valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 31 December 2015

ஷிர்டி சாயி சத்சரிதம்

"மக்கள், மாடு கன்று , பொருள் தேடுதல், முதலியவற்றிலேயே  மூழ்கிப் போனவருக்கு பிரம்ம ஞானம் எங்கிருந்து கிடைக்கும்? செல்வம் என்னும் முட்டுக்கட்டையை அகற்றாதவரையில், ஞானம் எப்படிக் கிடைக்கும்?-

"பணத்தாசையை வெல்வது மிகக் கடினம். அது துக்கமும் இன்னல்களும் நிரம்பிய ஆழமான நதியைப் போன்றது. அந்நதியில் பல பேராசைச் சுழல்களும் திமிர், பொறாமை போன்ற எதிர்த்துப் போராட முடியாத பல முதலைகளும் இருக்கின்றன. ஆசையைத் துறந்தவனே அதில் இருந்து தப்பிக்க முடியும். -

"பேராசை பிரம்மத்தின் அகண்ட வைரியாகும்; மனக் குவிப்பிற்கோ தியானத்திற்கோ  நேரம் இருப்பதில்லை. பிறகு விரக்தியோ முக்தியோ எங்கிருந்து வரும்? பேராசை பிடித்தவர் ஆசாரங்களை அனுஷ்டிப்பதில்லை .-

"பேராசைக்கு சாந்தியில்லை; திருப்தி இல்லை; நிம்மதியில்லை. பேராசை மனதுள்ளே புகுந்துவிட்டால், ஆன்மீக முன்னேற்றத்திற்கு உண்டான அத்தனை கதவுகளையும் மூடிவிடும்.-

"சுருதிகளாலும் ஸ்மிருதிகளாலும் 'செய்யக் கூடாது' என்று விதிக்கப்பட்ட காரியங்களையே  முழுதும் செய்து கொண்டிருக்கும் மனிதருக்கு சாந்திஎன்பதே இருக்காது. -

"இதற்குக் 'குழம்பிய அல்லது பிரமித்துப் போன மனம்' என்று பெயர். புலனின்ப சேற்றில் உழன்று கொண்டு, கெடுதலான செயல்களையே எந்நேரமும் செய்துகொண்டு, தமக்கு எது நன்மை என்று தெரியாமலேயே இம் மனிதர் வாழ்கிறார்.-

"அவர் பல விஷயங்களில் உயர்ந்த ஞானம் பெறலாம்; ஆயினும் செயல்களின் பலனைத் துறக்காவிட்டால், ஆத்ம ஞானத்திற்காக அவர் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வீண். ஆருக்கு ஆத்ம ஞானம் கிடைக்காது.-

"யார் வந்து எதை வேண்டினாலும், ஞானிகள் முதலில் அவருடைய (ஆன்மீக) அதிகாரத்தையே நோக்குகின்றனர். பிறகு, யாருக்கு என்ன யோக்கியதை இருக்கிறதோ அதற்கேற்றவாறே கொடுக்கின்றனர். -

"இரவு பகலாக தேஹாபிமானத்திலும் புலனின்பங்களிலும் மூழ்கிப் போனவருக்கு குருவின் உபதேசம் வீணாகிப் போகிறது. அவர் உலக வாழ்விலும் தோற்றுப் போகிறார்; ஆன்மீக வாழ்விலும் தோற்றுப் போகிறார்.-

"இதயத்தை தூய்மை செய்து கொள்ளாமல் ஆன்மீக வாழ்வில் நுழைபவர் தம்முடைய ஞான கர்வத்துடன் ஊர்வலம் வருகிறார். உண்மையில் அது பலனேதும் தராத முயற்சி .-

"ஆகவே, எது தேவையோ அதைப் பேசுங்கள்; எவ்வளவு ஜீரணிக்க முடியுமோ அவ்வளவே சாப்பிடுங்கள். இல்லையெனில், அஜீரணம் ஏற்படும். இது அனைவரும் அறிந்ததே.-

"என்னுடைய கஜானா நிரம்பியிருக்கிறது; யார் வந்தாலும் எதை வேண்டினாலும் கொடுக்கிறேன். ஆனால், வாங்கிக் கொள்பவருடைய தகுதியை நிர்ணயித்து அவரால் சமாளிக்க முடிந்த அளவே கொடுப்பேன். -


Thursday 24 December 2015

ஷிர்டி சாயி சத்சரிதம்
ஆத்மா ஞானம் தரும் தீரமாகிய மலையை, உலக வாழ்வின் இன்னல்கள் மற்றும் துக்கங்களாகிய கற்கள், எத்தனை உருண்டு வந்து தாக்கினாலும் ஓர் இம்மியும் நகர்த்த முடியாது.

இறைவன் எவர் மீது சந்தோசம் கொள்கிறாரோ, அவருக்குப் பற்றறுக்கும் மனோபாவத்தை அளிக்கிறார். விவேகத்துடன் சீர்தூக்கிப் பார்க்கும் திறமையேனும் சக்தியையும் ஊட்டுகிறார். சம்சாரக்கடலை பத்திரமாக தாண்ட வைக்கிறார்.

எவருடைய ஆத்ம தரிசன நாட்டம் கண்ணாடியில் தெரியும் முகம் போலத் தெளிவாக இருக்கிறதோ, அவர் ஒன்று பூலோகத்தில்  வாழ்வார்; அல்லது பிரம்ம லோகத்தில் இருப்பார். மூன்றாவதான இடம் என்பது அவருக்கு இல்லை.

தேவர்களை திருப்தி செய்யும் யாகங்களையும் ஹோமங்களையும் செய்யின், பித்ருலோகம் கிடைக்கும். செய்பவர் கர்மபலன்களை நன்கு அனுபவிப்பார்; ஆனால், ஆத்மா ஞானம் கிடைக்காது.

கந்தர்வ லோகம், மகா லோகம், ஜன லோகம், தப லோகம், சத்யா லோகம் ஆகிய லோகங்களில் கிடைக்க கூடிய ஆத்ம ஞானம் தெளிவில்லாததும் மங்கலானதும் ஆகும். ஆகவே ஆத்ம ஞானம் பெற விரும்புபவர்கள் பூலோகத்திலேயே தாங்கள் விரும்பும் வரை வாழ வேண்டுமென்று நினைக்கிறார்கள்.

ஏனெனில் இங்கே சித்தம் சுத்தமடைந்து, புத்தி கண்ணாடியைப் போல் நிர்மலமாகி, உண்மையானதும் புனிதமானதுமான ஆத்மா சொரூபத்தை பிரதிபலிக்கிறது.

ஆத்ம தரிசனம் பிரம்ம லோகத்தின் இரண்டாவது நிலையிலும் கிடைக்கும். ஆனால், அங்கு அநேக ஆயாசமான, கஷ்டங்களை விளைவிக்க கூடிய பயிற்சிகள் தேவைப்படும்.

மாயை, ஒரு மலைப் பாம்பைப்போல் உடலைச் சுற்றிக் கொண்டு எல்லா அங்கங்களையும் அழுத்தி, உள்ளிருக்கும் குடலையும் வெளிப்புறத்தில் இருந்து கொடுக்கும் மரணத் தழுவலால் பிழிந்து விடுகிறது. அவளிடமிருந்து தப்புவதற்கு யாருக்கு சக்தியிருக்கிறது?

"நான் கேட்ட ஐந்து ரூபாயைப் போல ஐம்பது மடங்கு வைத்துக் கொண்டு, எதிலுமே சம்பந்தபடாதவர்போல் அங்கு உட்கார்ந்து இருக்கிறீர்! அதை இப்பொழுது வெளியே எடும்! அங்கு, உம்முடைய ஜோபியிலேயே பிரம்மம் இருக்கிறது!"

பாபா இவ்வாறு கூறியவுடன் அம்மனிதர் ஜோபியில் கையிட்டு, ஒரு கட்டு ரூபாய் நோட்டுகளை  எடுத்தார்; இருபத்தைந்து பாத்து ரூபாய் நோட்டுகளை எண்ணினார்.

மனதின் ஆழத்தில் வெட்கத்தால் அம்மனிதர் குன்றிபோனார். பாபாவின் அந்தர்ஞானத்தை அறிந்து வியப்படைந்தார். ஆசிகள் வேண்டி, உடனே சிரத்தை பாபாவின் பாதங்களில் வைத்தார்.

பாபா அப்பொழுது அவரிடம் கூறினார், "உம்முடைய பிரம்ம ஞானக் கட்டைச் சுருட்டிக் கொள்ளும். உம்முடைய பேராசை சுத்தமாக அழியாதவரை உமக்கு பிரம்ம ஞானம் கிடைக்காது.- 


Thursday 17 December 2015

ஷிர்டி சாயி சத்சரிதம்

இவ்வாறு தூய்மை எய்திய மனத்தில் விவாகமும் வைராக்கியமும் பிறக்கின்றன. பிரம்ம ஞானம் அடைவதற்குத் தேவையான சாதனை சம்பதுக்களான சமம், தமம், ஆகியவையும் பிறகு தோன்றும். இவ்வாறாக, உடலில் உயிர் இருக்கும்போதே முக்திநிலையும் கைக்கு எட்டுகிறது.

செயல்களின் பலனைத் துறந்துவிட்டவர், சங்கல்பத்தையும் தியாகம் செய்துவிட்டவர், ஒருமுனைச் சித்தம் எய்தியவர், குருவிடம் சரணமடைந்து விட்டவர், சத்குருவினுடைய முழுப்பாதுகாப்பை அனுபவிக்கிறார்.

புறவுலகச் செயல்பாடுகள் அனைத்தையும் சூனியமாக்கிவிட்டு, வேறெதிலும் நாட்டமில்லாத பக்தர் ஆத்மா ஞானத்தை பெறுவார். வேறெந்த உபாயமும் அங்கே பிரயோஜனப்படுவதில்லை.

அவ்விதமாக ஞானம் பெற்ற பிறகும் அவர் அதர்மாமன மார்க்கத்தில் இறங்கினால் அவர் பூமியிலும் இல்லாமல் சுவர்க்கத்திலும்  இல்லாமல் திரிசங்கு போல் மாட்டிக் கொள்வார்.

ஜீவனுடைய அஞ்ஞானமே அவனை சம்சாரப் பிரவிருத்தியில் இழுக்கிறது. ஆத்ம ஞானம் கிடைத்துவிட்டால் சம்சாரத்தில் இருந்து நிவிர்த்தி ஏற்பட்டு விடும். அவர் இந்த உலகத்தில்தான் வாழ்கிறார். ஆனால், இவ்வுலத்தைச் சார்ந்தவரல்லர்.

ஆத்ம ஞானம் அடைந்தவர் எந்நேரத்திலும் அஹம்பாவத்திற்கு இடங்கொடுக்க மாட்டார். அவருக்கு, தர்மம் / அதர்மம் - சுபம் / அசுபம் - எதுவமே கிடையாது. அப்படிப்பட்ட ஒருவருக்கு ஹிதமானது எது, ஹிதமில்லாதது எது?

தேஹம் பற்றிய அஹங்காரம் நசித்துவிட்டால், பற்றற்ற மனோபாவம் விரைவில் வந்திறங்கி விடுகிறது. இதுவே இறைவனுடன் ஒன்றிய நிலை என்பதை நிச்சயமாக அறிக.

நண்பனும் பகைவனும் பிரவிருத்தி மார்க்கத்தில்தான் (செயல் நிறைந்த உலக வாழ்க்கை) உண்டு. நிவிர்த்தி மார்க்கமோ விசித்திரமானது. தன்னையே எல்லாவற்றிலும் எப்பொழுதிலும் பார்க்க ஆரம்பித்துவிட்டபோது, நட்பேது, பகையேது?

இந்த மகா சுகத்தின் முன்னர் உடலின் கடுமையான உபாதிகளும் ஒன்றுமில்லாமல் போய்விடும். இந்த சுகம் கிடைத்த பிறகு நிலையில்லாத உலக சுகங்களுக்காக கண்ணீர் விடுபவர் யார்? 


Thursday 10 December 2015

ஷிர்டி சாயி சத்சரிதம்

மனதின் மீது முழுக்கட்டுப்பாடு உடைய விவேகமுள்ள புத்தியாலும் ஒருமுனைப்பட்ட சித்தத்தாலும் ஆட்சி செய்யப்படும் மனிதனே பரம பதத்தை அடைவான். மற்றவர்கள் வழியிலேயே சோர்ந்து வீழ்வார்கள்.

சதா கட்டுப்பாடில்லாத மனத்தை உடையவன் என்றுமே திருப்தியடைய மாட்டான்; அந்தப் பதவியையும் (பரமபதம்) அடையமாட்டான்; சம்சாரச் சுழலில் இருந்தும் அவனால் விடுபட முடியாது.

எங்கிருந்து இதைப் பெறுவது என்ற சந்தேகத்தையும் கேள்விகளையும் தீர்த்து வைத்துத் தானாகவே மிகச் சிறந்த பரமபதம் தோன்றுகிறது.

இங்கே தர்க்க வாதமும் சப்பைக் கட்டு வாதமும் சொற்கேள்வியும் உரையாடலும் உதவா. இறைவனுடைய அருளால்தான் தடங்கல்கள் விலக்கப்படுகின்றன. வாதங்கள் அனைத்தும் வியர்த்தமே.

தர்க்க வாதத்தின் சாமர்த்தியம் இங்கே செல்லுபடியாகாது. மெத்தப் படித்த தர்கா சாஸ்திர பண்டிதரும் திக்குமுக்காடிப் போகிறார். கபடமில்லாத, கேள்வி எழுப்பாத விசுவாசமே இங்கு வெற்றியடைகிறது. அற்புதம் இதுவே!

ஆத்ம ஞானத்திற்கு அழைத்துச் செல்லும் பாதை வித்தியாசமானது; புத்தியும் வித்தியாசமானது. அதைச் சொல்லிக் கொடுக்கக்கூடிய சாஸ்திர பண்டிதரும் வித்தியாசமானவர். இது ஞாபகத்தில் இருக்கட்டும்.

விலை மதிக்க முடியாத மனித உடல், எதற்கும் உபயோகமில்லாத உளுத்துப் போக அனுமத்திக்கபடுகிறது. பணத்தாசை என்பது உச்சி வெயில் நிழலைப் போலக் கண்டறியக் கஷ்டமான விஷயம். ஹரியின் மாயையை வெல்வது கடினம். ஈதனைத்தையும் அறிந்து, ஞானிகளின் பாதங்களை கெட்டியாகப் பிடித்துக் கொள்ளவும்.

ஞானிகள் பிறவிக் கடலைக் கடக்க உதவும் கப்பலாவர். இக் கப்பலில் ஒரு பிரயாணி ஆகிவிடுங்கள். வேறு எவருக்கு நம்மை அக்கரை சேர்க்கும் சாமர்த்தியம் இருக்கிறது?

களிமண் புத்தியுடைய மூடனாயினும் சரி, விவேகமும் வைராக்கியமும் இருந்தால், பிறவிக்கடலை கடப்பது சிரமமாக இராது.

இறைவனின் குணங்களான ஆறு ஐசுவரியங்களில் முதலானதும் மிகச் சிறந்ததுமான ஐசுவரியம் பற்றற்ற நிலையே. பெரும் பாக்கியம் செய்தவர்களை தவிர, வேறு எவரும் இதில் பங்கு எதையும் எதிர்பார்க்க முடியாது.

சாஸ்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள கர்மங்களை செய்யாது சித்தம் தூய்மை அடையாது. சித்தம் தூய்மை அடையாதவனால் ஞானத்தை சம்பாதிக்க முடியாது என்று அறியவும்.

ஞானம் அடைவதற்கு மூலகாரணம் கர்மங்களை செவ்வனே செய்வதே என்பது ஞாபகத்தில் இருக்கட்டும். பூஜை, உபாசனை போன்ற நித்திய கர்மாக்களையும் சிறப்பு நாள்களில் அமையும் பண்டிகைகள், விரதங்கள், பித்ருக்களுக்குச் செய்யும் ஈமக்கடன் போன்றவற்றையும் சிரத்தையுடன் செய்வதே மனதில் உள்ள மலத்தைக் கழுவித் தூய்மை அடையும் ஒரே வழி. 

Thursday 3 December 2015

ஷிர்டி சாயி சத்சரிதம்

ஏற்கெனவே அனுபவித்த அல்லது அனுபவிக்காத புலனின்பங்களை நாடுவது எதிர்பார்ப்பது, ஏங்குவது, வேண்டுமென்று விரும்புவது - இவையனைத்தும் தடங்கல்களே. ஆகவே, அவற்றை முதலில் ஒழிக்கவும்.

எதை மிகப் பிரகாசமான சூரிய வெளிச்சத்திலும் பார்க்க முடியாதோ, எதில் ஆராய்ந்த பின் புத்தி, உட்புகமுடியாமல் திரும்பி விடுகிறதோ, எங்கு வேதங்களும் உபநிஷதங்களும் ஒரு காலைக் கூட வைத்து ஊன்ற முடியாமல் தடுமாறுகின்றனவோ, அதை குரு தம்முடைய கையால் சுட்டிக்காட்டுகிறார்.

