செல்வதென்று முடிவுசெய்வேன். -

"பணத்தின் மீது நாட்டம் கொண்டவரின் ஞானித்துவத்தை என்னால் மெச்ச முடியவில்லை. நான் தக்ஷிணை கொடுக்கமாட்டேன். நம்முடைய வணக்கத்திற்கு அவர் தகுதியுள்ள பாத்திரமல்லர்.-

 


 

Thursday 9 September 2021

 ஷீர்டி சாயி சத்சரிதம்


"நாங்கள் உருவமற்ற கடவுளையே வணங்குவோம்; தக்ஷிணை கொடுக்கமாட்டோம்; நாங்கள் யாருக்கும் தலைவணங்கமாட்டோம். இந்த நிபந்தனைகளுக்கு ஒத்துக்கொண்டால்தான் தரிசனத்திற்கு வருவோம்".

இவ்வாறு நிச்சயம் செய்துகொண்டு வந்தவர்கள் சாயியின் பாதங்களைப் பார்த்தவுடன் சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்ததுமட்டுமல்லாமல் பாபா கேட்காமலேயே தக்ஷிணையும் கொடுத்தனர். ஓ, என்ன அற்புதம்!

மேலும், உதீயின் அபூர்வ மகிமையையும் நெவாஸ்கர் செய்ததுமட்டுமல்லாமல் பாபா கேட்காமலேயே தக்ஷிணையும் கொடுத்தனர். ஓ, என்ன அற்புதம்!

இதுபோன்ற உத்தமமான கதைகளை பக்தியுடனும் பிரேமையுடனும் செவிமடுத்தால், சம்சார இன்னல்கள் சாந்தமடையும். அதைவிடப் பரம சுகம் வேறெதுவும் உண்டோ?

ஆகவே, ஹேமாட் சாயிபாதங்களில் வணங்கி, கதை கேட்பவர்களுக்குப் பிரேமையை அருளுமாறு வேண்டுகிறேன். அவர்களுடைய மனம் சத் சரித்திரம் கேட்பதில் ரமிக்கட்டும். (மகிழட்டும்).

எல்லாருக்கும் க்ஷேமம் உண்டாகட்டும்! ஞானிகளாலும் சான்றோர்களால் உணர்வூட்டப்பட்டு, சாயி பக்தன் ஹேமாட் பந்தால் இயற்றப்பட்ட, 'ஸ்ரீ சமர்த்த சாயி சத் சரிதம்' என்னும் காவியத்தில், 'உதீயின் பிரபாவம்' என்னும் முப்பத்துநான்காவது அத்தியாயம் முற்றும்.

ஸ்ரீ சத் குரு சாயிநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.

சுபம் உண்டாகட்டும். 



Thursday 19 August 2021

 ஷீர்டி சாயி சத்சரிதம்

சந்திர சேனிய காயஸ்த ஜாதியைச் சேர்ந்த இல்லறத்தவர் ஒருவர் பம்பாயில் வாழ்ந்து வந்தார். அவர் மனைவி பிரசவ நேரம் வரும்போது உயிருக்குப் போராடுவாள்.

எத்தனையோ வைத்திய முறைகளைக் கையாண்டு பார்த்தனர். எதுவும் குணமளிக்கவில்லை. பிரசவ நேரத்தில் பெண்மணியின் ஜீவன் கலங்கும். கணவர் கவலையில் மூழ்குவார்.

ஸ்ரீராம மாருதி என்ற பெயர்கொண்ட, பிரசித்திபெற்ற சாயி பக்தரொருவர்  அளித்த அறிவுரையின்படி கணவர் ஷிர்டிக்குப் போவதென்று முடிவுகட்டினார்.

பிரசவ சமயம் நெருங்கும்போது, இருவருமே பெரும் சங்கடத்துக்குள்ளாயினர். ஆகவே, ஷிரிடிக்குப் போவதால் பயத்திலிருந்து பயத்திலிருந்து விடுபடுவதென்று இருவரும் ஏகமனதாகத் தீர்மானித்தனர்.

என்ன நடக்கப் போகிறதோ அது நடக்கட்டும். ஆனால், அது பாபாவின் சந்நிதியில்தானே நடந்தாகவேண்டும்? இந்த திடமான சங்கல்பத்தை ஏற்றுக்கொண்டு இருவரும் வந்து ஷிர்டியில் தங்கினர்.

ஷிர்டியில் அவர்கள் ஆனந்தமாக பாபாவுக்குப் பூஜை செய்துகொண்டும் அவருடைய சகவாசத்தை அனுபவித்துக்கொண்டும் பல மாதங்கள் வசித்தனர்.

இவ்வாறு சிலகாலம் கழிந்தபிறகு, பிரசவக்காலம் நெருங்கியது. சங்கடத்திலிருந்து எவ்வாறு விடுபடுவது என்ற மனக்கலத்தையும் கூடவே கொண்டுவந்தது.

இவ்வாறு அவர்கள் யோசித்துக்கொண்டிருக்கும்போதே பிரசவம் ஆகவேண்டிய நாள் வந்துவிட்டது. கர்ப்பப்பையின் வாய் அடைந்திருப்பது கண்டு எல்லோரும் விசாரமடைந்தனர்.

பெண்மணி மிகுந்த யாதனைக்கு (நரக வேதனைக்கு) உள்ளானார். யாருக்கும் என்ன செய்வதென்றே தெரியவில்லை. பாபாவை நோக்கி இடைவிடாத பிரார்த்தனை ஓடியது. அவரன்றி வேறு யார் கருணைகாட்டப்போகிறார்?

அக்கம்பக்கத்திலிருந்த மகளிர் ஓடிவந்தனர்; அவர்களில் ஒருவர் பாபாவைப் பிரார்த்தனை செய்துகொண்டே ஒரு லோட்டாவில் கொஞ்சம் நீர் எடுத்து அதில் உதீயைக் கரைத்து அப் பெண்மணியைக் குடிக்கவைத்தார்.

ஐந்து நிமிடங்களுக்குள் அப் பெண்மணி பிரசவித்தாள். கர்ப்பதிலேயே உயிரிலிந்த சிசு, ஜீவனற்றுக் காணப்பட்டது.

அதுவே சிசுவின் கர்மகதி. பிற்காலத்தில் அப் பெண்மணிக்கு நல்ல குழந்தை பிறக்கலாம். தற்சமயத்திற்கு உயிர் பிழைத்துக்கொண்டாள்; பயத்திலிருந்து விடுதலை பெற்றாள்.

வேதனையின்றி கர்ப்பத்தை வெளிக்கொணர்ந்தாள்; உடல் அங்கங்கள் ஆரோக்கியமாக இருந்தன. மிகுந்த அபாயகரமான கட்டம் தாண்டிவிட்டது. அப்பெண்மணி பாபாவுக்கு என்றென்றும் கடமைப்பட்டவள் ஆனாள்.

அடுத்த அத்தியாயம் மேலும் சிறப்பானது. கேட்பவர்களின் ஆவல் செழிப்பாக நிறைவேறும். எதைப் பார்த்தாலும் சந்தேகப்படும் கெட்ட குணம் விலகும்; பக்தி வளரும். 




Thursday 12 August 2021

 ஷீர்டி சாயி சத்சரிதம்

"உடனே விலேபார்லேவிற்கு சென்று, தீக்ஷிதரை உதீ வேண்டும் என்று கேளுங்கள். அவர் எப்பொழுதும் தம்மிடம் உதீ வைத்திருப்பவர்; மிகுந்த உற்சாகத்துடன் உதீ அளிப்பார்.-

"சாயியை மனத்தில் நினைத்து, அவர்மேல் முழுநம்பிக்கை வைத்து உதீயை நீருடன் கலந்து தினமும் குழந்தைக்கு கொடுத்தால் காக்காய் வலிப்பு மறைந்துவிடும். நீங்கள் எல்லாருமே சந்தோஷமடைவீர்கள்."

