valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 26 December 2019

ஷீர்டி சாயி சத்சரிதம்

"இறைவன் சந்தோஷமடைந்து, உம்முடைய துக்கங்கள் அனைத்திற்கும் ஒரு முடிவுகட்டிவிடுவான். மாயையும் மோகமும் விலகும். அத்யந்தமான சுகம் கிடைக்கும்.

"தினமும் காலைக்கடன்களை முடித்துவிட்டு, ஹரிபாதங்களில் மனத்தை ஈடுபடுத்தி இந்த விரதத்தை (மூன்று சப்தாஹம்) முடித்தால் விடுதலை கிடைக்கும்".

பாபாவும் மேற்சொன்ன வழிமுறையையே கடைபிடித்தார் அல்லரோ! தம்முடைய தேகத்திற்கு முடிவு வரப்போகிறதென்று தெரிந்தவுடன் 'ராமவிஜயம்' படிக்கச் சொல்லிக் கேட்டார். 'ராமவிஜயம்' படிப்பதாலும் கேட்பதாலும் மிருத்யுஞயர் (காலனை வென்றவர் - சிவன்) சந்தோஷமடைகிறார்.

அடுத்த நாள் காலை நேரத்தில், சந்நியாசி தம்மை சுத்தம் செய்துகொண்டு பாபாவுக்குப் புஷ்பாஞ்சலி செய்துவிட்டு பாபாவின் பாததூளியை நெற்றியில் இட்டுக்கொண்டார்.

பாகவதத்தை கையில் இடுக்கிக்கொண்டு வாசிப்பதற்குத் தேவையான தனிமையை அளித்த, அமைதியும் சாந்தமும் நிறைந்த லெண்டித் தோட்டத்திற்குச் சென்றார்.

யோகாசனத்தில் அமர்ந்து பாராயணம் செய்ய ஆரம்பித்தார். சந்நியாசி முழுநேரமாகப் படித்து இரண்டு சப்தாஹங்களை வெற்றிகரமாக முடித்தார்.

மூன்றாவது கற்றை ஆரம்பித்த சமயத்தில் திடீரென்று நிலைகுலைந்தார்; ஜீவசக்தி வடிந்துபோவது போல் உணர்ந்தார். பாராயணத்தை அந்தக் கட்டத்திலேயே நிறுத்திவிட்டார்.

வாடாவிற்கு திரும்பிவந்து இரண்டு நாள்கள் சிரமப்பட்டார். மூன்றாவது நாள் பொழுது விடியும் சமயத்தில் சந்நியாசி கண்மூடினார்.

பக்கீர் பாபாவின் மடியில் தலையைச் சாய்த்தவர் சாய்த்தவர்தான். தேகத்திலிருந்து விடுதலை பெற்றுவிட்டார்.

சந்நியாசி மரணமடைந்த செய்தியைக் கேட்ட பாபா, ஒரு நாள் வரை உடலைப் பாதுகாக்கும்படி ஆணையிட்டார்.

பாபா சொன்னார், "உடலை உடனே புதைக்க வேண்டா." பாபா இவ்வாறு சொன்னதால், சந்நியாசி மறுபடியும் உயிர்பெற்றுவிடுவார் என்ற நம்பிக்கையில் மக்கள் உற்சாகத்துடன் உடலைப் பாதுகாத்தனர்.

ஒருமுறை உயிர் பிரிந்துவிட்டால் மறுபடியும் வந்து புகுந்துகொள்ளுமா என்ன? ஆயினும் பாபாவில் சொல் பிரமாணமன்றோ!  ஆகவே மக்கள் பிணத்தைப் பாதுகாத்தனர்.

அந்த ஆணைக்கும் பிறகு பலன் கிடைத்தது!  சொந்தம் கொண்டாட யாருமில்லாத பிணம் பாதுகாக்கப்பட்டது. போலீஸ்காரர்களுக்கு சந்தேகம் எதுவும் ஏற்படக் காரணம் இல்லாமற்போயிற்று. இறந்த பின் உடலில் ஜீவன் எப்படி இருக்கும்?

பாபாவுக்கு இறந்தவர்களை உயிர்ப்பிக்கத் தெரியாதா என்ன?(அவருக்கு  அந்த சக்தி இருந்தது.) ஆயினும், அனாதை பிணம் முறையான விசாரணையின்றி பூமியில் புதைக்கப்படக்கூடாது என்பதுதான் அவருடைய இலக்கு! 


Thursday 19 December 2019

ஷீர்டி சாய் சத்சரிதம்

"போய் அமைதியாக உட்காரும்; சோகம் வேண்டா, போவதா, வேண்டாவா என்று சில நாள்கள் கழித்து முடிவெடுப்போம். அதுவரை தைரியமாகவும் பொறுமையாகவும் இரும்.-

"வாடாவில் பல திருடர் இருக்கிறார்கள். கதவுகளை மூடிக்கொண்டு உஷாராக இரும். ஏனெனில் திருடர்கள் உம்மைக் கடுமையாகத் தாக்கிவிட்டு எல்லாப் பொருள்களையும் எடுத்துக்கொண்டு போய்விடுவார்கள்.-

"செல்வம் என்றுமே சாசுவதுமில்லை; சரீரமோ ஒரு நீர்க்குமிழி. மரணம் எப்பொழுதுமே பக்கத்தில் உட்கார்ந்திருக்கிறது என்பதை அறிந்து தருமவழியில் நடப்பீராக.-

"உடல், மனைவி, மக்கள் ஆகிவரின் சம்பந்தமாக 'நான்' - 'எனது' என்ற உணர்வுகளும் அவற்றிலிருந்து விளையும் மூன்று வகையான தாபங்களும் இவ்வுலகின் அனர்த்தங்கள் (கேடுகள்).-

"இரண்டாவது வகையான அனர்த்தம் சொர்க்கத்தை சார்ந்தது. மரணத்திற்குப்பின் மக்கள் அடைய விரும்பும் சொர்க்கமே மோக்ஷத்திற்குத் தடையாகிவிடுகிறது. தலைகீழாக கீழே விழுவதற்கும் பொதுவான காரணமாகிறது. -

"சொர்க்கத்தில் புண்ணியம் சம்பாதிக்கமுடியாது. பயமில்லாத நிலையையும் அடைய முடியாது. ஏனெனில், சேர்த்து வைத்த புண்ணியம் செலவழிந்த பிறகு கீழே விழுந்துவிடுவோமோ என்ற பயம், சந்தேகத்துக்கு இடமில்லாமல் அங்கும் நிலவுகிறது.-

"இவ்வகையாக, இவ்வுலக வாழ்வு, மேலுலகவாழ்வு இரண்டுமே அனர்த்தங்கள் நிறைந்தவை. ஆகவே, இரண்டையுமே முழுமையாக துறப்பதே ஆனந்தப் பெருநிலையின் அஸ்திவாரம்.-

"உலக வாழ்வை வெறுத்தொதுக்கி, ஹரியின் பாதங்களை கெட்டியாகப் பிடித்துக் கொள்பவர்கள். பந்தங்களின் பிடியிலிருந்து விடுபடுகின்றனர். அஞ்ஞானமும் மாயையும் அவர்களைவிட்டு அகன்றுவிடுகின்றன. -

"ஹரிபஜனையும் நாமஸ்மரணமும் அளிக்கும் உந்துவிசை, பாவம், தாபம், துயரம் ஆகியவற்றை விரட்டிவிடும். நிறைந்த அன்புடன் தியானம் செய்தால், இறைவன் நம்மை சங்கடங்களில் இருந்து விடுவிப்பான். -

"நீர் இவ்விடம் வந்துசேர்ந்தது மிக உயர்ந்த பூர்வபுண்ணிய பலத்தாலேயே. இப்பொழுது என்னுடைய அறிவுரையைக் கேட்டு இந்த ஜன்மத்தைப் பயனுள்ளதாகச் செய்துகொள்வீராக!-

"நீர் இவ்விடம் வந்துசேர்ந்தது மிக உயர்ந்த பூர்வபுண்ணிய பலத்தாலேயே. இப்பொழுது என்னுடைய அறிவுரையை கேட்டு இந்த ஜன்மத்தைப் பயனுள்ளதாக செய்துகொள்வீராக!

"நாளையில் இருந்து பாகவதத்தை (ஸ்ரீகிருஷ்ணரின் கதையைப்) பரிசீலனை செய்யும். மனத்தையும் வாக்கையும் செயலையும் ஒருமுகப்படுத்தி, மூன்று சப்தாஹங்கள் பாராயணம் செய்யும்.-

"மற்ற விஷயங்களை ஒதுக்கிவைத்துவிட்டு பாகவதத்தை காதால் கேளும்; அல்லது நீரே பாராயணம் செய்யும். முழுநம்பிக்கையுடன் படித்து மறுபடியும் மறுபடியும் படித்ததை ஆழமாகச் சிந்தனை செய்யும்.-
 
 

Friday 13 December 2019

ஷீர்டி சாயி சத்சரிதம்

திடீரென்று பாபா கோபாவேசம் கொண்டார். குழுமியிருந்த மக்களை பார்த்து உறக்கச் சொன்னார், "இந்த சந்நியாசியை விரட்டியடியுங்கள். இவருடைய சங்காத்தமே  நமக்கு வேண்டாம்".

சந்நியாசியோ புதியவர்; பாபாவின் சுபாவம் தெரியாதவர். மனத்தில் அடி வாங்கியபோதிலும் பக்தர்கள் செய்த சேவையைப் பார்த்துக்கொண்டு அங்கேயே அமர்ந்திருந்தார்.

அது காலை தர்பார் நேரம். மக்கட்கூட்டத்தில் மசூதி நிரம்பி வழிந்தது. பக்தர்கள் கொண்டுவந்த பூஜை திரவியங்களும் அவர்கள் செய்த உபச்சாரங்களும் சந்நியாசிக்குப் பெருவியப்பை அளித்தன.

சில பக்தர்கள் பாபாவின் பாதங்களைக் கழுவிக் கட்டைவிரலிலிருந்து புனித நீரை எடுத்துக்கொண்டனர். சிலர் அப் புனித நீரைத் தேக்கரண்டியினால் அருந்தினர். சிலர் அதைக் கண்களில் பூசிக்கொண்டனர். அனைவரும் சுத்தமான பக்தியுடன் சேவை செய்தனர்.

சிலர் அவருக்குச் சந்தானம் பூசினார். வேறு சிலர் அத்தர் போன்ற வாசனை திரவியங்களை பூசினர். அனைவருமே, பிராமணர் , பிற்படுத்தப்பட்டோர், இதர ஜாதியினர் என்னும் பாகுபாடுகளையும் கட்டுப்பாடுகளையும் அறவே துறந்து சேவை செய்தனர்.

பாபா கோபம் காட்டியிருந்தாலும் சந்நியாசியின் மனத்தில் அநுராகம் (காதல்) பொங்கியது! அவர் இடத்தை விட்டு எழுந்திருக்கவோ நகரவோ இல்லை!

அவர் ஷீர்டி வந்துசேர்ந்த இரண்டு நாள்களுக்குள்ளாகவே கிராமத்தில் அவருக்குத் தாயார் தீவிரமாக நோய்வாய்பட்டிருந்ததாக கடிதம் வந்தது. சந்நியாசி சோகமுற்றார்.

தம்முடைய கிராமத்திற்கு திரும்பிச் சென்று தாயாரைக் காணவேண்டுமென்று அவர் விரும்பினார். ஆனால், பாபாவின் அனுமதியின்றி போகமுடியாது.

சந்நியாசி, கையில் கடிதத்துடன் மசூதிக்குச் சென்று பாபாவிடம் தாயாருடைய நிலைமையைத் தெரிவித்து வீடு திரும்புவதற்கு அனுமதி வேண்டினார்.

"சமர்த்த சாயி மஹாராஜரே! என் மனம் தாயாரைக் காணாத துடிக்கிறது. இந்த யாத்திரீகனின் மீது கருணை காட்டுங்கள். இன்முகத்துடன் எனக்கு அனுமதி தாருங்கள்".

அவர் ஓடி வந்து பாபாவின் பாதங்களை பிடித்துக்கொண்டு, "எனக்கு அனுமதியளித்துக் கிருபை செய்வீர்களா? என் தாயார் பிராணனைத் தொண்டையில் வைத்துக்கொண்டு தரையில் படுத்துக்கிடக்கிறார் போலும்.-

"தாயார் எனக்காக காத்திருக்கிறார் என்றே தோன்றுகிறது. நான் போய்ப் பார்த்தால் அவருடைய வேதனை குறையும்; முடிவும் அமைதியாக நேரும்."

சந்நியாசியின் ஆயுட்காலமே முடியப்போகிறது என்பதை அந்தர் ஞானத்தால் அறிந்த சமர்த்த சாயி அவரிடம் என்ன சொன்னார் என்பதைக் கேளுங்கள்.

"தாயாரிடம் இவ்வளவு பாசம் வைத்திருக்கும் நீர் ஏன் சந்நியாசம் ஏற்றீர்? உலகியல் பந்தங்களும் காவி உடைக்கும் சரிப்பட்டு வராதே. காவி உடைக்குக் களங்கம் கற்பித்துவிட்டீரே!-


Friday 6 December 2019

ஷீர்டி சாயி சத்சரிதம்

இக் காரணம் பற்றியே பக்தர்கள் நாமஸ்மரண அப்பியாசம் செய்யும்படி ஊக்குவிக்கப் படுகின்றனர். கடைசி நேரம் வரும்போது அரண்டுபோகாமல் பகவானின் நாமத்தைப் பற்றிக்கொள்ளலாம்.

வாழ்நாள் முழுவதும் விழிப்புடன் இருந்துவிட்டுக் கடைசி நேரத்தில் ஒரு மனிதன் தூங்கிவிட்டானானால், எந்த முக்கியமான காரணத்திற்காக சத்சங்கம் வளர்த்தானோ, அந்த சத்சங்கம் உபயோகமின்றி போகிறது.

ஆகவே, கள்ளங்கபடமற்ற, எளிமையான பக்தர்கள் தங்களுடைய வாழ்வை ஞானியரின் கைகளில் ஒப்படைத்துவிடுகிறார்கள். நமக்கு மறுபிறவி உண்டா இல்லையா என்பது அவர்களுக்குத் தெரியும். அந்திமகாலத்தில் ஞானியரே நமக்குத் துணை.

இது சம்பந்தமாக, சாயியின் சன்னிதியிலேயே நடந்த ஒரு அருமையான நிகழ்ச்சியையும் கேளுங்கள். பக்தர்களின்பால் சாயி எவ்வளவு வாத்சல்யம் (தாயன்பு) காட்டினார் என்பதைக் காண்பீர்கள்.

மதராஸ் எங்கே, ஷீர்டி எங்கே, இமயமலையில் இருக்கும் மானஸ சரோவர் எங்கே! ஆயினும் பக்தரின் ஆயுள் முடிந்துவிட்டதென்று தெரிந்தால், பாபா அவரை எப்படியாவது இழுத்துத் தம்முடைய பாதங்களுக்குக் கொண்டுவருவார்.

ஒரு சமயம், விஜயானந்த் என்ற பெயர்கொண்ட சந்நியாசி மதராஸிலிருந்து மானச சரோவருக்கு மிகுந்த உற்சாகத்துடன் புனிதப் பயணம் கிளம்பினார்.

ஒரு ஜப்பானிய யாத்திரிகர் வைத்திருந்த வரைபடத்தை பார்த்துவிட்டு, மானஸ சரோவர் ஏரியை தரிசனம் செய்தே தீருவது என்று உறுதி பூண்டார்.

வழியில் பாபாவின் பிரபாவத்தை கேள்விப்பட்டு ஷிரிடிக்கு வந்தார். பாபாவை தரிசனம் செய்யவேண்டுமென்ற பேராவல் கொண்டு அவர் வாழ்ந்துகொண்டிருந்த இடத்தைத் தேடிக்கொண்டு வந்தார்.