ஞானம் பெறுவைதையும் நற்கேள்வியையும் தியானத்தையும் சமாதி நிலைமையையும் அடைய விடாமல் கண நேரத்தில் கெடுத்துவிடும் காமமும் குரோதமும் மனதின் வியாதிகள்.

கற்பூரமும் தீயும் அருகே கொண்டுவரப்படும்போது ஒன்றையொன்று முட்டி அப்பால் தள்ளி விடுமா? இரண்டும் சந்தித்த கணமே கற்பூரம் தீயுடன் ஒன்றாகி விடுகிறது.

விதிக்கப்பட்ட, விதிக்கப்படாத, செயல்களிடையே உள்ள வித்தியாசம் தெரியாமல் எப்பொழுதும் பாவசெயல்களிலேயே புரண்டு கொண்டிருப்பவன் எவ்வளவு புத்திசாலியாக இருப்பினும் என்ன நன்மையை அடைந்துவிட முடியும்?


அதுபோலவே, அலைபாயும் புலன்களால் குழப்பப்பட்ட மனதுடன், இதயத்தில் நிம்மதியின்றி எப்பொழுதும் சாந்தியற்ற நிலையில் இருப்பவன் ஞானத்தை எவ்விதம் அடைவான்?

சம்சாரத்தை நோக்கி நடப்பவனோ, மோக்ஷத்தை நோக்கி நடப்பவனோ, கடைசி இலக்கை சென்றடைய வேண்டுமெனில் சரீரமென்னும் தேருக்கு யஜமானனாகிவிட வேண்டும். கேவலம் வாய்பேச்சு சாமர்த்தியம் என்ன சாதித்து விட முடியும்?

ஆகையால், வார்த்தை ஜாலத்திற்கு இங்கு இடமே இல்லை; சாரம் அப்பியாசமே (பயிற்சியே) ! நாம் உறுதியாகவும் அமைதியாகவும் அமரும் தேராக உடல் ஆகட்டும்.

இந்த ரதத்திற்கு (மனித உடல்) உம்முடைய புத்தி தேரோட்டியாக ஆகட்டும். உம்மைப் பொறுத்தவரை அமைதியான மனதுடன் எஜமானனாக இந்த ரதத்தில் உட்காரும்.

வெற்றி பெறுவதற்குச் சிரமமானவையும், பரம்பரையாக வருவனமாகிய புலனின்ப நாட்டங்களை கடந்து செல்லத் தேரோட்டிகு வழி காட்டவும். பத்து இந்திரியங்களையும் முரட்டுக் குதிரைகளின் கடிவாளங்களை உம்முடைய மனம் கட்டுப்பாடு செய்யட்டும். (கர்மேந்திரியங்கள் 5 + ஞானேந்திரியங்கள் 5)

குதிரைகள் தாறுமாறாக ஓட முயன்றாலும் கடிவாளங்கள் அவற்றைக் கட்டுபாட்டுக்குள் வைக்கும். கடிவாளங்களை தேரோட்டியிடம்(புத்தியிடம்) ஒப்படைத்துவிட்டு நீர் அமைதியாக உட்கார்ந்துகொள்ளும்.

தேரோட்டி நிபுணவாகவும் சாமார்தியசாலியாகவும் இருந்தால்தான், குதிரைகள் வேகமாகவும் ஒழுங்காகவும் ஓடும். ஆனால், தேரோட்டியே (புத்தி) கடிவாளங்களின் (மனதின்) பிடியில் மாட்டிகொண்டால், குதிரைகள் பலவீனமாகிவிடும். 


Thursday 26 November 2015

ஷிர்டி சாயி சத்சரிதம்

இரண்டையும் சீர் தூக்கிப் பார்த்து, ஒன்றைத் தேர்ந்தெடுப்பது என்பது கடினமான செயல், மந்தப் புத்திகாரனை புலனின்பங்கள் வென்று விடுவதால், உலகியல் ஈடுபாடே அவனை ஆலிங்கனம் (தழுவதல்) செய்து கொள்கிறது.

தண்ணீர் கலந்த பாலில் பாலை மற்றும் பிரித்தெடுக்கும் அன்னத்தைப் போல உலகியல் ஈடுபாட்டை விலக்கி, ஆன்மீக ஈடுபாட்டை வரவேற்பதிலேயே மனித வாழ்க்கையின் உயர்ந்த லட்சியம் பொதிந்திருக்கிறது.

ஆன்மீக ஈடுபாடு, உலகியல் ஈடுபாடு, இரண்டுமே மனிதனின் சக்திக்கு உட்பட்டவையே ஆயினும், மந்த புத்தி படைத்த விவேகமற்ற  மனிதன் இரண்டிற்கும் இடையே உள்ள வித்தியாசத்தை கண்டறியும் சக்தியை இழந்துவிடுகிறான்.

வாழ்க்கையின் சிறப்பு எங்கிருக்கிறது என்பதை ஒருவன் முதலாவதாக நிச்சயப் படுத்திக்கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் அந்த மார்க்கத்தில் தோன்றும் தடைகளை வென்று, வெற்றி பெற முடியும்.

இங்கேதான் மனிதன் சக்தி மிகுந்ததும் உறுதி படைத்ததுமான முயற்சியை எடுக்க வேண்டிய அவசியத்தை எதிர்கொள்கிறான். ஆகவே, மனதில் உறுதியான தீர்மானத்துடன் போராட்டத்தை நடத்தி ஆன்மீக ஈடுபாட்டை அடையவேண்டும்.

வாழ்க்கைச் சக்கரத்தின் சுழற்சி புரிந்துகொள்ளமுடியாதது! அது இரவு பகலாகச் சுழன்றுகொண்டே மூவகை இன்னல்களையும் மனிதனுக்கு அளித்து கொண்டிருக்கிறது. இது தவிர்க்க முடியாதது.

அபரிமிதமான இன்னல்களை அனுபவித்துத் தொல்லைப்பட்டு வருந்தி, இவ்வின்னல்களில் இருந்து சுலபமாகவும் சௌக்கியமாகவும் விடுபடும் வழி ஏதாவது இருக்கிறதா என்று மனிதன் சுற்றுமுற்றும் பார்க்கிறான்.

காலச்சக்கரத்தின் சுழற்சி பொறுக்க முடியாத நிலையை அடையும்போது, "இந்தச் சக்கரத்தை நிறுத்துவது எப்படி? இதற்கு ஏதாவது வழி இருக்கிறதா?" என்னும் கேள்விகளுக்கு பதில் காண முயச்சி செய்கிறான்.

ஏதோ பாக்கியத்தால் இம்மாதிரி எண்ணங்கள் புத்தியில் தோன்றுவது, மனிதப் பிறவி ஏற்பட்டதன் நற்பயனை அடைய எடுக்கப் போகும் முயற்சிகளின் ஆரம்பமாக அமைகிறது. இதன் பிறகு, சாதகன் தன்னுடைய நன்மை கருதி இலட்சியத்தை அடைவதற்கான வழிமுறைகளை கையாளுகிறான்.

அஞ்ஞானம் அல்லது மாயைக்கு ஆரம்பம் என்பதே கிடையாது. கிளிஞ்சலில் வெள்ளியும் கானல் நீரில் தண்ணீரும் தெரிவதுபோல், மாயை பயனற்ற ஏமாற்று காட்சிகளையே அளிக்கிறது. ஒன்றை வேறொன்றாக தெரிந்துகொள்ளும் இம் மாபெரும் தடங்கலைப் பெயர்த்தெரிய வேண்டும்.

கனவில் ஆலங்கட்டி மழை பொற்காசுகளாகப் பொழிகிறது! தேவைப்படும்போது உபயோகப்படும் என்று நினைத்து ஒருவர் பெரு முயற்சி எடுத்து அவற்றை நிறையச் சேகரிக்கலாம். ஆனால், விழித்தெழுந்தவுடனே எல்லாம் எங்கோ போய் விடுகிறது.    


Thursday 19 November 2015

ஷிர்டி சாயி சத்சரிதம்

17. பிரம்ம ஞான உபதேசம் (பகுதி 2)

ஓம் ஸ்ரீ விநாயகனே போற்றி! ஸ்ரீ சரஸ்வதியே போற்றி!
ஸ்ரீ குரு மகாராஜனே போற்றி! குலதேவதைக்கும் ஸ்ரீ சீதாராமச்சந்த்ரனுக்கும்
என்னுடைய பணிவான வணக்கங்கள். பூஜ்யகுரு ஸ்ரீசாயினாதனை
பக்தியுடன் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.

இந்த அத்தியாயத்தில் ஆன்மீக ஈடுபாடு மற்றும் உலகியல் ஈடுபாடு இவற்றின் லட்சிணங்கள் விவரிக்கப்படும் என்று கடந்த அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டது. இப்பொழுது அதுபற்றி கவனமாக கேளுங்கள்.

ஒளியும் அந்தகாரமும் அன்னியோன்னியமாக சம்பந்தப்படிருப்பது போல் தோன்றினாலும் அவை ஒன்றுகொன்று எதிர்மறையானவை. அவ்வாறே ஆன்மீக ஈடுபாடும் உலகியல் ஈடுபாடும்.

எவருடைய மனம் உலகியல் ஈடுபாட்டின் பின்னால் ஓடுகிறதோ, அவர் தம்முடைய சுயநலத்தாலேயே வீழ்ந்து விட சபிக்கப் பட்டவர். ஆன்மீக ஈடுபாடு விவேக ரூபமானது; உலகியல் ஈடுபாடு விவேகரூபமற்றது.

ஆன்மீக ஈடுபாட்டின் இலட்சியம் சுத்த ஞானம்; உலகியல் ஈடுபாடு அளிப்பது முழுமையான அஞ்ஞானம். ஞானமுள்ளவர்கள் உலகியல் விவகாரங்களை நாடுவதில்லை; அஞ்ஞானிகள் ஆன்மீக விவகாரங்களை நாடுவதில்லை.

பெண்ணாசையும் பொன்னாசையும் இருக்கும்வரை, புலன்கள் இன்ப நாட்டத்தில்தான் உழலும். விவேகமும் வைராக்கியமும் எய்தும்வரை, உலகியல் ஈடுபாடுகளின் மீதுதான் பிரியம் செலுத்தப்படும்.

ஆன்மீக ஈடுபாட்டையும் உலகியல் ஈடுபாட்டையும் கலப்பது பாலையும் தண்ணீரையும் கலப்பது போலாகும். இந்தக் கலவையில் இருந்து மானச சரோவர் ஏரியின் அன்னங்கள் பாலைப் பிரித்து அருந்துவது போலவே, -

தீரமும் சிறந்த அறிவும் விவேகமும் நிறைந்த பாக்கியசாலிகள் ஆன்மீக ஈடுபாட்டில் ஒட்டிக் கொள்வர்; உலகியல் ஈடுபாட்டிற்கு முகம் திருப்பி விடுவர்.

இந்த மந்த புத்திகாரர்களைப் பாருங்கள்! உலகியல் ஈடுபாட்டிலேயே மூழ்கிப் போய், புலனின்பம், புத்திரன், தனம், ஆடுமாடுகள், கௌரவம் ஆகியவற்றையே தேடுகிறார்கள். அவற்றையே அடைகிறார்கள்;

சுதந்திரமான புருஷன் தனக்கு ஆன்மிகம் தேவையா, உலகியல் தேவையா என்று அவை இரண்டையும் அலசி, ஆராய்ந்து, அவ்விரண்டில் இருந்து தனக்கேற்றதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளவேண்டும்.   


Thursday 12 November 2015

ஷிர்டி சாயி சத்சரிதம்

வேதாந்தம் நன்கு அறிந்தவர்கள் பிரம்மத்தை சத்தியம், ஞானம், அனந்தம் (முடிவே இல்லாதது) என்ற லக்ஷனங்களால் வர்ணிக்கின்றனர். பிரம்மம் ஞானிகளுக்குoli வழங்கி, ஆத்மாவிலேயே மூழ்கச் செய்கிறது.

காட்டினுள்ளே நடந்து செல்லும் யாத்திரிகன், மங்கலான சந்திர ஒளியில், வெட்டப்பட்ட மரத்தின் அடிப்பாகத்தை பார்த்துக் கொள்ளைக்காரன் என்று நினைத்து மிரண்டு பயத்தால் எங்காவது ஒளிந்து கொள்கிறான்.

"நான் தனியாக நடந்து செல்கிறேன்; பணமும் வைத்திருக்கிறேன்; வழிப்பறிக் கொள்ளைக்காரன் மறைந்து கொண்டிருக்கிறான்; யோசிப்பதற்கு என்ன இருக்கிறது? உயிருக்கே ஆபத்தாக இருக்கும்போலிருக்கிறதே!" என்று தனக்குள்ளேயே பேசிக் கொள்கிறான்.

திடீரென்று தூரத்தில் இருந்து ஒரு தீபம் வருகிறது; வெட்டப் பட்ட மரத்தின் அடிப்பாகம் தெரிகிறது; யாத்திரிகனுடைய பயம் தெளிந்து விடுகிறது. கொள்ளைக் காரன் என்று நினைத்தது மனதின் பிரமையே என்று அறிந்துகொள்கிறான்.

கதை கேட்பவர்களுக்கு ஞானத் தேடலில் ஏற்படக் கூடிய தடங்கல்களை பற்றி எல்லாம் விவரித்து விட்டேன். அடுத்த அத்தியாயத்தில் பிரம்ம ஆனந்தத்தை தேடுபவர்களுக்கு அதனுடைய ஒளி மிகுந்த நிஜ ரூபம் தரிசனமாகும்.

ஹெமாத் சாயியின் பொற்கமலப் பாதங்களில் புரளுகிறான். வாயில் வந்ததை உளறுகிறான். சாயியினுடைய கிருபையினால் எதெது வெளிவருகிறதோ அததைஎல்லாம் விசுவாசமுள்ள எளிமையான பக்தர்கள் கேட்டு மகிழட்டும்.

எல்லாருக்கும் ஷேமம் உண்டாகட்டும்! ஞானிகளாலும் சான்றோர்களாலும் உணர்வூட்டப்பட்டு, சாயி பக்தன் ஹெமாத் பந்தால் இயற்றப்பட்ட, "ஸ்ரீ சமர்த்த சாயி சத் சரித்திரம்" என்னும் காவியத்தில், 'பிரம்ம ஞான உபதேசம்' என்னும்  பதினாறாவது அத்தியாயம் முற்றும்.

ஸ்ரீ சத்குரு சாயிநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்!

சுபம் உண்டாகட்டும்.

Thursday 5 November 2015

ஷிர்டி சாயி சத்சரிதம்

பிரம்ம நிரூபண விவரங்கள் புராணங்களிலும் புத்தகங்களிலும் கொஞ்சமாகவா இருக்கின்றன? ஆனால், சத்குருவின் அருள் இல்லாது, யுகமுடிவு வரை கடினமான பயிற்சிகள் செய்தாலும் பிரம்ம ஞானம் கைக்கு கிடைக்காது.

தினமும் செய்ய வேண்டிய கர்மாக்களையும் சம்ஸ்காரங்களையும் (மதச் சடங்குகளையும்) செய்து, அதன் விளைவாக மனம் தூய்மையடையாமல்  பிரம்மத்தை அறிந்து கொள்ளவோ அடையவோ இயலாது.

பிரம்மமே நித்தியமானது; மற்றவை அனைத்தும் அநித்தியம். கண்ணால் பார்க்கபடுவது எதுவும் நித்தியமானது அல்ல. இது மும்முறை பிரகடனம் செய்யப் பட்ட சத்தியம்.

பிரம்மத்தை பற்றி விளக்கமாகப் பேசக் கூடியவர் அரியவர். நிர்மலமான மனதுடன் அதைக் கேட்கக் கூடியவர் அவரினும் அரியவர். பிரம்மானுபவம் கண்ட சத்குருவைப் பெறுதல் மிக மிக அரிது.

பிரம்மம் என்ன கத்தரிக்காயா, கேட்டு வாங்கிக்கொள்ள ! மனித நடமாட்டமே இல்லாத மலைகளிலும் குகைகளிலும் வசித்து, யம நியமங்களுக்கு உட்பட்டு தவம் செய்யும் மகா யோகிகள்.-

அவர்களாலேயே குருவின் அருளின்றி பிரம்மரூபம் காண முடியாது. பேராசையின் உருவேயான உம்மைப் போன்றவரால் எவ்வாறு அடைய முடியும்?

செல்வத்தின் மீது தீராத பற்றுடையவன் யுகம் முடிந்தாலும் பிரம்ம ஞானம்  அடைய முடியாது! இது நிச்சயம் என்று அறிக.