இதைக் கேட்ட பார்சி கனவான் (இரானியர்) தீக்ஷிதரிடமிருந்து உதீ பெற்றுக்கொண்டு வந்தார். தினமும் தம் பெண்குழந்தைக்கு நீருடன் கலந்து குடிக்கக் கொடுத்தார். குழந்தை ஆரோக்கியம் அடைந்தது.

ஒவ்வொரு மணி நேரத்திற்கும் கலவரம் அடையும் குழந்தைக்கு உதீயால் உடனே நிவாரணம் கிடைத்தது. அடுத்தடுத்த வலிப்புகளின் இடைவெளி படிப்படியாக ஏழு மணிகளாக உயர்ந்தது.

இவ்வாறாக, மணிக்கொருதரம் ஏற்பட்ட வலிப்பு ஏழு மணி நேரத்திற்கு ஒருதரம் ஏற்பட்டது. காலக்கிரமத்தில் சுவடேயில்லாமல் வலிப்பு மறைந்துவிட்டது!

ஹர்த்தாவுக்கருகில் இருந்த கிராமமொன்றில் ஒரு முதிய இல்லறவாசி வாழ்ந்துவந்தார். 'சிறுநீரக கற்கள்' வியாதியால் பீடிக்கப்பட்டு வலியும் வேதனையும் அடைந்தார்.

இந்த வியாதிக்கு அறுவை மருத்துவத்தை தவிர வேறு வழி ஏதும் இல்லாததால், திறமை வாய்ந்த அறுவை மருத்துவ நிபுணர் யாரையாவது அணுகும்படி சிலர் அவருக்கு அறிவுரை கூறினர்.

நோயாளி மிகுந்த விசாரமுற்றார்; என்ன செய்வதென்று தெரியாது தவித்தார். மரணத்தின் வாயிலிலிருப்பவர் போல் மெலிந்து போனார். வேதனையளிக்கும் வலியைப் பொறுத்துக்கொள்ள இயலவில்லை.

அறுவை மருத்துவம் செய்துகொள்வதற்கு தைரியம் தேவை. முதியவருக்கு அந்த தைரியம் இல்லை. தெய்வாதீனமாக அவருடைய துரதிஷ்டம் ஒரு முடிவுக்கு வந்தது. அற்புதம் என்ன நடந்ததென்று கேளுங்கள்!

நோயாளியின் நிலைமை இவ்வாறு இருந்தபோது, அந்த கிராமத்தின் இனாம்தார் கிராமத்திற்கு வரப்போகிறார் என்ற செய்தி வந்தது. இனாம்தார் சாயி பாபாவின் சிறந்த பக்தர்.

அவர் எப்பொழுதும் தம்மிடம் பாபாவின் உதீயை வைத்திருந்தார் என்பது எல்லாருக்கும் தெரிந்த விஷயம். உதியீயைப் பிரார்த்தித்து வாங்குவதற்கு நோயாளியின் உறவினர்களும் நண்பர்களும் இனாம்தாரிடம் வந்தனர்.

இனாம்தார் உதீ கொடுத்தார். மகன் அதை நீருடன் கலந்து தந்தைக்கு (நோயாளி முதியவருக்கு) குடிப்பதற்கு கொடுத்தான். குடித்து ஐந்து நிமிடங்கூட ஆகவில்லை; ஓர் அற்புதம் நிகழ்ந்தது!

உதீ பிரசாதம் உள்ளே சென்றவுடன், சிறுநீரகக் கல் இடத்திலிருந்து நகர்ந்து சிறுநீரோடு சேர்ந்து வெளியே வந்துவிட்டது. 




Thursday 5 August 2021

 ஷீர்டி சாயி சத்சரிதம்

"நான் வீடு வந்து சேர்ந்தவுடனே உதீயை நீருடன் கலந்து அருந்துவதற்கு கொடுத்தேன்; உடல் முழுவதும் பூசினேன். உடனே அவளுடைய உடல் முழுவதும் வியர்த்துகொட்டியாயது; நிம்மதியாகத் தூங்க ஆரம்பித்தாள். -

"பின்னர், சூரியோதய நேரத்தில் தெம்பாகவும் நலமாகவும் எழுந்து உட்கார்ந்தாள். ஜூரமும் வீக்கங்களும் மறைந்துவிட்டன. உண்மையில் இது பாபாவின் அருட்சக்தியேயன்றி வேறெதுவுமில்லை."

இந்த நிலைமையைப் பார்த்தவனுடனே சாமாவுக்கு பாபா 'போனவுடனே திரும்பிவிடு'  என்று சொன்னது ஞாபகத்திற்கு வந்தது. சாமாவின் மனம் ஆச்சரியத்தால் நிரம்பியது.

சாமா வருவதற்கு முன்பே வேலை முடிந்துவிட்டது. ஆகவே அவர் தேநீர் குடித்தவுடன் ஷீர்டி திரும்பினார். நேராக மசூதிக்குச் சென்று பாபாவின் பாதங்களை வணங்கினார்.

சாமா கேட்டார், "பாபா, இதென்ன விளையாட்டு? நீங்களே மனத்தில் கலவரத்தை உண்டுபண்ணுகிறீர். உம்முடைய இடத்தில் உட்கார்ந்தவாறே ஒரு சுழற்காற்றை கிளப்பிவிடுகிறீர். பிறகு, நீங்களே அதை நிச்சலமாக்குகிறீர்".

பாபா பதிலுரைத்தார், "இதோ பார், இதெல்லாம் மறைந்து வேலை செய்யும் கர்மவினைகளின் வானளாவிய ஓட்டம். நான் செய்பவனுமல்லேன், செய்ய வைப்பவனுமல்லேன் என்பதை உறுதியாக அறிந்துகொள். ஆனாலும், செய்யக்கூடிய சக்தி என் வாயிற்படியில் படுத்துக்கிடக்கிறது!

"விதியின் வலிமையால் என்னென்ன நிகழ்ச்சிகள் நேர்கின்றனவோ அவற்றிற்கு நான் சாட்சி மாத்திரமே. செயல்புரிபவனும் செயல்புரியவைப்பவனும் இறைவன் ஒருவனே; அவனொருவனே கிருபை செய்யக்கூடியவன்.-

"நான் தேவனுமல்லேன்; ஈசுவரனுமல்லேன். நான் 'அனல் ஹக்'குமல்லேன் (கடவுளுமல்லேன்) ; பரமேசுவரனுமல்லேன். நான் 'யாதே ஹக்' (இறைவனை எப்பொழுதும் மனத்தில் இருத்தியவன்) நான் அல்லாஹ்வின் மிகப் பணிவான அடிமை.-

"எவன் அகங்காரத்தை அழித்துவிட்டு நன்றி நிறைந்த மனத்துடன் அவர் மீது தன் பாரத்தை போடுகிறானோ, அவனுடைய படகு கரை சேர்ந்துவிடும்."

இப்பொழுது ஒரு இரானியரின் மகத்தான அனுபவத்தை கேளுங்கள். அவருடைய பெண் குழந்தைக்கு உடல் நலம் சரியில்லாதிருந்தது. அவ்வப்பொழுது நினைவிழந்துவிடும்.

இப் பெண்குழந்தைக்கு மணிக்கொருமுறை காக்காய்வலிப்பு கண்டு, உடல் வில்லைபோல் வளைத்துக்கொள்ளும். உயிர் பிரிந்துவிட்டதுபோல் நினைவின்றிக் கிடப்பாள். இந்த வியாதிக்கு எந்த வைத்தியமும் பலனளிக்கவில்லை.

