valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 22 July 2021

 ஷீர்டி சாயி சத்சரிதம்

"இரண்டு வீக்கங்கள் தோன்றியிருக்கின்றன; கடுமையான ஜுரம் அடிக்கிறது; அவஸ்தைப்படுகிறாள்; நீங்களே வந்து பாருங்கள்; இதொன்றும் நல்லதற்கு அறிகுறியாகத் தெரியவில்லை."

பாபாஜியின் சோகம் ததும்பிய முகத்தையும் வருத்தம் தோய்ந்த வார்த்தைகளையும் கேட்ட மாதவராவ் திடுக்கிட்டார். அவரும் மனங்கலங்கி தைரியமிழந்தார்.

மாதவராவ் விவேகம் நிறைந்தவரானாலும், வீக்கங்கள் என்று கேள்வியுற்றபோது திகிலடைந்தார். பிளேக் நோய் வீக்கங்கள் கண்டால், சீக்கிரமே மரணம் சம்பவிக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயமே.

சுபமான நிகழ்ச்சியானாலும் அசுபமான நிகழ்ச்சியாயினும், இஷ்டமான செயலாயினும் கஷ்டமான செயலாயினும், பாபாவின் அறிவுரையைக் கேட்பதென்பது ஷீர்டி மக்களின் வழக்கம்.

பிறகு, அவர் எப்படி எப்படியெல்லாம் சொல்கிறாரோ, அப்படி அப்படியெல்லாம் செயல்படவேண்டும். ஏனெனில், அவரே பக்தர்களை சங்கடங்களிலிருந்து விடுவித்தார். ஓ, எத்தனை அனுபவங்களை நான் வர்ணிக்க முடியும்!

ஆகவே, இந்த நித்திய பாடத்தின்படியே மாதவராவும் முடிவெடுத்தார் பாபாவுக்கு சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்துவிட்டு பயபக்தியுடன் முதலில் அவரிடம் விவரங்களை சொன்னார்.

மாதவராவ் வேண்டினார், "ஜய ஜய சாயிநாதா! இந்த அனாதைகளின் மீது தயை காட்டுவீராக. ஓ, இதென்ன புதிதாக ஒரு சங்கடம்! இதென்ன வேண்டாத மனக்கலக்கம்! -

"ஆயினும் உங்களைத் தவிர நாங்கள் யாரிடம் மன்றாடுவோம்? அந்தப் பெண்ணின் யாதனையை (நரக வேதனையை) விலக்குங்கள்; அவளை ஆசீர்வாதம் செய்யுங்கள்.-

"இந்த சங்கடத்திலிருந்து எங்களைக் காத்தருளுங்கள். உம்மையல்லால் எங்களை ரட்சிப்பவர் வேறு யார்? கட்டுக்கடங்காத இந்த ஜுரத்தை சமனம் செய்து உம்முடைய வாக்கை காப்பாற்றுங்கள்".

தம்பியுடன் சாவூல் விஹிர் செல்வதற்கு பாபாவை அனுமதி கேட்டார் மாதவராவ். பாபா அப்பொழுது சொன்னார், " இந்த நேரங்கெட்ட நேரத்தில் போகவேண்டா. ஆயினும் அவளுக்கு கொஞ்சம் உதீ கொடுத்தனுப்பு.-

"வீக்கமென்ன, ஜூரமென்ன! அல்லாமாலிக் நம் பிதா அல்லரோ? அது தானாகவே சுகமாகிவிடும். அவள் நலமடைவாள்; இதில் சந்தேகத்திற்கு  இடமேதுமில்லை.-

"எப்படியும் காலை சூரிய உதயத்தின்போது நீ சாவூல் விஹிருக்குச் செல்வாயாக. இப்பொழுதே போகவேண்டுமென்று அவரசப்படாதே! இங்கேயே அமைதியான மனத்துடன் இரு.-

"நாளைக்கும், போனவுடனே திரும்பி வா. காரணமில்லாமல் ஏன் தொந்தரவுக்கு உள்ளாகிறாய்? உதீயைப் பூசிவிட்டு, நீருடன் கலந்து கொடுத்தபின் நாம் ஏன் பயப்பட வேண்டும்?"