valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 4 May 2017

ஷீர்டி சாய் சத்சரிதம்

ஆகவே, அப்பொழுதிலிருந்து அந்த வக்கீல் யாரையும் நிந்திப்பதில்லையென்றும் விமரிசிப்பதில்லைஎண்டுறம் யாரைப்பற்றியும் எந்தக் கெட்ட எண்ணத்திற்கும் இடமளிப்பதில்லையென்றும் உறுதியாகத் தீர்மானம் செய்துகொண்டார்.

நாம் எங்கிருந்தாலும் என்ன செய்தாலும் அது சாயியின் பார்வையில் படாமல் இருக்காது. இந்த விஷயம் அவருக்கு நிச்சயமாகிவிட்டது. அசத்தான (தீய) செய்கைகளில் அவருக்கிருந்த நாட்டம் ஒழிந்தது.

நல்ல காரியங்களை செய்யவேண்டுமென்ற விழிப்புணர்வு ஏற்பட்டது. தமக்கு உள்ளும் முன்னாலும் பின்னாலும் சாயி இருக்கிறார் என்ற நம்பிக்கை அவர் இதயத்தில் நிர்த்தரணம் ஆகிவிட்டது. சாயியை வஞ்சிக்கும் சாமர்த்தியம் படைத்தவர் யார்?

இக் கதை அந்த வக்கீலுக்கே சம்பந்தப்பட்டதாக தோன்றினாலும், ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்தால், இந்த போதனை எவ்விதமாக பார்த்தாலும் எல்லாவழியிலும் நம் எல்லாருக்கும் அளிக்கப்பட்டது என்பது விளங்கும்!

அந்த வக்கீலைப் போலவே, இந்தக் கதையைச் சொல்பவரும் கேட்பவர்களும் அனைத்து சாயி பக்தர்களுமே இந்த போதனையின்படி நடந்துகொள்ள வேண்டுமென்று நான் பிரார்த்திக்கிறேன்.

சாயிகிருபை என்னும் மேகம் அருளைப் பொழியும்போது நாமனைவரும் திருப்தியடைவோம். இதில் புதுமை ஏதும் இல்லை. தாகமெடுத்தவர்கள் அனைவரும் திருப்தியடைவர்!

சாயிநாதரின் பெருமை அளவிடமுடியாதது; அவருடைய கதைகளும் எண்ணிலடங்காதவை. சாயியின் சரித்திரம் எல்லையற்றது; ஏனெனில், அவர் முழு முதற்பொருளின் அவதாரம்.

சிரத்தையுடன் செவிமடுப்பவர்களே! அடுத்த அத்தியாயத்தில் ஒரு கதையை பயபக்தியடன் கேட்டால் உங்களுடைய மனோரதங்கள் நிறைவேறும்; மனம் உறுதிப்படும்; சாந்தியடையும்.

தம் பக்தர்களுக்கு என்னென்ன ஆபத்துக்கள் வரப்போகின்றன என்பது சாயிநாதருக்கு முன்கூட்டியே தெரியும். கேலியும் பரிஹாசமும் சிரிப்புமாக விளையாடிக்கொண்டே சாயிநாதர் அவ்வாபத்துக்கள் வாராது தடுத்துவிடுவார்.

பக்தன் ஹேமாட் சாயியை சரணடைகிறேன். இக்காதை இங்கு முற்றும். அடுத்து வரும் கதை பக்தர்களுக்கு வரக்கூடிய சங்கடங்களை சாயி நிவாரணம் செய்தது பற்றியதாகும்.

பக்தர்களுக்கு நேரப்போகும் சங்கடங்களையும் ஆபத்துக்களையும் முன்கூட்டியே தெரிந்துகொண்டே சாயி என்னும் கருணைக்கடல், எப்படி சரியான நேரத்தில் எச்சரிக்கை விடுத்து அவ்வாபத்துக்கள் வாராது தடுத்தார் என்பது பற்றிச் சொல்கிறேன்.

எல்லாருக்கும் க்ஷேமம் உண்டாகட்டும்! ஞானிகளாலும் சான்றோர்களாலும் உணர்வூட்டப்பட்டு, சாயி பக்தன் ஹேமாட் பந்தால் இயற்றப்பட்ட, 'ஸ்ரீ சமர்த்த சாயி சத் சரித்திரம்' என்னும் காவியத்தில், 'அனுக்கிரஹம் செய்தல்' என்னும் இருபத்தொன்றாவது அத்தியாயம் முற்றும்.

                                        ஸ்ரீ சாயி நாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.

                                                            சுபம் உண்டாகட்டும்.