பின்னர், நண்பரொருவர் உதீயின் பிரபாவத்தைச் சொன்னார், "ராமாபானத்தை போன்று, குறி தவறாது விசித்திரமாகச் செயல்படும் வேறொரு மருந்து எங்கும் இல்லை. -






Thursday 29 July 2021

 ஷீர்டி சாயி சத்சரிதம்

இதைக் கேட்ட பாபாஜி பயந்தார்; தைரியமிழந்துபோனார். மாதவராவுக்கு மூலிகை மருந்துகள் பற்றிய ஞானம் இருந்தது; ஆனால், அது அந்த சமயத்தில் உபயோகப்படாது.

எது எப்படி இருந்தாலும் மாதவராவ் பாபாவின் குறிப்பைப் பூரணமாக அடையாளம் கண்டுகொண்டார். எந்த மருந்தும் பாபாவின் அருளின்றி வேலை செய்யப் போவதில்லை!-

ஆகவே அவர் பாபாவின் ஆக்ஞய்க்கு கீழ்ப்படிந்து, தம்பியிடம் உதியைக் கொடுத்தனுப்பிவிட்டுத் தாம் அமைதியாக ஷிர்டியில் இருந்தார். பாபாஜீ மனமுடைந்தவராக கவலையுடன் வீடு திரும்பினார்.

உதீயை நீருடன் கலந்து அருந்துவதற்கு கொடுத்துவிட்டு வீக்கங்களின்மேலும்  பூசினார். மனைவி சிறிது நேரத்தில் உடல் முழுவதும் வியர்த்துக்கொட்டி, நித்திரையில் ஆழ்ந்தார்.

சூரியோதய காலத்தில் அவருக்குத் தெம்பு வந்துவிட்டது. ஜுரமோ வீக்கங்களோ  இருந்த இடம் தெரியவில்லை! பாபாஜி ஆச்சரியமடைந்தார்.

மாதவராவ் காலையில் எழுந்து இயற்கைக் கடன்களை முடித்துக்கொண்டு முகம் கழுவி சாவூல் வித்திருக்கு கிளம்புவதற்கு முன், தரிசனம் செய்வதற்கு மசூதிக்கு வந்தார்.

பாபாவை தரிசனம் செய்து நமஸ்காரம் செய்தபின், உதீயையும் ஆசீர்வாதங்களையும் பெற்றுக்கொண்டவுடன் சாவூல் விஹிரை நோக்கி நடந்தார்.

மசூதியின் படிகளில் இறங்கும்போது பாபா ஆணையிட்டது கேட்டது. "சாமா, நீ போனவுடனே திரும்பிவிடு! தாமதம் செய்வதற்கு அங்கு ஒரு வேலையும் இல்லை".

போகும் வழியில் மாதவ்ராவ், "தம்பியின் மனைவி என்ன பாடுபடுகிறாளோ! எப்படி இரண்டு வீக்கங்களின் எரிச்சலைப் பொறுத்துக்கொள்ளப்போகிறாள்! ஓ, பெரும் துன்பத்தால் வாடிப் படுத்துக்கிடக்கிறாள் போலும்!" என்று கவலைப்பட்டுக்கொண்டே சென்றார்.

"ஆயினும், பாபா எதையோ குறிப்பால் உணர்த்தினார் போலிருக்கிறதே! இல்லையெனில் என்னை ஏன் போனவுடனே, திரும்பிவிடு என்று சொன்னார்?" இவ்வாறு சாமா கலவரமடைந்து காலை எட்டிப்போட்டு வழி நடந்தார்.

நேரம் கடப்பதுபற்றிப் பொறுமை இழந்து வேகவேகமாக சாவூல் விஹிரை நோக்கி நடந்தார். வீடு வாயிற்படியை மிதித்தபோது, அவருடைய கண்களை அவராலேயே நம்பமுடியவில்லை!

முன்னாள் இரவு பிளேக் நோயால் படுத்திக்கிடந்த பெண்மணி, வழக்கம்போல் தேநீர் தயாரித்துக்கொண்டிருந்ததை பார்த்தார். பெண்மணியின் நிலைமையில் ஏற்பட்டிருந்த திடீர் மாற்றத்தைக் கண்டு சாமா வியப்படைந்தார்.

அவர் பாபாஜியிடம் கேட்டார், "எப்படி உன் மனைவி தினப்படி வேலைகளை செய்துகொண்டிருக்கிறாள்?" பாபாஜி பதில் சொன்னார், "அனைத்தும் பாபாவின் உதீ செய்த அற்புதமே.- 




Thursday 22 July 2021

 ஷீர்டி சாயி சத்சரிதம்

"இரண்டு வீக்கங்கள் தோன்றியிருக்கின்றன; கடுமையான ஜுரம் அடிக்கிறது; அவஸ்தைப்படுகிறாள்; நீங்களே வந்து பாருங்கள்; இதொன்றும் நல்லதற்கு அறிகுறியாகத் தெரியவில்லை."

பாபாஜியின் சோகம் ததும்பிய முகத்தையும் வருத்தம் தோய்ந்த வார்த்தைகளையும் கேட்ட மாதவராவ் திடுக்கிட்டார். அவரும் மனங்கலங்கி தைரியமிழந்தார்.

மாதவராவ் விவேகம் நிறைந்தவரானாலும், வீக்கங்கள் என்று கேள்வியுற்றபோது திகிலடைந்தார். பிளேக் நோய் வீக்கங்கள் கண்டால், சீக்கிரமே மரணம் சம்பவிக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயமே.

சுபமான நிகழ்ச்சியானாலும் அசுபமான நிகழ்ச்சியாயினும், இஷ்டமான செயலாயினும் கஷ்டமான செயலாயினும், பாபாவின் அறிவுரையைக் கேட்பதென்பது ஷீர்டி மக்களின் வழக்கம்.

பிறகு, அவர் எப்படி எப்படியெல்லாம் சொல்கிறாரோ, அப்படி அப்படியெல்லாம் செயல்படவேண்டும். ஏனெனில், அவரே பக்தர்களை சங்கடங்களிலிருந்து விடுவித்தார். ஓ, எத்தனை அனுபவங்களை நான் வர்ணிக்க முடியும்!

ஆகவே, இந்த நித்திய பாடத்தின்படியே மாதவராவும் முடிவெடுத்தார் பாபாவுக்கு சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்துவிட்டு பயபக்தியுடன் முதலில் அவரிடம் விவரங்களை சொன்னார்.

மாதவராவ் வேண்டினார், "ஜய ஜய சாயிநாதா! இந்த அனாதைகளின் மீது தயை காட்டுவீராக. ஓ, இதென்ன புதிதாக ஒரு சங்கடம்! இதென்ன வேண்டாத மனக்கலக்கம்! -

"ஆயினும் உங்களைத் தவிர நாங்கள் யாரிடம் மன்றாடுவோம்? அந்தப் பெண்ணின் யாதனையை (நரக வேதனையை) விலக்குங்கள்; அவளை ஆசீர்வாதம் செய்யுங்கள்.-

"இந்த சங்கடத்திலிருந்து எங்களைக் காத்தருளுங்கள். உம்மையல்லால் எங்களை ரட்சிப்பவர் வேறு யார்? கட்டுக்கடங்காத இந்த ஜுரத்தை சமனம் செய்து உம்முடைய வாக்கை காப்பாற்றுங்கள்".

தம்பியுடன் சாவூல் விஹிர் செல்வதற்கு பாபாவை அனுமதி கேட்டார் மாதவராவ். பாபா அப்பொழுது சொன்னார், " இந்த நேரங்கெட்ட நேரத்தில் போகவேண்டா. ஆயினும் அவளுக்கு கொஞ்சம் உதீ கொடுத்தனுப்பு.-

"வீக்கமென்ன, ஜூரமென்ன! அல்லாமாலிக் நம் பிதா அல்லரோ? அது தானாகவே சுகமாகிவிடும். அவள் நலமடைவாள்; இதில் சந்தேகத்திற்கு  இடமேதுமில்லை.-

"எப்படியும் காலை சூரிய உதயத்தின்போது நீ சாவூல் விஹிருக்குச் செல்வாயாக. இப்பொழுதே போகவேண்டுமென்று அவரசப்படாதே! இங்கேயே அமைதியான மனத்துடன் இரு.-

"நாளைக்கும், போனவுடனே திரும்பி வா. காரணமில்லாமல் ஏன் தொந்தரவுக்கு உள்ளாகிறாய்? உதீயைப் பூசிவிட்டு, நீருடன் கலந்து கொடுத்தபின் நாம் ஏன் பயப்பட வேண்டும்?"