சாயிமஹாராஜ் ஒரு பெரிய ஞானி, உலகளாவிய கீர்த்தி பெற்றவர், என்று கேள்விப்பட்டு அவரை தரிசனம் செய்வதற்காகத் தமது புனிதப் பயணத்தை ஷிரிடியில் நிறுத்தினார்.

அந்த சமயத்தில், ஹரித்துவாரைச் சேர்ந்த சோமதேவ்ஜி சுவாமி ஷிர்டியில் இருந்தார். பக்தர்கள் கோஷ்டியில் அவர்கள் இருவரின் சந்திப்பு இயல்பாக நேர்ந்தது.

மதராஸ் சந்நியாசி அவரைக் கேட்டார், "மானஸ சரோவர் எவ்வளவு தூரத்தில் இருக்கிறது?" சுவாமி பதில் கூறினார், "கங்கை உற்பத்தியாகும் கங்கோத்திரியிலிருந்து 500 மைல் தூரத்தில் உயரே இருக்கிறது. -

"அங்கே பனிமழை அதிகம். நூறு மைலுக்கு ஒரு பாஷையாக மாறுகிறது. பூட்டானிய மக்களின் சந்தேகங்கள் வேறு. வெளிதேசத்து யாத்திரிகர்கள் பல தொல்லைகளுக்கு உள்ளாகின்றனர்."

சுவாமியிடமிருந்து இந்த விவரங்களை கேட்ட சன்னியாசி மனமுடைந்து போனார். அவருடைய உறுதி கலைந்து கவலையில் மூழ்கினார்.

அவர் சாயி பாபாவை தரிசனம் செய்தார். பாபாவுக்கு நமஸ்காரம் செய்தார். மனம் அமைதியடைந்து மகிழ்ச்சியுற்றார். ஆசனம் போட்டு அருகில் அமர்ந்தார்.
 
 

Friday 29 November 2019


                                                                 ஷீர்டி சாயி சத்சரிதம்

                                                           31 . சாயீ சந்நிதியில் முக்தி

ஓம் ஸ்ரீ விநாயகனே போற்றி! ஸ்ரீ சரஸ்வதியே போற்றி!
ஸ்ரீ குருமஹாராஜனே போற்றி! குலதேவதைக்கும் ஸ்ரீ சீதாராமச்சந்திரனுக்கும் என்னுடைய பணிவான வணக்கங்கள். பூஜ்யகுரு ஸ்ரீசாயிநாதனை பக்தியுடன் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.

கடந்த அத்தியாயத்தில் சப்தசிருங்கி தேவி உபாசகரின் கதையையும் மாதவராவின் நேர்த்திக்கடன் சாயீ எவ்வாறு நிறைவேற்றிவைத்தார் என்ற விவரத்தையும் சொன்னேன்.

குசால் சேட்டுக்கும் ராம்லாலுக்கும் கனவில் தரிசனம் அளித்ததையும் ராம்லாலைத் தம்முடைய மஹாசமாதி நாள்வரை தம்முடன் வைத்துக்கொண்ட விவரத்தையும் சொன்னேன்.

இந்த அத்தியாயம் முன்னதைவிட அபூர்வமானது. கேட்பவர்கள் பயபக்தியுடனும் கவனமாகவும் கேளுங்கள். மானஸஸரோவர் ஏரிக்கு யாத்திரையாக கிளம்பிவந்த சந்நியாசி ஒருவர் திடீரென்று ஷிர்டியில் முக்தியடைந்தார்.

பாலாராம் மாங்கர், தாத்யா சாஹேப் நூல்கர், மேகா, இவர்களுடைய (முக்தி) விருப்பத்தையும் சாயி நிறைவேற்றிவைத்தார். இவர்களாவது மனிதர்கள்; பயங்கர மிருகமான ஒரு புலிக்கும் பாபா தமது சந்நிதியிலேயே முக்தி அளித்தது அற்புதமான செயல் அன்றோ!

இவையெல்லாம் விரிவான காதைகள். சொல்லப்புகுந்தால் காவியம் மிகப் பெரியதாகிவிடும். ஆகவே, சுருக்கமாக சாரத்தை மட்டும் சொல்கிறேன். பக்தர்களுக்கு நன்மையளிக்கும்.

மரணத்தருவாயில் உதிக்கும் எண்ணங்கள் என்னவோ, அவற்றுக்கேற்றவாறே, பிராணிகளின் அடுத்த ஜென்மம் அமைகிறது. பயத்தால் பூச்சிகள் வண்டுகளாகின்றன. மான்குட்டியின்மீது ஏற்பட்ட பிரியத்தால் ஜடபரதர் அடுத்த பிறவியில் மானாகப் பிறந்தார்!

உயிர் பிரியும் சமயத்தில் மனக்கண்ணால் எந்த உருவத்தைக் காண்கிறோமோ அதே உருவத்தில் அடுத்த பிறவி அமைகிறது. இறைவனுடைய மலரடிகளை நினைப்பவர்க்கு அடுத்த பிறவியே இல்லாமற்போகிறது.

Friday 22 November 2019

ஷீர்டி சாயி சத்சரிதம்

கோபம் எவரைத் தொட்டதில்லையோ, எவரிடத்தில் துவேஷம் புக முடியாதோ, எவர் வயிறு நிரப்புவதைப்பற்றி கவலைப்படுவதில்லையோ அவரையே உண்மையான சாது என்றறிக.

'எல்லாரிடத்தும் சுயநலமில்லாத அன்பு' என்பதே ஒரு சாதுவின் உன்னதமான வாழ்க்கை லட்சியம். தரும விஷயங்களை தவிர வேறெதிலும் அவர் தம்முடைய வார்த்தைகளை வீண் செய்வதில்லை.

சாராம்சமான ரகசியம் இங்கென்னவென்றால், என்னுடைய கையைப் பிடித்துக்கொண்டு தம்முடைய சரித்திரத்தைத் தாமே எழுதிக்கொள்வதன் மூலம், பக்தர்கள் தம்மை ஞாபகப்படுத்திக்கொண்டு அந்நினைவினிலேயே மூழ்க வேண்டுமென்று சாயி விரும்புகிறார்.

அதனால்தான் பக்தர்கள் சாயி சரித்திரத்தை சிரத்தையுடனும் பக்தியுடனும் கேட்கவேண்டும் என்று ஹேமாட், கதை கேட்பவர்களை அடிக்கடி வேண்டுகிறேன்.

கேட்பவர்களின் மனத்தில்சாந்தி நிலவும். விசனத்தில் மூழ்கியவர்கள் விசனத்தில் இருந்து விடுபடுவார்கள். சாயி பாதங்களில் பக்தி வளர்த்துப் பிறவிப் பிணியிலிருந்து விடுதலை பெறுவார்கள்.

மானஸரோவருக்கு யாத்திரையாக கிளம்பி, போகும் வழியில் சாயி பாதங்களில் முக்தியடைந்த சந்நியாசி விஜயானந்தரின் கதை அடுத்த அத்தியாயத்தில் மலரும்.

பக்தர் பாலாராம் மாங்கரும் பாபாவின் முன்னிலையிலேயே முக்தி பெற்றார். அம்மாதிரியாகவே, நூல்கர், மேகா ஆகியவர்களுடைய வேண்டுதலையும் சாயிநாதர் பூர்த்தி செய்துவைத்தார்.

குரூரமான பிராணியான ஒரு புலிக்கும் பாபாவின் பாதங்களில் அடைக்கலம் அளிக்கப்பட்டது. இவ்வாறாக, சாயியின் செயல்கள் ஆழங்கான முடியாதவை, கேட்பது திருவிழாவைப்போன்று மகிழ்ச்சிக்கும் கொண்டாட்டத்திற்கும் உரிய அரிய நல்வாய்ப்பு.

எல்லாருக்கும் க்ஷேமம் உண்டாகட்டும்! ஞானிகளாலும் சான்றோர்களாலும் உணர்வூட்டப்பட்டு, சாயி பக்தன் ஹேமாட் பந்தால் இயற்றப்பட்ட, 'ஸ்ரீ சமர்த்த சாயி சத் சரித்திரம்' என்னும் காவியத்தில், 'நேர்த்திக்கடனும் மற்ற கதைகளும்' என்னும் முப்பதாவது அத்தியாயம் முற்றும்.

                         ஸ்ரீ சத்குரு சாயிநாதர்க்கு அர்ப்பணம் ஆகட்டும்.

                                               சுபம் உண்டாகட்டும். 

Friday 15 November 2019

ஷீர்டி சாயி சத்சரிதம்

"நீங்கள் இப்பொழுது வருவதாக இருந்தால், குதிரைவண்டி வெளியே தயாராக நிற்கிறது." குசால்பாவு ஆனந்தம் நிரம்பியவராக தீக்ஷிதருடன் ஷிர்டிக்கு வந்தார்.

தாத்பரியம் என்னவென்றால், குசால்பாவு வந்ததால் பாபாவின் ஆவல் நிறைவேறியது. பாபாவின் லீலையைக் கண்டு குசால்பாவுவும் ஆனந்தக்கண்ணீர் வடித்தார்.

பம்பாயில் வசித்துவந்த, ராம்லால் என்ற பெயர்கொண்ட பஞ்சாபி பிராமணர் ஒருவருக்கு கனவில் பாபாவின் தரிசனம் கிடைத்தது.

ஆகாயம், காற்று, சூரியன், வருணன் போன்ற இயற்கை தெய்வங்களின் அனுக்கிரஹ சக்தியால் நமக்கு உள்ளுலக, வெளியுலக ஞானம் கிடைக்கிறது. இது விழித்திருக்கும் நிலை.

உடலுறுப்புகள் அனைத்தும் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும்போது (தூக்கத்தில்), விழிப்பு நிலையில் செய்த செய்கைகளால் மனத்தில் ஏற்பட்ட சுவடுகள் உயிர்பெற்று, ஏற்றுக்கொள்வபவரையும் ஏற்றுக்கொள்ளத்தக்க விஷயங்களையும் பொறுத்து, மறுபடியும் மனத்திரையில் ஓடுகின்றன. இதுவே கனவுகளின் குணாதிசயம்.

ராம்லாலின் கனவோ விசித்திரமானது! அவர் எப்பொழுதுமே பாபாவை தரிசனம் செய்ததில்லை. பாபாவின் உருவத்தைப்பற்றியோ குணங்களைப்பற்றியோ எதுவேமே தெரியாது. ஆனால், பாபா அவரிடம் சொன்னார், "என்னைப் பார்க்க வாரும்".

கனவில் தெரிந்த உருவத்தை வைத்துக் கணித்தால், அவர் ஒரு ஞானியாகத் தென்பட்டார். ஆனால், அவர் எங்கு வசித்தார் என்பது ராம்லாலுக்கு தெரியவில்லை. விழித்துக்கொண்ட ராம்லால், ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கினார்.

அவர் போக விரும்பினார். ஆனால், இடமோ விலாசமோ தெரியவில்லை. தரிசனத்திற்கு எவர் அழைத்தாரோ, அவருக்குத்தான் திட்டம் என்னெவென்று தெரியும்!

அன்றைய தினமே பிற்பகல் வேளையில் ஒரு தெரு வழியாக நடந்துபோனபோது ஒரு கடையில் இருந்த படத்தை பார்த்துத் திடுக்கிட்டார்.

கனவில் பார்த்த உருவம் இதுவே என்று ராம்லால் நினைத்தார். உடனே, கடைக்காரரிடம் விசாரிக்க ஆரம்பித்தார்.

நிழற்படத்தில் உருவத்தின் லட்சணங்களை கவனமாகப் பார்த்தபின், "இவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்?" என்று கடைக்காரரை விசாரித்தார். "இது ஷிர்டியில் இருக்கும் சாயி" என்று அறிந்துகொண்ட பிறகே நிம்மதியடைந்தார்.

மற்ற விவரங்களை பிறகு தெரிந்துகொண்டார். பின்னர் ராம்லால் ஷிர்டிக்குச் சென்றார். பாபா மஹாசமாதி அடையும்வரை அவருடன் இருந்தார்.

பக்தர்களின் விருப்பங்களை பூர்த்திசெய்வதும், அவர்களை தரிசனத்திற்கு  அழைத்து அவர்களுடைய உலகியல் தேவைகளையும் ஆன்மீகத் தேடல்களையும் நிறைவேற்றிவைப்பதுமே பாபாவின் மனோரதமாக இருந்தது.

அவர், விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறிய நிலையில், விருப்பம் என்று எதுவும் இல்லாதவர்; சுயநலமற்றவர்; அஹங்காரமில்லாதவர்; பற்றற்றவர்; பக்தர்களின் ஆசைகளை நிறைவேற்றுவதற்காகவே அவதாரம் செய்தவர்.
 

Friday 8 November 2019

ஷீர்டி சாயி சத்சரிதம்

"சஞ்சலங்களால் அலைபாய்ந்து கொண்டிருந்த என்னுடைய மனம், தரிசனத்தால் அமைதியுற்றது. இவ்வுலகுக்கப்பாற்பட்ட சந்தோஷத்தை நான் அடைந்திருக்கிறேன். இது தரிசன மகிமையே அன்றி வேறெதுவும் இல்லை!"

சாயி பாதங்களில் பார்வை குத்திட்டது; வார்த்தைகள் வெளிவர மறுத்தன. பாபாவின் லீலையை எண்ணியெண்ணி ஆனந்தம் பொங்கி வழிந்தது.

உபாத்தியாயர் (காகாஜி) பாவத்துடன் சாயியின் பாதங்களில் சரணடைந்தபோது அகத்தில் ஆனந்தம் பொங்கியது. பழைய சஞ்சலங்களை அறவே மறந்துவிட்டார்.

இவ்விதமாகக் காகாஜி பன்னிரண்டு நாள்கள் ஷிர்டியில் தாங்கினார். மனம் சாந்தியடைந்து நிலைபெற்று, சப்தசிருங்கிக்குத் திரும்பினார்.

விடியற்காலையில் (சூரிய உதயத்திற்கு 48 நிமிடங்களுக்கு முன்) தோன்றும் கனவுகள் உண்மையாகிப் பலனளிக்கும். மற்ற நேரங்களில் தோன்றும் கனவுகளால் பலனேதும் இல்லை.

இதுவே மக்களின் பொதுவான நம்பிக்கை. ஆயினும், ஷீர்டி சம்பந்தப்பட்ட கனவுகள் எங்கே தோன்றினாலும் எப்பொழுது தோன்றினாலும் சித்தியாகும். இதுவே பக்தர்களின் இடையூறற்ற அனுபவம்.

இது சம்பந்தமாக இப்பொழுது ஒரு சிறுகதை சொல்கிறேன். செவிமடுப்பவர்கள் மனமகிழ்ச்சியடைந்து மேலும் கேட்க ஆவலுறுவார்கள்.

ஒருநாள் பிற்பகல் நேரத்தில் பாபா தீக்ஷிதரிடம் சொன்னார், "குதிரை வண்டியில் ராஹதாவுக்குச் சென்று குசால்பாவுவை அழைத்துக்கொண்டு வாரும்.-

"அவரைச் சந்திக்க மனம் ஏங்குகிறது; பார்த்துப் பல நாள்கள் ஆகிவிட்டன. 'பாபா உங்களைச் சந்திக்க விரும்புகிறார்; ஆகவே, வரச் சொல்கிறார்' என்று அவரிடம் சொல்லும்".

பாபாவின் ஆணைக்கு வந்தனம் செலுத்திவிட்டு, தீக்ஷிதர் ஒரு குதிரைவண்டியில் போனார். குசால்பாபுவை சந்தித்து, உடனே தாம் வந்த காரணத்தை தெரிவித்தார்.

