ஷீர்டி சாயி சத்சரிதம்
இரண்டு அல்லது மூன்று அதிகம் போனால் நான்கு ரூபாய் மதிப்புள்ள ஆட்டுக்குப் பதினாறு ரூபாய் கொடுத்து வாங்கியிருந்தார். தாத்யாபா (தாத்யா கோதே பாடீல்) இந்த வினோதமான செயலைக்கண்டு வியந்துபோனார்.
ஆட்டுக்காரன் கேட்ட அதிக விலையை பேரமே ஏதுமின்றி அப்படியே கொடுத்து பாபா வாங்கியதை அவர்கள் கண்கூடாகக் கண்டதால், தாத்யாவும் மாதவராவும் பாபாவின் செய்கையை வெறுப்புடனும் கோபத்துடனும் எதிர்த்தனர்.
'இரண்டே ரூபாய் பெறுமானமுள்ள பொருளுக்கு பதினாறு ரூபாய் எதற்காகக் கொடுத்தார்? பாபாவுக்குப் பணத்தின் அருமை தெரியாததால் தம் இஷ்டத்திற்கு எது வேண்டுமானாலும் செய்கிறாரோ? இந்த வாதமும் திருப்திகரமானதாக இல்லையே! -
'எதற்காக பாபா இவ்வளவு மோசமான பேரமொன்றைச் செய்தார்? இப்படியா யாராவது பேரம் செய்வார்கள்? பேரமா இது"? என்றெல்லாம் இருவரும் மனதுக்குள்ளேயே பொருமிப் பிராண்டிக்கொண்டனர். இருவருமே பாபாவை தூஷித்தனர். (நிந்தித்தனர்).
பாபாவை எப்படி அவ்வாறு ஏமாற்ற முடியும்? கிராமத்து மக்கள் இதைப் பார்க்க ஒன்றுகூடினர். ஆனால், பாபா ஒரு துரும்பும் நஷ்டம் ஏற்படாததுபோலச் சலனமேதுமின்றி அமைதியாக இருந்தார்.!
தாத்யாவும் சாமாவும் இவ்விஷயத்தில் கட்டுப்படைந்து பாபாவின்மேல் தப்புக் கண்டுபிடித்தாலும், பாபாவென்னவோ சிறிதும் அமைதியிழக்கவில்லை. அவர் சாந்தமாகவும் சந்தோஷமாகவும் இருந்தார்.
பணிவுடன் அவர்கள் இருவரும் பாபாவைக் கேட்டனர், "இது என்ன விசித்திரமான உதாரச் செய்கை? 32 ரூபாய் வீணாகிப் போய்விட்டதல்லவா?"
பணத்தைப்பற்றிய பேச்சு வந்தவுடன் பாபா புன்னகையுடன் தமக்குத் தாமே பேசிக்கொண்டார். "சரியான பைத்தியக்கார பயல்கள் இவர்கள். ஓ! எப்படி இவர்களுக்கு புரியவைப்பேன்.?"
ஆயினும் பாபாவினுடைய சாந்தமும் அமைதியும் அருமையிலும் அருமை. பாபாவின் திடசித்த நிலை அணுவளவும் குறையவில்லை; இதுவே பரமசாந்தியின் லட்சணம் (அடையாளம்); கூடியிருந்தவர்கள் அனைவருமே ஆச்சரியப்பட்டனர்.
கோபத்தை அறியாதவரும் பரமசாந்தியை அனுபவிப்பவரும் எவ்வுயிரிலும் இறைவனைக் காண்பவருமான ஒருவரை விவேகமின்மை எப்படித் தொடமுடியும்?
விவேகஞானம் உள்ளவர் எவரும், எக்காலத்திலும் கோபத்தை அனுமதிக்கமாட்டார். எதிர்பாராதவிதமாக அதுமாதிரி சந்தர்ப்பம் ஏதாவது எழுந்தால், சாந்தி என்னும் பொக்கிஷம் திறந்துகொள்ளும்.
சதாசர்வகாலமும் 'அல்லாமாலிக்' தியானம் செய்பவரின் பெருமையை எவ்வாறு எடுத்தியம்புவது? அவருடைய வாழ்க்கை புரிந்துகொள்ளமுடியாததும் பூரணமானதும் மிகப்புனிதமானதும் நலம் பல தரக்கூடியதுமாகும்.
காருண்யமூர்த்தியும் ஞானகர்ப்பமும் வைராக்கியவாதியும் சாந்திக்கடலுமான அவர் முக்காலத்திற்கும் உண்மையாக என்ன சொன்னார் என்பதைக் கேளுங்கள்.