 

Thursday 15 July 2021

 ஷீர்டி சாயி சத்சரிதம்

"உம்முடைய காலை மிதித்தாரே, அவர் இப்பொழுது வரவில்லை? அவர்தான் உம்மைக் கொத்திவிட்டுப் புண்ணின் வலியையும் குறைத்துவிட்டுப் பறந்துபோன காக்கை"-

காக்கையாவது, கொத்தலாவது! இந்த நிகழ்ச்சியை நடத்திவைத்தவர் அவரே. காக்கை அப்துல்லாவின் உருவத்தில் தோன்றியது. பாபா தாம் சொன்னது உண்மையென்பதை நிரூபித்துவிட்டார்.!

பாபாவின் வாக்கு வெறும் சொற்களல்ல; பிரம்மதேவன் எழுதும் தலையெழுத்துக்கு சமம். மனிதனுடைய கர்மவினையின் பலன்களையும் தடுத்து நிறுத்தும் சக்தி வாய்ந்தவை. அற்ப அவகாசத்திற்குள்  (சிறிய இடைவெளியில்) பாவூ குணமடைந்தார்.

உதீயைத் தடவுவதும் நீருடன் சேர்த்து உட்கொள்ளுவதுமே மருந்தும் அனுபானமும் (மருந்துக்கு வீரியம் சேர்க்க இணைத்து அருந்தும் பானமும்). பத்தாவது நாளன்று பொழுது விடிந்தபோது வியாதி வேரோடு அறுக்கப்பட்டது.

புண்ணிலிருந்து ஏழு நரம்புச்சிலந்திப் புழுக்கள் உயிரோடு வெளிவந்தன. பொறுக்க முடியாத வேதனை ஒழிந்தது. டாக்டர் பிள்ளையின் உடைய துன்பம் ஒரு முடிவுக்கு வந்தது.

பிள்ளை இந்த அற்புதத்தை கண்டு ஆச்சரியமடைந்தார். பாபாவின் லீலையை நினைத்து நினைத்துக் கண்களிலிருந்து பிரேமதாரை வடித்தார்.

பிள்ளை பாபாவின் பாதங்களில் விழுந்தார். உணர்ச்சிவசத்தால் அவருக்குத் தொண்டை அடைத்தது. வாயியிலிருந்து ஒரு வார்த்தையும் வெளிவரவில்லை.

இன்னும் ஒரு அனுபவத்தைச் சொல்லிவிட்டு, உதீயின் பிரபாவம் பற்றிய விவரணத்தை முடித்துவிடுகிறேன். இந்தத் தொடரின் சாராம்சம் என்னவென்றால், 'மனத்தின் பாவம் எப்படியோ, அப்படியே அனுபவம் !' என்பதே.

இரு சகோதர்களில் மூத்தவர் மாதவராவ்; இளையவர் பாபாஜீ. ஒருசமயம் துன்பம் நேர்ந்தபோது, உதீயை உபயோகித்து பாபாஜி எவ்வாறு விடுதலையடைந்தார் என்பது பற்றிக் கேளுங்கள்.

இந்த உதீயின் பிரபாவம் சொல்லுக்கடங்காதது.அதை நான் எவ்வாறு தகுந்த அளவிற்குப் புகழ்வேன்? பிளேக் நோய் வீக்கங்களுக்கும் மற்றெல்லா வியாதிகளுக்கும் உதீயைப் போன்ற சர்வரோக நிவாரணி வேறெதையும் நான் கண்டதில்லை.

பாபாஜீ சாவூல் விஹிரில் வசித்துவந்தபோது, அவர் மனைவிக்கு ஜுரம் கண்டு வயிற்றுக்கு கீழே இரண்டு வீக்கங்கள் தோன்றின. பாபாஜீ மனக்கலக்கம் அடைந்து அரண்டு போனார்.

அந்த பயங்கரமான இரவு நேரத்தில் மனைவி பட்டபாட்டைப் பார்த்த பாபாஜீ பீதியடைந்து தைரியமிழந்தார்.

திகிலாலும் பயத்தாலும் நடுநடுங்கியவாறு இரவோடிரவாக ஷிர்டிக்கு ஓடிவந்தார். தம் அண்ணனிடம் விவரங்களைத் தெரிவித்தார். 




Thursday 8 July 2021

 ஷீர்டி சாயி சத்சரிதம்

அவர்கள் இருவரும் இவ்வாறு பேசிக்கொண்டிருந்தபோது, அகல் விளக்குகளுக்கு எண்ணெய் நிரப்புவதற்காக அப்துல்லா அங்கு வந்தார். சற்றும் எதிர்பாராதவிதமாக அடுத்ததாக என்ன நடந்தது தெரியுமா?

மசூதி ஏற்கெனவே ஒரு குறுகலான இடம்; பக்தர்களும் பலர் இருந்தனர். போதாதற்கு டாக்டர் பிள்ளையின் நிலைமை வேறு ஒரு நெருக்கடியை உண்டுபண்ணியிருந்தது; அப்துல்லாவுக்குக் கால் வைப்பதற்கும் வசதி இல்லாதிருந்தது.

மேலும், அப்துல் காரியமே கண்ணாக அகல் விளக்குகளுக்கு எண்ணெய் நிரப்புவதிலேயே குறியாக இருந்தார். பிள்ளை அங்கு உட்கார்ந்திருந்தததை ஒருகணம் கவனிக்கவில்லை. அப்பொழுது சற்றும் எதிர்பாராத சம்பவமொன்று நிகழ்ந்தது.

அப்துல்லாவால்தான் என்ன செய்ய முடியும் பாவம்! நடப்பது நடந்தே தீரும் அன்றோ? வேதனை குறைவதற்காக நீட்டி வைத்திருந்த பிள்ளையின் காலைத் தவறுதலாக அப்துல் மிதித்துவிட்டார்.

ஏற்கெனவே வீங்கிப் போயிருந்த பிள்ளையின் காலை அப்துல்லாவின் பாதம் பார்த்துவிட்டது. "ஐயோ!" பிள்ளை பயங்கரமாக அலறினார்; வழியால் துடிதுடித்தார்.

ஒருமுறை, ஒரே ஒரு முறைதான் பாவூ வலி பொறுக்கமாட்டாமல் அலறினார். அந்த அலறல் அவருடைய தலையைத் துளைத்துக்கொண்டு சென்றது போலும்! கூப்பிய கைகளுடன் அவர் பாபாவின் கருணைநாடி வேண்ட ஆரம்பித்தார். வேண்டுதலைக் கேளுங்கள்!

கட்டி உடைந்து, சீழ் வெளிவர ஆரம்பித்தது. பிள்ளை மிக்க கலவரமடைந்து ஒரு பக்கம் ஓவென்று அழுதார்; மறுபக்கம் பாட ஆரம்பித்தார்.
"ஓ , கரீம் (அல்லா)! என் நிலைமையைப் பார்த்து மனமிறங்க மாட்டீரா ? ரஹ்மான் (கருணாமூர்த்தி) என்றும் ரஹீம் (தயாளர்) என்றும் உம்மை அழைக்கின்றனரே! நீரே இரண்டு உலகங்களுக்கும் சுல்தான் (சக்கரவர்த்தி); இவ்வுலகமே உம்முடைய மகிமையின் வெளிப்பாடன்றோ! இவ்வுலக வியாபாரம் அனைத்தும் ஒரு முடிவுக்கு வரும்; உம்முடைய புகழோ என்றும் நிலைத்திருக்கும்! நீங்களே என்றும் உம் அடியவர்களின் அடைக்கலம்."

