ஷீர்டி சாயி சத்சரிதம்
49 . மஹானை சோதிக்காதே! மனத்தை அடக்கு!
ஓம் ஸ்ரீ விநாயகனே போற்றி! ஸ்ரீ சரஸ்வதியே போற்றி!
ஸ்ரீ குருமஹாராஜனே போற்றி! குலதேவதைக்கும் ஸ்ரீ சீதாராமச்சந்திரனுக்கும்
என்னுடைய பணிவான வணக்கங்கள். பூஜ்யகுரு ஸ்ரீசாயிநாதனை
பக்தியுடன் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.
சத்குருவை சாங்கோபாங்கமாகப் (முழுமையாகப்) போற்றும் முயற்சியில் வேதங்களும் புராணங்களுமே திணறிக்கொண்டிருக்கும்போது எதையும் புரிந்துகொள்ள இயலாத என் போன்ற அஞ்ஞானி வாயை மூடிக்கொண்டிருப்பதே மேலாகும்.
சிந்தித்துப் பார்த்தால், வாயைப் பொத்திக்கொண்டு மௌனமாக இருப்பதுதான் சத்குருவைப் போற்றும் சிறந்த வழியாகும். ஆனால், சாயியின் அடுக்கடுக்கான சீரிய பண்புகள் என்னுடைய மௌனவிரதத்தை மறக்கடித்துவிடுகின்றன.
சாயியின் ஆழங்காணமுடியாத லீலைகள் பெரும்பேறு விளைவிப்பவையே. அவற்றைக் கண்ணால் கண்ட நான் எப்படிச் சும்மாயிருக்க முடியும்? இனிமையான அந்தத் தின்பண்டங்களை என் நாக்கு ருசிபார்த்தபோது, நான் கதைகேட்பவர்களை நினைவில் கொண்டேன்.
அந்தப் பந்தியில் நான் சுவைத்த ஆனந்தரசத்தை இந்த விருந்திலும் (காவியம்) சேர்க்க முடிவெடுத்தேன். அதனால்தான், இந்த இருந்து சுவாரசியமாகவும் களிப்பூட்டுவதாகவும் அமைந்திருக்கிறது.
அறுசுவை விருந்தாயினும், பண்புள்ள நண்பர்கள் பந்தியில் இல்லையெனில், அவ்வுணவு ரசிக்காது. தனியாக அமர்ந்து உண்ணும் விருந்துக்கு ருசியேது?
சாயி அனைத்து விருப்பங்களும் நிறைவேறியவர்; எல்லா ஞானியராலும் போற்றப்படுபவர். சாயி தம் பக்தர்களுக்கு ஓய்வையும் சாந்தியையும் அளிக்கும் பூஞ்சோலை; வாழ்க்கையின் சகித்துக்கொள்ளமுடியாத பிரமைகளை நிவாரணம் செய்பவர்.
சொல்லுக்கு அப்பாற்பட்ட அவருடைய லீலையை என்னுடைய பேச்சால் வர்ணிக்க முடியவில்லை. புரிந்துகொள்ள முடியாதவரின் விவரிக்க முடியாத கலைகளை யான் எங்ஙனம் சாரம் வாங்குவேன்?
மங்களுக்கெல்லாம் மங்களமான சாயி தம்முடைய கதைப்பற்றிய நினைவைக் கருணையுடன் எனக்கு அளித்து இக் காவியத்தைப் பரிபூரணமாக்குகிறார்.
