valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 3 December 2020


 ஷீர்டி சாயி சத்சரிதம்

"போதும் இந்த ஏவலாள் உத்தியோகம். சுதந்திரமான வியாபாரம் இதைவிட எவ்வளவோ மேன்மையாக இருக்கும்". சிலகாலம் கழிந்த பின்னர், இறைவன் ஜனீக்கு கருணை புரிந்தான்.


அடிமைத் தொழிலும் பிறரைச் சார்ந்த வாழ்வும் அகன்றது. ஜனீ சுதந்திரத்தை அனுபவித்தார். சொந்தமாகவே உணவு வசதியுடன் கூடிய ஒரு தங்கும் விடுதியை ஆரம்பித்தார்.


'ஆனந்தாச்ரமம்' என்று அதற்குப் பெயர் வைத்தார். கடுமையாக உழைத்தார். நாளுக்குநாள் அவ்விடுதியின் புகழ் பரவி அவருக்கு மகிழ்ச்சியையும் மனநிறைவையும் அளித்தது.


பாபா சூசகமாகத் தெரிவித்தாவாறே அனைத்தும் நடந்ததை உணர்ந்து, சாயிபாதங்களில் விசுவாசம் வளர்ந்தது; நாள்கள் செல்லச் செல்ல திடமான பக்தியாக சொரூபம் ஏற்றது. பாபாவின் அறிவுரையைப் பின்தொடர்ந்த அனுபவம் ஜனீயின் மனத்தில் அழியாத சுவடுகளை விட்டுச் சென்றது.


சாயியின் திருவாய்மொழி அருளிய அனுபவம் ஜனீக்கு கிடைத்தது; அதன் பயனாக கேட்பவர்களுக்கு இப்பொழுது ஒரு காதை கிடைக்கிறது. அவருக்கு சாயியின் மீதிருந்த பிரேமை பெருகியது. சாயியின் செயற்கரிய செயல்கள் கற்பனைக்கு எட்டாதவை அல்லவோ!


அவருடைய பேச்செல்லாம் தம்மைப்பற்றியதுபோல் தோன்றும்; ஆனால், அவர் வேறொருவரைப் பற்றி பேசிக்கொண்டிருப்பார். இரவுபகலாக பாபாவுடன் இருந்தவர்கள் இந்த அனுபவத்தைப் பெற்றனர்.


பின்னர், ஒன்றன்பின் ஒன்றாக இவ்வனுபவங்கள் தொடர்ந்தன. நாராயண் ஜனீயின் பக்தியும் ப்ரேமையும் வளர்ந்தது. அவருடைய பக்திபாவத்தை வெளிப்படுத்தும் புத்தம் புதிய கதையொன்றைக் கேளுங்கள்.

ஒரு சமயம் நாராயண் ஜனீயின் நண்பர் ஒருவரைத் தேள் கொட்டிவிட்டது. அவர் வலியாலும் வேதனையாலும் துடித்தார். 

 

கொட்டுவாயில் தடவுவதற்கு பாபாவின் உதீயே சிறந்த மருந்து. ஆனால், எங்கே தேடியும் ஜனீக்கு உதீ கிடைக்கவில்லை.

நண்பருக்கு வேதனை பொறுக்கமுடியவில்லை; ஆயினும் உதீ எங்கும் கிடைக்கவில்லை. பாபாவின் நிழற்படத்தை நோக்கினார்; கருணை வேண்டினார் ஜனீ.


படத்தின் கீழே ஊதுவத்தியிலிருந்து விழுந்த சாம்பல் சிறிது இருந்ததை ஜனீ பார்த்தார். அக்கணமே அதை ரட்சிக்கும் உதீயாகவே நினைத்தார்.


அந்தச் சாம்பலிலிருந்து ஒரு சிட்டிகை எடுத்துத் தேள்கொட்டிய இடத்தில சாயிநாம மந்திரத்தைச் சொல்லிக்கொண்டே தடவினார். நம்பிக்கை எப்படியோ அப்படியே அனுபவம்; நம்பியவர்க்கு நடராஜா!


சாம்பலை விரல்களால் கொட்டுவாயில் பூசியவுடனே வேதனை, வந்தவழியே சென்று மறைந்ததென்று சொன்னால், கேட்பதற்கு நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். இருவரும் பிரேமையால் மனம் நெகிழ்ந்தனர்.