குத்துவலி அவ்வப்பொழுது வந்து போயிற்று. டாக்டர் புள்ளியின் ணம் கொந்தளித்தது; அவர் சோர்வடைந்து பலமிழந்துபோனார். சுற்றியிருந்தவர்கள் அனைவரும் ஈத்தனைத்தும் பாபாவின் விளையாட்டே என்றறிந்தனர்.

பாபா சொன்னார், "பாவூவைப் பாருங்கள்; பாட ஆரம்பித்துவிட்டார்". பிள்ளை பாபாவைக் கேட்டார், "பாபா, அந்தக் காக்கை வந்து என்னுடைய புன்னைக் கொத்தப் போகிறதா?"

பாபா சொன்னார், "நீர் போய் வாடாவில் அமைதியாகப் படுத்துக்கொள்ளும். காக்கை கொத்துவதற்கு மறுபடியும் வாராது.-

                                    


 

Thursday 1 July 2021

 ஷீர்டி சாயி சத்சரிதம்

மேலும், பக்தர்களின் கற்பகவிருக்கிஷமான சாயி, பக்தனின் இன்னல் தரும் அவஸ்தையை விலகுக்குவதற்கு எப்படி ஓர் உபயாத்தை துவக்கி வைத்தார் என்பதையும் கேளுங்கள்.

டாக்டர் பிள்ளைக்கு பாபாவுக்கு அனுப்பிய செய்தி  தீக்ஷிதரால் கொண்டுவரப்பட்டது. அதைக் கேட்ட பாபா தீக்ஷிதரிடம் சொன்னார், "போய் அவரிடம் சொல்லுங்கள். 'நிர்பயமான மனத்துடன் இருக்கவும்' என்று"

பாபா மேலும் டாக்டருக்குப் பாடம் சொல்லியனுப்பினார், "இந்த அவதியைப் பத்து ஜென்மங்களுக்குப் பரப்புவதில் என்ன அர்த்தம் இருக்கிறது? பத்து நாள்களுக்குள்ளாகவே பரஸ்பரம் பகிர்ந்துகொள்வதன் மூலம் இதை ஒழித்துவிடலாம்!-

"ஓ, உமக்கு இகவுலகில் நல்வாழ்வும் பரவுலகில் மேன்மையும் மோக்ஷமும் அளிக்கக்கூடிய சமர்த்தன் நான் இங்கு உட்கார்ந்திருக்கும்போது, நீர் மரணத்தை வேண்டுகிறீரே! இதுதான் உமது புருஷார்த்தமோ (நீர் அடைய வேண்டியதோ)?

"அவரை எழுப்பித் தூக்கிக்கொண்டு இங்கு வாருங்கள். அனுபவிக்கவேண்டியதை அனுபவிக்கட்டும். பயத்தால் அவர் மனங்கலங்க வேண்டா. அவரை இங்கு உங்களுடைய முதுகிலாவது தூக்கி கொண்டு வாருங்கள்".

ஆகவே, அந்த நிலையிலேயே டாக்டர் உடனே மசூதிக்கு கொண்டுவரப்பட்டார். பாபா தாம் சாய்ந்துகொண்டிருந்த தலையணையை அவருக்கு கொடுத்தார்.

தலையணை பாபாவின் வலப்பக்கத்தில், பக்கீர் பாபா வழக்கமாக உட்காரும் இடத்தில் வைக்கப்பட்டது. "இதன்மேல் சாய்ந்துகொண்டு அமைதியாகப் படுத்துக்கொள்ளுங்கள். அனாவசியமாக மனத்தைக் குழப்பிக்கொள்ளாதீர்" என்று பாபா சொன்னார்.

"மெதுவாகக் காலை நீட்டி உட்காரும். அது சிறிது நிவாரணம் அளிக்கும். ஊழ்வினையை அனுபவித்துத்தான் தீரவேண்டும். அதுவே, வினையைத் தீர்க்கும் வழி. வேறு வழி ஏதும் இல்லை.

"வேண்டுவதோ வேண்டாததோ, சுகமோ துக்கமோ, அமிருதமோ விஷமோ - இந்த இரட்டைச் சுழல்கள் நாம் சேர்த்த வினைகளுக்கு ஏற்றவாறு வெள்ளம்போல் நம்மை நோக்கிப் பாய்கின்றன. ஆகவே அவற்றை கண்டு சிரிக்கவும் வேண்ட, அழவும் வேண்டா.-

"எது எது நேர்கிறதோ, அது அதை பொறுத்துக்கொள்ளவும். அல்லாமாலிக் நம் ரட்சகர்; எப்பொழுதும் அவரையே தியானம் செய்வீராக. பாரம் சுமப்பவர் அவரே!-

"மனம் , செல்வம், உடல், பேச்சு ஆகியவற்றால் அவருடைய பாதங்களில் சரணடையுங்கள். நிரந்தமாக அவருடைய நாமத்தை ஸ்மாரணம் செய்ததால் லீலைகள் அனுபவமாகும்."

டாக்டர் பிள்ளை அப்பொழுது சொன்னார், "நானாசாஹேப் சாந்தோர்கர் புண்ணின்மேல் கட்டுபோட்டிருந்தார்; ஆயினும் நிவாரணம் சிறிதும் ஏற்படவில்லை".

பாபா பதில் சொன்னார், "நானா ஒரு பித்துக்குளி! அந்தக் கட்டைப் பிரிந்துவிடும்; இல்லையெனில் நீர் செத்துப்போவீர். ஒரு காக்கை வந்து இப்பொழுது உம்மைக் கொத்தும்; அதன் பிறகு நீர் குணமடைவீர்".

 


 

Thursday 24 June 2021

 ஷீர்டி சாயி சத்சரிதம்

இந்த டாக்டர் சாயி பாபாவின்மீது மிகுந்த பிரேமை வைத்திருந்தார். பாபாவும் அவரைச் செல்லமாக பாவூ என்று அழைத்தார். அவரை தினமும் மிகுந்த அன்புடன் குசலம் விசாரிப்பார்.

மசூதியில், மரத்தாலான கிராதியின் அண்மையே காலையிலும் மாலையிலும் பாவூவின் இடம். நெடுநேரம் பாபாவும் பாவூவும் அநேக விஷயங்களைப்பற்றி பரஸ்பரம் கருத்துப் பரிமாற்றம் செய்துகொள்வர்.

பாவூ இல்லாமல் பாபா சிலீம் பிடிக்கமாட்டார்; பீடி பிடிக்கும்போது பாவூ அருகில் இருக்கவேண்டும்; நியாயம் பேசுவதற்கும் பாவூ அருகில் இருக்கவேண்டும். சுருங்கச் சொன்னால், பாவூ இல்லாமல் பாபாவுக்கு பொழுது இனிமையாக நகராது.

அதுவே அப்போதைய நிலைமை. ஆயினும் நரம்புச்சிலந்தி நோயின் வேதனை பொறுக்கமுடியாமற்போன நிலையில் பாவூ படுத்த படுக்கையாகிவிட்டார். வலியும் வேதனையும் மனக்கொந்தளிப்பையும் சோகத்தையும் அளித்தன.

இவ்வளவு நெருக்கடியான நிலையிலும் அவருடைய வாய் இடைவிடாது சாயி நாம ஜெபத்தைச் செய்து வந்தது. "போதும், இந்த யாதனை (நரக வேதனை); மரணமே இதைவிட மேல்" என்று சொல்லி அவர் சாயியிடம் சரணாகதி அடைந்தார்.