உலகியல் சிந்தனையைச் செய்து கொண்டே பரமார்த்தமான பிரசங்கத்தைக் கேட்பவனும் உலகியல் விஷயங்களையே இடைவிடாது யோசித்துக் கொண்டிருப்பவனும் பெறக்கூடிய சாக்ஷாத்காரமும் (நேரிடை தரிசனமும்) அவ்வகையாகத்தான் இருக்கும்.

தூய்மையற்ற எதிர்மறையான எண்ணங்களைத் தோற்றுவித்தல், பொய்மை மெய்யென்று அறிதல், மெய்யைத் திரைபோட்டு மறைத்தல் இம்மூன்றும் மனம் செய்யும் தவறுகளாகும். பலனைக் கருதாது செய்யப்படும் செயல்கள் எதிர்மறைச் சிந்தனைகளையும் நாட்டங்களையும் விலக்கி விடும். பக்தியும் வழிபாடும் மனதின் மாய மயக்கங்களைத் துடைத்து தூய்மை ஆக்கிவிடும்.

தமக்கு விதிக்கப்பட்ட கர்மாக்களை சிரத்தையுடன் செய்வதுடன், உபாசனையும் செய்பவரின் மனம் பரிபக்குவம் அடையும். எதிர்மறையான எண்ணங்களுக்கும் மயக்களுக்கும் இவ்வாறு ஒழிக்கப்பட்ட பின், மீதி நிற்பது சத்தியத்தை மறைக்கும் திரையே.

எல்லா அனர்த்தங்களுக்கும் விதையாகிய இந்தத் திரை சூரிய உதயத்தால் இருள் அழிவது போல, ஞானம் பிறந்தால் நாசமாகிவிடும். 


Thursday 29 October 2015

ஷிர்டி சாயி சத்சரிதம்

சாதகரின் கடுமையான தவத்தைக் கண்டு, ஆத்மாவுக்குக் கருணை ஏற்பட்டுத் தன்னுடைய நிஜஸ்வரூபத்தை வெளிப்படுத்தும். ஆனால், குரு இல்லாமல் இது நடக்காது.

ஆகவே, தம்முடைய உண்மயான சொரூபத்தை அறிய விரும்புவர். சிரவணமும் (நற் கேள்வியும்) மனனமும் (அதைப் பற்றிய தியானமும்) செய்ய வேண்டும். சதா அபேத பாவத்தை செயல்முறைக்கு கொண்டுவர வேண்டும். இதுவே ஆத்ம லாபம் அடையும் வழி.

பிரபஞ்சமே அஞ்ஞானத்தில் மூழ்கி இருக்கிறது. அதனுடைய வியாபகமே (இருப்பே) அஞ்ஞான மூலம். ஞானம் இல்லாது மோக்ஷம் கிடைக்காது என்பதை நன்கு அறிக.

சாஸ்திரங்களில் இருந்து அனுபவ ஞானம் பெறுவதற்கு, அனுமான சக்தியும் யுக்தி சக்தியும் தேவைப்படுகிறது. ஆனால், சாதகரை பொறுத்தவரை, பிரபஞ்சம் நாசமானதால்தான் ஞானம் உதயமாகும்; வேறு எவ்விதமாகவும் நடக்காது.

'மகாத்மாவும் பாவாத்மாவும் எல்லா ஜீவன்களும் பரமாத்மாவே' என்று அறிந்து வாழ்பவரே உயர்ந்த மனிதராவார். அவருக்கு இறைவனும் இறைவனின் சிருஷ்டியும் ஒன்றே.

இறைவனும் தானும் ஒன்று என்று அறிவதே எல்லா ஞானங்களின் உச்சியாகும். ஆத்ம ஞானம் பிறந்துவிட்டால், எல்லா விதமான அஞானங்களும் அழிந்துவிடும்.

ஆத்மா ஞானம் கிடைத்து விட்டால், அறிந்து கொள்ள வேண்டியது வேறெதுவும் இல்லை. மற்றப் பொருள்களைப் பற்றி ஞானம் உள்ளங்கை நெல்லிக் கனி போல் தானாகவே விளங்கிவிடும்.

சாதகர் ஆத்ம ஞானத்தின் பலனாக உலக பந்தங்களில் இருந்து முழுமையாக விடுதலி அடைந்து விடுகிறார். இவ்வுலகில் வாழும்போதே பரமானந்தத்தை அனுபவிக்கிறார். சரியான சமயத்தில் மோட்சத்தையும் அடைகிறார்.

ஆத்மா எங்கும் நிறைந்திருக்கிறது என்பதை புத்தியின் வழிகளால் புரிந்து கொள்வதற்காகவே, சிறியதினும் சிறியது, பெரியதினும் பெரியது என்றெல்லாம் விவரிக்கப்படுகிறது.

சுயமாக ஆத்மா பெரியதுமன்று; சிறியதுமன்று; அளவைப் பற்றிய பேச்செல்லாம் இங்கே கற்பனையே. நான்முகனில் இருந்து புல் பூண்டு வரை, சிருஷ்டி அனைத்திலும் ஆத்மா வியாபித்திருக்கிறது.

வார்த்தைகளால் விவரிக்க முடியாததை, எல்லையே இல்லாததை, வார்த்தைகளால் ஓர் எல்லைக்குள் கொண்டு வருவது புத்திக்கு எட்ட வைப்பதற்காகத்தான்.

ஆத்மாவின் மர்மம், கேவலம் புத்தி சக்தியால் அறியப்பட மாட்டாது. சாதுவோ, ஞானியோ, சத்குருவோ அருள் செய்தால்தான் கிடைக்கும். அவ்விதமான அருளைப் பெறுவதற்கு, மிகுந்த ஈடுபாட்டுடனும் பக்தியுடனும் அவர்களுக்கு சேவை செய்ய வேண்டும்.  


Thursday 22 October 2015

ஷிர்டி சாயி சத்சரிதம்

ஆத்மா நித்தியமானது; மாறுபாடு அடையாதது. தன்னையறிந்தவர் எதற்கும் சோகப்படமாட்டார். அவர் மகா தைரியசாலி; மகா புத்திமான்; பிறவிப் பிணியிலிருந்து விடுதலை பெற்றவர்.

பிரசங்கம் செய்யகூடிய சக்தியும் யுக்திகளும், புத்தகங்களைப் படித்து அர்த்தங்களை புரிந்து கொள்ளும் சக்தியும் இங்கே செல்லுபடியாகாது; வேதங்களில் இருந்தும் உபநிஷதங்களில் இருந்தும் அறிந்துகொண்டே ஆழ்ந்த ஞானமும் ஆத்மாவைப் பற்றி எதையும் விவரிக்க முடியாது.

ஆத்மா நித்தியமானது; மாறுபடாதது. சரீரம் அநித்தியமானது. ஒவ்வொரு கணமும் மாறுபட்டுக் கொண்டே இருப்பது. இதையறிந்து, தம்முடைய நன்மைக்காகப் பாடுபடும் எது விதிக்கப் படாதது, எது விதிக்கப்பட்டது என்பதை அறிந்து தம்முடைய செய்கைகளை செய்வார்.

ஆத்ம ஞானி சதா நிர்ப்பயமானவர். தன்னைத் தவிர வேறொன்றுமே  இல்லை என்பதை நன்கறிந்தவர். துவைத பாவனை முழுமையாக அழிக்கப்படும்போது, சோகமும் நிச்சயமாக அழிந்துவிடும்.

ஆத்மாவை அறிந்து கொள்வது கஷ்டமான காரியமாக இருப்பினும், பிரசங்கங்களை கேட்டுப் புரிந்துகொள்ள முடியாததாயினும், கேவலம் மேதை இங்கு பிரயோஜனப் படாதாயினும், சுலபமாக அறிந்து கொள்ளும் உபாயங்களும் உண்டு.

எவர் எல்லா ஆசைகளையும் தவிர்த்துவிட்டு, ஆத்மஞானம் அடைய வேண்டும் என்னும் ஒரே விருப்பத்துடன் சதா ஆத்மாவை இறைஞ்சுகின்றாரோ, அவரே இம் மேன்மையான லாபத்தை அடைவார்.

'எனக்கும் இறைவனுக்கும் பேதமில்லை' என்னும் கருத்தை எந்நேரமும் மனத்தில் நிலை நாட்டியவருக்கு ஆத்மா அனுக்கிரஹம் செய்யும். கதாகீர்தனங்கள் கேட்கும்போதும் தியானம் செய்யும்போதும் 'நானும் இறைவனும் ஒன்று' என்று தமக்கு தாமே அவர் சொல்லிக் கொள்வார்.

பாவ காரியங்களில் இருந்து விடுபடாதவன், பந்தப் பட்டவன், சாந்தியில்லாதவன், தியான சக்தி இல்லாதவன் இந்த ஞானத்தை அடைய முடியாது. 

சுருதிகளின்படியும் (வேதங்கள்) ஸ்மிருதிகளின்படியும் (வாழ்க்கை நெறி நூல்கள்) வாழ்க்கை நடத்தி, அவற்றால் செய்யக் கூடாது என்று  விதிக்கப்பட்ட காரியங்களை விலக்கி, எந்நேரமும் தியானத்தில்  மூழ்கியவருக்குள் ஆத்மா ஞானம் பொதிந்து கிடக்கிறது.

எவர் பாவச் செயல்களை விலக்கி விட்டவரோ, எவர் குருவின் பாதங்களில் வினயத்துடன் பணிந்து கிடக்கிறாரோ, எவர் செயல்களின் பலனைத் துறந்துவிட்டவரோ, அவருக்குதான் ஆத்மா ஞானம் கிடைக்கும்.

உலக பந்தங்களில் இருந்து விடுதலை அடையாமல், எல்லா விருத்திகளையும் (பிழைக்கும் வழிகளையும்) விட்டுவிடாமல், ஆத்ம ஞானம் அடைவது நடக்காத காரியம்.  

Thursday 15 October 2015

ஷிர்டி சாயி சத்சரிதம்

சத்குருவின் பாதங்களை உறுதியாகப் பிடித்துக் கொள்பவர், மற்றவர்கள் பலவிதமாக சிரமப்பட்டும் அடையமுடியாததை சொற்பமான முயற்சியாலேயே அடைந்துவிடுவார்.

அஞ்ஞானம் அழிக்கப்பட்டு சச்சிதானந்த சொரூபத்தில் நிலைத்துவிட்டால், தன்னை அறியும் நிலை உதயமாகிறது. இந்த நிலைக்கு மோக்ஷம் என்பது மற்றொரு பெயர்.

இதுவே ஜீவனின் அத்தியந்தமான லட்சியம். இதை அடைவதற்காகவே பிரம்ம யோகிகள் பலவிதமான இன்னல்களை கடந்து வந்து தம்மிலேயே மூழ்கியிருக்கின்றனர்.

ஆத்மாவிலிருந்து விலகிச் செல்பவர் உலகவிஷயங்களின் சுழலில் மாட்டிக் கொள்கிறார். ஆத்மாவிலேயே நிரந்தரமாகவும் நிச்சலமாகவும் மூழ்கியவருடைய புலனின்ப நாட்டம் நசித்துப் போகிறது.

தம்முடைய உண்மையான சொரூபத்திற்கு முகத்தை திருப்பிக்கொண்டு செல்பவருக்கு உலகவிவகாரங்கள் இன்முகம் காட்டுகின்றன. ஆறே உண்மையான சொரூபத்திற்கு இன்முகம் காட்டினால் உலகவிவகாரங்கள் அவரிடமிருந்து ஓடி விடுகின்றன.

மோக்ஷத்தை தவிர வேறெதையும் மனதில் கொள்ளாதவரே, இவ்வுலகத்திலோ பரவுலகத்திலோ வேறெதையும் விரும்பாதவரே, மோக்ஷம் அடைவதற்கு அதிகாரியாவார்.

இந்த லக்ஷணங்களில் ஒன்றே ஒன்று குறைபட இருப்பினும், அவர் உண்மையான இறைநாட்டம் உடையவர் அல்லர் என்பதைத் தெளிவாக அறியவும். ஒற்றை கண்ணுடைய பார்வை போன்று அவர் இறைநாட்டம் உடையவர் போல் பாசாங்கு செய்கிறார்.

அஹங்காரம் அடியோடு அழியாதவரையில், பேராசை நிர்மூலமாக்கப் படாதவரையில் மனத்தினுடைய வாசனைகள் ஒழிந்து போகாதவரையில், பிரம்ம ஞானம் பதியாது.

தேஹந்தான் நான் என்று நினைப்பது ஒரு பிராந்தி (மயக்கம்). எவ்விதமான விருப்பமும் ஒரு பந்தமே. உலக விஷய கற்பனைகளையும் ஞாபகத்தையும் விட்டு விட்டால் பிரம்ம ஞானம் பெறலாம்.

குணங்களும் உருவமுமற்ற பிரம்மத்தை காண்பதரிது. ஆகவே, உருவமெடுத்த, குணமுள்ள பிரம்மத்தின் முக்கியத்துவத்தை அறிந்து அதை வழிபடுவதையே அறிவாளிகள் தருமநெரியாகக் கருதுகிறார்கள்.

ஆத்மா எல்லா உயிர்களிலும் மர்மமாகவும் சூக்குமமாகவும் உறைகிறது என்று வேதாந்திகள் அறிவர். எல்லாருமே உள்ளுணர்வாக அறியும் இவ்வுண்மைக்கு மறுக்க முடியாத நிரூபணம் கேட்டால் எங்கிருக்கிறது?

முதலாவதாக, சித்தம் சுத்தமடைய வேண்டும்; அதற்கும் மேலாக, புத்தி தர்ப்பையின் நுனி பொண்டு சூக்குமமாக கூர்மையாக வேண்டும். அப்பொழுதுதான் மூற்று நிலைகளிலும் தூயதான ஆத்மா கிருபைகொண்டு தன்னைத்தானே வெளிப்படுத்திக் கொள்ளும்;   




Friday 9 October 2015

ஷிர்டி சாயி சத்சரிதம்

குருவின் திருவாய்மொழியிலும் சாஸ்திரங்களிலும் ஆழ்ந்த நம்பிக்கை வளர, வளர, மனதாலும் உடலாலும் செயல்புரியும் நாட்டம் குறைந்துகொண்டே போகிறது. ஆத்மாவை அறிவதற்காக செய்யும் முயற்சிகள் லாபமளிக்கின்றன.

அப்பொழுதுதான் 'ஒன்றாகக் காணும் காட்சி' கிடைக்கிறது. சடப்பொருள்களிலிருந்தும்  புலனின்பங்களில் இருந்தும் விடுதலை கிடைக்கிறது. ஹிருதயத்தின் அஞ்ஞான முடிச்சுகள் அவிழ்ந்து, சாதகர் தோன்றாநிலையில் இருக்கும் இறைவனுடன் கலந்துவிடுகிறார்.

ஒளிக்கீற்றிலிருக்கும் சூக்குமமான அணுவைவிட சூக்குமமானது ஆத்மா. இதுவே ஆத்மாவைப் பற்றிய அனுமானமும் நிர்தாரனம்மும்.

ஆத்மா மிகப் பெரியதை விட மிகப் பெரியதான பிரம்மாண்டத்தை விடப் பெரியது. ஆயினும் இதெல்லாம் உபமானப் பிரமாணங்களே; ஆத்மா அளவிடமுடியாதது.

சூக்கும தத்துவத்தில் ஆத்மா 'அணுவிற்கும் அணுவானது'. மஹத் தத்துவத்தில் ஆத்மா 'பெரியதினும் பெரியது'. நாமமும் ரூபமும், கேவலம் பேதபடுத்திப் பார்க்கும் அறிவு. ஆத்மாவோ பேதமே இல்லாதது. பரிபூரணமானது.

ஆத்மாவுக்கு ஜனனமில்லை; மரணமில்லை; மூலகாரணமில்லை. ஆத்மா பிறக்காதது. நித்தியமானது; சாசுவதமானது; புராதானமானது. ஆத்மாவை சுலபமாக நிர்த்தனம் செய்ய முடியாது.

பிரம்மத்தின் சின்னமாகிய ஓங்காரமே அத்மாவினுடைய பரம் சொரூபம். ஆகமங்களும் நிகமங்களுமே அதை சுலபமாக புரிந்துகொள்ளவில்லை; எல்லாரும் சுலபமாகப் புரிந்துகொள்ளகூடிய விஷயமா என்ன?

ஆத்மாவைப் புரிந்துகொள்ள முயன்ற வேதங்கள் சோர்ந்து போயின; தவசிகள் வனத்திற்கு போனார்கள்; உபநிஷதங்கள் கையை விரித்துவிட்டன. அதை இன்னதென்று கண்டுபிடிக்க யாராலும் முடியவில்லை.

ஆத்மாவின் சொரூபத்தை அறிந்துகொள்ள, முழுமுதற் பொருளும் ஆத்மாவும் ஒன்றே என்பதை தரிசனம் செய்த ஆசாரியர் (குரு) ஒருவர் தேவை. தர்க்க சாஸ்திர நிபுணர்களும் இங்கு நுழைய முடியாது என்னும் நிலையில், மற்றவர்களைப் பற்றிச் சொல்ல என்ன இருக்கிறது?

