valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 6 August 2020

ஷீர்டி சாயி சத்சரிதம் 

ஞானமார்க்கி, 'என்னைத் தவிர கடவுள் யாராவது இருக்கமுடியுமா? பரிபூரணமாக ஞானம் பெற்ற நானே சச்சிதானந்தம்' எனச் சொல்கிறார். 

பக்திமார்க்கத்தில் செல்பவர், அவருடைய அன்பான பக்தி விசேஷத்தால் தம்முடைய ஞானத்தைப் பறைசாற்ற மாட்டார். அவர் தம்முடைய உடலையும் மனத்தையும் செல்வத்தையும் சுவாமியிடம் சமர்ப்பித்து விடுகிறார். அவர் தம்மையும் தம்மிடம் இருப்பதனைத்தையும் சுவாமியிடம் ஒப்படைத்துவிடுகிறார். 

'இது என்னுடைய சாதனை; இது என்னுடைய அதிகாரத்தின் காம்பீர்யம்;இது என்னுடைய புத்திசக்தியின் வைபவம்' என்று அவர் கர்வத்தால் உப்புவதில்லை.

என்ன நடக்கிறதோ, அது இறைவனின் ஆணைப்படியே நடக்கிறது. அவரே தூக்கிவிடுகிறார்; அவரே தள்ளியும் விடுகிறார். அவரே சண்டையிடுகிறார்; அல்லது மற்றவர்களைச் சண்டையிடவைக்கிறார். அவரே காரியங்களை செய்பவரும் செய்யவைப்பவரும் ஆவார். 

செயல்புரியும் அதிகாரத்தை சுவாமியின் கைகளில் ஒப்படைத்துவிட்டு, பக்தன் 'அடியார்க்கும் அடியேன்' என்றும் சுபாவத்தை சுவீகரித்துக்கொள்கிறான். பக்தன் எப்பொழுதும் சுவாமியின் ஆதீனத்தில் வாழ்கிறான். அவனுக்கென்று தனியான இருப்பு ஒன்றும் இல்லை. 

அந்த நான்கு புத்திசாலிகளுக்கு அவர்கள் எதைத் தேடினார்களோ அது இதுவரை வெளிப்படவில்லை. விளக்கமாகச் சொல்கிறேன்; கேளுங்கள்.

அவர்கள் அனைவரும் கனபாடிகள் (வேதபடிப்பில் உச்சநிலை); சடங்குச் செல்வர்கள். தங்களுடைய பாண்டியத்தைப் பற்றி உள்ளூர கர்வம் கொண்டிருந்தனர். புத்தக அறிவை பீத்திக்கொண்டிருந்தபோது இறைவனைப்பற்றி பேச்சு எழுந்தது. 

எந்த திட்டத்தால், எந்த வழியால், எந்த யுக்தியால், நம்முடைய பாண்டித்யத்தை உபயோகிக்கலாம்? இறைவனை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரமாகப் பேட்டி காணவேண்டும் என்பது ஒன்றே அவர்களின் நோக்கம். 

என் ஸ்ரீசாயியும் அந்நால்வரில் ஒருவர். பர பிரம்மமேயானவரும் வைராக்கியம் விவேகமும் உருவெடுத்து வந்தவருமான சாயி, எதற்காக இந்த விவேகமற்ற செயலை ஏற்றுக்கொண்டார்?

கதைகேட்பவர்கள் இந்த சந்தேகத்தை எழுப்பலாம். ஈதனைத்தும் உலக மக்களுக்கு போதனை செய்வதற்காகவும் அவர்களுடைய நன்மைக்காவுமே செய்யப்பட்டது. பக்தர்களை உத்தாரணம் செய்வதற்காகவே வந்த பாபாவை இச்செயல் எப்படி மாசுபடுத்த முடியும்?

தாமே ஒரு அவதாரியாக இருந்தும், வண்ஜாரிக்கு மரியாதை செலுத்தினார். 'அன்னம் பிரம்மம்' என்பதை நிர்த்தாரணம் செய்யும் வகையில் அவரளித்த உணவை உண்டார். 

அதேசமயம், சமர்ப்பிக்கப்பட்ட உணவை நிராகரித்து அவமானம் செய்தவர்கள் கேடுறுகிறார்கள் என்பதைக் காண்பித்தார். பண்டிதர்களின் கதையை மேற்கொண்டு சொல்லி, குருவின்றி எவரும் ஞானம் பெற இயலாது என்பதை விளக்கினார்.