அவர் பாபாவுக்கு ஒரு செய்தி அனுப்பினார், "இந்தத் துன்பத்தை அனுபவித்து நான் ஓர் எல்லைக்கே வந்துவிட்டேன். அங்கமெல்லாம் எத்தனையோ ரணங்கள்! இனியும் சகித்துக்கொள்ள எனக்குத் திராணியில்லை!-

"நல்வழி நடக்கும் நான் ஏன் இந்த வேதனையை அனுபவிக்கவேண்டும்? கெட்ட செயல்களின் பாதையில் நான் சென்றதில்லையே. நான் என்ன பாவம் செய்தேன். என்மீது இவ்வளவு துன்பத்தையளிக்கும் அவஸ்தை இறங்கியிருக்கிறது ?-

"நரம்புச்சிலந்தி நோயின் வேதனை மரணவேதனைக்கு ஒப்பாக இருக்கிறது. பாபா, என்னால் இப்பொழுது இந்த வேதனையை சகித்துக்கொள்ள முடியவில்லையே! நான் மரணமடைவதே நல்லது. என்ன யாதனை மீதமிருக்கிறதோ அதை அடுத்த பிறவியில் அனுபவித்துக்கொள்கிறேன்.-

"அனுபவிக்க வேண்டியதை அனுவபித்தே தீரவேண்டும். அதற்காகவே பல ஜென்மங்கள் எடுக்க வேண்டியிருக்கலாம். ஊழ்வினையால் விதிக்கப்பட்டதைத் தவிர்க்க முடியாது. மந்தமதி படைத்த எனக்கும் இது தெரிந்திருக்கிறது.

"என்னுடைய கர்மவினையை அனுபவிப்பதற்குப் பத்து ஜென்மங்கள் வேண்டுமானாலும் சந்தோஷமாக எடுக்கிறேன். அனால், இந்த ஜென்மத்தை இத்தோடு முடித்துக்கொடுத்து எனக்கு தருமம் செய்யுங்கள்.-

"போதும், போதும், போதும்  இந்த ஜென்மம்! எனக்கு இந்த ஜென்மத்திலிருந்து விடுதலை தாருங்கள். என்னால் இந்தக் கஷ்டத்தை இனியும் அனுபவிக்கமுடியாது. இதுவே உங்களிடம் நான் செய்யும் பிரார்த்தனை, ஒரே பிரார்த்தனை".

சித்தர்களின் அரசராகிய சாயி இந்தப் பிரார்தனையைக் கேட்டு தயையால் உள்ளம் நெகிழ்ந்தார். டாக்டர் பிள்ளைக்கு ஆறுதல் கூற ஆர் பொழிந்த கருணாமிருதத்தை கேளுங்கள். 




Thursday 17 June 2021

ஷீர்டி சாயி சத்சரிதம் 


எந்த நல்ல காரியத்திற்கும் இதுவே ரீதி. ஆரம்பத்திலேயே கெடுமதியாளர்கள் சில தடங்கல்களை உண்டாக்குவர். அவர்கள் சொல்வதை லட்சியம் செய்யாதவர்களே கடைசியில் நல்ல பாதையில் சென்று நன்மையடைவர்.


டாக்டர், ஞானியை தரிசனம் செய்யும் எண்ணத்தைக் கைவிட்டுவிட்டு நேராக பம்பாய்க்கு சென்றார். மீதியிருந்த விடுப்பை அலிபாக்கில் கழிக்கலாம் என முடிவெடுத்தார்.


இவ்வாறு அவர் முடிவு செய்தபின், தொடர்ச்சியாக மூன்று இரவுகளில், "இன்னும் என்மேல் அவநம்பிக்கையை?" என்ற குரல் அவருக்குத் தூக்கத்தில் கேட்டது.


தொடர்ச்சியாக மூன்று இரவுகளில் தோன்றிய அந்த அசரீரிச் செய்தியைக் கேட்டு டாக்டர் வியப்படைந்தார். அந்தச் செய்தியைப் பொருள் செறிந்ததாக ஏற்றுக்கொண்டு அவர் ஷீர்டி பிரயாணத்தை நிச்சயம் செய்துகொண்டார்.


ஆயினும், அவர் அந்த சமயத்தில், டைபாய்டு ஜுர நோயாளி ஒருவருக்குச் சிகிச்சை அளித்துக்கொண்டிருந்தார். அவருக்குச் சிறிது குணமேற்பட்டவுடனே ஷீர்டி செல்லலாம் என நினைத்தார்.


நோயாளிக்கோ ஜுரம் அதிகமாக இருந்தது; எந்த மருந்தும் வேலை செய்யவில்லை. நோயாளி லவலேசமும் (சிறிதளவும்) குணமடையவில்லை. ஆகவே, ஷீர்டி செல்வதற்கு முடியவில்லை.


டாக்டர் தமது மனத்தில் தீர்மானம் செய்துகொண்டார், "இந்த நோயாளியின் நிலைமையில் இன்று ஏதாவது முன்னேற்றம் தெரிந்தால், மேலும் ஒரு கணமும் தாமதியாது நாளை நான் ஷீர்டி செல்வேன்".


இந்த திடமான சங்கேதத்தை (குறிப்பை) ஏற்றுக்கொண்டபின், ஆறு மணி நேரத்திற்குள்ளாக ஜுரம் கொஞ்சங்கொஞ்சமாக இறங்கியது. அவருடைய வேண்டுதல் நிறைவேறியதால் டாக்டர் உடனே ஷிர்டிக்கு கிளம்பினார்.


சங்கற்பம் செய்துகொண்டவாறே டாக்டர் ஷிர்டிக்குச் சென்றார். பக்தியுடன் பாபாவின் பாதங்களை வணங்கினார். இவ்விதமாக, பாபா அவருக்கு அகமுகமான அனுபவத்தின் மூலம் விசுவாசம் ஏற்படச் செய்து, அவரை குருசேவைக்கு இழுத்தார்.


டாக்டரின் தலைமேல் அருட்கரத்தை வைத்து உதீ பிரசாதமும் அளித்தார். சாயியின் அளப்பரிய சக்தியைக் கண்டு டாக்டர் பிரமித்துப் போனார்.


டாக்டர் ஷிர்டியில் நான்கு நாள்கள் தங்கியபின் ஆனந்தமான மனத்துடன் வீடு திரும்பினார். பதினைந்து நாள்கள் கூட முடியவில்லை. விஜாப்பூருக்குப் பதவி உயர்வில் அனுப்பப்பட்டார்!


வேதனை மிகுந்த ஹாட்யாவரணம் சாயிதரிசனத்திற்கு வழிவகுத்தது. தரிசனம் ஞானியின் பாதங்களின்மீது ஈர்ப்பை ஏற்படுத்தியது. அவ்வீர்ப்பு என்றும் குறையாத ஆனந்தத்தை அளித்தது.


இவ்வாறே டாக்டர் பிள்ளை ஒரு சமயத்தில் நரம்புச்சிலந்தி நோய் கண்டு வருந்தினார். ஒன்றன்பின் ஒன்றாக ஏழு சிலந்திகள் தோன்றின. டாக்டர் மிகவும் கஷ்டப்பட்டார்.  




Thursday 6 May 2021

 ஷீர்டி சாயி சத்சரிதம் 


"இப்பொழுது நீங்கள் கவலையை விடுங்கள். இந்த உதீயை எடுத்துக்கொண்டு போய் ரணத்தின் மீது தடவுங்கள். எட்டு நாள்களுக்குள் குணம் தெரியும். இறைவனிடம் நம்பிக்கை வையுங்கள். -

"இது சாதாரணமான மசூதி அன்று; ஸ்ரீ கிருஷ்ணனின் துவாரகை. இந்த மசூதியில் காலெடுத்து வைத்தவர் உடனே க்ஷேமத்தையும் ஆரோக்கியத்தையும் திரும்பப் பெறுகிறார். நீங்களே இதை அனுபவத்தில் காண்பீர்கள்!-

"இங்கு வந்தவர் நிவாரணம் பெறவில்லை என்பது, சென்ற காலம், நிகழ் காலம் , எதிர்காலம் ஆகிய முக்காலங்களிலும் நடக்காத விஷயம். உங்களுடைய காரியம் கைகூடும் என்று அறிவீர்களாக."

