ஷீர்டி சாயி சத்சரிதம்
"பாபா மேலும் கூறினார், 'என்னுடைய சாம்யாவுக்குப் (மாதாராவுக்குப் ) பட்டுக்கரை வேஷ்டி ஒன்று அளிப்பீராக. நீர் சுகங்கள் நிறைந்தவராக ஆவீர்.'-
"அவருடைய ஆணையை சிரமேற்கொண்டு நான் ஒரு பட்டுக்கரை வேஷ்டி கொண்டுவந்திருக்கிறேன். காகா சாஹேப் அவர்களே, இதை உங்களுடைய கைகளால் அளித்து மாதவராவை ஏற்றுகொள்ளச் செய்யுங்கள்.-
"என்னுடைய விநயமான வேண்டுகோளை ஏற்றுக்கொள்ளுங்கள். மாதவராவ் இதை அணிந்துகொண்டால் நான் ஆனந்தமடைவேன். நீங்கள் எனக்குப் பெரிய உபகாரம் செய்தவர் ஆவீர்கள். "
ஆனந்தராவின் இந்த வேண்டுகோளை மாதவராவும் கேட்டுக்கொண்டிருந்தனர். ஆயினும், காகா சாஹேப் வேஷ்டியை அளிக்க முயன்றபோது மாதவராவ் அந்த வஸ்திரத்தை ஏற்றுக்கொள்ளவில்லை.
அவர் மனத்தில் நினைத்தார், 'இது ஒரு கனவுதான். நான் ஒப்புக்கொள்வதற்குமுன், எனக்கு ஒரு சூசகம் கிடைக்கவேண்டும். எனக்கு ஒரு காட்சி கிடைக்காமல் நான் அந்த வேஷ்டியை ஏற்றுக்கொள்ளக்கூடாது. '
காகா சாஹேப் அப்பொழுது சொன்னார், "நாம் இப்பொழுது திருவுளச்சீட்டுப் போட்டுப்பார்ப்போம். வேஷ்டியை ஏற்றுக்கொள்ளுதல் உசிதமா (மேன்மையா) இல்லையா என்று தெரிந்துகொள்வோம். பாபாவின் திருவாய்மொழியை இந்த அனுபவத்தால் உணர்வோம்.-
"எந்தச் சீட்டை பாபா நமக்கு அளிக்கிறாரோ அதையே அவருடைய ஆணையாக ஏற்றுக்கொள்வோம் ." ஆகவே, அவர்கள் பாபாவின் ஆணையின்படி நடப்பது என்று தீர்மானம் செய்துகொண்டு பாபாவின் பாதங்களில் திருவுளச்சீட்டு போட்டனர்.
எந்த விஷயமாக இருப்பினும் முதலில் பாபாவின் எண்ணத்தை அறிந்த பிறகே செயல்படுவது என்பது காகா சாஹேபின் பழக்கமாக இருந்தது. தம்முடைய பாரமனைத்தையும் பாபாவின்மீது போட்டுவிட்ட பெருமகன் அவர்.
பாபா ஜீவிதமாக இருந்தபோதும் இதே பழக்கந்தான். பாபா நிர்யாணம் அடைந்த பிறகு, திருவுளச்சீட்டு போட்டு அவருடைய ஆக்ஞயை அறிந்த பின்னரே அதன்படி உறுதியுடன் செயலில் இறங்குவார்.
செய்யவேண்டிய காரியம் சிறியதானாலும் பெரியதானாலும், திருவுளச்சீட்டு போட்டுப் பார்க்காமல் எக் காரியத்தையும் தொடங்கமாட்டார்; தம் உயிரே போவதானாலும் சரி.
தேகமே தம்முடையதில்லை என்று ஒருவர் நிர்ணயித்து அதை சாயி பாதங்களில் கிடத்தியபிறகு, அதனுடைய சலனவளனங்களின்மீது அவருக்கு ஏது அதிகாரம்?
இந்த விரதத்தை வரித்ததால், லக்ஷக்கணக்கான ரூபாய் வருமானத்தை வேண்டாவென்று ஆர் ஒதுக்கியத்தைப்பற்றி நினைத்துப்பாருங்கள்! மரணப்பரியந்தம் அவர் இந்த விரதத்தை திடமாகக் கடைப்பிடித்தார்.
"உம்முடைய நம்பிக்கையும் விசுவாசமும் பலன் அளிக்கும். நான் உமக்கு ஓர் ஆகாயவிமானம் அனுப்பி, அதில் உம்மை அரவணைத்துக்கொண்டு செல்வேன்! நீர் நிச்சிந்தையான (கவலையற்ற) மனத்துடன் இரும்".