valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 26 November 2015

ஷிர்டி சாயி சத்சரிதம்

இரண்டையும் சீர் தூக்கிப் பார்த்து, ஒன்றைத் தேர்ந்தெடுப்பது என்பது கடினமான செயல், மந்தப் புத்திகாரனை புலனின்பங்கள் வென்று விடுவதால், உலகியல் ஈடுபாடே அவனை ஆலிங்கனம் (தழுவதல்) செய்து கொள்கிறது.

தண்ணீர் கலந்த பாலில் பாலை மற்றும் பிரித்தெடுக்கும் அன்னத்தைப் போல உலகியல் ஈடுபாட்டை விலக்கி, ஆன்மீக ஈடுபாட்டை வரவேற்பதிலேயே மனித வாழ்க்கையின் உயர்ந்த லட்சியம் பொதிந்திருக்கிறது.

ஆன்மீக ஈடுபாடு, உலகியல் ஈடுபாடு, இரண்டுமே மனிதனின் சக்திக்கு உட்பட்டவையே ஆயினும், மந்த புத்தி படைத்த விவேகமற்ற  மனிதன் இரண்டிற்கும் இடையே உள்ள வித்தியாசத்தை கண்டறியும் சக்தியை இழந்துவிடுகிறான்.

வாழ்க்கையின் சிறப்பு எங்கிருக்கிறது என்பதை ஒருவன் முதலாவதாக நிச்சயப் படுத்திக்கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் அந்த மார்க்கத்தில் தோன்றும் தடைகளை வென்று, வெற்றி பெற முடியும்.

இங்கேதான் மனிதன் சக்தி மிகுந்ததும் உறுதி படைத்ததுமான முயற்சியை எடுக்க வேண்டிய அவசியத்தை எதிர்கொள்கிறான். ஆகவே, மனதில் உறுதியான தீர்மானத்துடன் போராட்டத்தை நடத்தி ஆன்மீக ஈடுபாட்டை அடையவேண்டும்.

வாழ்க்கைச் சக்கரத்தின் சுழற்சி புரிந்துகொள்ளமுடியாதது! அது இரவு பகலாகச் சுழன்றுகொண்டே மூவகை இன்னல்களையும் மனிதனுக்கு அளித்து கொண்டிருக்கிறது. இது தவிர்க்க முடியாதது.

அபரிமிதமான இன்னல்களை அனுபவித்துத் தொல்லைப்பட்டு வருந்தி, இவ்வின்னல்களில் இருந்து சுலபமாகவும் சௌக்கியமாகவும் விடுபடும் வழி ஏதாவது இருக்கிறதா என்று மனிதன் சுற்றுமுற்றும் பார்க்கிறான்.

காலச்சக்கரத்தின் சுழற்சி பொறுக்க முடியாத நிலையை அடையும்போது, "இந்தச் சக்கரத்தை நிறுத்துவது எப்படி? இதற்கு ஏதாவது வழி இருக்கிறதா?" என்னும் கேள்விகளுக்கு பதில் காண முயச்சி செய்கிறான்.

ஏதோ பாக்கியத்தால் இம்மாதிரி எண்ணங்கள் புத்தியில் தோன்றுவது, மனிதப் பிறவி ஏற்பட்டதன் நற்பயனை அடைய எடுக்கப் போகும் முயற்சிகளின் ஆரம்பமாக அமைகிறது. இதன் பிறகு, சாதகன் தன்னுடைய நன்மை கருதி இலட்சியத்தை அடைவதற்கான வழிமுறைகளை கையாளுகிறான்.

அஞ்ஞானம் அல்லது மாயைக்கு ஆரம்பம் என்பதே கிடையாது. கிளிஞ்சலில் வெள்ளியும் கானல் நீரில் தண்ணீரும் தெரிவதுபோல், மாயை பயனற்ற ஏமாற்று காட்சிகளையே அளிக்கிறது. ஒன்றை வேறொன்றாக தெரிந்துகொள்ளும் இம் மாபெரும் தடங்கலைப் பெயர்த்தெரிய வேண்டும்.

கனவில் ஆலங்கட்டி மழை பொற்காசுகளாகப் பொழிகிறது! தேவைப்படும்போது உபயோகப்படும் என்று நினைத்து ஒருவர் பெரு முயற்சி எடுத்து அவற்றை நிறையச் சேகரிக்கலாம். ஆனால், விழித்தெழுந்தவுடனே எல்லாம் எங்கோ போய் விடுகிறது.    


No comments:

Post a Comment