கேவலம் தர்க்க சாஸ்திர பண்டிதர்களுக்கு இங்கு இடமே இல்லை; அவர்களுடைய குழம்பிய மனம் ஏற்படுத்தும் சூழலிலேயே மாட்டிக் கொண்டு சுற்றி சுற்றி வருவார்கள்.

நாமே கற்பனை செய்துகொள்ளும் எண்ணற்ற நக்ஷத்திரங்களும், நம்மை 84 லட்ச ஜனன மரணச் சுழல்களில் இருந்து விடுபட வைக்க முடியாது.  'ஆகமமும் ஆசாரியனும்' என்னும் ஒரு சந்திரனே போதும்; அஞ்ஞானம் லவலேசமும் இல்லாதது அழிந்துவிடும்.  


Thursday 1 October 2015

ஷிர்டி சாயி சத்சரிதம்

பிறப்புக்கும் இறப்புக்கும் அப்பாற்பட்டது; ஆகாயத்தைப் போன்று கடக்க முடியாது; வேறெதையும் சாராதது; தூய்மையானது. ஓம் எனும் பிரணவமே அதற்கு ஆதாரம்.

அறிய வேண்டியது பர பிரம்மம்; அடைய வேண்டியது அபர பிரம்மம் (உருவமெடுத்த கடவுள்); அதனுடைய சின்னமாக எப்பொழுதும் தியானிக்கப் பட வேண்டியது ஓம்.

எது வேதங்களால் நிர்ணயிக்கப்பட்டதோ, எது பிரம்மச்சரியத்தாலும் மிகத் தீவிரமான பிரயதனங்களாலும் அடையப்படுகிறதோ, அதுவே ஓம் எனும் பிரணவத்தின் உயர்ந்த நிலை.

ஆயினும் இந்நிலைக்கு உயர்வதென்பது மிகக் கடினமாகும். எவர் நன்கு அப்பியாசம் செய்கிறாரோ அவருக்கு குருவின் கிருபை கிடைக்கும்போது இந்நிலை சுலபமாக எட்டிவிடுகிறது.

ஓய்வடையாத சாதகர், தூலமான உடலின் பல அங்கங்களில் ஆரம்பித்துக் கடினமான பயிற்சிகளால் இக சூக்குமமான தாரதம்மியம் (ஒப்பு வித்தியாசம்) தெரிந்த பக்குவத்தை அடையும்போது இந்நிலை சித்தியாகிறது.

வாயினால் ஓத வேண்டிய சப்தமான ஓம் எனும் அக்ஷரம் எல்லாத் தவங்களின் சாரமாகும். உச்சாரணம் செய்தால் தன்னுடைய பொருளின் சாரத்தை உணர்விக்கும். பல ஆவர்த்தங்கள் (சுற்றுகள்) ஜபம் செய்தால் இறைவனை காட்டும்.

வளர்ச்சியோ அழிவோ மாற்றமோ அடையாத, எங்கும் நிறைந்த, சைதன்யமான ஆத்மாவை அறியும் சத்குருவின் அனன்னிய (வேறெதையும் நாடாத) பக்தன் மகா பாக்கியசாலி.

ஆத்யாத்மிகம், ஆதிபௌதிகம், ஆதிதைவிகம் என்னும் மூன்று தாபங்களால் சதா தவிப்பவன் எவ்விதம் அந்த பாக்கியத்தை அனுபவிப்பான்? அது ஞானிகளுக்கே உண்டான வைபவம்.

அஞ்ஞானத்தால் பிறப்பு இறப்பென்னும் சுழற்சி ஏற்படுகிறது. தானும் பிரம்மமும் ஒன்றே என்ற ஞானத்தல்தான் இதிலிருந்து விடுபட முடியும். இதை ஞானிகளின் மூலமாகத்தான் அடைய முடியும்.

உலக விஷயங்களையும் கற்பனைகளையும் சூன்யமாக்கிவிட்டு, 'நான் பிரம்மமாக இருக்கிறேன்' என்னும் வேதமஹா வாக்கியத்தை பல ஆவிருத்திகள் ஜபம் செய்தால் புத்திக்கு அதுவே தொழிலாகிவிடுகிறது. 


Thursday 24 September 2015


ஷிர்டி சாயி சத்சரிதம் 

துவைத பாவமே இல்லையென்றால் யார் கட்டுகிறார், யார் விடுதலை அடைகிறார்? துவைத பாவனை அத்வைத பாவனையால் மறைந்துவிடும்போது, அங்கு எவரும் கட்டுண்டில்லை; எவரும் விடுதலை செய்யப்படுவதும் இல்லை.

பகலும் இரவும் சூரியனால் உற்பத்தி செய்யப்படுபவையா என்ன? அது நம் பார்வையின் தோஷத்தினால் ஏற்படும் விவகாரம். சூரியன் எங்கோ இருக்கிறது; நம்முடைய பார்வையால் பாதிக்கப்படுவதில்லை.

சுவர்க்கத்தின் இன்பங்களும் நரகத்தின் இன்னல்களும் 'நானே கர்த்தா, நானே போக்தா (அனுபவிப்பவன்) என்ற உணர்வோடு அனுபவிக்கப்படும்போது ஆசைகளின் மீதுள்ள பிடிப்பு அதிகமாகிறது;

ஆத்மா நித்தியமானது; புராதனாமானது; அழிவே இல்லாதது; ஆத்மாவிற்கு ஜனனமரணங்கள் கிடையாது. ஓங்காரமே அதனுடைய சின்னம். அது ஆரம்பமும் முடிவுமில்லாதது. எப்பொழுதும் நிலைத்திருப்பது.

எவர் சரீரத்தையே ஆத்மாவென்று நினைக்கிறாரோ, தாம் வேறு, இந்தப் பிரபஞ்சம் வேறு என்று நினைக்கிறாரோ, அவருக்கு எவ்வளவு முயன்றாலும் ஆத்ம அனுபவத்தால் கிடைக்கும் ஞானம் என்றும் கிடைக்காது.

பேச்சு மற்றும் எல்லா இந்திரியங்களையும் வென்று விடு; மனதில் உறுதியை ஏற்றுகொள்; மனதின் அனிச்சை செயல்களை அழித்துவிடு; புத்தியை உறுதியாக பற்றிகொள்.

புத்தி ஒளிமயமான ஞானத்தை அளிக்கிறது. அதன்மேல் தான் மனம் ஒருமுகப்படுத்தப்பட வேண்டும். ஏனெனில், மனம் உட்பட எல்லா இந்திரியங்களும் புத்தியினுடைய ச்வாதீனதில்தான் இருக்கின்றன.

குடத்திற்கு ஆதிகாரணம் களிமண்ணே; அதே ரீதியில்தான் இந்திரியங்களுக்கு புத்தியும். புத்தியே இந்திரியங்களின் சாசுவதமான நிலையாகும். புத்தியினுடைய வியாபகம் அவ்வளவு பெரியது.

எங்கும் வியாபித்திருக்கும் சக்தியால், அது, மனம் உட்பட்ட எல்லா இந்திரியங்களையும் வியாபித்துவிடுகிறது. ஆகவே, புத்தியை மஹத் தத்துவத்தில் (எங்கும் வியாபித்திருக்கும் பிரபஞ்ச உணர்வு) கொண்டு போய்ச் சேர்த்துவிடு; மஹத் தத்துவத்தை ஆத்மாவில் சமர்ப்பணம் செய்துவிடு.

இவ்வாறு அனைத்தையும் ஒன்று சேர்த்துவிட்டால், ஆத்மஸ்வரூபம் நிர்த்தாரணம் ஆகிறது (உன்னையே நீ அறிகிறாய்). அதன்பிறகு, கிளிஞ்சலில் காணப்படும் வெள்ளியும், பாலைவனத்து மணலில் தெரியும் கானல் நீரும், கயிற்றில் இருக்கும் பாம்பும் நம்முடையை பார்வையிலுள்ள கோளாறே என்பது தெரிந்தவிடும்.

ஜனன மரணம் இல்லாததும் விசேஷங்கள் ஏதும் இல்லாததும் முழுமையானதுமான ஆத்மாவை, நம்முடைய நன்மைக்காக நாம் அறிந்துகொள்ள வேண்டுமென்று சாதுக்கள் கூறுகின்றனர்.

எல்லா விளைவுகளுக்கும் ஒரு காரணம் இவ்வுலகில் உண்டு; ஆனால், ஆத்மா காரணமற்றது; சுயம்பு (தான்தோன்றி). ஆத்மா புராதான மானதாயினும் புதியது; கடந்த காலம் நிகழ்காலம் எதிர்காலம் என்று ஏதுமில்லாதது; சுபாவத்தினால் புத்தியற்றது;-


Thursday 10 September 2015

ஷிர்டி சாயி சத்சரிதம்

'எது நியாயம், எது அநித்தியம் என்னும் விவேகத்தை விடச் சிறந்த, உன்னதமான வழி வேறேதும் பிரம்மத்தை அடைவதற்கு இல்லை.' இது சத்தியமான வேதாந்த வசனம். ஆயினும் அம்மாதிரியான விவேகம் எல்லாருடைய சக்திக்கும் உட்பட்டதா என்ன?

சிரமமான அப்பியாசங்களாலும் கடினமான பயிற்சிகளாலும் உடலை எலும்புக் கூடாகத் தேய்க்க வேண்டும். அதன் பின்னரே குருவின் அருள் என்னும் ஒளியால் விவேகம் மெதுவாக உதயமாகும்.

எப்பொழுது நான்முகன், 'நான் ஈசுவரன், நான் அனைத்தையும் நிர்வகிப்பவன்' என்று நினைத்து தம்முடைய உண்மையான நிலையை மறந்துவிடுகிறாரோ, அப்பொழுதே இப் பிரபஞ்சம் சிருஷ்டி செய்யப்படுகிறது.

ஆனால், 'நானே பிரம்மமாக (முழு முதற் பொருளாக) இருக்கிறேன்' என்ற ஞானம் உதிக்கும்போது, அறிபவர் பிரம்மத்தோடு ஐக்கியமாகி விடுகிறார். அக்கணமே இப் பிரபஞ்சமென்னும் மாயை தூக்கி எறியப்படுகிறது. இங்ஙனம் வேதங்கள் மொழிகின்றன.

எப்பொழுது ஒருவர் பிரம்மத்துடன் ஐக்கியமான உணர்வுடன் 'தன்னை அறிந்து' கொள்கிறாரோ, அப்பொழுது இப்பிரபஞ்சம் பிரம்மமாகிய அக்கினிக்கு ஆஹுதி (படையல் ) ஆகி விடுகிறது. அவரைப் பொறுத்தவரை பிரபஞ்சம் சாம்பலாகிப் போகிறது.

மற்ற ஜீவன்களுக்கும் இதே நிலைதான். அவர்களுடைய பிரமைகள், சூரிய ஒளி வந்த பின் பாம்பு மற்றும் வெள்ளி போன்ற இருட்டு நேர பிரமைகள் விலகுவது போன்று, உடனே விலகிவிடுகின்றன. (கயிறு பாம்பாகவும் கிளிஞ்சல் வெள்ளியாகவும் தெரிவது பிரமை)

கிளிஞ்சல் என்று தெரியாத அறியாமை, வெள்ளியோ என்னும் மாயையைத் தோற்றுவிக்கிறது. வெள்ளியைப் பற்றிய உண்மயான ஞானம், நாம் பார்த்தது கிளிஞ்சல்தான் என அறிந்து கொள்ள வைக்கிறது. அந்தக் கணத்தில் வெள்ளி என்னும் மாயை மறைந்து கிளிஞ்சல் தெளிவாகவும் உறுதியாகவும் தெரிகிறது.

அஞ்ஞானத்தால் ஒன்றை மற்றொன்றாக அறியும் நிலைமை இது. ஞான தீபத்தை தேய்த்து துலக்கி சுத்தம் செய்து அஞ்ஞான மலத்தை அகற்றுங்கள். எல்லா பிரமைகளையும் ஒழிந்துவிடும்.

பிறப்பு, இறப்பு, என்னும் பந்தங்கள் இல்லையென்றால் மோக்ஷத்திற்கு நிர்ப்பந்தம் என்ன இருக்கிறது? வேதாந்தத்துக்கும் நமக்கும் என்ன சம்பந்தம்? இந்தப் பிரபந்தம் (நூல்) எதற்காக?

'நான்  கட்டுண்டிருக்கேன்; விடுதலை பெற வேண்டும்;" என்ற நம்பிக்கையும் உறுதிப்பாடும் இருப்பவரே பிரம்ம ஞானம் தேடுவதற்கு அதிகாரியாவார்; சுத்தமான அஞ்ஞானியோ அல்லது முற்றும் உணர்ந்த ஞானியோ அதிகாரி அல்லர்;

கட்டுகளே இல்லாத போது எதிலிருந்து விடுதலை பெறுவது? இதுவே வாஸ்தவமான நிலைமை. முக்குணங்களின் சம்பந்ததாலேயே பந்தமும் முக்தியும்; இதுவே அனைவருடைய அனுபவமும்.   


Thursday 3 September 2015

ஷிர்டி சாயி சத்சரிதம்

ஐந்து ரூபாய் என்ன பெரிய தொகை அவருக்கு? அதைகூடக் கடனாக கொடுக்க அவருக்கு மனமில்லை. பாபாவுக்கு அச் சிறிய தொகையை கொடுக்க மனமில்லாத அவர், வாஸ்தவத்தில் பேராசையின் வடிவமே.

அவரே பாபாவிடம் அன்புகொண்ட, கள்ளங்கபடமற்ற, விசுவாசமுள்ள அடியவராக இருந்திருந்தால், தம்முடைய கண்ணுக்கு எதிரிலேயே இந்தக் கடன் வாங்கிக் கடன் கொடுக்கும் காட்சியை சகித்துக்கொண்டு இருந்திருக்கமாட்டார்.

பிரம்ம ஞான தாஹம் அவ்வளவு இருந்தவர், கேள்வியைப் புரிந்துகொண்டிருக்க மாட்டாரா? இல்லை, நான் அவ்வாறு நினைக்கவே இல்லை! செல்வத்தின் மீதிருந்த மோஹம் அவரை ஆட்கொண்டு விட்டது.

இந்நிகழ்ச்சிகள் எல்லாம் நடந்து முடிந்த பிறகு, அவர் வெருமனெயாவது உட்கார்ந்திருக்கலாம்! அதுவும் இல்லை! திரும்பிச் செல்வதற்கு இருந்த அதீதமான (அதிகமான) அவசரத்தில் பொறுமையை இழந்து சொன்னார், "ஓ பாபா சாயி, பிரம்மத்தை எனக்கு சீக்கிரம் காட்டுங்கள்!"

பாபா அப்பொழுது சொன்னார், "நீர் இருந்த இடத்திலேயே பிரம்மத்தை உமக்குக் காட்ட நான் பல முயற்சிகள் செய்யவில்லையா? இதிலிருந்து  நீர் ஒன்றுமே புரிந்து கொள்ள வில்லையா?"

பிரம்மத்தை நாடுபவர் , பஞ்சப் பிராணன்களையும் ஐந்து ஞானேந்திரியங்களையும் ஐந்து கர்மேந்திரியங்களையும் அஹங்காரத்தையும் புத்தியையும் மனதையும் (பிரம்மத்திற்கு) சமர்ப்பணம் செய்து விட வேண்டும்.

பிரம்ம ஞானம் தேடும் பாதை கஷ்டமானது; எல்லாராலும் சுலபமாக அடைந்து விட முடியாது. பாக்கியசாலிக்கு நல்ல நேரம் வாய்க்கும்போது, பிரம்மம் தன்னையே திடீரென்று வெளிப்படுத்திக் கொள்கிறது.

எவன் பற்றற்றருத்தவனோ, எவன் இறைவனோடு ஐக்கியமாகி விடுவதைப் பற்றியும் கூடப் பெருமைப்படாதவனோ, அவனே பிரம்ம வித்தைக்கு அதிகாரியாவான்; ஏனெனில் அவன் எதிலும் பற்றில்லாதவன்.

லவலேசமும் பற்றறுக்கும் சுபாவமும் இல்லாதவனுக்கு, பிரம்ம தத்துவத்தை எவர் எவ்வளவு முழுமையாக உபதேசம் செய்தாலும், அவர் (உபதேசம் செய்பவர்) வெற்றி பெறுவாரா?

உத்தமமான அதிகாரிகளுக்கு பிரம்ம ஞானம் அதிக சிரமம் இன்றி சுலபமாகக் கிடைத்துவிடும். மத்திம அதிகாரிகள் படிப்படியாக சாஸ்திர விதிகளின்படி முன்னேற வேண்டும்.