பாபாவின் செய்தியைக்கேட்ட குசால்பாபு ஆச்சரியமடைந்தார். அவர் சொன்னார், "நான் இப்பொழுதுதான் தூக்கத்திலிருந்து எழுந்தேன். கனவில் பாபா எனக்கு இதே ஆணையைத்தான் இட்டார். -

"மதிய உணவு முடிந்தபின் இப்பொழுதுதான் சிறிது நேரம் ஓய்வாக படுத்தேன். கண்களை மூடியவுடன் பாபா இதைத்தான் என் கனவில் சொன்னார். -

"அவர் என்னிடம் சொன்னார், 'உடனே கிளம்பி ஷிர்டிக்கு வாரும்' என்று. எனக்கும் அவரை சந்திக்கவேண்டுமென்ற தாபம் இருந்தது. என்னுடைய குதிரை இங்கு இல்லாமல் நான் என்ன செய்வது? ஆகவே, என் மகனிடம் இச் செய்தியைச் சொல்லி அனுப்பினேன். -

"ஆனால், அவன் கிராம எல்லையைத் தாண்டுவதற்கு முன்னரே உங்களுடைய குதிரைவண்டி வந்துவிட்டது". தீக்ஷிதர் கேலியாகச் சொன்னார், "ஆமாம், அதற்காகத்தான் பாபா எனக்கு ஆணையிட்டு இங்கு அனுப்பினார்!-
 
 

Friday 1 November 2019

ஷீர்டி சாய் சத்சரிதம்

பாபாவை தரிசனம் செய்துவிட்டு, அவரிடம் அனுமதியையும் ஆசீர்வாதங்களையும் உதீ பிரசாதத்தையும் வாங்கிக்கொண்டு ஊருக்குக் கிளம்பினார்.

சப்த சிருங்கிக்கு வந்து சேர்ந்து, குல உபாத்தியாயருக்காகத் தேடினார். தெய்வாதீனமாகக் காகாஜியின் வீட்டை அனாயாசமாகச் சென்றடைந்தார்.

காகாஜியோ இங்கு பாபா தரிசனத்திற்காகத் துடித்துக்கொண்டிருக்கிறார். அதே சமயத்தில் மாதவராவும் அங்கு வந்துசேர்கிறார். இது சாமானியமாக நடக்கக்கூடிய சம்பவமா என்ன?

காகாஜி அவரை யார் என்றும் எங்கிருந்து வந்திருக்கிறாரென்றும் விசாரித்தார். மாதவராவ் ஷிர்டியிலிருந்து வந்திருக்கிறார் என்று தெரிந்தவுடன் காகாஜி அளவிலாத மகிழ்ச்சி அடைந்தார். போற்றத்தக்க இந்த சம்பவக் கூடலை கண்டு இருவரும் துள்ளிக் குதித்தனர்.

இவ்வாறாக, இருவரும் மகிழ்ச்சி பொங்கும் மனத்துடன் சாயி லீலையை புகழ்ந்து கொண்டே நேர்த்திக்கடன் சம்பந்தமான சடங்குகளை முடித்தனர். அது முடிந்ததும் உபாத்தியாயர் (காகாஜி) ஷிர்டிக்கு கிளம்பினார்.

மாதவராவின் மதிப்பிற்குரிய சங்கமும் தோழமையும் கிடைக்குமென்று  கனவிலும் எதிர்பாராத காகாஜி ஆனந்தத்தால் நிரம்பினார். அவருடைய கவனம் முழுவதும் ஷீர்டி செல்லும் பாதைக்குத் திரும்பியது.

நேர்த்திக்கடன் சம்பந்தமான சடங்குகள் முடிந்தவுடன், சாயி தரிசனம் செய்யவேண்டுமென்ற ஆவலாலும் மகிழ்ச்சியாலும் நிரம்பியவர்களாய் இருவரும் சீக்கிரமாக ஷிர்டிக்கு கிளம்பினர்.

அவர்கள் கிளம்பிய வேகம், காகாஜியின் மனத்தில் முன்னமிருந்த ஆவலையும் துடிப்பையும் ஒத்திருந்தது. கோதாவரிக் கரையை சீக்கிரமாகச் சென்றடைந்தனர். அங்கிருந்து ஷீர்டி சமீபத்தில் இருந்தது.

காகாஜி பாபாவை வணங்கி அவருடைய பாதங்களைத் தம் கண்ணீரால் குளிப்பாட்டினார். பாபாவின் தரிசனத்தால் சாந்தியையும் மகிழ்ச்சியையும் திரும்பப்பெற்றார்.

இதற்காகத்தான் தேவி அவருடைய கனவில் தோன்றினாள். சமர்த்த சாயியைக் கண்டவுடனே காகாஜி உண்மையான சந்தோஷமடைந்தார். அவருடைய மனோரதம் நிறைவேறியது.

சாயி தரிசனம் கண்ட காகாஜி மனம் மகிழ்ந்தார். அவருடைய இதயம் நெகிழ்ந்தது. பாபாவின் அருள் அவர்மீது பொழிந்தவுடன் மனம் நிச்சிந்தையாகியது; கவலைகள் பறந்தோடின.

வியப்புறும் வகையில் மனத்தின் சஞ்சலங்கள் ஓய்ந்தன. அவர் தமக்குத் தாமே, 'ஓ, இதென்ன அசாதாரமான லீலை!' என்று சொல்லிக்கொண்டார்.

"என்னிடம் ஒரு வார்த்தையும் பேசவில்லை; ஒரு கேள்வியும் கேட்கவில்லை; சமாதானமும் செய்யவில்லை; ஆசீர்வாதமும் செய்யவில்லை; வெறும் தரிசனமே எனக்கு மகிழ்ச்சியையும் சுகத்தையும் அளித்துவிட்டது!-

Thursday 24 October 2019

ஷீர்டி சாயி சத்சரிதம்

செய்யலாம், செய்யலாம் என்று சொல்லி இழுத்தடிக்கப்பட்டு, அந்த நேர்த்திக்கடனும் நிறைவேற்றப்படாமல் இருந்தது. உடலை உதிர்க்கும் சமயத்தில் தாயாருக்கு அதுவும் ஞாபகம் வந்தது.

தாயார் அதுபற்றியும் மாதவராவுக்கு ஞாபகப்படுத்தி, 'நேர்த்திக் கடனை நிறைவேற்றுவேன்' என்று சத்தியம் வாங்கிக்கொண்டு நிம்மதியான மனத்துடன் இவ்வுலக பந்தங்களில் இருந்து விடுபட்டு, ஹரியின் பாதங்களைச் சென்றடைந்தார்.

மறுபடியும், 'போவோம், போவோம்' என்று சில்லியே தாமதம் ஏற்பட்டது. நாள்கள், மாதங்கள், வருடங்கள் உருண்டன. மாதவ்ராவ் அனைத்தையும் மறந்து போனார். நேர்த்திக்கடன் நிறைவேற்றப்படாமலேயே இருந்தது.

30 ஆண்டுகள் இவ்வாறு கடந்தபின், ஒருநாள், ஊர் ஊராகச் சென்று கொண்டிருந்த ஒரு ஜோதிடர் ஷிர்டிக்கு வந்துசேர்ந்தார்.

ஜோதிட சாஸ்திரத்தில் வானளாவிய ஞானம் படைத்திருந்த அவர், நடந்தது, நடக்கப்போவது, நடந்துகொண்டிருப்பது அனைத்தையும் சொல்லக்கூடிய சக்தி பெற்றிருந்தார். பலபேர்களுக்கு வரும் பொருள் உரைத்துத் திருப்திசெய்து பெரும் புகழ் சேர்த்திருந்தார்.

ஸ்ரீமான் புட்டிக்கும் அவரைச் சார்ந்த மற்றவர்களுக்கும் ஜோதிடம் சொல்லி எல்லாரையும் திருப்தியும் மகிழ்ச்சியும் அடையச் செய்து மதிப்பு பெற்றிருந்தார்.

மாதவராவின் தம்பி பாபாஜியும் அவரை வருங்காலத்தை பற்றிக் கேட்டார். தேவி அவரிடம் மனவருத்தம் கொண்டிருக்கிறாள் என்று ஜோதிடர் சொன்னார்.

ஜோதிடர் கூறினார், "உமது தாயார் மரணத் தருவாயில் உமக்கு அண்ணனைத் தம்முடைய நேர்த்திக்கடன்களை நிறைவேற்றிவைக்க சொன்னார்.-

"ஆனால், இன்றுவரை அவை நிறைவேற்றப்படவில்லை. ஆகையால், தேவி உங்களுக்குத் துன்பம் கொடுக்கிறாள்." மாதவராவ் வீட்டுக்கு வந்தபோது பாபாஜி முழுக்கதையையும் அவரிடம் சொன்னார்.

மாதவராவுக்கு இக் குறிப்பு உடனே விளங்கிவிட்டது. பொற்கொல்லரை அழைத்துவந்து வெள்ளியில் இரண்டு முலைகள் செய்யச் சொன்னார். வேலை முடிந்ததும் அவற்றை மசூதிக்கு எடுத்துக்கொண்டு போனார்.

பாபாவுக்கு நமஸ்காரம் செய்துவிட்டு, இரண்டு வெள்ளிமுலைகளையும் அவரெதிரில் வைத்து, "என்னுடைய நேர்த்திக்கடனை எடுத்துக்கொண்டு என்னை விடுதலை செய்யுங்கள்" என்று வேண்டினார்.-

"நீரே எனது சப்தசிருங்கி; நீரே எமது தேவி. தாயார் வாக்கு கொடுத்த காணிக்கையை ஏற்றுக்கொண்டு சமாதானமடையுங்கள்".

பாபா பதில் கூறினார், நீ சப்தசிருங்கி கோயிலுக்கே சென்று, தேவைக்காக அழகாக வடிக்கப்பட்டுள்ள இந்த முலைகளை உன் கைகளாலேயே சமர்ப்பணம் செய்".

பாபாவின் வற்புறுத்தல் இவ்வாறு இருந்ததால், மாதவராவின் மனச்சாயலும் அவ்வாறே மாறி, கோயிலுக்கு போவதென்று முடிவு செய்துகொண்டு வீட்டுக்கு திரும்பினார். 


Thursday 17 October 2019

ஷீர்டி சாயி சத்சரிதம்

பக்தர்களில் சிரேஷ்டமானவருக்கு தரிசனம் செய்ய வேண்டுமென்ற தாபம் எவ்வளவோ, பக்தியும் பாவமும் நிட்டையும் எவ்வளவு ஆழமோ, அதற்கேற்றவாறே அவருடைய ஆனந்த அனுபவம் விளைகிறது.

இவ்விதமாக் காகாஜி, 'ஷீர்டி தரிசனத்திற்கு எப்படிச் செல்வேன்' என்று மூளையைக் குழப்பிக் கொண்டிருந்தபோது அவருடைய விலாசத்தைத் தேடிக்கொண்டு ஷிர்டியிலிருந்து ஒரு விருந்தாளி வந்துசேர்ந்தார்!

விருந்தாளி என்ன சாமானியமான ஆளா? ஓ, இல்லவே இல்லை. இவரை பாபா மற்றவர்களைவிட அதிகமாக விரும்பினாரோ, எவருடைய பிரேமை இணையில்லாததோ, எவரிடத்தில் உயர்ந்த அதிகாரம் இருந்ததோ, அவரே விருந்தாளியாக வந்திருந்தார்!

அவருடைய பெயர் மாதவ்ராவ் தேச்பாண்டே (சாமா). அவரொருவரால்தான் பாபாவிடம் இனிமையாகப் பேசியும் புகழ்ந்தும் வெற்றி காணமுடியும். வேறெவராலும் இதைச் செய்ய இயலாது.

சதாசர்வகாலமும் இருவருக்குமிடையே அனுப்புப் பூசல்கள் நடக்கும். ஒருவரையொருவர் ஏகவசனத்தில் ('நீ, வா, போ' என்னும் ரீதியில்) பேசி சகஜமாக உறவாடுவர். பாபா மாதவராவிடம் மகனைப் போன்று பாசம் வைத்திருந்தார். வணிக்கு அப்பொழுது வந்து சேர்ந்த விருந்தாளி இவர்தான்.

குழந்தை நோயுற்றபோது, தாயார் தேவியிடம் வேண்டிக்கொண்டார், "இக்குழந்தையை உன்னுடைய பொறுப்பில் விட்டுவிடுகிறேன்; ஆக்குவதோ அழிப்பதோ உன் பாடு.-

"குழந்தை பிழைத்தெழுந்து என்னுடையதாகிவிட்டால், கட்டாயம் அவனை உன் பாதங்களில் கொண்டுவந்து போடுகிறேன்." இவ்விதமாக தேவிக்கு நேர்த்திக்கடன் ஏற்றுக்கொண்டபின் குழந்தை நோயிலிருந்து விடுபட்டது.

வைத்தியரானாலும் சரி, இறைவனாயினும் சரி, வேலை முடிந்தவுடன் அவர்களை மறந்துவிடுகிறோம். சங்கடம் வரும்போதுதான் வேங்கடரமணன்! நிறைவேற்றப்படாமல் கிடைக்கும் நேர்த்திக்கடன் பயத்திற்கு காரணம் ஆகிறது.

நாள்கள் மாதங்களாகி, மாதங்கள் வருடங்களாகி, காலம் உருண்டது. நேர்த்திக்கடன் முழுமையாக மறந்துபோய்விட்டது. கடைசியாக, தாயார் தம் இறுதிக்காலத்தில் மாதவராவிடம் விநயமாகத் தெரிவித்தார், -

"பல ஆண்டுகளுக்கு முன்பு நான் இந்தப் பிரார்த்தனையை நேர்ந்துகொண்டேன். அது தாமதமாகித் தாமதமாகி இன்றைய தினத்திற்கு வந்துவிட்டது. இவ்விதமாக இழுத்துக்கொண்டே போவது நன்றன்று. ஆகவே நீ போய் தேவியை தரிசனம் செய்துவிட்டு வா."

தேவிக்கு நேர்ந்துகொண்ட பிரார்த்தனை இன்னுமொன்றும் இருந்தது. தாயாரின் இரண்டு முலைகளிலும் கட்டிகள் தோன்றித் தாங்கமுடியாத வலியையும் துன்பத்தையும் அளித்தன.

"தாயே, உன் பாதங்களில் விழுகிறேன். இந்த வலியையும் துன்பத்தையும் நிவிர்த்தி செய்; நான் வெள்ளியால் இரண்டு முலைகள் செய்து உன் சந்நிதியில் ஆரத்தி போல் சுற்றியபின் பாதங்களில் சமர்ப்பிக்கிறேன்."


Friday 11 October 2019

ஷீர்டி சாயி சத்சரிதம்

பாபா என்று தேவி குறிப்பிட்டது அநேகமாக திரியம்பகேசுவரராகத்தான் இருக்க வேண்டும் என்று தீர்மானம் செய்தார். உடனே சென்று திரியம்பகேசுவரரை தரிசனம் செய்தார். அப்பொழுதும் மனஉளைச்சல் நிற்கவில்லை.

திரியம்பகேசுவரத்தில் பாத்து நாள்கள் இருந்தார். கடைசிவரை சோகமாகவே இருந்தார். மனம் அமைதியோ மகிழ்ச்சியோ அடையவில்லை.

உளைச்சல் மனத்தைவிட்டு அகலவில்லை; மனக்கொதிப்பும் அடங்கவில்லை. நாளுக்குநாள் அமைதியின்மையும் சஞ்சலங்களும் அதிகரித்தன. ஆகவே காகா வீடு திரும்பினார்.

தினமும் விடியற்காலையில் எழுந்து ஸ்நானம் செய்துவிட்டு, ருத்ர பாராயணம் செய்துகொண்டே சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்தார். ஆயினும், மனம் அமைதியற்று இருந்தது.

