valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 1 March 2018

ஷீர்டி சாயி சத்சரிதம்

"ஒருவருக்கு கிடைத்ததை முழுவதும் அவரே தின்றுவிடுவது நற்செயல் ஆகாது. ஆயினும் எனக்கு இவருடைய கேட்ட பழக்கம் தெரியும். இந்த உடைத்த கடலைப் பருப்புகளே அதற்குச் சாட்சி. இதில் ஆச்சரியப்படுவதற்கு என்ன இருக்கிறது?"

நான் பதில் கூறினேன், "மற்றவர்களோடு பகிர்ந்துண்ணாமல் நான் மாத்திரம் உண்பதென்பதை நான் அறியேன் அய்யனே! இவ்வாறிருக்கும் போது கெட்ட பழக்கத்தைப் பற்றிய பேச்சு எவ்வாறு எழும்? யார் எவ்வளவு முயற்சி செய்தாலும் இந்தக் கெட்ட பழக்கம் என்னை அணுகாது-

"பாபா, இந்நாள்வரை நான் ஷீர்டி சந்தையைப் பார்த்ததே இல்லை. நான் அங்கே சென்றால்தானே உடைத்த கடலை வாங்க முடியும்? தின்பதென்பது அதன்பிறகே அன்றோ!-

"தனிமையில் எல்லாவற்றையும் தாமே உன்ன விருப்பமுள்ளவர்கள் அவ்வாறே செய்யட்டும்! எண்ணெய் பொறுத்தவரை எனக்கு அந்தக் கெட்ட பழக்கம் இல்லை. கொஞ்சமாவது மற்றவர்களுக்கு கொடுக்காமல் நான் என் வாயில் எதையும் போடுவதில்லை."

பாபா தம் பக்தனுடைய நம்பிக்கையையும் விசுவாசத்தையும் எப்படித் தமது சாமர்த்தியமான யுக்தியினால் உறுதிப்படுத்தினார் என்று பாருங்கள். என்னுடைய தெளிவானதும் கபடமற்றதுமான வார்த்தைகளை கேட்டபிறகு, பாபா என்ன கூறினார் என்பதை கவனத்துடன் கேளுங்கள்.

"அருகில் இருப்பவனுக்கு நீர் கொடுப்பீர்; உண்மைதான். யாரும் அருகில் இல்லையென்றால் நீர்தான் என்ன செய்ய முடியும்? நானுந்தான் அந்த நிலையில் என்ன செய்ய முடியும்? ஆனால், நீ என்னை அந் நேரத்தில் நினைக்கிறீரோ?-

"நான் உமது அருகில் இல்லையா? எனக்கு ஒரு கவளமாவது அளிக்கிறீரா?" இந்தத் தத்துவத்தை எங்கள் மனதில் உறுதியாக ஏற்றுவதற்க்காகவே உடைத்த கடலைச் சாக்குபோக்கு உபயோகிக்கப்பட்டது.

தெய்வங்களையும், புலனுறுப்புகளையும் காக்கும் தேவதைகளையும், பஞ்சாக்கினிகளையும், பஞ்ச பிராணன்களையும், வைச்வதேவர்களையும், உணவு நேரத்தில் வரும் அதிதையும் ஏமாற்றிவிட்டு, ஊனை வளர்ப்பதற்காக தான் மட்டும் உண்ணும் அன்னம் பெரும் நிந்தனைக்குரியது.

இந்தத் தத்துவம் மேலெழுந்தவாரியாக பார்க்கையில் முக்கியமில்லாததுபோல் தோன்றலாம். ஆயினும், நடைமுறை வாழ்க்கையில் மிக்க மகத்துவம் வாய்ந்தது. உணவைச் சுவைப்பது பற்றி சொல்லப்பட்ட இவ் விதிமுழுமையின் ஒரு பகுதியே. இந்த விதி ஐந்து புலன்களுக்குமே பொருந்தும்.

புலனின்பங்களின் பின்னால் ஓடுபவன் ஆன்மீக முன்னேற்றம் காணவே முடியாது. புலன்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவனுக்கு ஆன்மீக முன்னேற்றம் அடிமையாகும்.

வேதமந்திரங்கள் சாற்றிய கருத்தைத்தான் பாபா கேலியையும் நகைச்சுவையையும் உபயோகித்து திடப்படுத்தினார். அதாவது, "எல்லாப் புலன்களும் உறைந்துபோன நிலையில் மனம் அமைதியாக இருந்து புத்தியும் சலனமில்லாமல் இருக்கும் நிலையே உயர்ந்த நிலை என்பது ஞானியாரின் கருத்து" (கடோபநிஷதம்)