பிறகு, பாபாவின் ஆணைப்படி வியாதியால் பீடிக்கப்பட்ட சிறுவன் பாபாவின் எதிரில் உட்காரவைக்கப்பட்டான். பாபா அவனுடைய காலைத் தடவி விட்டார்; அவன் மேல் தம்முடைய அருட்பார்வையைச் செலுத்தினார்.

இது தேஹ சம்பந்தமான வியாதிதான்.  சாயி தரினசம், விதியால் விளைவிக்கப்பட்ட ஆபத்துகளையும், நிவாரணமே இல்லாத மனோவியாதிகளிலுங்கூட நிர்மூலமாக்கிவிடுகிறது!

சாயியின் முகத்தைப் பார்க்கப் பார்க்க, சிறுவனின் சகல துக்கங்களும் குறைந்தன. அவருடைய திருவாய்மொழியைக் கேட்டு ரொக்கத்திலிருந்து விடுபட்டுப் பரம சுகம் அடைந்தான். 

பிறகு, நான்கு நாள்களுக்கு அவர்கள் ஷிர்டியில் தங்கினர். வியாதி படிப்படியாகக் குறைந்தது. சாயியின் மீதிருந்த விசுவாசம் படிப்படியாக வளர்ந்தது. 

பின்னர் அவர்கள் மூவரும் பாபாவின் பரிபூரணமான அனுமதியுடன் ஆனந்தம் நிறைந்த மனத்தினராகவும் திருப்தியடைந்தவர்களாவும் கிராமத்திற்குத் திரும்பினர்.

இது என்ன அற்பசொற்பமான அற்புதமா? புரையோடிப்போன ரணம் மறைந்து போயிற்று. செய்யப்பட்ட அபூர்பவமான வைத்தியம், பாபாவின் அருட்பார்வையும் உதீயுமே!

இதுவே ஒரு மஹாபுருஷரின் தரிசன மஹிமை. ஒரு மஹாபுருஷரின் ஆற்றுதல் மொழியையும் ஆசிகளையும் பெறும் பாக்கியம் யாருக்காவது கிடைத்தால், அவருடைய வியாதி நிர்மூலமாகிவிடும். 

இவ்வாறு சிலநாள்கள் கழிந்தன. உதீ ரணத்தின்மீது தடவப்பட்டுக் குடிப்பதற்கும் நீருடன் கலந்து அளிக்கப்பட்டது. ரணம் கொஞ்சங்கொஞ்சமாக ஆறி உலர்ந்துவிட்டது. சிறுவன் ஆரோக்கியமான வாழ்விற்குத் திரும்பினான். 

மாலே காங்வில் இருந்த சிறுவனின் சிற்றப்பா (டாக்டர்) இதைபற்றிக் கேள்விப்பட்டு, சாயிதரிசனம் செய்வதற்கு உற்சாகங்கொண்டார். பம்பாய் செல்லும்போது ஷிர்டிக்குச் சென்று மனவிருப்பத்தை நிறைவேற்றிக்கொள்ளலாம் என்று தமக்குளேயே தீர்மானித்தார். 

அனால், பின்னர் அவர் பம்பாய்க்குப் புறப்பட்டபோது, மாலேகாங்காவிலும் மண்மாதிலும்  சிலர் அவருடைய மனத்தில் விகற்பத்தைக் கிளறிவிட்டனர். டாக்டர் ஷீர்டி செல்லும் திட்டத்தைக் கைவிட்டுவிட்டார். 




Thursday 29 April 2021

 ஷீர்டி சாய் சத்சரிதம்

அண்ணன் மகன் சிறுவயதினன்; வேதனையைப் பொறுக்க முடியாது தவித்தான்; பிராண அவஸ்தைப்பட்டான். இதைக் கண்ட நெருங்கிய உறவினர்கள் மனமுடைந்து போயினர்.


எல்லாவிதமான உபாயங்களும் செய்யப்பட்டன; வியாதி சிறிதளவும் குறையவில்லை. ஆகவே, நெருங்கிய உறவினர்களும் நண்பர்களும் சம்பதிகளும், "தேவதைகளை ஆராதனம் செய்யலாம்" என்று கூறினர்.


தெய்வமும் தேவதைகளும் குலதேவதையும் திருப்திசெய்யப்பட்டன. இவற்றில் எதுவும் உதவிக்கு வரவில்லை. அப்பொழுதுதான் டாக்டருக்கு ஷிர்டியில் ஓர் அவ்லியா வசித்துவந்தது தெரிந்தது.


அவர் சாயி மஹராஜ்; யோகீசுவரர்; ஞானிகளில் தலைசிறந்தவர்; அவருடைய தரிசனம் ஒன்றே வியாதிகளை பரிஹாரம் செய்கிறது. இதைத்தான் டாக்டர் கேள்விப்பட்டார்.


ஆகவே சாயி தரிசனம் செய்ய விருப்பம் ஏற்பட்டது. தாயும் தந்தையும் தெய்வத்தின் பெயரில் இந்த நிவாரணத்தைச் செய்து பார்க்கலாம் என்று நிச்சயித்தனர்.


"அவர் மிகப் பெரிய அவ்லியா என்றும் அவருடைய கையால் உதீ தடவினால், தீராத கொடிய வியாதிகளும் குணமடைகின்றன என்றும் கேள்விப்படுகிறோம். இதை முயன்று பார்ப்பதால் யாருக்கு என்ன நஷ்டம்?


"வாருங்கள் போவோம்;; அவருடய பாதங்களை வந்தனம் செய்வதற்கு. இந்தக் கடைசி முயற்சியையும் செய்துபார்த்துவிடுவோம். இந்த வழியிலாவது அபாயம் விலகட்டும்! இதுவே கடைசி உபாயம்!


ஆகவே தாயும் தந்தையும் ஏற்பாடுகளை செய்துகொண்டு சாயி தரிசனம் செய்யும் ஆவலுடன் ஷிர்டிக்கு உடனே சென்றனர்.


ஷீர்டி வந்து சேர்ந்தவுடன் சாயி தரிசனம் செய்து பாதங்களை நமஸ்காரம் செய்துவிட்டு, அவருடைய சந்நிதியில் நின்றுகொண்டு பாலனின் துக்கத்தை விவரித்தனர்.


கூப்பிய கைகளுடன் கூம்பிய முகங்களுடன் சோகம் ததும்பிய குரலில் சாயியைப் பிரார்த்தனை செய்தனர், -


"இந்த பாலன் வியாதியால் பீடிக்கப்பட்டு வேதனைப்படுகிறேன். இவனுடைய துக்கத்தைப் பார்க்க எங்களுக்கு சகிக்கவில்லை; அடுத்து என்ன செய்வதென்றும் தெரியவில்லை. எங்களுக்கு கதிமோட்சம் என்னவென்று தெரியவில்லையே!


"ஓ, சமர்த்த சாயியே! புத்திரன் படும் பாட்டைப் பார்த்து துக்கப்பட்டுக் களைத்துவிட்டோம். உங்களுடைய அருட்கரத்தை இவன் தலைமேல் வைத்து, இவனுடைய வியாதியை நிவாரணம் செய்யுங்கள்.-


"உங்களுடைய மஹிமையைக் கேள்விப்பட்டு நாங்கள் இவ்வளவு தூரம் பயணம் செய்து இங்கு வந்திருக்கிறோம். அனன்னிய பாவத்துடன் உங்களை சரணடைகிறோம். எங்களுக்கு இவனுடைய உயிரை தானமாக விடுங்கள்!"