மறுபடியும், தேவியின் கோயிலுக்குச் சென்று, "என்னை எதற்காகத் திரியம்பகேசுவரத்துக்கு அனுப்பினீர் அம்மா? இப்பொழுதாவது என் மனதிற்கு அமைதி கொடுங்கள்! என்னை இங்குமங்கும் அலைக்கழிக்க வேண்டா" என்று மனமுருகி வேண்டினார்.

தீனமான குரலில் இவ்வாறு அம்பாளை அருள் செய்ய வேண்டினர். தேவி அன்றிரவு காகாஜியின் கனவில் மறுபடியும் தோன்றி,-

"பாபா என்று நான் குறிப்பிட்டது ஷிர்டியில் வாழும் சமர்த்த சாயியை. திரியம்பகேசுவரத்துக்குச் செல்வதில் என்ன அர்த்தம் இருக்கிறது? எனக்குப் புரியவில்லையே!" எனச் சொல்லி அருள் செய்தார்.

"இந்த ஷீர்டி எங்கிருக்கிறது? அங்கே போவது எப்படி? இந்த பாபா யார் என்று தெரியவில்லையே; ஷீர்டி விஜயம் எப்படி நடக்கபோகிறதென்றும் தெரியவில்லையே!" என்று காகாஜி குழம்பினார்.

ஆயினும், ஒரு ஞானியின் பாதங்களில் ஈடுபாடு கொண்டு தரிசனம் செய்யவேண்டுமென்று ஏங்குபவரின் விருப்பத்தை ஞானிமட்டுமில்லாமல் இறைவனும் பூர்த்தி செய்கிறார்.

ஞானியே இறைவன். இருவருக்குமிடையே லவலேசமும் வித்தியாசமும் இல்லை. இருவரையும் பிரித்துப் பார்ப்பது துவைதம். ஞானிகளாலும் இறைவனும் அத்வைதம்.

"என்னுடைய விருப்பத்தாலும் முயற்சியாலும் நான் சென்று ஞானியை தரிசனம் செய்து திருப்தியடைவேன்." இவ்விதம் நினைப்பதோ சொல்வதோ கேவலம் அகங்காரமும் வீண்பெருமையும் ஆகும். ஞானிகளின் செயல்முறைகள் செயற்கரியவற்றைச் செய்யவல்லவை.

ஞானிகள் மனம் வைக்காமல், யார் அவர்களை தரிசனம் செய்யச் செல்ல முடியும்? அவர்களுடைய ஆணையின்றி மரத்திலுள்ள இலையும் அசையாது.


Thursday 3 October 2019

ஷீர்டி சாயி சத்சரிதம்

சாயி லீலை என்னும் இந்தக் கற்பக விருட்சம் சந்தேகமேயின்றிப் பூவாகவும் காயாகவும் பழமாகவும் அருளும். ஆயினும், சிறந்த பாக்கியவானால்தான் அவற்றை பூமிக்கு கொண்டுவர முடியும்.

ஆன்மிகம் நாட்டமுள்ளவர்களுக்கு மோட்சம் அளிப்பதிலும் எல்லாருக்குமே மங்களம் விளைவிப்பதிலும், எல்லாச் சாதனங்களிலும் தலைசிறந்த சாதனமாகிய இப் பரம புனிதமான கதைகளைக் கேளுங்கள்; கேளுங்கள்.

இந்த சாயி கதையாகிய அமிருத பானம், ஜடம் போன்ற மனிதனையும் உத்தாரணம் செய்யும்; மோட்சத்தை நாடுபவர்களுக்கு மோட்ச சாதனம்; உலகியல் வாழ்வில் ஈடுபட்டவர்களுக்கு சுமைதாங்கி!

ஒரு கதையை இங்கே சொல்லப் புகும்போது, பல கதைகள் ஞாபகத்திற்கு வருகின்றன. ஆகவே, கேட்பவர்களைக் கவனத்துடன் கேட்கும்படி ஹேமாட் பணிவுடன் வேண்டுகிறேன்.

இம்மாதிரியாக ஒவ்வொரு கதையாக கேட்டுகொண்டுவந்தால், சாயிலீலை ரசவாதம் புரியும். பிறவியென்னும் காட்டுத்தீயில் மாட்டிக்கொண்டு தவிப்பவர்கள் திருப்தியும் சுகமும் பெறுவர். சமர்த்த சாயி மகத்தான சக்தி பெற்றவர் அல்லரோ!

நாசிக் ஜில்லாவில், வணி கிராமத்தில், காகாஜி வைத்யா என்று பெயர் கொண்ட ஒருவர் வசித்து வந்தார். அங்கிருந்த தேவியின் கோவிலில் உபாத்தியாயராக (பூசகர் - பூஜை செய்பவர்) இருந்தார்.

தேவியின் பெயர் சப்தசிருங்கி. வாழ்க்கையில் ஏற்பட்ட சோதனைகளால் வேதனைகளாலும் துன்புற்ற பூஜகர் மனவுளைச்சலுற்றார்.

காலச்சக்கரம் கேடுகளைக் கொண்டுவரும்போது, மனம் நீர்ச்சுழியைப்போல் சுழல்கிறது. உடல் இங்குமங்கும் அலைகிறது. ஒருகணமும் சாந்தி கிடைப்பதில்லை.

மிகுந்த சோகமுற்ற காகாஜி, கோயிலுக்குச் சென்று தம்மைக் கவலைகளில் இருந்தும் சஞ்சலங்களில் இருந்தும் விடுவிக்குமாறு தேவியை வேண்டினார்.

தேவியின் அருள் வேண்டி மனமாரப் பிரார்த்தனை செய்தார். தேவியும் அவருடைய பக்தியையும் பாவத்தையும் மெச்சித்  திருப்தியடைந்தார். அன்றிரவே அவருக்கொரு காட்சியளித்தார். கதை கேட்பவர்கள்! இந்த அற்புதத்தைக் கேளுங்கள்!

தேவி சப்தசிருங்கி மாதா காகாஜியின் கனவில் தோன்றி, "பாபாவிடம் செல்வீராக; மனம் அமைதியுறும்" என்று கூறினார்.

'யார் இந்த பாபா? அவரை எங்கே போய்க் காண்பது?' என்பதை தேவி மேலும் தெளிவுபடுத்துவார் என நினைத்துக் காத்திருந்தபோதே அவர் விழித்துக்கொண்டார்.

மேற்கொண்டு விவரம் தெரிந்துகொள்ளவேண்டும் என்ற விருப்பம் நிறைவேறுவதற்கு முன்பாகவே சட்டென்று கனவு மறைந்துவிட்டது. தேவி குறிப்பிட்ட பாபா யாராக இருக்கக்கூடுமென்று தம்முடைய புத்திக்கெட்டியவாறு அனுமானித்தார். 


Friday 27 September 2019

ஷீர்டி சாயி சத்சரிதம்

ஓ சாயிநாதரே! என்னைக் காத்தருள ஓடி வாரும்! உமது பாதங்களில் என் தலையைச் சாய்த்துவிட்டேன். அனைத்து அபராதங்களையும் (குற்றங்களையும்) மன்னித்து, இவ்வடிமையின் சஞ்சலங்களையும் கவலையையும் நிவாரணம் செய்யுங்கள்.

பல சங்கடங்களால் துன்பமுற்ற பக்தன், இவ்விதமாக சாயியை அழைத்தால் தன்னுடைய உளையும் மனதிற்கு சாந்தியை அளிக்கக்கூடிய சக்தி பெற்ற ஒரே தருமவானை சாயியின் காண்பான்.

தயாசாகரமான சாயி எனக்குச் செய்த கிருபையால்தான் என்னால் வாசகர்களுக்கு இந்த மங்களமான காவியத்தை அளிக்கமுடிகிறது.

இல்லையெனில், எனக்கு என்ன பவிசு இருந்தது? யார் இந்த மிக சிரமமான பணியைத் தலைமேல் ஏற்றுக்கொள்வார்? ஆனால், சாயி தம்முடைய வேலைக்குத் தாமே பொறுப்பு ஏற்றுக்கொள்ளும்போது, அது எனெக்கென்ன பாரம்?

அஞ்ஞான இருளை அழிப்பவரும் ஞானதீபமுமாகிய  சமர்த்த சாயி என்னுடைய எழுத்துக்கு ஒளியூட்டும்போது எனக்கென்ன சந்தேகம் வரமுடியும்?

தயாநிதியான என் பிரபுவின் மேல் பாரத்தை போட்டுவிட்ட நான் அணுவளவும் சிரமப்படவில்லை. அவருடைய கிருபை என்னும் பிரகாசத்தினால் என்னுடைய இதயத்தின் தாபம் நிறைவேறிவிட்டது.

புத்தக ரூபத்தில் சாயிக்குச் செய்யும் சேவை எனது பூர்வஜென்ம புண்ணியங்களின் பலத்தால் விளைந்ததே. இறைவா! தேவரீர் இந்த எளிய சேவையை ஏற்றுக்கொள்வதற்கு யான் என்ன பேறு பெற்றேன் ஐயனே!

தயாசகரமான சாயி பலவிதமான தெய்வீக காட்சிகளை அளித்து பக்தர்களுக்குப் பிரதானமான போதனைகள் அருள் செய்ததுபற்றிக் கடந்த அத்தியாயத்தில் கேட்டீர்கள்.

இந்த அத்தியாயத்திலும், சப்தசிருங்கி தேவி உபாசகர் ஒருவரின் மிக சுவாரஸ்யமானதும் மகிழ்ச்சி அளிக்கக்கூடியதுமான கதையைக் கேளுங்கள்.

தேவர்களும் தேவிகளும் தங்களுடைய பக்தர்களை ஞானியரின் கைகளில் ஒப்படைக்கும் அதிசயத்தை பயபக்தியுடன் கேளுங்கள்.

ஒன்றைவிட மற்றொன்று அற்புதமானதாக, மஹாராஜின் கதைகள் எத்தனையோ உண்டு. இந்தக் கதை கேட்பதற்குகந்தது. ஒருமுகப்பட்ட மனத்துடன் கேளுங்கள்.

இது வெறும் கதையன்று; அமிருத பானம். சாயியின் மகிமையையும் எங்கும் நிறைந்த தன்மையையும் எடுத்துக்காட்டும். கேட்பவர்கள் மனநிறைவு பெறுவர்.

தர்க்கவாதிகளுக்கும் விமரிசகர்களுக்கும் இக் கதை வேண்டா. வாதப்பிரதிவாதங்களுக்கும் இங்கு இடமில்லை. தேவை, அளவற்ற பிரேமையும் பக்தியுமே!

கேட்பவர் புத்திசாலியாகவும் அதே சமயம் பக்தராகவும் இருக்கவேண்டும்; விசுவாசமும் சிரத்தையும் வேண்டும்; ஞானிகளின் தொண்டராகவும் இருக்கவேண்டும். மற்றவர்களுக்கு இக்கதைகள் மாயையாகத் தோன்றும்.


Friday 20 September 2019

ஷீர்டி சாயி சத்சரிதம்

30 . கனவிலும் நனவிலும் அனுக்கிரஹம் (பகுதி 2 )

ஓம் ஸ்ரீ விநாயகனே போற்றி! ஸ்ரீ சரஸ்வதியே போற்றி!
ஸ்ரீ குருமஹாராஜனே போற்றி! குலதேவைக்கும் ஸ்ரீ சீதாராமச்சந்திரனுக்கும் என்னுடைய பணிவான வணக்கங்கள். பூஜ்யகுரு ஸ்ரீசாயிநாதனை பக்தியுடன் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.

ஓம் நமோ சாயி தேவா! பக்தவத்சலரே! கருணாலயமே! தரிசனமொன்றாலேயே பிறவிப்பயத்தை விலக்கி ஆபத்துகளிலிருந்து காப்பவரே! உம்மை வணங்குகிறேன்.

ஞானிகளுள் முடிமணியாகிய சாயிநாதரே! ஆரம்பித்தில் நீர் குணமற்றவராக இருந்தீர். பிறகு, உம் பக்தர்களின் அன்பு, பக்தி ஆகிய விசைகளால் உந்தப்பட்டு உருவத்தையும் குணங்களையும் ஏற்று அவதரித்தீர்.

பக்தர்களை உத்தாரணம் செய்வதே (தீங்கிலிருந்து மீட்டு உயர்த்துதல்) குருமார்களின் ஜீவாதாரமான மூச்சுக் காற்று. குருவம்ச திலகமாகிய உங்களுக்கு வாழ்க்கையின் லட்சியம் வேறென்னாவாக இருக்கமுடியும்!

உமது இரு பாதங்களையும் பற்றிகொண்டவர்களுடைய பாவங்களைனைத்தும் அழியும். பூர்வஜென்ம நல்வினைகளின் பலன் மேல் தளத்திற்கு எழும்பும்.  வாழ்க்கைப் பாதையில் பயமோ தடைகளோ வாரா.

மகத்தான புனிதத் தலங்களில் வாழும் பிராமணர்களும் உம்முடைய பாதங்களை மறவாது இங்கு வந்து காயத்ரி மந்திரத்தை இடைவிடாது ஓதுகிறார்கள்; போதி, புராணங்களையும் வாசிக்கிறார்கள்.

சடங்குகள் தெரியாத, அல்ப சக்தியுடைய எங்களுக்கு பக்தியைப்பற்றி என்ன தெரியும் ? ஆயினும், சமஸ்தமான (எல்லா) மக்களும் எங்களை ஒதுக்கிவிட்டாலும், சாயி எங்களைக் கைவிடமாட்டார்.

அவர் யாருக்குக் கிருபை செய்கிறாரோ, அவர் சிந்தனைக்கெட்டாத அளவிற்கு சக்தி பெறுகிறார். ஆத்மா எது, அனாத்மா எது, என்னும் விவேக சம்பத்தை அடைகிறார். அதிலிருந்து ஞானம் பிறக்கிறது.

சாயியின் திருவாய்மொழியைக் கேட்கவேண்டும் என்ற தீவிர ஆசை பக்த ஜனங்களை பிச்சேற்றுகிறது. ஒவ்வொரு வார்த்தையும் மனத்தில் ஆழமாகப் பதிகிறது. வார்த்தைகளின் உட்பொருளை அனுபவத்தில் காண முயல்கின்றனர்.

பக்தர்களின் மனோரதங்களை சாயி பரிபூரணமாக அறிவார்; அவற்றை நிறைவேற்றவும் செய்கிறார். அதன்மூலமாக, பக்தர்கள் வாழ்க்கையில் நிறைவு பெற்றவர்களாகிறார்கள்.
 

Friday 13 September 2019

ஷீர்டி சாயி சத்சரிதம்

அந்த ஒரு ரூபாய் நாணயத்திற்காக வாமன்ராவ் அவசரமாகச் சென்று, பல இடங்களிலிருந்து பீராய்ந்துகொண்டுவந்து ரூ.25 /- ஐ பாபாவிடம் கொடுத்தார்.

"மூட்டை மூட்டையாக ரூபாயைக் கொண்டுவந்தாலும் இதற்கு ஈடாகாது. அவற்றினுடைய மதிப்பு இந்த நாணயத்தின் மதிப்பைவிடக் கம்மியே" என்று சொல்லிக்கொண்டே பாபா ரூ.25 /- ஐயும் பாக்கெட்டில் போட்டுக்கொண்டார்.

சாமாவை நோக்கி அவர் சொன்னார், "சாமா இதை நீ எடுத்துக்கொள். இது உன்னுடைய சேகரிப்பில் இருக்கட்டும். பூஜையறையில் வைத்து தினமும் வழிபடு".