முன்னவருக்கு சிறகடித்துப் பறக்கும் பறவையை போன்று வேகமாகக் கிடைக்கும்; பின்னவருக்கு ஏணியின் படிகளில் ஏறுவது போன்று மெதுவாக நடக்கும். ஆன்மீக அதிகாரமே இல்லாதவர்கள் பிரம்மத்தை அறிவதற்காக செய்யும் முயற்சிகள் வியர்த்தமே . 


Thursday 27 August 2015

ஷிர்டி சாயி சத்சரிதம்

"பாபாவுக்கு அவசரமாக ஐந்து ரூபாய் கடனாக தேவைப் பட்டது. ஆகவே, இந்த சமயத்திற்கு உடனே கொடு; சீக்கிரமாகவே கடன் திருப்பிக் கொடுக்கப்படும்"

பையன் நந்து மார்வாடியின் வீட்டிற்கு சென்றான்; ஆனால், கதவில் பூட்டு தொங்கிக் கொண்டிருந்தது. ஆகவே, அவன் உடனே திரும்பி வந்து பாபாவிடம் செய்தி சொன்னான்.

பாபா கூறினார், "மறுபடியும் திரும்பிப் போ, மளிகைக் கடைக்காரர் பாலாவிடம். அனேகமாக அவர் வீட்டில் இருப்பார். அவரிடம் இதே செய்தியைச் சொல். சீக்கிரமாகப் பணத்தை வாங்கிக் கொண்டு வா. போய் வா!"

இந்த நடையும் வியர்த்தமாகப் போயிற்று. பாலா வீட்டில் இல்லை! நடந்ததை எல்லாம் பையன் பாபாவிடம் விவரித்தான்.

பாபா அவசரமாக இன்னும் ஓரிரண்டு இடங்களுக்கு இதே வேலையாகப் பையனை அனுப்பினார். பையன் வீணாக அங்கும் இங்கும் ஓடுவதில் களைத்துப் போனானே தவிர, ஒரு பைசாவும் கொண்டு வரவில்லை.

நந்துவோ, பாலவோ, மற்றவர்களோ வீட்டில் இல்லை என்பது பாபாவுக்கு நன்கு தெரியும். அந்தர்ஞானத்தால் அவர் அனைத்தையும் அறிந்திருந்தார்.

நடமாடும், பேசும், தெய்வமாகிய சாயினாதருக்கு ஐந்து ரூபாய் எப்பொழுதாவது தேவைபட்டிருக்குமா? இதெல்லாம் 'பிரம்மத்தை காட்டு' என்று கேட்டுக்கொண்டு வந்தவருக்காக செய்யப்பட்ட லீலையே.

வீட்டிற்கு விஜயம் செய்யும் விருந்தினருக்காக செய்யப்படும் இனிப்பான பலகாரத்தையோ அல்லது சீராவையோ (ரவாகேசரியையோ) வீட்டில் உள்ள அனைவருமே சுவைத்து ஆனந்தம் அடைகின்றனர் அல்லரோ!

அதுபோலவே, தம் அடியவர்களுக்கெல்லாம் மற்ற எல்லாருக்காகவும் போதனை செய்வதற்காக பாபா கண்டெடுத்த ஒரு சாக்குதான், பிரம்மத்தை நாடி வந்தவர்!

அவருடைய ஜோபியில் 250 ரூபாய்க்கு மேல் ஒரு நோட்டுக் கட்டு இருந்தது; அது பாபாவுக்கு தெரியும்.

பிரம்மத்தை தேடிக்கொண்டு வந்தவருக்கு அது தெரியாதா என்ன? நோட்டுக் கட்டு ஜோபியில் இருந்த போதிலும் அவருடைய விகற்பமான புத்தியும் தயக்கமும் அவரைத் தடை செய்து விட்டன.

முழு முதற் பொருளைக் கண்ணெதிரே காட்டு, என்று கேட்டுக் கொண்டு வருகிறார்; ஆனால், ஐந்து ரூபாய் பாபாவுக்கு (உடனே திருப்பிப் பெறக்கூடிய) கடனாக கொடுப்பதற்கு அவருக்கு மனமில்லை!

சாயி மகாராஜ் சத்தியசந்தர் என்பது அவருக்குத் தெரியும்; சிறிது நேரத்தில் திரும்பி வரப்போகும் கடனும் சொற்பமான தொகையே! ஆயினும், கடன் கொடுக்கலாம் என்று அவர் மனதில் நினைத்தவுடனே, கஞ்சத்தனம் அவரை ஆட்கொண்டது.  


Thursday 20 August 2015

ஷிர்டி சாயி சத்சரிதம்

"அவ்வாறே கோடைக்காலம், வசந்த காலம், குளிர்காலம் போன்ற பருவ காலங்களும் சரியான முறைப்படி வந்து போகின்றன. இந்திராதி தேவர்களும் மக்களைக் காப்பதற்காக எட்டுத் திக்குகளிலும் நியமிக்கப்பட்ட அஷ்ட பாலகர்களும் தங்களுடைய கடமைகளை செவ்வனே செய்கிறார்கள். இவை அனைத்துக்கும் மூலம் பிரம்மமே!

"ஆகவே, இந்த சரீரத்தை விட்டுப் போகுமுன் ஞானம் பெற்றவன், மனித வாழ்வின் குறிக்கோள் ஆகிய பிரம்மத்தை அடைகிறான். இல்லையெனில், பிறப்பு - இறப்பு என்னும் சுழல் அவனை விடாது துரத்துகிறது.-

"பிரம்மத்தை அறியுமுன்னரே இந்த உடல் வீழ்ந்து விட்டால், சம்சார பந்தத்தின் மிச்சம் அவனைத் தொடர்ந்து செல்லும். மறுபடியும் பிறவிஎடுப்பது தவிர்க்க முடியாததாகி விடும். -

"நான் உமக்கு பிரம்மத்தை மட்டுமன்று, பிரம்மச் சுறுளையே காட்டுகின்றேன். நகத்திலிருந்து சிகை வரை உம்மை மூடிகொண்டிருக்கும் அச்சுருளை விரித்துப் பிரித்துக் காட்டுகிறேன்."

ஓ! தேவாமிருதம் போன்ற இனிமையான வார்த்தைகள்; சுத்த அத்வைத ஞானச் சுரங்கம்; சந்தேஹத்தால் ஊஞ்சலாடும் மனிதர்களையும் கூட தூக்கி விடும் சக்தியுடையுது.

பாபாவின் அமுத மொழிகளின் சக்தியால், நிலையில்லாத புலனின்பங்களின் பின்னால் இரவும் பகலுமாக ஓடுபவர்கள் கூட, சாஸ்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள பாதையை உறுதியாக நாடுவர்.

விநாயகர் சந்தோசம் அடைந்தால் (நாம் செய்யும் வழிபாட்டால்) உலகியல் சுகங்கள் அனைத்தும் கிடைக்கும். இந்திரன் சந்தோசம் அடைந்தால் சுவர்கத்தின் சம்பத்துகள் கிடைக்கும்.

குரு இவர்களையெல்லாம் விடச் சிறப்பானவர். சந்தோசம் அடைந்துவிட்டால், கிடைக்காத பொருளாகிய பிரம்மத்தையே காட்டிக் கொடுக்கக்கூடிய வள்ளல், குருவைத் தவிர வேறெவரும் இல்லை.

இந்த இனிமையான காதையைக் கேட்டால், சம்சார துக்கங்கள் அனைத்தும் மறந்து போய்விடும். பிரம்ம நாட்டம் உடையவர்களுக்கு என்ன பாடம் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று பாபாவுக்கு தெரியாதா!

ஆகவே, பாபா அவரை உட்காரச் செய்துவிட்டு, அவருடைய கவனத்தை வேறு திசையில் திருப்பி, அவர் கேட்ட கேள்வியை தாம் மறந்துவிட்டது போல, அவருக்குத் தோன்றும்படி செய்தார்.

பிறகு பாபா என்ன செய்தாரென்றால், ஒரு பையனைத் தம்மிடம் அழைத்து, "போ, சீக்கிரமாக போய் நந்துவுக்கு இந்தச் செய்தியைச் சொல்.-

Thursday 13 August 2015

ஷிர்டி சாயி சத்சரிதம்

"பிரம்மத்தை அறியவேண்டுமென்று உம்முடைய தேடல் அத்தகையதே. ஒரு பைசாவும் ஈயாத கஞ்சனாகிய நீர், உம்முடைய ஆசையை நிறைவேற்றி வைக்கக் கூடியவர் எவரையும் காணமாட்டீர்."

ஆயினும், பிரம்மத்தை அறியவேண்டுமென்ற பேராவல் கொண்ட இம்மனிதர், போகவர ஒரு குதிரை வண்டியை அமர்த்திக்கொண்டு ஷீரடிக்கு கிளம்பிவிட்டார். இவ்விதமாக சாயியின் பாதங்களுக்கு வந்து சேர்ந்தார்.

சாயியை தரிசனம் செய்துவிட்டு அவருடைய பாதங்களுக்கு நமஸ்காரம் செய்தார். கதை கேட்பவர்களே, சாயி அவருக்குச் சொன்ன மதுரமான வார்த்தைகளைக் கேளுங்கள்.

சாயியின் கதைகள் என்னும் கற்பக விருக்ஷதிற்குக் கவனமான கேள்வி என்னும் தண்ணீரைப் பாய்ச்சினால், அது நன்றாக வேர்விட்டு, கேட்பவர்களுடைய பயபக்தி வளர்ந்து பலப்பல விதமான பழங்களை உற்பத்தி செய்யும்.

இம் மரத்தின் எல்லாப் பாகங்களும் இனிமையாக இருக்கும்; சுகந்தமான புஷ்பங்கள் மலரும்; மதுரமான பழங்களின் பாரத்தால் மரமே தழையும்; அனுபவிப்பவர்களின் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும்.

அப்பொழுது அவர் சொன்னார், "பாபா, தயவு செய்து எனக்கு பிரம்மத்தை (முழு முதற் பொருளைக் ) காட்டுங்கள். இந்த ஒரே ஆவலுடன் நான் வந்திருக்கேன். ஷிர்டி பாபா தாமதமேதுமின்றி உடனே பிரம்மத்தை காட்டுகிறார் என்று சொல்கிறார்கள். -

"இதற்காகவே நான் நெடுந்தூரம் வந்திருக்கிறேன்; பயணம் செய்ததால் களைத்துவிட்டேன். ஆயினும் இப்பொழுது எனக்கு பிரம்மம் கிடைத்துவிட்டால், என்னுடைய முயற்சிகளுக்கு பலன் கிடைத்தவனாவேன்".

பாபா கூறினார், "கவலைப்படாதீர், நான் உமக்கு நேரத்தோடு உடனே பிரம்மத்தை காட்டுகிறேன். இங்கே கடன்வியாபாரமே என்றும் கிடையாது. உம்முடையதைப் போன்ற வேண்டுதலுடன் வருபவர்கள் அரிதினும் அரிது!-

"செல்வத்தையோ, சம்பத்தையோ, வியாதி நிவாரணத்தையோ, ஆபத்து விலக்கையோ, புகழையோ, கௌரவத்தையோ, ராஜிய பதவியையோதான்  மக்கள் கேட்கிறார்கள்; அனவரதமும் சுகத்தையே நாடுகிறார்கள்.-

"கேவலம் உலக சுகங்களை நாடியே மக்கள் ஷிர்டிக்கு ஓடி வருகின்றனர்; வெறும் பக்கீராகிய என்னை வழிபடுகின்றனர். யாரும் பிரம்மம் வேண்டுமென்ற கேட்பதில்லை.-

"இம்மாதிரியான மக்கள் (சுகம் நாடுபவர்) உம்மை போன்றவர்கள் மிகக் குறைவு. பிரம்ம ஞானம் கேட்டு யாரும் வரமாட்டார்களா என்று நான் ஏங்குகிறேன்; அவர்களை சந்திப்பது எனக்குப் பண்டிகையும் திருவிழாவுமாகும். -

"பிரம்மத்திற்கு பயந்தே சூரியனும் சந்திரனும் தங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட பாதைகளில் செல்கிறார்கள். உதயமாவதும் அஸ்தமனவாதும் ஒளி தருவதும் ஓய்வதும் குறிப்பிட்ட நேரங்களில் நடக்கிறது.- 

Thursday 6 August 2015

ஷிர்டி சாய் சத்சரிதம்

கதை கேட்பவர்களிடம் நான் ஒரே ஒரு விண்ணப்பம் செய்கிறேன். நான் கடந்த பிரம்ம ஞானத்தை தேடி பாபாவிடம் வந்த மனிதரின் கதையாகும் இது. வாழ்க்கையின் மிகப்பெரியதும் முக்கியமானதுமான விஷயத்தை பற்றிக் கேளுங்கள்.

பிரம்ம ஞானம் பெறவேண்டுமென்று மிகுந்த ஆவலுடன் பாபாவிடம் வந்த மனிதரை பாபா எவ்விதம் திருப்தி செய்தார் என்பதையும், அவருக்கும் தம்மைச் சுற்றியிருந்த நிஜமான பக்தர்களுக்கும் பாபா அருளிய போதனையையும் கேளுங்கள்.

எல்லா ஆசைகளையும் பரிபூரணமாகத் துறந்த ஞானிகள் எப்பொழுதும் எந்நிலையிலும் நிறைவேறாத, அத்தியந்தமான (உயிருக்குயிரான) ஆசைகளைக் கொண்டவர்களாக இருக்கின்றனர்;

சிலர் புத்திர சந்ததியை வேண்டுவர்; சிலர் என்றும் நிலைக்கும் ராஜ்யத்தையும் விரும்புவர்; சிலர் பாவ பக்தியையும் நாடுவர்; எவரோ ஒருவர்தான் பிறவிப் பிணியிலிருந்து விடுதலையை நாடுவர்.

பாபாவினுடைய பெரும் கீர்த்தியைக் கேள்விப்பட்டு, வாழ்நாள் முழுவதும் செல்வம் சேர்ப்பதிலேயே மூழ்கிப் போனவரும், தம்மைப் பக்தனாக பாவித்துக் கொண்டவருமான மனிதரொருவர், பாபாவை தரிசனம் செய்வதற்காக வந்தார்.

செல்வம், சந்ததி, வேலையாள்கள் போன்ற எல்லா சம்பத்துக்களும் அவரிடம் அபரிதமாக இருந்தன. இருப்பினும், பாபா உதார குணமே உருவெடுத்தவர் என்று தெரிந்து அவரை தரிசனம் செய்வதற்கு வந்தார்.

"பாபா ஓர் உயர்ந்த பிரம்ம ஞானி; சாதுக்களிலும் ஞானிகளிலும் மணிமகுடமானவர். அவருடைய பாதங்களில் சிரம் தாழ்த்துவேன்; ஏனெனில், அவருடைய செயல்முறைகள் ஆராய்ச்சிக்குட்பட்டவை.-

"எனக்கு எந்தவிதமான குறையோ தேவையோ இல்லை; ஆகவே, நான் அவரிடம் பிரம்ம ஞானம் கேட்டால் என்ன? அது மாத்திரம் சுலபமாக கிடைத்துவிட்டால் நான் எல்லாப் பேறுகளையும் பெற்றவனாவேன்!"

நண்பர் ஒருவர் அப்பொழுது சொன்னார், "பிரம்மத்தை அறிவது சுலபமான காரியம் அன்று. அதுவும் உம்மைப் போன்ற பேராசை பிடித்தவருக்கு பிரம்மம் தன்னை வெளிப்படுத்திக் காட்டுவது என்பது நடக்காத காரியம்.-

"செல்வம், மனைவி, மக்கள், இத்தியாதி விஷயங்களை தவிர வேறெதிலும் நீர் சுகம் காண்பதில்லை. உம்மைப் பொறுத்தவரை பிரம்மம் ஒரு மனபிராந்தியே. அது எப்படி உமக்கு விச்ராந்தி அளிக்கும்?-

"இந்திரிய சக்திகள் க்ஷனம்டைந்து போனபின் இவ்வுலகத்தார் யாரும் (நம்மை) மதிப்பதில்லை. அந்தக் கட்டத்தில், சோம்பித் திரியும் மனம், பிரம்மம், அது, இது என்று நூல் இழைக்கிறது.-

Thursday 23 July 2015

ஷிர்டி சாயி சத்சரிதம்

சத்குரு எல்லா விருப்பங்களும் நிறைவேறியவர் என்றால், ஓர் அடியவர் அவருடைய விருப்பத்தை எப்படி நிறைவேற்றி வைக்க முடியும்? ஆழமாக சிந்தித்துப் பார்த்தால், குருதான், குருவுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற பக்தனுடைய ஆவலை நிறைவேற்றி வைத்து அவனை நிஷ்காமனாகச் (விருப்பம் இல்லாதவனாக) செய்கிறார்.