கருணாமூர்த்தியின் சாயி அவர்களுக்கு ஆறுதல் சொன்னார், "இந்த மசூதியில் அடைக்கலம் புகுந்தவர்கள் என்றுமே துர்கதி (கெடுகதி) அடையமாட்டார்கள்; யுகம் முடியும் காலம் வரை .- 


 

Thursday 22 April 2021

 ஷீர்டி சாயி சத்சரிதம்

34 . உதீயின் பிரபாவம் (பகுதி 2 )

ஓம் ஸ்ரீ விநாயகனே போற்றி! ஸ்ரீ சரஸ்வதியே போற்றி!
ஸ்ரீ குருமஹாராஜனே போற்றி! குலதேவதைக்கும் ஸ்ரீ சீதாராமச்சந்திரனுக்கும் என்னுடைய பணிவான வணக்கங்கள். பூஜ்யகுரு ஸ்ரீசாயிநாதனை பக்தியுடன் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.

உதீயின் மஹிமைபற்றி நிகழ்ச்சிகள் நடந்தது நடந்தவாறு கடந்த அத்தியாயத்தில் விவரிக்கப்பட்டன. இந்த அத்தியாயத்திலும் உதீயின் குணலக்ஷணங்களை விவரிக்கும் வகையில் உதீயின் மஹிமைபற்றி மேற்கொண்டு பேசுவோம்.

கேட்பவர்கள் சுகத்தையும் சகல செல்வங்களையும் பெறுவதற்காகக் கடந்த அத்தியாயத்தைப் போலவே இந்த அத்தியாயத்திலும் உதீயின் வைபவத்தை அமைதியான மனத்துடன் கேட்பீர்களாக!

புரையோடிப்போய் எந்த வைத்தியத்திற்கும் ஆறாமல் தீராத வியாதியாகிவிட்ட ரணம், பாபாவின் கையால் அளிக்கப்பட்ட விபூதியைப் பூசியதால் நிர்மூலமாகியது.

இவ்வாறான உதீயின் கதைகள் அநேகம். திசை காட்டுவதுபோல் ஒரு காதையை மட்டும் சொல்கிறேன். அனுபவபூர்வமான காதையானதால் கேட்பவர்கள் ரசித்து மகிழ்வார்கள்.

நாசிக் ஜில்லாவில் மாலே காங்வ் என்னும் ஊரில் மருத்துவத் துறையில் பட்டம் பெற்ற டாக்டர் ஒருவர் இருந்தார். அவர் அன்னான் மகனுக்கு எந்தச் சிகிச்சையாலும் குணப்படுத்தமுடியாத ஒரு வியாதி இருந்தது.

அவரே ஒரு பட்டம் பெற்ற, தேர்ச்சி பெற்ற டாக்டர். அவர் நண்பரும் ஒரு டாக்டர். இருவருமே திறமை வாய்ந்த, புகழ்பெற்ற அறுவை மருத்துவ நிபுணர்கள். பலவிதமான அணுகுமுறைகளைக் கையாண்டும், கடைசியில் களைத்துப்போய் செய்வதறியாது திகைத்தனர்.

வியாதி, எலும்பில் புரையோடிய ஆறாத ரணம். ஹாட்யாவ்ரணம் என்று இந்த வியாதிக்கு மராட்டி மொழியில் பெயர்; இச் சொல் திரிந்து ஹாட் யாவர்ணம் என்றாகியது. இது எந்த மருந்துக்கும் கட்டுப்படாத ஒரு விசித்திரமான, தீராத வியாதி.

மனத்திற்குத் தோன்றிய உள்நாட்டு, வெளிநாட்டு வைத்தியமுறைகளனைத்தும் கையாளப்பட்டன; எதுவும் பலனளிக்கவில்லை. அறுவை மருத்துவமும் செய்யப்பட்டது. அதுவும் டாக்டருக்குப் பெருமைத் தேடித் தரவில்லை. 


 

Thursday 15 April 2021

 ஷீர்டி சாய் சத்சரிதம்

பின்னர், பக்கீர் அளித்த விபூதியைப் பார்க்கவேண்டுமென்று ஆப்பாசாஹெப் விரும்பினார். அது ஒரு பொட்டலமாக இருந்தது; பிரேமையுடன் பொட்டலத்தைப் பிரித்தார்.


பொட்டலத்தில் விபூதியுடன் மலர்களும் அக்ஷதையும் இருந்தன. அவற்றைப் போற்றுதற்குரிய பொருள்களாக ஏற்று, ஒரு தாயத்தில் இட்டு புஜத்தில் பயபக்தியுடன் கட்டிக்கொண்டார்.


பின்னர், அவர் பாபாவை தரிசனம் செய்யச் சென்றபோது பாபாவின் ரோமம் ஒன்று கிடைத்தது. அதை அவர் பிரேமையுடன் ஏற்கெனவே அணிந்திருந்த தாயத்தினுள் சேர்த்து அணிந்துகொண்டார்.


பாபாவின் உதீயின் மஹிமைதான் என்னே! உதீ சிவனுக்கு பூஷணம் (அணிகலன்), உதீயை நம்பிக்கையுடன் பூசிக்கொள்பவரின் பாதையிலுள்ள விக்கினங்கள் உடனே விலக்கப்படுகின்றன!


காலை ஸ்நானத்தை முடித்தபின் எவர் தினமும் நெற்றியில் உதீ பூசி, சிறிது உதீயைப் பாபாவின் பாததீர்த்ததுடன் கலந்து அருந்துகிறாரோ, அவர் பரிசுத்தமடைகிறார்; புண்ணியம் சேர்க்கிறார்.


அதுமாத்திரமன்றி, உதீயின் மேலுமொரு விசேஷமான குணம் என்னவென்றால், அது பூரணமான ஆயுளை அளிக்கும். எல்லாப் பாதகங்களையும் மிச்சமின்றி முழுவதுமாக அழிக்கும். சுகமும் சந்தோஷமும் எப்பொழுதும் நிலவும்.


ஆப்பாவைச் சாக்காக வைத்து தேவாமிருதத்தையொத்த சுவையுடைய இக் காதை விருந்தை சாயி அளித்திருக்கிறார். நாமும், அழையாத விருந்தாளிகளாக இருந்த போதிலும், பந்தியில் உட்கார்ந்து திருப்தியாக விருந்துண்டோம்.


விருந்தாளியும் விருந்தளித்தவரும் எல்லாருமே ஒரே விருந்தைத்தான் உண்டோம்; இனிமையையும் சுவையையும் பொறுத்தவரை வித்தியாசம் ஏதுமில்லை. இந்த ஆத்மானந்த போஜனத்தை உண்டு திருப்தி அடையுங்கள்.


ஹேமாட் சாயி பாதங்களை சரணடைகிறேன். நாம் இதுவரை கேட்டது தற்சமயத்திற்குப் போதும். அடுத்த அத்தியாயத்தில் உதீயின் பிரபாவம் தொடரும்.


சாயிதரிசனம் செய்து உதீயைப் பூசியதால், நெடுநாள்களாக ஆறாது புரையோடிய ரணம் பூரணமாக குணமடைந்த காதையையும் நரம்புச் சிலந்தி வியாதியும் பிளேக் நோயும் நிவாரணம் ஆனா காதைகளையும் சொல்லப்போகிறேன். பூரணமான மனவொன்றிப்புடன் கேளுங்கள்.


எல்லோருக்கும் க்ஷேமம் உண்டாகட்டும்! ஞானிகளாலும் சான்றோர்களாலும் உணர்வூட்டப்பட்டு, சாயி பக்தன் ஹேமட் பந்தால் இயற்றப்பட்ட, 'ஸ்ரீ சமர்த்த சாயி சத் சரித்திரம்' என்னும் காவியத்தில், 'உதீயின் பிரபாவம்' என்னும் முப்பத்துமூன்றாவது அத்தியாயம் முற்றும்.


ஸ்ரீ சத்குரு  சாயிநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.


சுபம் உண்டாகட்டும்.