அந்த சயமயத்தில், "ஏன் இவ்வாறு செய்கிறீர்?" என்று கேள்வி கேட்பதற்கு யாருக்கு தைரியம் இருந்தது? ஏனெனில், செய்யத் தக்கது எது, செய்யத் தகாதது எது என்பது சாயிக்கு நிச்சயமாகத் தெரிந்திருந்தது அன்றோ?

ஆகவே, இந்த அத்தியாயத்தை முடித்து, கேட்பவர்களுடைய மனத்திற்குச் சற்று நேரம் ஓய்வளிப்போம். இந்தக் கதைகளைத் திரும்பத் திரும்ப மனத்தில் ஓடவிட்டு சாரம் வாங்கட்டும்.

கேள்வியைச் சிந்தனை தொடராவிட்டால், கேட்டதைக் கிரகிக்க முடியாது. மேலும், கேட்டதைப் பற்றிச் சிந்தித்து தியானம் செய்யாவிட்டால், கேள்வி பயனின்றிப் போகும்.

ஹேமாட் சாயியிடம் சரணடைகிறேன். எல்லா சாதனங்களுக்கும் (உபாயங்களுக்கும்) மூலஸ்தானமான சாயி பாதங்களில் தலை சாய்க்கிறேன். மேற்கொண்டு சொல்லப்போவது, தன் வழியைத் தானே வகுத்துக்கொள்ளும்.

எல்லாருக்கும் க்ஷேமம் உண்டாகட்டும்! ஞானிகளாலும் சான்றோர்களால் உணர்வூட்டப்பட்டு, சாயி பக்தன் ஹேமாட் பந்தால் இயற்றப்பட்ட, 'ஸ்ரீ சமர்த்த சாயி சத் சரித்திரம்' என்னும் காவியத்தில், 'கனவுகள் என்னும் இருபத்தொன்பதாவது அத்தியாயம் முற்றும்.

                                        ஸ்ரீ சத்குரு சாயி நாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.

                                                                சுபம் உண்டாகட்டும். 

Friday 6 September 2019

ஷீர்டி சாயி சத்சரிதம்

குவாலியர் வந்து சேர்ந்தவுடன் ரூபாய் நாணயத்தை டாக்டர் ஹாடேவிடம் கொடுத்து, ஷிர்டியில் நடந்ததனைத்தையும்  நண்பர் விவரமாக சொன்னார். இதைக் கேட்ட ஹாடே அளவற்ற மகிழ்ச்சியடைந்தார்.

அவர் மனத்தில் இவ்வாறு நினைத்தார், "என்னுடைய மனோகதியை அறிந்த பாபா, நான் என்ன வேண்டுமென்று விரும்பினேனோ, எது வேண்டும் என்று தீர்மானம் செய்தேனோ, அவ்வாறே என்னுடைய மனோரதத்தை பூர்த்தி செய்துவிட்டார்.

காப்டன் ஹாடே இவ்வாறு நினைத்தபோதிலும், அது அவருடைய கற்பனையே. ஏனெனில், ஞானிகள் எந்தப் ப்ரயோஜனத்திற்காக என்ன யோஜனை செய்கிறார்கள் என்பதை யாரால் புரிந்துகொள்ள முடியும்?

அம்மாதிரி நிச்சயமாக ஏதாவது சொல்லப் புகுமுன், இதற்கு நேர்மாறான நிகழ்ச்சியொன்றைப் பார்க்கவேண்டும். முடிவில், ஞானியின் எண்ண ஓட்டங்களை ஞானி மாத்திரமே அறிவார் என்பது விளங்கும்.

ஒருவர் கொடுத்த  ரூபாயைத் திருப்பி கொடுத்துவிடுகிறார். இன்னொருவர் கொடுத்த ரூபாயைப் பாக்கெட்டில் போட்டுக்கொள்கிறார். காரணம் என்னவென்றோ பாபாவின் மனதில் என்ன இருந்ததென்றோ எப்படி நிச்சயமாக சொல்ல முடியும்?

அவருடைய காரணம் அவருக்குத்தான் தெரியும். கிடைத்த அற்புதமான நல்வாய்ப்பைக் கோட்டைவிடாமல் அவருடைய லீலையை பார்த்து அனுபவிக்கவே நம்மால் முடியும். இது சம்பந்தமான கதையொன்றை கேளுங்கள்.

ஒருசமயம் பாபாவின்மீது அளவற்ற பிரேமை கொண்ட வாமன்ராவ் நார்வேகர் என்ற பக்தர், பாபாவுக்கு பக்தியுடன் அர்ப்பணம் செய்வதற்காக அழகான ஒரு ரூபாய் நாணயம் ஒன்றைக் கொண்டுவந்தார்.

அந்த நாணயத்தின் ஒரு பக்கத்தில் ராமர், லக்ஷ்மணர், சீதை இவர்களின் உருவம் பொறிக்கப்பட்டிருந்தது. மறுபக்கத்தில் கூப்பிய கரங்களுடன் ஆஞ்சநேயரின் அழகான உருவம் இருந்தது.

பாபாவின் கையால் தொடப்பட்டு உதீ பிரசாதத்துடன் திருப்பி அளிக்கப்பட வேண்டுமென்பதே பாபாவுக்கு அந்த நாணயத்தை அர்ப்பணம் செய்ததன் நோக்கம். ஆகவே, அது பாபாவின் கையில் இடப்பட்டது.

பாபாவுக்கென்னவோ எல்லார் மனத்திலும் இருந்த விருப்பங்களும் தெரியும். ஆயினும், நாணயம் கையில் விழுந்தவுடனே அதை பாக்கெட்டில் போட்டுக்கொண்டார்.

வாமன்ராவ் என்ன விரும்பினார் என்பதை மாதவ்ராவ் பாபாவிடம் தெரிவித்து, நாணயத்தை திருப்பிக் கொடுத்துவிடும்படி கெஞ்சினார்.

"ஏன் இதை அவரிடம் திருப்பிக் கொடுக்க வேண்டும்? இதை நாமே வைத்துக்கொள்ள வேண்டும்" என்று பாபா தெளிவாக வாமன்ராவின் கண்ணுக்கெதிரிகாவே சொல்லிவிட்டார்.

"ஆயினும், அவர் இதற்கு விலையாக ரூ. 25 /- கொடுப்பாரானால், அதற்குப் பதிலாக இந்த ரூபாயை கொடுப்பேன்" என்று பாபா மேலும் சொன்னார்.  


Friday 30 August 2019

ஷீர்டி சாயி சத்சரிதம்

சாயியின் கைகளால் தொடப்பட்டு புனிதமாக்கப்பட்ட ஒரு ரூபாய் நாணயமொன்றைத் தம்முடைய இல்லத்தில் வைத்திருக்கவேண்டும் என்ற ஆசை காப்டன் ஹாடேவின் மனத்தில் எழுந்தது. சாயி இந்த ஆசையை நிறைவேற்றிவைத்தார்.

மனத்தில் கோடானுகோடி ஆசைகள் எழுகின்றன. கெட்ட எண்ணங்களை விலக்கிவிட்டு, நல்லெண்ணங்களை பின் தொடருங்கள். பக்தரின் கையைப் பிடித்துக்கொண்டு சாயி வழிநடத்தும் திறமையை அப்பொழுது பாருங்கள்.

ஒரு நல்ல விருப்பம் மனத்தில் தோன்றினால் அது உடனே பலன் அளித்துவிடுகிறது. சாயி தரிசனத்தை விரும்பிய நண்பரொருவர் ஷிர்டிக்கு உடனே புறப்பட்டுக் கொண்டிருந்தார்.

சாயி நிறைவேற்ற வேண்டுமென்றால், விருப்பம் நியாயமானதாக இருக்க வேண்டும். நல்லெண்ணங்களை விரும்பி தருமவழி நடக்கும் பக்தருக்காக எவ்வளவு வளைந்து கொடுத்துச் செல்லங்கொடுக்க வேண்டும் அவருடைய ஆளுமையில்தான் இருக்கிறது.

ஹாடே மிகப் பிரீதியுடன், "மறக்காமல் இதை பாபாவின் கையில் கொடுங்கள்" என்று சொல்லி ஒரு ரூபாயை நண்பருடைய கையில் கொடுத்தார்.

நண்பர் ஷிர்டிக்குச் சென்றவுடனே சாயி தரிசனம் செய்தார். பாபாவின் பாதங்களுக்கு வந்தனம் செய்துவிட்டு பாபாவின் சந்நிதியில் உட்கார்ந்தார்.

பாபா தக்ஷிணைக்காக கைநீட்டியபோது, முதலில் தம்முடைய தக்ஷிணையைக் கொடுத்தார். பாபா அதை வாங்கி உடனே பாக்கெட்டில் போட்டுக்கொண்டார். நண்பர், காப்டன் ஹாடேவின் தக்ஷிணையை எடுத்தார்.

இரு கைகளையும் கூப்பிக்கொண்டு, "டாக்டர் ஹாடே என் மூலமாக இந்த தக்ஷிணையைக் கொடுத்தனுப்பினார்" என்று சொல்லிக்கொண்டே அந்த ரூபாயையும் பாபாவின் கையில் வைத்தார்.

எல்லாருடைய இதயத்திலும் வசிக்கும் இந்த சாயி, ஹாடே குவாலியரில் இருந்ததாலும் அவருடைய விருப்பம் என்னவென்று அறிந்திருந்தார். அந்த ரூபாயையே பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார்.

முகத்தில் பிரேமை பொங்க, அந்த ரூபாயைத் தமக்கெதிராக பிடித்துக்கொண்டு உற்றுப் பார்த்துகொண்டேயிருந்தார். சுற்றி இருந்தவர்கள் பாபாவை வியப்புடன் பார்த்தனர்.

வலக்கைக் கட்டைவிரலால் அந்த நாணயத்தைக் காற்றில் சுண்டிவிட்டுவிட்டுப் பிறகு பிடித்தார். இதுபோல் பல தடவைகள் செய்தார். இவ்விதமாக அந்த நாணயத்துடன் சிறிது நேரம் விளையாடிவிட்டு அதைத் திருப்பிக்கொடுத்தார்.

பாபா சொன்னார், "இது யாருக்குச் சொந்தமோ அவரிடம் கொடுத்துவிடுங்கள். இத்துடன் உதீ பிரசாதத்தையும் எடுத்துச் செல்லுங்கள். அவருடையது எதுவும் நமக்கு வேண்டா என்று அவரிடம் சொல்லுங்கள். அவரை நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் வாழும்படி சொன்னேன் என்று சொல்லுங்கள்".

பாபாவின் பாதங்களுக்கு நமஸ்காரம் செய்துவிட்டு உதீ பிரசாதத்தைப் பத்திரப்படுத்திக்கொண்டு பாபாவிடம் அனுமதி பெற்றபின் நண்பர் வீடு திரும்பினார்.

   

Friday 23 August 2019

ஷீர்டி சாயி சத்சரிதம்

மாளிகைச் சாமான்களையும் சேகரித்துகொண்டுவந்து, பக்தியுடன் ஒரு சிறப்பான நைவேத்தியம் சமைத்தார். தக்ஷிணையையும் செய்துகொண்டார்.

நைவேத்தியம் தயாரானவுடன் எல்லாப் பண்டங்களையும் ஒரு மூங்கில் தட்டில் வைத்து பாபாவுக்கு சமர்ப்பணம் செய்யப்புகுந்தபோது, தூக்கத்திலிருந்து விழித்துக்கொண்டு, நடந்ததனைத்தையும் கனவே என்று அறிவித்தார்.

தாம் ஷிர்டிக்கு இதற்கென்றே சென்று, கனவில் சமர்ப்பித்த பண்டங்களை நேரிடையாகவே சமர்ப்பிக்க வேண்டும் என்று காப்டன் ஹா டே நினைத்தார்.

ஆனால், அவர் அப்பொழுது குவாலியரில் இருந்ததால், பம்பாயில் இருந்த நண்பருக்கு (ஹரி சீதாராம் தீக்ஷிதருக்கு )கடிதம் எழுதினார். கனவில் நடந்த சம்பவத்தை விவரித்து அவரை ஷிர்டிக்கு போகுமாறு வேண்டினார்.

பணம் மணியார்டர் மூலமாக வருமென்றும் பணத்திற்கு ஏற்றவாறு தாம் கனவில் சேகரித்த மளிகைச் சாமான்களை வாங்கவேண்டுமென்றும், முக்கியமாக, எப்பாடுபட்டாவது உயர்ந்த தரமான அவரைக்காய்களை வாங்கவேண்டுமென்றும் கடிதத்தில் எழுதியிருந்தார்.

மீதிப்பணம் ஷிர்டிக்கு எடுத்துச் செல்லப்பட்டு மற்றப் பண்டங்களுடன் சேர்க்கப்பட்டு தக்ஷிணையாக சமர்ப்பிக்கப்பட வேண்டும். பாதங்களை நமஸ்காரம் செய்து, பிரசாதம் கேட்டு வாங்கிக் குவாலியருக்கு அனுப்ப வேண்டும்.

மணியார்டர் வந்து சேர்ந்த உடனே நண்பர் ஷிர்டிக்கு சென்றார். இதர மளிகைச் சாமான்களை சுலபமாக வாங்கிவிட்டார்; அவரைக்காய்தான் எங்குமே கிடைக்கவில்லை. திடீரென்று ஒரு காய்கறிக் கூடை வந்துசேர்ந்தது!

கூடையைத் தலையில் சுமந்துவந்த பெண்மணி உடனே அழைக்கப்பட்டார். கூடையைத் திறந்து பார்த்தால், அதுவரை எங்கே தேடியும் கிடைக்காத அவரைக்காய் இருந்தது. கூடியிருந்தவர் எல்லாரும் மிகுந்த ஆச்சரியமடைந்தனர்.

எல்லாப் பண்டங்களும் மசூதிக்கு கொண்டுவரப்பட்டு பயபக்தியுடன் பாபாவுக்கு அர்ப்பணம் செய்யப்பட்டன. பாபா அவற்றை நிமோன்கரிடம் ஒப்படைத்தார். நிமோன்கர் அவற்றை மறுநாள், உணவாகச் சமையல் செய்து நைவேத்தியமாக சமர்ப்பணம் செய்தார்.

மறுநாள் பாபா சாப்பிட உட்கார்ந்தார். ஆனால், சாதத்தையோ பருப்பையோ தொடவில்லை. எல்லாரும் ஆச்சரியப்படும் வகையில் காய்கறி பதார்தத்தையோ முதலில் எடுத்தார்.

பாபா உண்டது காய்கறிகளையே; அவரைக்காய் பதார்த்தையோ வாயில் இட்டுக்கொண்டார். காப்டன் ஹாடே இந்த விருத்தாந்தத்தை கேட்டுப் பெருமகிழ்ச்சி அடைந்தார்.

ஹாடேவின் மனதில் என்ன பாவமும் இருந்ததோ அதுவே அனுபவமாக மலர்ந்தது. இப்பொழுது பின்வரும் அற்புதமான கதையைக் கேளுங்கள். பக்தர்களை மகிழ்விப்பதற்காக சாயி எவ்வளவு லாவகமாகவும் இனிமையாகவும் வளைந்து கொடுத்துச் செல்லங்கொடுத்தார் என்பதை இது காட்டும்.   
 

Friday 16 August 2019

ஷீர்டி சாயி சத்சரிதம்

ஆயினும் டெண்டுல்கர், " நான் பணியிலிருந்து ஓய்வு பெறும்போது என்னுடைய முதலாளி இந்த அளவிற்கு மாதாந்திர ஓய்வூதியம்?" என்றெண்ணிக் கவலையுற்றார்.

"என்னுடைய சம்பளம் மாதம் ரூ. 150 /- தான். மாதாந்திர செலவுகளை சுமக்கும் முழுப்பாரமும் ஓய்வூதியமாகிய 75 ரூபாயின்மேல்தான் விழும்." இவ்விதமான எண்ணங்கள் அவர் மனதில் உழன்றன.