உண்மையான பக்தியுடன் சமர்ப்பிக்கப்பட்ட ஒரு பூவையோ ஓர் இலையையோ அவர் அன்புடன் ஏற்றுகொள்கிறார். அதுவே கர்வத்துடன் அளிக்கபட்டால், உடனே தலையை திருப்பிக் கொண்டு போய் விடுகிறார்.

சச்சிதானந்த கடலாகிய அவருக்குப் புறச்சடங்குகள் முக்கியமா என்ன? ஆயினும் பக்தியுடனும் விசுவாசத்துடனும் எது அளிக்கபட்டாலும் அதை சந்தோஷமாக ஏற்றுகொள்கிறார்.

எனகொன்றுமே தெரியாது என்னும் போர்வையின் கீழ், வாஸ்தவத்தில்  அவர் நம்முடைய அறியாமையை நீக்கி ஞானத்தை அளிக்கிறார். சாஸ்திர விதிகளில் இருந்து விலகாமல் தம் அடியவர்களுக்கு இனிமையான முறையில் போதனை நல்குகிறார்.

அவருக்கு பாவத்துடன் சேவை செய்யும் அடியவர், இறைவனிடம் ஒன்று கலந்த உணர்வை அடைகிறார். இதர சாதனைகளைத் தள்ளி வைத்து விட்டு குரு சேவையில் பணிவுடன் ஈடுபடுங்கள்.

அந்த சேவையில் சிறிது கவனக்குறைவு ஏற்பட்டாலும், கபடமான சாமர்த்தியத்தின் நிழல் பட்டாலும், சாதகருக்கு தீமையே விளையும். தேவை என்னவென்றால், குருவின் மீது உறுதியான விசுவாசமே.

மேலும், சிஷ்யன் சுயமுயற்சியால் என்ன செய்கிறான்? ஒன்றுமில்லையே! அவன் செய்வதையெல்லாம் சத்குருவன்றோ லாவகப் படுத்துகிறார்! சிஷ்யனுக்கு தனக்கு வரப்போகும் அபாயங்களை பற்றி எதுவும் தெரிவதில்லை. குரு அந்த அபாயங்களை விலக்குவதற்காக செய்யும் உபாயங்களும் கூட சிஷ்யனுக்கு தெரிவதில்லை!

மூவுலகங்களிலும் தேடினாலும் குருவைப் போன்ற தர்மதாதாவை காண்பதரிது. சரணமடைந்தவர்களுக்கு மாபெரும் புகலிடமான குருவிடம் வேறெதையும் நாடாமல் பரிபூரணமாக சரணடைவோமாக.

குருவைச் சிந்தாமணிக்கு உபமானப்படுதுவதும் சரியாகாது. ஏனெனில், அந்த தேவ லோகத்து ரத்தினம் நாம் நினப்பதைதான் அளிக்கும். குருவோ, நிஜமான பக்தன் பரம ஆச்சரியம் அடையுமாறு அவன் நினைத்தே பார்க்காத வஸ்துகளையும் அளிப்பார்.

இந்திரனுடைய கற்பகதருவிற்கு உபமானப்படுத்துவோமேன்றால், அது நாம் கல்விதம் செய்வதைத்தான் (கற்பனையில் விரும்புவது) அளிக்கும். குருராயரோ, நாம் கற்பனை செய்தும் பார்க்கமுடியாத நிர்விகல்பசமாதியையும் அளிக்கும் சக்தி பெற்றவர்.

காமதேனு (தேவலோகத்துப் பசு) நாம் விரும்பிய பொருளை உடனே அளிக்கும். காமதேனுவை விடச் சிறந்தவர் குருதேனு. நம்மால் சிந்தனை செய்து பார்க்கமுடியாத பதவியையும் (வீடு பேறு நிலையையும்) அளிப்பார்! வேறு யாருக்கு 'கற்பனை செய்து பார்க்க முடியாததையும் அளிப்பவர்' என்னும் பட்டம் பொருந்தும்? 


Thursday 16 July 2015

ஷிர்டி சாயி சத் சரிதம்

ராஜாதி ராஜச் சக்ரவர்த்தியும் சாந்திஎனும் சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் தெய்வமும் ஆத்மானந்த சாம்ராஜ்யத்தின் தலைவரும் நம்முடைய ஒரே அடைக்கலமுமாகிய குருராஜரை நமஸ்காரம் செய்வோம்.

அதே பக்தி, சஹஜ சமாதி என்னும் இரண்டு சாமரங்களும் ஆத்மானுபூதி, கைமேல் அனுபவம் என்னும் இரண்டு விசிறிகளும் அவருக்கு அருகே சதா மெதுவாக வீசப்படுகின்றன.

ஆத்மாவிலேயே லயித்துப் போதல் அவர் தலைக்குமேல் இருக்கும் குடை; சாந்தியும் நல்லுணர்வுகளும் அவருடைய கட்டியன்காரர்களின் கைகளில் இருக்கும் கோல்கள். காம, குரோத, லோப, மோக, மத, மாச்சரியங்களுக்கும் மாயையுக்கும் அவர் சந்நிதியில் இம்மியளவும் இடமில்லை.

ஓ, அவருடைய தர்பாரின் கம்பீரந்தான் என்னே! நான்கு வேதங்களும் ஆறு சாத்திரங்களும் பதினெட்டு புராணங்களும் அவருடைய புகழ் பாடும் அரசவைப் புலவர்கள். சுத்த ஞானத்தின் ஒளியே அவருக்குப் பின்னால் பிரபையாக அமைகிறது. கனமான ஆத்மானந்தம் சூழலில் பரவியிருக்கிறது.

பற்றின்மை, பக்தி, சுத்த ஞானம், கேள்வி, மனனம், தியானம், நிதித்யாசனம், இறை தரிசனம் ஆகிய எட்டும் பிரதானமான மந்திரிகளாக சேவை புரிகின்றன.

சாந்தியும் புலனடக்கமும் அவர் கழுத்தில் அணியும் தெய்வீக மணிகள். அவருடைய இனிமையான பேச்சு வேதாந்தமென்னும் சமுத்திரத்தில் இருந்து அமிருதத்தை கொண்டு வருகிறது.

ஞானமெனும் ஒளி வீசும் கூர்மையான வாளால் அவர் வெட்டுவதற்காக கையை ஓங்கும்போது, மனிதப் பிறவி என்னும் மரம் பயந்து நாடு நடுங்குகிறது.

நிரஞ்சனரெ! குணங்களுக்கு அப்பாற்பட்டவரே! யோகிராயரே! ஜெய ஜெய! தீனார்களை ரகிஷிப்பதர்காகவும் பரோபகாரதிற்காகுவுமே தேவரீர் மனித உடல் தாங்கியிருக்கிறது.

கடந்த அத்தியாயத்தில், ஒரு பக்தருடைய விசுவாசத்தை உறுதிப்படுத்துவதற்காக அவருடைய விரதத்தை பூர்த்தி செய்ய வைத்து, அவருடைய ரஹசியம் தமக்கு தெரியும் என்னும் குரிய்ப்பையும் எவ்வாறு காட்டினார் என்பது விவரிக்கப்பட்டது.  


Thursday 9 July 2015

ஷிர்டி சாயி சத்சரிதம்

உங்களுடைய சித்தம் மகிழ்ச்சியால் பொங்கும்; உங்களுடைய பிரபஞ்ச உணர்வு மேன்மையுறும். ஆகவே, கதை கேட்பவர்களே, உங்களுடைய கவனத்தை கொடுத்து ஞானிகளுடைய மகிமையை அறிந்து கொள்ளுங்கள்.

எல்லாருக்கும் க்ஷேமம் உண்டாகட்டும்! ஞானிகளாலும் சான்றோர்களாலும் உணர்வூட்டப்பட்டு, சாயி பக்தன் ஹெமாத் பந்தால் இயற்றப்பட்ட, 'ஸ்ரீ சமர்த்த சாயி சத்சரிதம்' என்னும் காவியத்தில், 'சோல்கரின் கற்கண்டு விநியோகம்' என்னும்  பதினைந்தாவது அத்தியாயம் முற்றும்.

ஸ்ரீ சத்குரு சாயி நாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.

சுபம் உண்டாகட்டும். 


Thursday 2 July 2015

ஷிர்டி சாயி சத்சரிதம்

எவர் இந்த அத்தியாயத்தை பயபக்தியுடன் படிக்கிறாரோ, அல்லது பலமுறைகள் திரும்பத் திரும்ப பாராயணம் செய்கிறாரோ, அவருடைய சங்கடங்கள் அனைத்தும் குருராயரால் நிவாரணம் செய்யப்படும்.

வேறெதையும் நாடாமல் சாயியின் பாதங்களில் எவர் சிரம் தாழ்த்துகிறாரோ அவர், தம்மைக் காக்கும் தெய்வமும் அபயம் அளிப்பவரும் நன்மையைச் செய்பவரும் தீமையை அழிப்பவரும் ஒரே அடைக்கலமும் சாயியே என்று உணர்ந்து கொள்வர்.

தவறு செய்துவிடாதீர்கள்; சந்தேஹம் வேண்டா! சாயினாதர் அத்தகையவரே! பக்தர்களின் நலனுக்காகவே என்னுடைய சூக்கும அனுபவ விசேஷத்தை உங்களுக்கு எடுத்துரைக்கிறேன்.

"இந்த ஜகத்தில் நான் ஒருவனே இருக்கிறேன்; என்னைத் தவிர வேறெதுவும் இல்லை. இப்பூவுலகம் மாத்திரமல்லாது மூன்று உலகங்களிலும்  நான், நான் மாத்திரமே இருக்கின்றேன்;"

இந்த அத்வைத ஞானம் உணர்வூட்டபடும் போது, பயத்தின் நிழல் கூட இருக்காது. இந்த ஞானம் அடைந்தவருக்கு எல்லாமே பிரபஞ்ச உணர்வால் நிரம்பியிருக்கும். அஹங்காரதிற்கும் அபிமானத்திற்கும் இங்கு இடமே இல்லை.

ஹெமாத் பந்த் சாயியிடம் முழுமையாக சரணடைகிறேன்; அவருடைய பொற் கமலப் பாதங்களில் இருந்து ஒரு கணமும் பிரியமாட்டேன். ஏனெனில், சம்சார சாஹரத்தை கடப்பதற்கு அதுவே பத்திரமான வழியாகும். மேற்கொண்டு, சொல்லப் போகும்  சுவாரசியமான காதையைக் கேளுங்கள்.

அடுத்த அத்தியாயத்தில், பிரம்ம ஞானம் என்பது விரல்களால் சிட்டிகை போடுவது போன்று சுலபம் என்று நினைக்கும் மக்கள், எப்படி பிரம்ம ஞானம் வேண்டுகிறார்கள் என்பதை ஒரு முக்கியமான நிகழ்ச்சியை உருவாக்குவதன்  மூலம் குரு சிரேஷ்டரான சாயி விளக்குவார்.

ஒரு பேராசை பிடித்த மனிதர் பிரம்ம ஞானம் வேண்டுவார்; மகாராஜ் அம்மனிதருடைய ஜோபியில் இருந்தே அதை எடுத்துக் கொடுப்பார்.

'ஆசையை துறக்காதவன் பிரம்ம ஞானத்தை எக்காலத்தும் அடைய முடியாது; இதில் சந்தியம் வேண்டா' என்னும் கருத்தை பாபா எவ்வளவு அழகாக எடுத்துக் காட்டினார் என்பதை இக்காதையை கேட்பவர்கள் நன்கு புரிந்து கொள்வார்கள்.

பிரம்ம ஞானம் அடையக்கூடிய அதிகார் யார்? அது யாருக்கு கிடைக்கும்? அதைப் பெற வழி யாது? இவற்றை எல்லாம் மகாராஜ் அடுத்த அத்தியாயத்தில் விவரமாக எடுத்துரைப்பார்.

அவருடைய அடிமையின் அடிமையாகிய நான், இந்த சாயி பிரேமவிலாசத்தை நீங்கள் மிக உல்லாசாமாக கேட்க வேண்டுமென்று  பணிவுடன் ஆசை கொள்கிறேன்.


Thursday 25 June 2015

ஷிர்டி சாயி சத்சரிதம்

அங்கிருந்து கிளம்பிய பல்லி , இடைவிடாது ஒலி  செய்து கொண்டிருந்த  தன்  அக்காள் பல்லியிடம்  நேராக ஓடியது. ஒலி  எங்கிருந்து வந்ததோ அந்த  திசையிலேயே  பெருமிதத்துடன் ராஜ நடை  போட்டுச் சென்றது.

எத்தனையோ நாட்களுக்குப் பிறகு, சகோதரிகள்  இரண்டும் சந்திக்க நேர்ந்தது. இரண்டும் கட்டியணைத்துக் கொண்டு வாயில் முத்தமிட்டுக் கொண்டன.  பிரேமையின் அபூர்வமான கொண்டாட்டம்!

ஒன்றை ஒன்று வட்டமாகச் சுற்றி மகிழ்ச்சியுடன்  தட்டாமாலை சுற்றி இஷ்டம்போல் செங்குத்தாகவும் கிடக்கையாகவும் குறுக்காகவும் சுழன்று ஆட்டம் போட்டன.

ஔரங்காபத் நகரம் எங்கே, ஷிரிடி எங்கே! எவ்வளவு விசித்திரமான நிகழ்ச்சி இது! குதிரையின்மீது திடீரென்று ஒருவர் எப்படி வந்தார்? ஒரு பல்லியை எப்படிக் கூட்டி வந்தார்?ஓ, என்ன வினோதம்!

அந்தப் பல்லி ஔரங்காபதில் இருந்து இருக்கலாம்; குதிரையின் தீனிப்பையில் புகுந்து இருக்கலாம். ஆனால், கேள்வியும் பதிலும் எப்படிச் சரியான தருணத்தில் நிகழ்ந்தது? மிகப் பொருத்தமான நேரத்தில் அது நிகழ்ந்தது உண்மையில் ஓர் ஆச்சரியம்!

ஓ, பல்லி முக்கமிட ஆரம்பித்து அடியவரை கேள்வி கேட்க வைத்ததே! நேரிடை அனுபவத்தால் பின்னர் நிரூபிக்கப் பட்ட பல்லி சொல்லின் முக்கியத்துவத்தை, எப்படி பாபா முன்னரே விளக்கினார்?

ஈடிணையற்ற நிகழ்ச்சியன்றோ இது! ஹாஸ்யத்தை எவருமே விரும்புவராதலால், ஞானிகள் இணையற்ற இந்த யுக்தியை பக்தர்களின் நல்வாழ்வுக்காக கையாண்டனர்.

யோசித்து பாருங்கள்! விவரம் அறிய விரும்பிய அடியவர் அங்கு இல்லை என்றால், அல்லது இருந்தும் அந்தக் கேள்வியைக் கேட்காமல் விட்டிருந்தால், சாயியினுடைய மகத்துவம் எவ்வாறு வெளிவந்திருக்கும்? எவருக்குப் பல்லி சொல்லின் அர்த்தம் புரிந்திருக்கும்?

எத்தனையோ பல்லிகள் எவ்வளவோ முறைகள் முக்கம் செய்ததை நாம் கேட்டிருக்கிறோம். பல்லிகள் ஏன் ஒலி செய்கின்றன என்றோ, அந்த ஒலிக்கு என்ன அர்த்தம் என்றோ, கண்டுபிடிக்க யாராவது முயற்சி செய்து இருக்கிறீர்களா?

சாராம்சம் என்னெவென்றால், பிரபஞ்ச விளையாட்டை நிர்வகிக்கும் சூத்திரங்கள் சூக்குமமானவை; ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டவை. யாரால் அவற்றை கற்பனை செய்ய முடியும்? எல்லாரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திவிடுகின்றன!

இதற்கு நேர்மாறாக, பல்லி முக்கமிட்டால் அனர்த்தம் விளையும் என்றும் கெடுதல் ஏதும் நேராமல் இருப்பதற்காக நாம் பல்லி சொல்லுக்குக் 'கிருஷ்ணா கிருஷ்ணா' என்று பதில் அளிக்க வேண்டுமென்றும் மக்கள் நினைக்கிறார்கள்.

அது எப்படியாவது இருந்துவிட்டு போகட்டும்! இது பக்தர்களுக்குத் தம்மீது இருந்த விசுவாசத்தை திடமாக்குவதற்கு பாபா கையாண்ட யுக்தியாகும். இது வெறும் அற்புதம் மாத்திரம் அன்று!


Thursday 18 June 2015

ஷிர்டி சாயி சத்சரிதம்

இங்கே சோல்கர்  ஒரு கருவி மாத்திரமே! எப்பொழுதும்போல அடியவர்களுக்கு போதனை செய்யும் பாபாவின் லீலையே இது. கற்பனை செய்தும் பார்க்கமுடியாத லீலைகள் நம்மன் ஆச்சரியத்தில் ஆழ்த்தாத சந்தர்ப்பமே இல்லை.

