valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday, 23 October 2025

 ஷீர்டி சாயி சத்சரிதம் 

அன்றிரவு சாவடி ஊர்வலம் நடந்தது. சபட்னேகர் பிரேமையுடனும் உற்சாகமாகவும் பல்லக்குக்கு முன்னே தண்டம் ஏந்தி ஆனந்தம் நிரம்பியவராக ஊர்வலத்தில் நடந்துசென்றார். 

கதைகேட்பவர்களுக்குச் சாவடி ஊர்வல விவரம் ஏற்கெனவே தெரியும்.  கூறியது கூறின் காவியம் நீளும்; ஆகவே, அது இங்கு அவசியமில்லை. 

அன்றிரவு பாபா புரிந்த அற்புதமான லீலையைப் பாருங்கள்! பாபாவை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்த சபட்னேகருக்கு பண்டரிபுரத்துப் பாண்டுரங்கனாக பாபா காட்சியளித்தார். 

பின்னர், சபட்னேகர் வீடு திரும்ப அனுமதி வேண்டியபோது, "சாப்பிட்டுவிட்டுப் போங்கள்" என்று ஆணை பிறந்தது.  அவ்வாணையைச் சிரமேற்கொண்டு உணவருந்தியபின் புறப்படுவதற்கு முன்னதாக சபட்னேகர் தரிசனம் செய்யச் சென்றார். 

திடீரென்று அவருடைய மனத்தில் ஒரு கற்பனை உதித்தது, "பாபா தக்ஷிணை கேட்டால் அவருடைய விருப்பத்தை நான் எவ்விதம் திருப்திசெய்வேன்?"

அவர் கொண்டுவந்த பணம் முழுவதும் செலவாகிவிட்டிருந்தது.  பயணச் செலவுக்குத் தேவையான பணந்தான் கையிலிருந்தது.  ஆகவே, 'தக்ஷிணை கொடு' என்று பாபா கேட்டால் என்ன பதில் சொல்வது என்பதை மனத்தில் தீர்மானம் செய்துகொண்டார். 

'பாபா கேட்பதற்கு முன்னரே நான் ஒரு ரூபாயை அவருடைய கையில் வைப்பேன். அவர் மேலும் கேட்டால், இன்னுமொரு ரூபாயை அர்ப்பணம் செய்வேன்.  அதன் பிறகும் கேட்டால், என்னிடம் பணமில்லை என்று சொல்லிவிடுவேன்.-

"என்னிடம் புகைவண்டிக்குரிய கட்டணம் மட்டுந்தான் இருக்கிறது என்று பாபாவிடம் ஒளிவுமறைவின்றித்  தெளிவாகச் சொல்லிவிடுவேன்.' இந்தத் தீர்மானத்துடன் அவர் பாபாவிடமிருந்து விடை பெறுவதற்காகச் சென்றார். 

ஏற்கெனவே தீர்மானித்தபடி ஒரு ரூபாயை அவர் பாபவின் கையில் வைத்தபோது பாபா மேலும் ஒரு ரூபாய் மட்டும் கேட்டார். அதை வாங்கிக்கொண்டு பாபா தெளிவாகச் சொன்னார்,-

"இந்தத் தேங்காயை எடுத்துக்கொள்ளும்.  அதை உம் மனைவியின் சேலைத் தலைப்பில் இடும். பிறகு நீர் குசாலாகப் போய்வாரும்.  உம்மை வாட்டும் மனக்கிளர்ச்சியைத் தூக்கியெறியும்."

பன்னிரண்டு மாதங்கள் கழிந்த பிறகு, இந்த தம்பதிக்கு ஒரு புத்திரன் பிறந்தான்.  எட்டு மாதக் குழந்தையை எடுத்துக்கொண்டு மறுபடியும் தரிசனத்திற்கு வந்தனர். 

குழந்தையை பாபாவின் பாதங்களில் கிடத்தினர்.  ஆஹா! என்னே இந்த ஞானியர் விளைவிக்கும் அற்புதம்! அவர்கள் இருவரும் கைகளைக் கூப்பிக்கொண்டு செய்த பிரார்த்தனையைக் கேளுங்கள்.

"ஓ சாயிநாதரே! தேவரீர் செய்த உபகாரத்துக்குக் கைம்மாறு என்ன செய்வதென்று அறியோம்.  ஆகவே, உம்முடைய பாதாரவிந்தங்களில் பணிகிறோம்.-