ஆனால், கடைசியில் என்ன நடந்ததென்பது மிகவும் சுவாரசியமானது. பாபாவின் லீலையைப் பாருங்கள்! குடும்ப நல்வாழ்வுபற்றி ரகுநாத்ராவின் மனைவியுடன் (கனவில்) பேசியபோது அவர் செய்த அற்புதங்களை கேளுங்கள்.

ஓய்வூதியம் பற்றிய கடைசி உத்தரவு தீர்மானிக்கப்படுவதற்கு 15 நாள்களுக்கு முன்னர், பாபா அவருடைய (சாவித்திரி பாயி தெண்டுல்கருடைய ) கனவில் தோன்றி, அவருடைய கருத்து என்னவென்று கேட்டார்.-

"நான் அவருக்கு ரூ. 100 /- (ஓய்வூதியம்) கொடுக்கலாமென்று விரும்புகிறேன். உமது மனத்தின் ஆசையை அது பூர்த்தி செய்யுமென்று நினைக்கிறீரா?" அப்பெண்மணி பதில் சொன்னார், "நீங்கள் என்ன சொல்கிறீர்கள் பாபா! ஏன் இந்தக் கேள்வியைக் கேட்கிறீர்கள்? எங்களுடைய பாரங்களனைத்தும் உங்களுடையதே அல்லவோ?"

நிறுவனத்தில் ரகுநாத் ராவின் மனு சம்பந்தமாக ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 'ரகுநாதராவ் பல ஆண்டுகளாக இன்று வரை நேர்மையாக சேவை செய்திருக்கிறார். ஆகவே அவருக்குச் சம்பளத்தில் பாதியளவு ஓய்வூதியமாக கொடுக்கப்பட வேண்டும்.'

பாபா ரூ. 100 /- என்று ஏற்கெனவே சொல்லியிருந்தாலும் ரூ. 10 /- அதிகமாகவே அளித்தார். பக்தர்களின் மீது அளவற்ற பிரேமை கொண்ட கருணாகரரான சமர்த்த சாயி இப்படித்தான்!

இன்னுமொரு மனோரஞ்சகமான கதையைக் கேளுங்கள். பக்தர்களின் பிரேமை மேலும் விருத்தியடையும். கேட்பவர்கள் மகிழ்ச்சியடைவார்கள்.

கேப்டன் ஹாடே என்ற பெயர் கொண்ட டாக்டர் ஒருவர் சிரத்தை மிகுந்த பாபா பக்தர். ஒருநாள் விடியற்காலையில், பாபா அவருடைய கனவில் தோன்றிய கதையைக் கேளுங்கள். மனத்தைச் சுண்டியிழுக்கும்.

ஹாடே அப்பொழுது குவாலியரில் வசித்துவந்தார். அங்கேதான் அவர் பாபாவைக் கனவில் கண்டார். கேள்வி கேட்பதில் பாபாவுக்கு இருந்த சாமர்த்தியத்தையும் ஹாடே அவருக்கு அளித்த பதிலையும்பற்றி கேளுங்கள்.

பாபா கேட்டார், "என்னை மறந்து  விட்டீரா என்ன?" ஹாடே உடனே பாபாவின் பாதங்களை பற்றிக்கொண்டு பதிலுரைத்தார், "ஒரு குழந்தை தாயை மறந்துவிட்டால் அபயத்தை (அடைக்கலத்தை) எங்கிருந்து பெறும்?"

உடனே அவர் எழுந்து (கனவில்), தோட்டத்தினுள் சென்று இளசான வால்பப்டிக் (அவரைக்) காய்களை பறித்துக்கொண்டு வந்தார். அரிசி, பருப்பு போன்ற மற்ற மாளிகைச் சாமான்களையும் சேகரித்துக்கொண்டு வந்து, பக்தியுடன் ஒரு சிறப்பான நைவேத்தியம் சமைத்தார். தக்ஷிணையும் தயார் செய்துகொண்டார்.    

Friday 9 August 2019

ஷீர்டி சாயி சத்சரிதம்

அவர் காட்டிய வழியில் நடந்தால் ஆரம்பகாலத்தில் எல்லாமே சுகமாக இருக்கும். ஆனால், போகப்போக  பாதை புத்தர் மூடிப்போய் எங்கே பார்த்தாலும் முள்ளாக இருக்கும்.

அப்பொழுது நம்பிக்கை ஆட்டம் காணும். மனம் சுலபமாக சந்தேகங்களால் அலைபாய்ந்து, சாயி ஏன் இந்தக் காட்டுவழிப் பாதைக்கு நம்மைக் கொண்டுவந்தார் என்று நினைக்கும்.

அந்தச் சூழ்நிலையில்தான் சிரத்தை நிலையாக நிற்கவேண்டும். அதுமாதிரி சங்கடங்கள்தான் உண்மையான சோதனைகள். அசைக்க முடியாத திடமான சிரத்தை வேரூன்றும் வழி இதுவே.

சாயி நாமத்தை இடைவிடாமல் ஜபித்துக்கொண்டு, சங்கடங்களை தைரியமாக நேருக்குநேராக சந்தித்தால், எல்லா ஆபத்துகளும் பறந்தோடிவிடும். நாமத்தின் சக்தி அவ்வளவு பிரமாண்டமானது.

சங்கடங்களினுள்ளே மறைந்திருக்கும் பிரயோஜனம் இதுவே. ஏனெனில், சங்கடங்களும் சாயியால் விளைவிக்கப்படுபவனவே. சங்கடம் வரும்போதுதான் சாயியின் ஞாபகம் வருகிறது! சங்கடங்களும் அப்பொழுது விலகிவிடுகின்றன!

இந்தப் பையனின் தகப்பனார்தான் தீவிர பாபா பக்தர்; தைரியசாலி; உதாரகுணம் படைத்தவர். சத்தியசீலர். ஆனால், முதுமையால் அவருடைய உடல்நலம் சீரழிந்துவிட்டது. (ரகுநாத் ராவ் டெண்டுல்கர்)

பம்பாய் நகரத்தில் ஒரு பிரபலமான வெளிநாட்டு வியாபார நிறுவனத்தில் அவர் பல ஆண்டுகள் யோக்கியமாகவும் விசுவாசத்துடனும் பணிபுரிந்தார்.

பின்னர், முதுமை ஏற, ஏற அவருக்கு கண்பார்வை மங்கியது. உடலின் அவயங்கள் ஓய்ந்து போயின. நிச்சலமாக ஓய்வெடுக்க விரும்பினார்.

உழைப்பதற்கு வேண்டிய சக்தி இல்லை. உடல்நிலையைத் தேற்றிக்கொள்வதற்காக விடுப்பு எடுத்துக்கொண்டு நிம்மதியாக ஓய்வை அனுபவித்துக்கொண்டிருந்தார் ரகுநாத் ராவ்.

விடுப்பு ஒரு முடிவுக்கு வந்தபோதும், பூரணமான இளைப்பாறலும் தெம்பும் கிட்டவில்லை. ஆகவே, விடுப்பை நீடிக்க வேண்டி நிறுவனத்திற்கு ஒரு விண்ணப்பம் எழுதினார்.

மனுவைப் படித்த, ரகுநாத் ராவின் நேர் உயர் அதிகாரி விடுப்பை நீடிக்கப் பரிந்துரை செய்தார். அந்நிறுவனத்தின் தலைமை அதிகாரி எதையும் சீர்தூக்கிப் பார்ப்பவர்; தயாளர்.

பரந்த மனம் படைத்த முதலாளி. விசுவாசமாகவும் யோக்கியமாகவும் செய்யப்பட்ட சேவையைக் கருத்திற்கொண்டு பணியாளரின் எதிர்கால நல்வாழ்வுக்காகச் சம்பளத்தில் பாதியை மாதாந்திர ஓய்வூதியமாக அன்புடன் அளிக்கிறார்.

இது அரசாங்கத்தின் செயல்முறை. மிகச் சிறந்த தனியார் நிறுவனங்களுங்கூட நேர்மையான பணியாளர்களை ஊக்குவிக்கும் வகையில், தகுதியின் அடிப்படையில், சமயம் வரும்போது இம்முறையையே அனுசரிக்கின்றன. 



Tuesday 6 August 2019

ஷீர்டி சாயி சத்சரிதம்

சாயி அனுப்பிய நற்செய்தியைக் கேட்டு உற்சாகமடைந்த பாபு பரீட்சைக்குச் சென்றான். கேள்வித்தாள்களில் இருந்த எல்லாக் கேள்விகளையும் நேரத்தோடு எழுதி முடித்தான்.

எழுதும் பரீட்சைகள் நடந்து முடிந்தன. பாபு எல்லாக் கேள்விகளுக்குமே நன்கு பதிலெழுதியிருந்தான். ஆயினும், அதுவரை இருந்த தன்னம்பிக்கை தளர்ந்தது. திடசித்தம் கலைந்தது; மனம் அலைபாய ஆரம்பித்தது;

வெற்றி கிட்டுமளவிற்கு கேள்விகளுக்குச் செம்மையாகவே விடையளித்திருந்தான். ஆயினும் எழுதியது தேவைக்கு குறைவு என்று நினைத்து நம்பிக்கை இழந்துவிட்டான்.

வாஸ்தவத்தில் அவன் 'எழுதும் பரீட்சைகளில்' தேர்ச்சி பெற்றிருந்தான். ஆனால், தான் எழுதியது தேவைக்குக் குறைவு என்று நினைக்க ஆரம்பித்தான். உள்ளம் சோர்ந்துபோய் வாய்மொழிப் பரீட்சைக்குப் போகாமல் விட்டுவிட்டான்.

வாய்மொழிப் பரீட்சை ஆரம்பித்தது. முதல் நாள், மனம் சோர்வடைந்த நிலையிலேயே கழிந்தது. இரண்டாவது நாள், நண்பன் ஒருவன், வீட்டிற்கு வந்தபோது பாபு சாப்பிடுவதற்கு உட்கார்ந்திருந்ததை பார்த்தான்.

நண்பன் கேட்டான், "என்ன ஆச்சரியம்! பரீட்சாதிகாரியே உன்மேல் அக்கறை காட்டுகிறாரென்பது உனக்குத் தெரியுமா? "தெண்டுல்கர் நேற்று ஏன் ஆஜராகவில்லை? போய்ப் பார்த்துக்கொண்டு வா' என்று என்னிடம் சொன்னார்.-

"எழுதும் பரீட்சைகளில் தோல்வியடைந்துவிட்டேன், வாய்மொழிப் பரீட்சைக்கு ஆஜராகி எதற்காக சிரமப்பட வேண்டும்' என்று நினைத்து அவன் மனமுடைந்து வீட்டிலேயே உட்கார்ந்துவிட்டான், என்று நான் அவரிடம் தெளிவாகச் சொன்னேன்.-

"உடனே பரீட்சாதிகாரி, "நீ போய் அவனைக் கையுடன் அழைத்துக்கொண்டு வா. எழுதும் பரீட்சைகளில் அவன் தேர்ச்சி பெற்றுவிட்டான் என்ற சந்தோஷமான செய்தியை அவனிடம் சொல்' என்று சொன்னார்."

இந்தச் செய்தி எழுப்பிய ஆனந்தத்தை யாரால் விவரிக்க முடியும்! ஒரு கணமும் தாமதியாது, சாயி மஹாராஜின் அருளை வேண்டிக்கொண்டே ஆர்வத்துடன் வாய்மொழிப் பரீட்சைக்கு ஓடினான்.

பின்னர், எல்லாமே அவனுக்கு சாதகமாக அமைந்தன. பரீட்சையில் வெற்றி பெற்றுவிட்டான். இவ்வாறாக, வேண்டுகோளை பூர்த்தி செய்துவைத்ததால் அவனுடைய தன்னம்பிக்கையை திடப்படுத்தினார் சாயி; அவ்வளவே.

மாவு அரைக்கும் எந்திரத்தின் அச்சைக் கெட்டிப்படுத்த, அதை லேசாகச் சுழற்றிச் சுழற்றி இறுக்குகிறோம். குரு பாதங்களில் நிட்டையும் இது போலவேதான். சாயி அதைச் சுழற்றிச் சுழற்றி இறுக்கிப்  பலப்படுத்தினார்.

இதயத்தை தொட்டுச் சிந்தனையை மேம்படுத்தாத வார்த்தை எதையுமே அவர் சொன்னதில்லை. பாபாவினுடைய வழிமுறை எப்பொழுதும் அவ்வாறே. இந்த ரீதியில்தான் பக்தர்களின் நிட்டையை திடப்படுத்தினார். 


Friday 26 July 2019

ஷீர்டி சாயி சத்சரிதம்

ஆங்கிலமுறை மருத்துவக் கல்லூரியில் டாக்டர் பட்டத்துக்கு படிக்கும் நல்வாய்ப்பை பெற்ற இந்த பாபு, ஒரு சமயம், வெற்றிபற்றிய சந்தேகம் அதிகம் இருந்ததால் பரீட்சைக்கு அமர்வதில்லை என்று முடிவெடுத்தான்.

அவன் இரவுபகலாக சிரமப்பட்டு படித்திருந்தான். ஒரு ஜோதிடரிடம், "பரீட்சையில் வெற்றிபெறுவேனா' என்று ஒரு கேள்வியை மேம்போக்காக கேட்டான்.

பஞ்சாங்கத்தைப் புரட்டிப் பார்த்து, நட்சத்திரம் - ராசி - கிரகங்கள் அமர்ந்திருந்த இடங்கள் - இவற்றையெல்லாம் விரல்விட்டு எண்ணிப்பார்த்த ஜோதிடரின் முகம் கூம்பியது.

ஜோதிடர் சொன்னார், "நீ மிக சிரமப்பட்டு படித்திருக்கிறாய். ஆனால், இந்த வருடத்தில் கிரகங்களின் நிலைமை சாதகமாக இல்லை. அடுத்த வருடம் கிரகங்களின் நிலைமை அதிர்ஷ்டகரமாக இருக்கிறது. நிச்சயமாகப் பரீட்சையில் அடுத்த வருடம் வெற்றி பெறுவாய்".

இதைக் கேட்டு திடுக்கிட்ட மாணவன், "சிரமப்பட்டு படித்ததெல்லாம் பயனின்றிப் போகப்போகிறதென்றால், பரீட்சைக்கு அமர்வதில் அர்த்தம் என்ன?" என்று நினைத்து மனமுடைந்து போனான்.

இது நடந்தவுடனே இம் மாணவனின் தாயார் (சாவித்ரி பாயி தெண்டுல்கர் ) ஷிர்டிக்கு போகும்படி நேர்ந்தது. சாயி பாதங்களில் நமஸ்காரம் செய்தார். சாயி அனைவரின் நலன்பற்றியும் குசலம் விசாரித்தார்.

மேலும் பேசிக்கொண்டிருந்தபோது, பல விஷயங்களுக்கு நடுவில் மகனுடைய பரீட்சை சமாசாரமும் எழுந்தது. அப்பெண்மணி தீனமான குரலில் கேட்டார், "பாபா, கிரஹங்கள் அனுகூலமாக இருந்திருந்தால் மகன் பரீட்சைக்கு அமர்ந்திருப்பான்.-

"ஜோதிடர் ஜாதகத்தைப் பார்த்துவிட்டு இவ்வருடம் வெற்றிபெற வாய்ப்பில்லை என்று சொல்லிவிட்டார். ஆகவே செம்மையாகத் தயார் செய்திருந்தபோதிலும் பையன் பரீட்சைக்கே போகப்போவதில்லை.-

"பாபா, இது என்ன கிரகங்களும் தசைகளும் ! ஏன் இவ்வருடம் இந்த ஏமாற்றம்? இவ்வருடம் ஒட்டு மொத்தமாக வெற்றிபெற்றுவிடுவான் என்று நாங்கள் எல்லாருமே எதிர்பார்த்திருந்தோமே !"