இப்பொழுது பாபாவினுடைய  நுண்ணிய திறன்பற்றி நிகழ்ச்சியொன்றை விவரித்துவிட்டு இந்த அத்தியாயத்தை முடித்துவிடுகிறேன். இது, ஒருவர், கேட்ட கேள்வியும் அதற்கு பாபா அளித்த பதிலுமான விவரம்.

ஒருசமயம் பாபா தம்முடைய வழக்கமான ஆசனத்தில் மசூதியில் உட்கார்ந்துகொண்டு இருந்தார்.  அவருக்கு எதிரில் உட்கார்ந்து கொண்டிருந்த அடியவர், ஒரு முக்கத்தைக்  (பல்லி  செய்த ஒலியைக் ) கேட்டார்.

பல்லி முக்கமிடுவதோ, அல்லது ஒருவருடைய உடலின் எந்த அங்கத்தின் மேலாவது விழுவதோ, வரப்போகும் நிகழ்ச்சிகளுக்கு  சகுனமாக கருதபடுவதால், தமக்கிருந்த ஆர்வத்தால் அடியவர் பாபாவை மேம்போக்காக ஒரு கேள்வியைக் கேட்டார்.

"பாபா, பின்சுவரில் இருக்கும் பல்லி  ஏன் முக்கமிடுகிறது? அதனுடைய மனத்தில்  என்ன இருக்கிறது? அசுபமான விஷயமாக இருக்காதன்றோ?"

பாபா அவருக்கு பதில் அளித்தார், "அவுரங்காபாத்தில் இருந்து அவளுடைய சகோதரி இங்கு வருகிறாள் என்று தெரிந்து, பல்லிக்கு  சந்தோசம் பொங்குகிறது".

பல்லி  என்ன ஒரு பெரிய பிராணி! தாய், தந்தை, சகோதரன், சகோதரி உறவுகளைப் பற்றிய பேச்சு எங்கே? இவ்வுலக விவகாரங்களுக்கும் பல்லிக்கும்  என்ன சம்பந்தம்?

அடியவர் மேற்கண்டவாறு நினைத்து, பாபா ஹாஸ்யமாக ஏதோ பதில் சொன்னார் என்று நினைத்துக் கொண்டு அங்கேயே  சிறிது நேரம் அமைதியாக உட்கார்ந்திருந்தார்.

திடீரென்று அவுரங்காபாத்தில் இருந்து குதிரையின் மேல் சவாரி செய்து கொண்டு பாபாவை தரிசனம் செய்வதற்கு ஒருவர் வந்தார். பாபா அப்பொழுது குளித்துக் கொண்டிருந்தார்.

மேற்கொண்டு பயணம் செய்யவேண்டிய அவசியம் இருந்ததாலும், குதிரைக்குத் தினப்படிப் போடவேண்டிய தீனியை போடாமல் குதிரையால் மேற்கொண்டு நடக்க முடியாதென்பதாலும் அம்மனிதர் ஏதாவது தானியம் வாங்கிக் கொண்டு வரலாம் என்று பஜாருக்கு கிளம்பினார்.

அவுரங்காபாத்தில் இருந்து வந்த மனிதர் (வியாபாரி), குதிரையின் தீனிப்பையைத்  தம் கையில் எடுத்து உள்ளிருந்த குப்பை கூளங்களை உதறினார். பல்லியைப்  பற்றி கேள்வி கேட்ட அடியவர் அதையே விறைத்து  பார்த்து ஆச்சரியம் அடைந்தார்.

பையை உள்வெளியாக திருப்பி பூமியில்  தட்டியபோது, அதிலிருந்து ஒரு பல்லி  கீழே விழுந்தது. அவர்கள் பார்த்து கொண்டிருந்தபோதே பயத்துடன் குறுக்கே வேகமாக ஓடியது!

பாபா கேள்வி கேட்ட அடியவரிடம் சொன்னார், "இப்பொழுது இவளை கவனமாகப் பார்!  இவள்தான் அந்தப் (மசூதியில் இருந்த) பல்லியின்  சகோதரி. இந்த அற்புதத்தை வேடிக்கை பார்!"


Thursday 11 June 2015

ஷிர்டி சாயி சத்சரிதம்

"நீங்கள் எங்கிருந்தாலும் சரி, என் முன்னர் மன்றாடிக் கெஞ்சி பக்தியுடனும் விசுவாசத்துடனும் கை நீட்டினால், நான் உங்களுடைய பக்திக்கும் விசுவாசத்திற்கும் ஏற்றவாறு இரவுபகலாக உங்கள் பின்னால்  திடமாக நிற்கிறேன்.-

"என்னுடைய உடலுடன் நான் இங்கு இருக்கலாம்; நீங்கள் தொலைதூரத்தில் இருக்கலாம். ஏழு கடல் தாண்டியும் செல்லலாம். இருப்பினும், அங்கு நீங்கள் என்ன செய்தாலும் அந்தக் கணமே எனக்கு இங்கு அது தெரிந்துவிடும்.-

"நீங்கள் இவ்வுலகில் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம், அங்கு நான் உங்களுடனே செல்கிறேன். உங்களுடைய இதயமே என்னுடைய வாசஸ்தலம்; நான் உங்களுக்குள்ளேயே உறைகின்றேன் .-

"உங்களுடைய இதயத்தில்  வசிக்கும் என்னையே நீங்கள் வழிபடவேண்டும். எல்லா உயிரினங்களின் இதயங்களிலும் நானே உரைகின்றேன்.-

"வீட்டின் உள்ளோ, வெளியிலோ, அல்லது வழியிலோ, நீங்கள் எவரை எதிர்கொண்டாலும் அவர்களனைவரும் என்னுடைய ஆவிர்பாவங்களே  (வெளிப்பாடுகளே). அவர்கள் அனைவருள்ளும் நான் உறைகின்றேன்.-

"பூச்சியோ, எறும்போ, நீரில் வாழும் பிராணிகளோ, வானத்தில் பறக்கும் பறவைகளோ, நிலத்தில் வாழும் நாய், பன்றி போன்ற மிருகங்களோ - அவையனைத்திலும் நான் அவசியம் நிரந்தரமாக வியாபிதிருக்கிறேன்.-


"ஆகவே, உங்களை என்னிடமிருந்து வேறுபட்டவர்களாக நினைக்காதீர். தம்மிலிருந்து என்னை வேறுபடாதவாறு அறிந்தவர் மகாபாக்கியசாலி."

இவ்வார்த்தைகள் சுருங்கச் சொல்லப்பட்டவை ஆயினும் ஆழமான பொருள் பொதிந்தவை; மிக முக்கியத்துவம் வாய்ந்தவை. சோல்கரின் மீது எவ்வளவு பிரியம் இருந்தால் பாபா அவருக்கு இந்த பக்திக் கஜானாவை வழங்குவார்!

சோல்கரின் மனதில் என்ன இருந்ததோ அதை நேரிடையான அனுபவமாக பாபா வெளிப்பாடு செய்துவிட்டார். ஞானிகளுடைய செயல்முறைத் திறன்தான்  என்னே!

பாபாவினுடைய  திருவாய் மொழி விலை மதிப்பற்றது. பக்தர்களுடைய இதயத்தில் ஆழமாகப் பாய்ந்து, பிரேமையாகிய பழ தோட்டத்திற்கு உயிர்ச்  சத்தாகிறது . பக்தியாகிய கப்பலுக்குப் பாய் மரம் ஆகிறது.

சாதகப் பறவைகளின் தாகத்தை தீர்ப்பதற்காக மேகங்கள் மழையைப்  பொழிகின்றன; இதன் மூலமாக பூமி முழுவதும் மழையால் குளிர்ந்து போகிறது. இங்கு நடந்ததும் அவ்வாறே.

சோல்கர், பாவம் ஏழை! யாருக்குமே தெரியாத, கேள்விப்படாத, முன்பின் தெரியாத ஆள் அல்லரோ? சோல்கரின் இதயத்தில் ஓர் எழுச்சியை ஏற்பட செய்து நேர்த்திகடன் ஏற்றுகொள்ள வாய்த்த தாஸ கணுவின் கீர்த்தனை கூட ஒரு நிமித்த காரணமே (கருவியே). அதுவே, கடைசியில் அவருக்கு பாபாவின் அருளைத் தேடிக் கொடுத்தது.

இதனைப் பின்பற்றி, ஞானிகள் மனதுள்ளே என்ன நினைக்கிறார்கள் என்னும் அற்புதம் வெளிப்பட்டது! அடியவர்களுக்குப் போதனை  அளிப்பதில் பேராவல் கொண்ட பாபா, இது போன்ற சூழ்நிலைகளை சிருஷ்டி செய்தார்.

Thursday 4 June 2015

ஷிர்டி சாயி சத்சரிதம்

சஹாயாத்திரி மலைத்தொடரின் ஆபத்துமிக்க உச்சியான நானே காட்டையையும் கூட சுலபமாகத் தாண்டிவிடலாம். கிருஹஸ்தன் தன்னுடைய உம்பரே காட்டைக் (வீட்டின் தலைவாயிலை) கடப்பது மிகக் கடினம்.

ஷீரடியில் செய்வதாக வேண்டிகொண்ட நேர்த்திக்கடன் நிறைவேறும்வரை, சர்க்கரை இருக்கும் எந்தப் பண்டமும் சோல்கருக்கு விலக்காகிவிட்டது. அவர தேநீரை கூட சர்க்கரையின்றியே  அருந்தினார்.

சிலகாலம் இவ்வாறு கழிந்தபிறகு, சோல்கர் ஷிர்டி செல்லும் நாளும் வந்தது. அவர ஷிர்டி சென்று நேர்த்திகடனை நிறைவேற்றியபின் மிகுந்த சந்தோஷமடைந்தார்.

பாதங்களில் நமஸ்காரம் செய்து சாயி தரிசனம் செய்த சோல்கர், பரிபூரணமான திருப்தியாலும் மகிழ்ச்சியாலும் பொங்கி வழிந்தார்.

நிர்மலமான மனதுடன் கற்கண்டு விநியோகம் செய்துவிட்டு, பாபாவுக்கு ஒரு தேங்காயை சமர்ப்பணம் செய்தபின் அவர் சொன்னார், "இன்று என்னுடைய மனோரதம் நிறைவேறிவிட்டது. "

சாயி தரிசனம் அவருக்கு ஆனந்தமளித்தது. சம்பாஷனை செய்தது இதயத்தைக் குளிர வைத்தது. அவர் ஜோக் என்பவருடைய விருந்தினராக வந்திருந்ததால், ஜோக்குடன் அவருடைய வீட்டிற்குத் திரும்ப வேண்டியதாயிற்று.

ஜோக் கிளம்பத் தயாராகி எழுந்தபோது, அவருடைய விருந்தினரும்  (சோல்கரும் ) எழுந்தார். அப்பொழுது பாபா ஜோக்கிடம் கூறினார், "இவருக்கு சர்க்கரை பூரிதமாக போடப்பட்ட தேநீர் பல கோப்பைகள் குடிப்பதற்கு கொடுங்கள்".

தம்முடைய ரகசியத்தை அம்பலப்படுத்தும் பொருள்பொதிந்த இவ்வார்த்தைகளைக் கேட்ட சோல்கர் மிக வியப்படைந்தார். கண்களில் ஆனந்த பாஷ்பம் (கண்ணீர்) பொங்க, சாயியின் சரணங்களில் தலையை வைத்தார்.

ஜோக் இவ்வார்த்தையைக் கேட்டுக் குதூகலம் அடைந்தார். சோல்கருடைய மகிழ்ச்சியோ அதற்கு இரண்டு மடங்கு ஆக இருந்தது. அதற்குக் காரணம் அவருக்கு மாத்திரந்தான் தெரியும். இதயத்தின் ஆழத்தில் பாபாவின் குறிப்பைப் புரிந்து கொண்டார்.

பாபா தம்முடைய வாழ்நாளில் தேநீரைத் தொட்டதே கிடையாது. அப்படியிருக்க, அவர் ஏன் அந்த நேரத்தில் தேநீரைப் பற்றி நினைக்க வேண்டும்? சொல்கரின் விசுவாத்தை உறுதிப் படுத்துவதற்காகவும் பக்தியினுடைய முத்திரையை அவருடைய இதயத்தில் ஆழமாகப் பதிப்பதற்காகவுமே அவ்வாறு செய்தார் பாபா.

தமக்கு எல்லாம் தெரிந்திருந்தது என்ற தெளிவான குறிப்பையும் பாபா திடீரென்று விடுத்தார், "சோல்கர்! நீர் நேர்த்திகடன் ஏற்றுகொண்ட கற்கண்டு என்னிடம் வந்து சேர்ந்துவிட்டது. ஆகவே, உம்முடைய விரதமும் நிறைவேறிவிட்டது!-

"நேர்த்திக்கடன் எடுத்துக் கொண்டபோது இருந்த உம்முடைய குழம்பிய மனம், நிறைவேற்றுவதில் ஏற்பட்ட மிகுந்த தாமதத்தால் மனம் நொந்து பரிகாரமாக நீர் ஏற்றுகொண்ட விரதம், அனைத்தையும் நீர் ரகசியமாக வைத்திருப்பினும், நான் அறிவேன்.-


Thursday 28 May 2015

 ஷிர்டி சாயி சத்சரிதம்

பக்தியில்லாது கதைமேல் கதையாகக் கேட்டுக் கொண்டு மற்றொரு பக்கத்தில் படிக்குமேல் படியாக அஞ்ஞானத்தை வளரவிடுவதில் பலன் என்ன? பக்தியும் சிரத்தையுமில்லாது கதை கேட்பது வியர்த்தமே.

அழுக்கு  நீக்காததை சவர்க்காரம் (சோப்பு) என்று சொல்ல முடியுமா?  அஞ்ஞானத்தை நீக்காததை விவேகமளிக்கும் செவிச் செல்வம் என்று சொல்ல முடியுமா?

சிரத்தையுடன் கதை கேட்ட சோல்கரின் இதயத்தில் சாயியின் மேல் பிரேமை பொங்கியது. அவர் தமக்குள்ளே சொல்லிகொண்டார், "ஓ, கிருபையுள்ளவரே, இந்த தீனனின்  மீது தயை காட்டுங்கள்."

சோல்கர் தாற்காலிகமான உத்தியோகம் செய்துவந்தார்; வசதி இல்லாத ஏழை; குடும்ப பாரத்தை சுமக்க முடியாது தவித்து வந்தார். அரசாங்க உத்தியோகத்தின் மூலமாகப் பிழைப்பு நடத்தும் வாய்ப்பை பெறுகின்ற முழுபாரத்தையும்  பாபாவின் மீது போட்டுவிட்டார்.

தீவிரமாக எதையாவது அடையவிரும்பும் ஏழைமக்கள் தங்களுடைய விருப்பம் நிறைவேறினால், பிராமணர்களுக்கு அவர்கள் விரும்பிய உணவுப் பொருள்களுடன் முழுதிருப்தி அடையுமாறு போஜனம் செய்விப்பதாக நேர்த்திக் கடன் ஏற்றுக் கொள்வர்.

பணக்காரர்களோ, தங்களுடைய விருப்பம் நிறைவேறினால், ஆயிரம் பேர்களுக்கு உணவளிப்பதாகவோ அல்லது நூறு பசுக்களை தானமாக அளிப்பதாகவோ நேர்த்திக் கடன் எற்றுகொள்வர் .

பணவசதியில்லாத சோல்கர், சாயி பாதங்களை மனதில் இருத்தி  எளிமையுடன் இவ்வாறு வேண்டிகொண்டார்.

"பாபா, என்னுடையது ஓர் ஏழைக் குடித்தனம். என்னுடைய வாழ்கையே ஒரு வேலை கிடைப்பதைச் சார்ந்தே இருக்கிறது. ஆனால், நிரந்தரமான வேலை கிடைப்பதற்கு நான் பரீட்சையில் வெற்றி பெற்றாக வேண்டும். -

"பரீக்ஷைக்காக மும்முரமாகவும் விடாமுயற்சியுடனும் தயார் செய்திருக்கிறேன். என்னுடைய நம்பிக்கையே பரீட்சையில் வெற்றி பெறுவதில்தான் இருக்கிறது. வெற்றிபெறாவிட்டால், தற்காலிக வேலையையும் இழக்க நேரிடும்.-

"உம்முடைய கிருபையினால் பரீட்சையில் நான் வெற்றிபெற்றுவிட்டால், உம்முடைய பாதங்களை தரிசனம் செய்வதற்கு (ஷீரடிக்கு) வந்து உம்முடைய நாமத்தைச் சொல்லிக்  கற்கண்டு விநியோகம் செய்கிறேன். இது என்னுடைய நிர்த்தனமான  தீர்மானம்."

இதுதான் சோல்கர் ஏற்றுகொண்ட நேர்த்திகடன். சில நாள்கள் கழித்து, அவருக்கு மிக்க மகிழ்ச்சியளிக்கும் வகையில் அவருடைய விருப்பம் நிறைவேறியது.. ஆனால், அவருடைய நேர்த்திகடனை நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்பட்டது. குற்றத்திற்குப் பரிகாரமாக அவர் சர்க்கரையை உணவில் சேர்த்துக் கொள்வதை விட்டுவிட்டார்.