இதைக் கேட்ட பாபா சொன்னார், "நான் சொல்வதை மட்டுமே அவனைச் செய்யச் சொல்லுங்கள்! ஜாதகத்தை சுருட்டி ஒரு மூலையில் வைத்துவிட்டு அமைதியான மனத்துடன் பரீட்சை எழுதச் சொல்லுங்கள்.-

"வேறு யார் சொல்வதையும் கேட்க வேண்டா, ஜாதகத்தை எவரிடமும் காட்ட வேண்டா, சாமுத்திரிகா லட்சண சாஸ்திரத்திலும் நம்பிக்கை வேண்டா, என்று அவனிடம் சொல்லவும்.-

"பையனிடம், ' நீ வெற்றி பெறுவாய்; சோர்வு வேண்டா; அமைதியாகவும் தெம்பாகவும் பரீட்சை எழுது; பாபாவை முழுமையாக நம்பு! என்று சொல்லவும்."

பாபாவிடம் விடைபெற்றுக்கொண்டு தாயார் தம்முடைய இல்லத்திற்குத் திரும்பிவந்தார். பாபா அனுப்பிய செய்தியை மகனிடம் உற்சாகத்துடன் தெரிவித்தார். 


Friday 19 July 2019

ஷீர்டி சாயி சத்சரிதம்

காலக்கிரமத்தில் மதராஸ் கோஷ்டி ஷிர்டியிலிருந்து கிளம்ப விரும்பியது. அவர்களுக்கு அதிக அளவில் வருமானம் கிடைக்காவிட்டாலும், பரிபூரணமான ஆசீர்வாதம் கிடைத்தது.

"அல்லா மாலிக் நிறையக் கொடுப்பார். அல்லா உங்களுக்கு நல்வாழ்வு அளிப்பார்?". இந்த ஆசீர்வாதமே அவர்களுக்கு யாத்திரையின் போது பல நன்மைகளை விளைவித்தது.

சாயியின் ஆசீர்வாதங்களுடன், அவருடைய நாமத்தைப் பகலிலும் இரவிலும் தியானம் செய்துகொண்டு யாத்திரையைத் தொடர்ந்தனர். எள்ளளவு இன்னலும் எங்கும் ஏற்படாது பிரயாணம் செய்தனர்.

சாயி ஆசியளித்தவாறே, வழியில் எந்தவிதமான தடங்கலோ இன்னலோ ஏற்படாமல் பல புண்ணிய தரிசனங்களை முடித்துக்கொண்டு சுகமாகத் திரும்பிவந்து இல்லத்தைச் சேர்ந்தனர்.

அவர்கள் திட்டமிட்டிருந்த புனிதப் பயணங்களுக்கு மேலாகவே அநேக தரிசனங்கள் பெற்றனர். சாயியின் ஆசீர்வாதம் நிகழ்த்திய அற்புதத்தைப் பற்றி பேசிப் பேசி ஆனந்தத்தால் நிறைந்தனர்.

மேலும், மகானின் "அல்லா நல்வாழ்வு அளிப்பர்" என்ற மங்களகரமான ஆசீர்வாதம் எழுத்துக்கெழுத்து சத்தியாமாகி, அவர்களுடைய மனோரதங்கள் அனைத்தும் நிறைவேறின.

மதராஸிலிருந்து வந்த புனிதப் பயணிகள் நற்குணங்கள் பொருந்திய சாத்விகர்கள்; இறையுணர்வு பெற்றவர்கள்; பக்தர்கள். சாயி அவர்களுக்கு பந்தவிமோசனம் (கட்டுகளிலிருந்து விடுபடுதல்) அளித்தார்.

இதுபோலவே, சுவாரசியமான இன்னொரு கதை சொல்கிறேன். கதை கேட்பவர்கள் பயபக்தியுடன் கேட்டால் ஆச்சரியம் அடைவார்கள்.

பரமதயாளரும் பக்தர்களின் விருப்பங்களை நிறைவேற்றும் கற்பக விருக்ஷமுமான சாயி, அன்பார்ந்த பக்தர்களின் ஆசைகளை சிரமம் பார்க்காமல் எவ்வாறு எப்பொழுதும் முழுமையாக நிறைவேற்றி வைக்கிறார் என்பது நன்கு விளங்கும்.

பாந்த்ரா நகரம் (தற்போது பம்பாய் மாநகரத்தின் புறநகர்) தாணே ஜில்லாவில் இருக்கிறது. அங்கு வாழ்ந்துவந்த ரகுநாத்ராவ் தெண்டுல்கர் எனும் பெயர் கொண்ட பக்தர், தைரியசாலி; கூர்த்த மதியாளர்; கல்வி கேள்விகளில் சிறந்தவர்.

எப்பொழுதும் சந்தோஷமாக இருந்த அவர், சாயியின் பாதகமலங்களின் மீது மிகுந்த பிரேமை கொண்டு அவருடைய போதனையாகிய மகரந்தத்தின்மேல் ஆசை வைத்து இடைவிடாது சாயிநாம ஜபம் செய்துவந்தார்.

சாயியின் லீலைகளை 'பஜனைமாலை' என்ற ரூபத்தில் நூலாக இயற்றியவர் இவரே. பக்தியுடனும் பிரேமையுடனும் இதை வாசிப்பவர் ஓவ்வொரு சொல்லிலும் சாயியைக் காண்பார்.

சாவித்திரி என்பது அவருக்கு மனைவியின் பெயர். பாபு அவர்களின் மூத்த மகன். சாயியின் லீலையையும் அவர்களுடைய விசித்திரமான அனுபவத்தையும் பற்றிக் கேளுங்கள்.
 
 

Friday 12 July 2019

ஷீர்டி சாயி சத்சரிதம்

"உம்முடைய இல்லத்தில் காட் பிபி இல்லை? முகூர்த்த லக்கினத்தின்போது இந்த முஸ்லீம் தேவதையை அவளுக்குண்டான பூஜை, படையல்களைச் செய்து திருப்தி செய்து மகிழ்ச்சியுறச் செய்வதில்லை?"

அவர் (ம.ம), "ஆம்" என்று சொல்லி ஒப்புக்கொள்கிறார். "வேறென்ன வேண்டும்?" என்று பாபா கேட்டதற்கு, தம் குரு ராமதாசரை தரிசனம் செய்ய ஆவலாக இருக்கிறது என வேண்டுகிறார்.

மஹராஜ் அவரைத் திரும்பிப் பார்க்கச் சொல்கிறார். அவ்வாறு செய்தவுடன் , சமர்த்த ராமதாசர் சரீரத்துடன் தம்மெதிரே நிற்பதை அவர் (ம.ம) காண்கிறார்.

ராமதாசருடைய பாதங்களில் விழுந்தபோது ராமதாசர் அங்கிருந்து அப்பொழுதே மறைந்துவிடுகிறார். விஷய ஆர்வம் கொண்ட அவர் (ம.ம) பாபாவைக் கேள்வி கேட்க ஆரம்பிக்கிறார். -

"பாபா, உங்களுக்கு நிறைய வயதாகிவிட்டது. உடலும் கிழடு தட்டிவிட்டது. உங்களுடைய மொத்த ஆயுள் எவ்வளவென்று உங்களுக்கு தெரியுமா?"

"என்ன, நீர் என்ன சொல்கிறீர்? நான் கிழவனாகிவிட்டேன் என்றா? எனக்குப் போட்டியாக ஓடும் பார்க்கலாம்!" என்று கேட்டுக்கொண்டே சாயி ஓட ஆரம்பிக்கிறார். அவரும் (ம.ம) சாயியை துரத்திக்கொண்டு ஓடுகிறார்.

ஆனால், சாயி வேகத்தை அதிகரித்துக்கொண்டே போய்த் தம்முடைய பாதையில் புழுதி படலத்தைக் கிளப்பிவிடுகிறார். அந்தக் குழப்பத்தில் கண்ணுக்குத் தெரியாமல் போய்விடுகிறார். (கனவுக்கு காட்சி விவரணம் இங்கு முடிகிறது) மதராஸ் மனிதர் தூக்கத்திலிருந்து விழித்துக்கொண்டார்.

முழுமையாக விழித்துக்கொண்டபின் கனவில் நடந்ததை பற்றிச் சிந்திக்க ஆரம்பித்தார். உடனே அவருடைய மனம் மாறியது. பாபாவின் மஹிமையைப் புரிந்துகொண்டு புகழ்ந்தார்.

பாபாவின்  அற்புதமான லீலையைக் கண்டபின் அவரிடம் பக்தி ஏற்பட்டது. பாபா விஷயத்தில் முன்பிருந்த சந்தேகங்களும் எதிர்மறைச் சிந்தனைகளும் பறந்தோடின.

அது ஒரு கனவுதான் என்றாலும், அக் கனவில் எழுப்பப்பட்ட கேள்விகளையும்  பதில்களையும் கதை கேட்பவர்கள் கிரஹித்துக்கொண்டால் கனவின் மறைபொருள் புரியும்.

இந்தக் கேள்வி-பதில் சம்பாஷனையில் இருந்து மதராஸ் மனிதர் ஒரு மகத்தான படிப்பினை பெற்றார். சாயி சம்பந்தமாக இருந்த விரோதமனப்பான்மையை நையாண்டியும் கேலியும் விரட்டிவிட்டன.

மறுநாள் காலைநேரத்தில் பஜனை கோஷ்டி மசூதிக்கு தரிசனத்துக்காக  வந்தது. சாயிநாதர் கிருபை செய்து இரண்டு ரூபாய் மதிப்பிற்கு பர்பி கொடுத்தார்.

தம்முடைய பாக்கெட்டிலிருந்து எடுத்து இரண்டு ரூபாய் கொடுத்தார். அவர்களை மேலும் சில நாள்களுக்கு ஷிரிடியில் தங்க வைத்தார். இந்த நாள்கள் பஜனையிலும் பூஜையிலும் கழிந்தன. 

Saturday 6 July 2019

ஷீர்டி சாயி சத்சரிதம்

மஹராஜ் அவரிடம் கேட்கிறார், "ஆனால், உமக்கு அந்த அளவிற்கு விசுவாசம் இருக்கிறதா?" "ஆமாம்" என்று அவர் (ம.ம) சொன்னதும் பாபா அவரைக் கண்களை மூடிகொள்ளச் சொல்லி ஆணை இடுகிறார்.

பாபாவின் ஆணைப்படி அவர் (ம.ம) நின்றிருந்தவாறே கண்களை மூடியவுடன் திடீரென்று யாரோ கீழே விழுந்ததுபோல அவருக்குத் தடாலென்ற சத்தம் கேட்கிறது.

அச் சத்தத்தைக் கேட்டு திடுக்கிட்ட அவர் (ம.ம) உடனே கண்களைத் திறந்து பார்க்கிறார். அவர் கட்டுகளிலிருந்தும் சிறையிலிருந்தும் விடுபட்டு விட்டார். மாறாக, போலீஸ்காரர் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து கிடக்கிறார்.

அவர் (ம.ம) திகிலடைந்து பாபாவை நோக்குகிறார். பாபா புன்னகை புரிந்துகொண்டே அவரிடம் சொல்கிறார், "பலே, பலே! நீர் இப்பொழுது வசமாக மாட்டிக்கொள்ளப் போகிறீர்.-

"போலீஸ் அதிகாரிகள் இங்கு வருவர். நடந்ததனைத்தையும் நோட்டம் விட்டபின், அடக்கமுடியாத குரூரமான கைதியாக உம்மை மட்டுமே காண்பர். மறுபடியும் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்படுவீர்".

அவர் (ம.ம) மனம் திறந்து பதில் சொல்கிறார், "பாபா, நீங்கள் சொல்வது போலத்தான் நடக்கும். என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள்; ஆனால், இப்பொழுது விடுதலை செய்யுங்கள்! உங்களைத் தவிர என்னைக் காப்பாற்றக்கூடியவர் எவரும் இல்லை".

இதைக் கேட்ட, பாபா அவரிடம் சொல்கிறார், "மறுபடியும் உம் கண்களை மூடிக்கொள்ளும்". அவர் (ம.ம) கண்களை மூடி மறுபடியும் திறந்தபின் இன்னொரு அற்புதம் காண்கிறார்.

இப்பொழுது அவர் (ம.ம) சிறைக்கூண்டுக்கு வெளியே இருக்கிறார். பாபா அருகில் இருக்கிறார். அவர் பாபாவுக்கு சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்கிறார். பாபா அவரை வினவுகிறார்.-

"நீர் இப்பொழுது செய்யும் நமஸ்காரத்திற்கும் ஏற்கெனவே செய்த நமஸ்காரங்களுக்கும் ஏதாவது வித்தியாசம் உண்டா? யோசித்துப் பதில் சொல்லும்!"

அவர் (ம.ம) கூறுகிறார், "ஓ, பூமிக்கும் வானத்திற்குமுள்ள வித்தியாசம் உண்டு. இதுவரை செய்யப்பட்ட நமஸ்காரங்கள் கேவலம் திரவிய லாபத்திற்காகவே செய்யப்பட்டன. ஆனால், இப்பொழுது செய்த நமஸ்காரமோ உங்களை பரமேச்வரனாகவே கருதிச் செய்யப்பட்டது!-

"முன்பு உங்களிடம் விசுவாசம் இல்லை. மாறாக, நீங்கள் ஒரு முஸ்லீமாக இருந்துகொண்டு, ஹிந்துக்களை மதம் மாற்றி பாழ்படுத்துவதாக எண்ணி ரோஷமடைந்தேன்."

"ஆகவே, பாபா கேட்கிறார், "உம்முடைய மனதில் முஸ்லீம் தெய்வங்களின் மீது பக்தி இல்லையா?" அவர் (ம.ம) "இல்லை" என்று பதிலளிக்கிறர்.

பாபா மறுபடியும் அவரைக் கேட்கிறார், "உம்முடைய இல்லத்தில் பஞ்ஜா இல்லை? தாபூத் தினத்தன்று அதை நீர் தொழுவதில்லை? உம்முடைய மனத்தையே கேளும்! 


Friday 28 June 2019

ஷீர்டி சாயி சத்சரிதம்

கணவன் இவ்வாறு பல குதர்க்க வாதங்கள் செய்து மனைவியைக் கேலி செய்து அவமானப்படுத்தினான். ஆனால், அப்பெண்மணி மனந்தளரவில்லை; ஏனெனில், அவருக்கு அசத்தியமான கற்பனை என்றால் என்னவென்றே தெரியாது.

அப்பெண்மணி இயல்பாகவே ஆன்மீக நாட்டம் படைத்தவர். அவர் இதற்கு முன்பு பல சமயங்களில் ஸ்ரீராம தரிசனம் திரும்பத் திரும்பப் பெற்று ஆனந்தப் பரவசமடைந்தவர்.

ஆயினும், பிற்காலத்தில் பணத்தின்மேல் மோகமும் பேராசையும் ஏற்பட்டது. பணத்தாசை பிடித்த இடத்தில் இறைவன் எப்படி இருப்பான்? ஸ்ரீராம தரிசனம் நின்றுபோயிற்று! பணத்தாசையின், இயல்பான விளைவு இதுவேயன்றோ?

பாபாவுக்கு ஈதனைத்தும் தெரிந்திருந்தது. பெண்மணியின் பாவச் செயல்கள் அனைத்தும் அழிந்துவிட்டதை நன்கு அறிந்து, மீண்டும் ஸ்ரீராம தரிசனம் அளித்து அருள் செய்தார்.

இந்த அதிசயத்தை எவ்வாறு விவரிப்பேன்! அன்று இரவே அப் பெண்மணியின் கணவர் (மதராஸ் மனிதர்) தூக்கத்தில் பயங்கரமான கனவொன்று கண்டார்.