பயணம் செய்வதற்கு பணம் தேவை என்று அவருக்குத் தெரியும்; மேலும் பாபாவிடம் வெறுங்கையுடனா போக முடியும்? ஆகவே, ஆரா  துயரத்துடன் நாளைக்கு, நாளைக்கு என்று ஷிர்டிப் பயணத்தை தள்ளிப் போட்டுக்கொண்டே போனார்.


Thursday 21 May 2015

ஷிர்டி சாயி சத்சரிதம்

இவ்வாறு தாசகணு மக்களிடையே சாயி பக்தியை எழுப்பினார். ஆதமானந்தத்தின்  சாகரமான சாயியின் மீது ஜனங்களுக்கு அன்பும் பக்தியும் பெருகும்படி செய்தார்.

பக்தசிரோன்மனியான சாந்தோர்கருக்கும் அவருக்கு இளைத்தவரில்லை. சாயி வழிபாடு பரவியதற்குக் காரணமானவர் அவரே.

சாந்தோர்கரின் தூண்டுதலால்தான் தாசகணு  பம்பாய்க்கு வந்து பல இடங்களில் சாயி பஜனையும் கதாகீர்த்தனமும் செய்ய ஆரம்பித்தார்.

புனே, சோலாப்பூர், அஹமத் நகர் ஜில்லாக்களில் வாழ்ந்த மக்கள் ஏற்கனேவே சாயி பாபாவைப் பற்றி அறிந்திருந்தனர். ஆனால், கொங்கன தேசத்தில் சாயிபக்தியைப் பரப்பியவர்கள் அவர்கள் இருவருமே.

இவ்வாறு, பம்பாய் மாகாணத்து மக்களிடையே அவ்விருவர்களுடைய முயற்சிகளால் சாயி வழிபாடு ஆரம்பித்தது. கிருபா மூர்த்தியான சாயி மகாராஜ் அவ்விருவர்களின் மூலமாக பம்பாய்க்கு வந்தார்.

அருள்மிகு கௌபீனேசுவரர்  கோயிலில் அன்று நடந்த கதாகீர்த்தனத்தின்போது வெளிப்பட்ட சாயியின் அருல்பற்றிய சொற்பொழிவைக் கேட்ட சோல்கருக்கு  மனத்துள்  ஓர் எழுச்சி அலை பொங்கியது.

ஹரிகதா கீர்த்தனத்தைக் கேட்பதற்குப் பலர் வந்திருந்தனர். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ருசி; அவற்றைப் பாராட்டும் வகையில் மக்கள் வந்திருந்தனர். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ருசி; அவற்றைப் பாராட்டும் வகையில் மகள் வந்திருந்தனர். சிலர் தாசகணுவின்  சாஸ்திர ஞானத்தை ரசித்தனர்; சிலர் அவருடைய பேச்சுத்திறனுடன் கூடிய அங்க அசைவுகளையும் அபிநயத்தையும் மெச்சினர்.

சிலர் அவருடைய அமுத கானத்தைப் பாராட்டினர். "ஓ, அதி உன்னதம்! தாசகணுவின் பாட்டு எவ்வளவு அற்புதமாக இருக்கிறது! விட்டல்  நாமத்தில் எப்படி அமிழ்ந்து போகிறார்! கதை சொல்லும்போது பரவசத்தில் எப்படி நடனமாடுகிறார்!"

சிலர் முக்கியமான கதைக்கு முன்னுரையாகச் சொன்ன விஷயங்களை ரசித்தார்கள். சிலர் பிரதமமான கதையை ரசித்தார்கள். சிலர் தாசகணு கதை சொல்லும்போது மற்றவர்களுடைய நடை, உடை, பாவனையைப் போலவே நடித்துக் காட்டும்  கேலியை ரசித்தனர்; சிலர் உவமைக் கதைகளையும் உருவகக் கதைகளையும் ரசித்தனர்.

ஹரிதாசர்  சம்ஸ்கிருத மொழிவல்லுனராக இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, பதம் பதமாகப் பிரித்து வாக்கியம் வாக்கியமாக அர்த்தம் சொல்லக்கூடிய திறமையுள்ளவராக இருந்தாலும், அல்லது பொழிப்பான  கருத்தை மட்டும் எடுத்துச் சொல்வதில் திறமைசாலிகளாக இருந்தாலும், கதை கேட்பவர்களுடைய ஆர்வம் குறையவில்லை.

இப்படி பலவிதமான மனிதர்கள் கதை கேட்கிறார்கள். ஆயினும், கதையைக் கேட்டு இறைவனிடமோ ஞானியிடமோ பக்தியையும் சிரத்தையையும் வளர்த்துக்கொள்ளும் மக்கள் மிகச் சிலரே!


Thursday 14 May 2015

ஷிர்டி சாயி சத்சரிதம்

கீர்த்தனைக்காக கிடைக்குமென்று ஒரு பைசாவையும் எதிர்பார்க்கவில்லை. இடுப்பில் வேட்டியைப் பஞ்சமாகக் கட்டிக்கொண்டு, உடலின் மேற்பாகத்தில் ஏதும் அணியாமல், தலைப்பாகையும் இல்லாமல் தாசகனு கதாகீர்த்தனம் செய்வார். ஆயினும் கதை கேட்பதற்கு வரும் கூட்டத்தைச் சமாளிக்க முடியாது.

தாசகனு இவ்வளவு எளிமையாக உடை உடுத்துக் கொண்டு கீர்த்தனம் செய்ததன் பின்னணியை கவனமாகக்  கேட்டால் சிரிப்பு வரும். சாவகாசமாக கேட்டு பாபாவின் செயல்முறைகளை பார்த்து ஆச்சரியம் அடையுங்கள்.

ஒருசமயம் தாசகனு ஷீரடியில் கதாகீர்த்தனம்  செய்வதற்காக நீளமான கோட்டைப் போட்டுகொண்டு, மேலே அங்கவஸ்திரம் அணிந்து, தலைப்பாகையும் கட்டிக்கொண்டு அலங்காரமாக வந்தார்.

நற்பழக்கத்தின் பிரகாரம் பாபாவுக்கு நமஸ்காரம் செய்ய மகிழ்ச்சியுடன் வந்தார். பாபா கூறியது காதில் கேட்டது, "ஆஹா , மணமகனைப் போன்று அலங்காரம் செய்துகொண்டு வந்திருக்கிறீர்!-
"இவ்வளவு அலங்காரத்துடன் எங்கே செல்லப் போகிறீர்?" என்று பாபா வினவினார். தாசகணு , தாம் கதாகீர்த்தனம்  செய்யப் புறப்பட்டுக் கொண்டிருப்பதாகச் சொன்னார்.

பாபா மேலும் வினவினார், "எதற்காக இந்த நீளமான கோட்டு ? எதற்காக இந்த அங்கவஸ்திரமும் தலைப்பாகையும்? எதற்காக இந்தப் பிரயாசையெல்லாம் ? நமக்கு இதெல்லாம் தேவையில்லை!-

" இவை அனைத்தையும் இப்பொழுதே, என் முன்னிலையிலேயே கழற்றிவிடும். இந்தச் சுமையை எதற்காக உமது உடம்பில் மேல் ஏற்றக் கொள்ள விரும்பிகிறீர்?" பாபாவினுடைய  ஆக்ஞைக்கு கீழ்படிந்து, தாசகணு  எல்லா அலங்கார ஆடைகளையும் கழற்றி பாபாவின் பாதங்களில் வைத்துவிட்டார்.

அன்றிலிருந்து இன்றுவரை, தாசகணு  ஆரோக்கியமான உடலின் திறந்த மார்புடனும் கழுத்தில் மாலையுடனும் கையில் சப்பளாக்கட்டையுடனும் கதா கீர்த்தனம் செய்துவருகிறார்.

இந்தப் பாணி தற்காலப் பழக்கத்திற்கு வித்தியாசமாக இருப்பினும், இதற்குத் திடமானதும் தூய்மையானதுமான  ஓர் அஸ்திவாரம் இருக்கிறது. ஞானவிழிப் படைந்தவர்களிலேயே மிகச் சிறந்த நாரத முனிவருடைய பாணியாகும் இது.

இந்தப் பாணி, நாரத முனிவரால் ஆரம்பிக்கப்பட்டது. அவரை மூலமாகக் கொண்டே ஹரிதாசர்களுடைய பரம்பரை வளர்ந்தது. ஆடை அலங்காரங்கள் போன்ற ஆடம்பரங்களால் அவர்கள் உபாதிபடவில்லை; அவர்களுடைய நாட்டமெல்லாம் அந்தரங்க தூய்மையையே நோக்கியது.

இடுப்புக்கு கீழ்தான் உடை, கைகள் வீணையையும்  சப்பலாக்கட்டையையும் ஒலித்துக் கொண்டிருக்கும், வாயோ ஹரி நாமத்தை உரக்கப் பாடிக்கொண்டிருக்கும். நாரதருடைய இந்த உருவத்தை அனைவருமே அறிவரல்லரோ!

சமர்த்த சாயியின் அருளால், தாசகணுவே  ஞானிகளின் வாழ்க்கையைப் பாடல்களாக இயற்றி கீர்த்தனம் செய்தார். கீர்த்தனம் செய்வதை இலவசமாகவே செய்தார்; கீர்த்தனங்களினால்  அவருடைய புகழ் பரவியது.

 

Thursday 30 April 2015

ஷிர்டி சாயி சத்சரிதம்

பக்தர்கள் சஹஜமாகப் பரமபிராப்தியை அடைவர். கேட்பவர்கள் பக்தியையும் முக்தியையுமடைவர் . எளிமையும் விசுவாசமுடையவர்கள் சாந்தியையும் சுகத்தையும் அடைவர். எல்லாருமே கடைமுடிவான அடைக்கலத்தை அடைவர்.

குருவினுடைய திருவாய்மொழியாக வெளிப்பட்ட கதைகளைக் கேட்கக் கேட்கப் பிறவிபயம் விலகும். தம்முடைய ஆத்மாவை அறிந்துகொள்ளும் அனுபவத்தால் இதயத்தில் ஆனந்தமடைவர்.

இந்த அத்தியாயத்தில், அன்பார்ந்த பக்தர்கள் எவ்விதமாகப் பிரார்த்தனை செய்கிறார்கள் என்பதையும் சாயி அவர்களுக்கு எவ்விதமாக தரிசனம் தருகிறார் என்பதையும் விவரிக்கிறேன்.

ஒரு பூனை அப்பொழுதுதான் தன்  குட்டிகளுக்குப் பாலூட்டிவிட்டு வெளியே வரலாம். உடனே திரும்பிப்போனாலும், குட்டிகள் அன்புடன் தாயின்மேல் விழுந்து விளையாடி மறுபடியும் பாலுண்ண  முயலும்.

தாய்ப்பூனை தொண்டையில் 'குர்குர்' என உறுமும்; குட்டிகளும் சிறிது நேரம் அடங்கியனபோல் தோன்றும். எனினும், தாய் ஓய்வெடுப்பதைப்  பார்த்தால் போதும்; குட்டிகள் சுற்றிச் ஓடித் தாயிடம் பால் குடிக்க ஆரம்பித்துவிடும்.

குட்டிகள் வேகமாக விழுங்கிப் பாலை உறிஞ்சும்போது, அன்பினால் தாய்ப்பூனையின் முளைக்காம்புகளிளிருந்து பால் பெருகுகிறது. பூனையும், அசதியால் முன்பு உருமியதையெல்லாம்  பிரீதியுடன் தரையில் கால்களை  நீட்டிகொண்டு  படுத்துக் கொள்கிறது.

அசதியெல்லாம்  எங்கோ ஓடி விட்டது; மாறாகத் தாயன்பு முலைகளின் வாயிலாகப் பாய்கிறது. நான்கு கால்களாலும் குட்டிகளை அமுக்கிப் பிடித்துக் கொண்டு அனிச்சை செயலாக அவற்றை நக்குகிறது. தாயன்பிற்கு நிகராக இவ்வுலகில் வேறெதுவும் உண்டோ!

குட்டிகளின் கூரான நகங்கள் தாயினுடைய வயிற்றை  எவ்வளவு ஆழமாக கீறுகின்றனவோ, அவ்வளவு வேகமாகத் தாயன்பு பல தாரைகளாக  பாழாகிப் பெருகுகிறது.

தாயைத் தவிர வேறெதையும் நாடாத குட்டிகளின் உணர்வு, எவ்வாறு மேலும் மேலும் தாய்பூனையினுடைய முலைகளில் பாலின் உற்பத்தியைப் பெருக்குகிறதோ, அவ்வாறே சாயி பாதங்களின்மீது உங்களுக்கிருக்கும் பாசமும் நேசமும் சாயியின் உள்ளத்தை உருகவைத்து விடும்.

ஒருசமயம் தானே நகரத்து மக்கள் கௌபீனேசுவரர் சந்நிதியில் ஹரிபக்தி பாராயண நிகழ்ச்சியாக, கேட்பதற்கு இனிமையான தாசகணுவின் கீர்த்தனத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

சான்றோர்களின்  வற்புறுத்தலுக்கு இணங்கி, தாசகணு  கீர்த்தனம் செய்வதற்கு பணிவுடன் ஒப்புக்கொள்வார். ஒரு பைசாவும் எதிர்பார்த்தாரில்லை ; நிர்பந்தம் கீர்த்தனைக்காகக்  கிடைக்குமென்று ஒரு பைசாவையும் எதிர்பார்க்கவில்லை. இடுப்பில் வேட்டியை பஞ்சகச்சமாக கட்டிக்கொண்டு, உடலின் மேற்பாகத்தில் ஏதும் அணியாமல், தலைப்பாகையுமில்லாமல் தாசகணு  கதாகீர்த்தனம்  செய்வார். ஆயினும் கதை கேட்பதற்கு வரும் கூட்டத்தைச் சமாளிக்க முடியாது.

Thursday 23 April 2015

ஷிர்டி சாயி சத்சரிதம்

15. சோல்கரின்  கற்கண்டு விநியோக நேர்த்தி கடன்

எவருடைய கணக்கற்ற புண்ணியச் செயல்கள் பழுத்துப் பலனளிக்க ஆரம்பித்து விட்டனவோ, அவர்தான் சாயி தரிசனத்திற்கு வரமுடியும். மூன்று விதமான தாபங்களாலும் ஆர் உபாதிப்படுவதில்லை; பரமார்த்த சாதனையில் வெற்றி பெறுவார்.

கேட்பவர்களே, கிருபை செய்யுங்கள்! ஒரு கணம் உம்முடைய குருவை தியானம் செய்துவிட்டு, என்னிடம் முழு கவனம் செலுத்தி காதையை பயபக்தியுடன் கேளுங்கள்.

"ஓ, உம்மை பற்றி தெரியாதா என்ன! ஏன் இந்த வியர்த்தமான முயற்சிகளெல்லாம்?" என்றென்னை அலட்சியப்படுத்தி விடாதீர்கள். என்னை மன்னித்துவிடுங்கள். உக்னலை சமுத்திரத்திற்கு உபமானமகாச் சொல்லலாம்.

சமுத்திரம் நிரம்பியிருந்தாலும் நதியை திருப்பயனுப்பி விடுவதில்லை. மேகங்கள் கனமாகப் பொழிந்து  பெருக்கெடுக்கும் ஆயிரமாயிரம் நீரோட்டங்களை தன்னுள் ஏற்றுகொள்ளவே செய்கிறது.

சத்ஜனங்களாகிய  நீங்களும் அவ்வாறே. உங்களுடைய தீர்த்தத்தில் நான் ஸ்நானம் செய்ய விரும்பிகிறேன். என்னை வெறுத்து ஒதுக்கிவிடாதீர்கள். தீனர்களை  புறக்கணிப்பது நன்றன்று.

கங்கையின் நிர்மலமான ஜலமாக  இருந்தாலும், கிராமத்து ஓடையின் கலங்கிய நீராக இருந்தாலும், இரண்டும் சமத்துவத்தை அடைந்து சங்கமாமகும்போது ஆரவாரம் ஏதுமின்றி கலந்துவிடுகின்றன.

ஆகவே, என்னிடம் கதை கேட்பவர்களே! ஞானிகளின் சரித்திரங்களை கேட்கவேண்டுமென்ற உங்களுடைய பேராவல், என்னுடைய முயற்சியைக் கருணையுடன் ஏற்றுகொண்டால், வெளித்தூண்டுதல் ஏதுமின்றி தானே பலனுள்ளதாகிவிடும்.

இக்கதாமிருதம் சிரத்தையுடனும்  பொறுமையுடனும் மரியாதையுடனும் கேட்கபட்டால், கேட்பவர்கள் பக்திப் பிரேமையை அனுபவிப்பர்; எல்லாப் பேறுகளையும் பெறுவார்.