(சுலோகம் 53 லிருந்து 80 வரை கனவுக்காட்சி. நிகழ்காலத்தில் விவரிக்கப்பட்டிருக்கிறது. (ம.ம.) = மதராஸ் மனிதர்)

அவர் (ம.ம.) ஒரு நகரத்தில் இருக்கிறார். ஒரு போலீஸ்காரர் அவரைக் கைது செய்து கைகளை பின்புறத்தில் கட்டிவிட்டு அவருக்குப் பின்னால் நின்றுகொண்டு கைக்கட்டை தம் கைகளால் மேலும் இறுக்குகிறார்.

அவ்விடத்திலேயே கம்பிபோட்ட சிறைக்கூண்டு ஒன்று இருக்கிறது. பாபா அதற்கு வெளியே ஆடாது அசையாது அமைதியாக நின்றவாறு என்ன நடக்கிறதென்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறார்.

பாபா அருகில் இருப்பதை பார்த்து, அவர் (ம.ம) சோகமான முகத்துடன் கைகளைக் கூப்பிக்கொண்டு தீனமான குரலில் கேட்கிறார்,-

"உங்களுடைய கீர்த்தியைக் கேள்விப்பட்டு உமது பாதங்களை நாடி வந்தோம். நீங்களே இங்கே பிரத்யக்ஷ்மாக இருக்கும்போது ஏன் இந்தத் துயர நிகழ்ச்சி?"

மஹராஜ் பதில் சொல்கிறார், "நம்முடைய கர்ம வினைகளை அனுபவித்தே தீரவேண்டும்!" அவர் (ம.ம) சொல்கிறார் , " நான் அம்மாதிரி கர்மம் ஏதும் செய்ததில்லை!-

"இவ்வளவு பெரிய கேடு நேருமாளவிற்கு நான் இந்த ஜென்மத்தில் ஏதும் செய்யவில்லை ." மஹராஜ் அப்பொழுது சொல்கிறார், "இந்த ஜென்மத்தில் செய்யாவிட்டாலும் முன்ஜன்மங்களில் செய்திருப்பீர்".

அவர் (ம.ம) பதில் சொல்கிறார், "முந்தைய ஜன்மங்களைப் பற்றி எனக்கென்ன தெரியும்? அப்படியே நான் ஏதாவது செய்திருந்தாலும் உங்களுடைய தரிசனத்தால் அது சாம்பலாகிப் போயிருக்க வேண்டும்?-

"உங்களை தரிசனம் செய்தவுடனே ஏன் என்னுடைய பாவங்கள் தீயிலிடப்பட்ட துரும்புபோல் முழுவதும் எரிந்து சாம்பலாகிப் போய் எனக்கு முக்தியை அளிக்கவில்லை?' 


Friday 21 June 2019

ஷீர்டி சாயி சத்சரிதம்

மற்றவர்களுக்கெல்லாம் என்றும்போல் சாயிநாதர். ஆனால், அவ்வம்மையாரின் கண்களுக்கோ ஜானகிகாந்தர் (ஸ்ரீராமர்), அவருடைய கண்களிலிருந்து ஆனந்தக் கண்ணீர் பெருகுவதைக் கண்டு மக்கள் ஆச்சரியமடைந்தனர்.

இரண்டு கைகளையும் கொட்டிக்கொண்டு ஆனந்தக் கண்ணீர் பெருக்கும் அபூர்வமான காட்சியைப் பார்த்துக் குழுமியிருந்தவர்கள் வியப்படைந்தனர்.

வியப்படைந்தது மட்டுமின்றி, விஷயம் என்னவென்று அறிந்துகொள்ளவும் ஆர்வமுற்றனர். ஏன் இந்த ஆனந்தக்கண்ணீர்? அவருக்கு மாத்திரம் பிரேமையின் ஆவேசம் எங்கிருந்து வந்தது?

பின்னர், மாலை நான்கு மணியளவில் அவ்வம்மையார் ஆனந்தத்தால் நிரம்பிய மனத்துடன் தம்மிச்சையாகவே, சாயி தமக்கு ஸ்ரீராமராக தரிசனம் தந்த அற்புத லீலையை கணவரிடம் விவரித்தார்.

"நீலோத்பலப் பூவைப் போன்ற நிறமுடையவரும் பக்தர்களின் ஆசைகளை கற்பக விருட்சத்தைப் போல் நிறைவேற்றுபவரும் பரதனுக்கு மூத்தவரும் தசரதருக்குப் புத்திரரும் சீதாமணாளருமான ஸ்ரீராமரை நான் கண்டேன்.-

"நான் கண்டது, மஞ்சள் பீதாம்பரம் அணிந்து கிரீட குண்டலங்களுடன் ஜொலித்துக் கொண்டு வனமாலையும் அணிந்த, நான்கு புஜங்களுடன் கூடிய ஜானகி காந்தரையே.-

"கைகளில் சங்கு - சக்கரம் - கதை, மார்பில் ஸ்ரீவத்சம் என்றழைக்கப்படும் மரு, கழுத்தைச் சுற்றிக் கௌஸ்துப மாலை, இவற்றை அணிந்துகொண்டவரும் புருஷோத்தமரும் உள்ளங்கவரும் உருவமுடையவரும் அப்பாலுக்கும் அப்பாற்பட்டவருமாகிய ஸ்ரீராமரை கண்டேன்."-

அவர் மேலும் சொன்னார், "ஈடிணையற்ற லீலைகள் புரிவதற்காக மனித அவதாரம் ஏற்ற மஹாவிஷ்ணுவும், ஜானகியின் இதயத்தில் குடிகொண்டு மகிழ்விப்பவருமான ஸ்ரீராமரை நான் வில்லேந்திய கோலத்தில் கண்டேன்.-

"வெளிப்பார்வைக்கு அவர் ஒரு பக்கீராக தோன்றலாம்; வீடுவீடாகச் சென்று பிச்சையும் எடுக்கலாம். எனக்கு அவர் ஜானகியின் மனத்தைக் கவர்ந்த, வில்லேந்திய ஸ்ரீராமராகவே தெரிந்தார்.-

"மேலும், அவர் மேலெழுந்த வாரியாகப் பார்த்பதற்கு ஒரு அவலியாக (முஸ்லீம் முனிவராக) இருப்பினும், மற்றவர்களுக்கு எப்படித் தோன்றினாலும், எனக்கு ஜானகியின் மனத்தைக் கவர்ந்த கோதண்டபாணியாகவே தெரிந்தார்."

அவ்வம்மையார் பரமபக்தியும் பாவமும் கொண்டவர்; கணவனோ பணத்தாசை பிடித்த சுயநலவாதி. "பெண்ணினம் இப்படித்தான் பேசும். ரகுபதி (ஸ்ரீராமர்) இந்த இடத்தில் இப்பொழுது எப்படித் தோன்ற முடியும்?

"நம்பிக்கையுள்ள வெகுளிகளுக்கு மனத்தில் என்ன இருக்கிறதோ அதுவே காட்சியாகத் தெரிகிறது. நாமெல்லாம் சாயியைப் பார்த்துக்கொண்டிருந்தபோது இவளுக்கு மட்டும் எப்படி ராமரூபம் தெரிந்தது?" 

Saturday 15 June 2019

ஷீர்டி சாயி சத்சரிதம்

பாபா அன்புடன் செல்லமாக கொஞ்சும் போதிலும் அமனியின் மனம் ரூபாயில்தான் இருக்கும். "பாபா கொடு, சீக்கிரம் கொடு!" என்று அவருடைய பாக்கெட்டில் கண்வைத்தவாறே கேட்பாள்.

அமனியாவது ஒரு சிறு குழந்தை! ஆனால், பெரியவர்களுக்கும் கனவான்களுக்குமே இப் பேராசை இருக்கிறது. காசுக்காகவே சுயநலமாக அனைவரும் அலைகின்றனர். ஆன்மீக வாழ்வில் நாட்டம் கொண்டவர் எவரோ ஒருவரே.

அமனி பாபாவின் மடியில் அமர்ந்திருப்பாள். தாயாரோ சற்று தூரத்தில் கிராதிக்கு அப்பால் நின்றுகொண்டு 'கொடுக்கும்வரை அவரை விடாதே' என்று விளங்கும்படி சைகை செய்வாள்.

"என்னைக் கொள்ளையடிக்க வந்த உதவாக்கரையே, நான் உன் அப்பனுக்கு கடன் பட்டிருக்கிறேனா என்ன? என்னைப் பிடுங்கியெடுக்கிறாயே " என்று பாபா கோபத்துடன் வினவுவார்.

ஆனால், இந்த கோபம் பொய்க்கோபமே. இதயத்திலோ அன்பின் அலைகள் பொங்கின. பாக்கெட்டில் கையை விட்டு ஒரு ரூபாயை எடுப்பார்.

ரூபாயை அந்தச் சிறிய டப்பாவில் இட்டு, டப்பென்று மூடுவார். டப்பா கையில் கிடைத்தவுடனே அமனி வீடு நோக்கிப் பாய்வாள்!

இது காலை உணவு நேரத்தின் நடப்பு. இதுபோலவே லெண்டித் தோட்டத்திற்குப் போகும்போதும் அமனியை அன்புடன் கடிந்துவிட்டு, மேலும் ஒரு ரூபாய் கொடுப்பார்.

இவ்வாறாக, அவர் தினமும் அமனிக்கு இரண்டு ரூபாயும் ஜமலிக்கு   ஆறு ரூபாயும் தாதா கேள்கருக்கு ஐந்து ரூபாயும் பாக்கியாவுக்கும் சுந்தரிக்கும் தலா இரண்டு ரூபாயும் கொடுப்பார்.

தினமும் பத்திலிருந்து பதினைந்து ரூபாய்வரை தாத்யாவுக்கும் பதினைந்திலிருந்து ஐம்பது ரூபாய் வரை பக்கீர் பாபாவுக்கும் எட்டு ரூபாய் ஏழை எளியவர்களுக்கும் தவறாது கொடுத்தார்.

இவ்வாறான தர்ம ஒழுக்கத்தை பற்றிக் கேள்வியுற்ற மதராஸ் கோஷ்டி, பாபாவிடமிருந்து நாமும் பணம் பண்ணலாமே என்று சுயநலமாக சிந்தித்தது இயற்கையே. பாபாவின் சந்நிதியில் தினமும் தவறாது நால்வரும் பஜனை செய்தனர்.

வெளிப்பார்வைக்கு பஜனை இனிமையாக இருந்தது. அந்தரங்கத்தில் அவர்களை பணத்தாசை பிடித்து ஆட்டியது. மேலும் மேலும் பாபா பணம் தருவார் என்ற நம்பிக்கையில் நால்வரும் ஷீர்டி வாசத்தை நீடித்தனர்.

நால்வரில் மூவர் பேராசை பிடித்தவர்கள்; பாபாவிடம் பணம் கறக்கவேண்டும் என்றே விரும்பினார். ஒருவர் மட்டும் (மனைவி) நேர்மையானவர். சாயியின் மீது தூயபக்தியுடனும் அன்புடனும் பஜனை பாடினார்.

அவருடைய சாயி பக்தியையும் பிரேமையையும், மேகத்தைக் கண்டு மகிழ்ந்து நடனமாடும் மயிலுக்கும் சந்திரனைக் கண்டு மகிழும் சகோர பட்சிக்கும் ஒப்பிடலாம்.

கிருபா மூர்த்தியான சாயி அவ்வம்மையாரின் பக்தியை மெச்சி, ஒருநாள் மதிய ஆரத்தியின்போது அவருக்கு ஸ்ரீராமனாகக் காட்சியளித்தார். 


Friday 7 June 2019

ஷீர்டி சாயி சத்சரிதம்

பாபா விரும்பினால் வழிப்போக்கர்களுக்கும் பணம் விநியோகம் செய்வார். கிருபா மூர்த்தியான சாயிநாதர் திக்கற்றவர்களையும் ஏழைஎளியவர்களையும் அன்புடன் நலன் விசாரித்து அவர்களுடைய தேவைகளை பூர்த்திசெய்து, துயர் துடைத்து விடை கொடுத்தனுப்புவார்.

அந்த கோஷ்டியில் ஓர் ஆடவரும் மூன்று பெண்டிரும் இருந்தனர். அதாவது , ஒரு மனிதர், அவர் மனைவி, மக்கள், மைத்துனி - ஆக மொத்தம் நால்வர் இருந்தனர். அவர்கள் மஹானை தரிசனம் செய்ய விரும்பினர்.

சாயி தரிசனம் செய்த பிறகு அந்த கோஷ்டி திருப்தியும் சந்தோஷமும் அடைந்தது. தினமும் சாயி சந்நிதியில் நியமமாக பஜனை செய்தனர்.

அவர்கள் ராமதாச மார்க்கத்தைச் சேர்ந்தவர்கள். மிகுந்த உற்சாகத்துடன் பஜனை செய்வார்கள். பாபாவும் தமக்குத் தோன்றியவாறு ஒரு ரூபாயோ அரை ரூபாயோ கொடுப்பார்.

சில நாள்களில் பாபா அவர்களுக்கு பர்பி கொடுப்பார்; சில நாள்களில் வெறுங்கையுடன் அனுப்பி விடுவார். ஆதியிலிருந்தே பாபாவின் செயல்பாடுகள் இப்படித்தானே இருந்தன; எதையும் நிச்சயமாகச் சொல்ல முடியாதே!

பாபா பணத்தை வாரிவாரி வழங்கியதென்னவோ உண்மைதான்! அதில் உண்மையில்லாதது ஏதும் இல்லை. ஆனால், அவர் எல்லாருக்குமே கொடுப்பார் என்று சொல்ல முடியாது! அவருடைய மனோகதியை எவராலும் அறிந்துகொள்ள முடியவில்லை.

பக்கீர்கள், பிச்சைக்காரர்கள், ஆண்டிகள், பரதேசிகள் - இவர்களனைவரும் பாபாவை நாடி வந்தவண்ணமாக இருந்தனர். பாபா பரம தயாளராக இருந்தாலும், அவர்கள் எல்லாருக்குமே தருமம் கொடுக்கவில்லை.

யாருக்கு லாபகாலம் வந்ததோ, அவரே பாபாவின் கையால் தொடப்பட்ட பணத்தைப் பெறும் பாக்கியத்தை அடைந்தார்.

இது சம்பந்தமாக ஒரு கதை கேட்டால் சந்தோஷமடைவீர்கள். ஆகவே, முதலில் அதைச் சொல்லிவிட்டுப் பிறகு தொடர்கிறேன்.

காலையில் சொற்ப ஆகாரம் உண்டபின் பாபா துனிக்கு அருகிலிருந்த கம்பத்தடியில் உட்காருவார். அந்நேரத்தில் அமனி என்னும் சிறு பெண்குழந்தை வருவாள்.

மூன்று பிராயம் நிரம்பிய இச் சிறுபெண், உடையேதும் அணியாமல் கையில் ஒரு சிறிய தகர டப்பாவை எடுத்துக்கொண்டு சரியான நேரத்திற்கு வந்துசேர்வாள். கூடவே தாய் ஜமலியும் வருவாள்.

அமனி, பாபாவின் மடியில் ஏறி உட்கார்ந்துகொண்டு டப்பாவை அவரிடம் கொடுத்து, "பாபா, ரூப்பையா, ரூப்பையா" என்று அவருடைய கையைப் பிடித்துக்கொண்டு கெஞ்சுவாள்.

பாபாவுக்குப் பொதுவாகக் குழைந்தைகளின் மீது அமோகமான அன்பு. புஷ்டியாகவும் அழகாகவும் இருந்த அமனியை நேசித்தார்; அவளை இறுக்க அணைத்துக்கொண்டு கொஞ்சுவார்; முத்தம் கொடுப்பார்.