ஷீர்டி சாயி சத்சரிதம்
"நான் என்னுடைய இடத்தை விட்டுவிட்டு, இவ்வளவு தூரம் நடந்துவந்து இங்கு உட்கார்ந்துகொண்டு தவளையைப் பாம்பு விழுங்கும்படி விட்டுவிடுவேனா என்ன? நான் அவனை எப்படி விடுவிக்கிறேன் என்று பாரும்.-
"இப்பொழுது, நான் அவர்கள் இருவரையும் பிரித்த பிறகு, நீர் உமது வீட்டிற்குச் செல்லும்; நான் என் வசிப்பிடத்திற்குச் செல்கிறேன். போம், போம், சிலீமை மறுபடியும் நிரப்பும். பாம்பு அடுத்ததாக என்னதான் செய்கிறது என்று பார்த்துவிடுவோம்!"
சிலீம் உடனே தயார் செய்யப்பட்டது. வழிப்போக்கர் அதைப் பற்றவைத்துத் தாம் ஒரு தடவை புகை உறிஞ்சினார். பின்னர் என்னிடம் அளித்தார். நான் புகைகுடிப்பதற்காகச் சிலீமைக் கையில் வாங்கிக்கொண்டேன்.
நான் இரண்டு தடவைகள் புகை உறிஞ்சினேன். பின்னர் வழிப்போக்கனை என்னுடன் அழைத்துக்கொண்டு, குறிப்பிட்ட இடத்தை அடையும்வரை தருப்பைப் புதர்களின் ஊடே புகுந்து நடந்து சென்றேன்.
மறுபடியும் பாம்பைப் பார்த்த வழிப்போக்கர் பீதியடைந்தார். "ஓ, எவ்வளவு பயங்கரமான பிராணி!" என்று சொல்லி வியந்தார். பயமடைந்த அவர், நான் முன்னேறிச் செல்வதைத் தடுக்க முயன்றார்.
அவர் கூறினார், "ஆ, தயவுசெய்து இதற்குமேல் போக வேண்டா. அந்தப் பாம்பு நம்மை நோக்கி வரும். இந்த இடம் குறுகலாகவும் இடக்குமுடக்காகவும் இருக்கிறது. தப்பித்து ஓடவும் இயலாது. மேற்கொண்டு அடியெடுத்து வைக்கவேண்டா."
அந்தக் காட்சியைப் பார்த்த வழிப்போக்கர் மரணபீதி அடைந்தார். அவர்கள் இருவருக்குமிடையே இருந்த விரோதபாவம் சம்மந்தமாக அப்பொழுது நான் நிகழ்த்திய உபதேசத்தைக் கேளுங்கள்.
"அடே, அப்பா, வீரபத்ரா, உன் விரோதியான சனபசப்பா தவளையாகப் பிறந்த பின்னரும் நீ அனுதாபம் (கழிவிரக்கம்) கொள்ளவில்லையா?-
"நீயும் ஒரு பாம்பாகப் பிறந்திருக்கிறாய். இன்னுமா இந்த கொலை விரோதம்? இப்பொழுதாவது உன்னுடைய செய்கைகளுக்காக வெட்கப்படு! விரோதத்தை விடுத்து சாந்தமாக இரு!"
என்னுடைய வாயிலிருந்து வெளிவந்த இவ்வார்த்தைகளைக் கேட்டவுடன் பாம்பு சட்டென்று தவளையை விடுவித்தது. சரசரவென்று நழுவியோடித் தண்ணீருக்குள் நுழைந்து கண்ணுக்குத் தெரியாமல் மறைந்தது.
மரணத்தின் வாயிலிருந்து விடுபட்டு எகிறிக் குதித்த தவளை சட்டென்று அங்கிருந்த செடி கொடிகளிடையே புகுந்து தன்னை மறைத்துக்கொண்டது. வழிப்போக்கர் ஆச்சரியத்தில் மூழ்கினார்.
அவர் சொன்னார், "இது என்னவென்றே எனக்கு விளங்கவில்லை! உங்களுடைய வாயிலிருந்து வெளிப்பட்ட சொற்களைக் கேட்டவுடன் எப்படி அந்தப் பாம்பு தவளையை விடுவித்தது! பாம்பு எப்படி மறைந்துபோயிற்று!-
"இவ்விருவரில் யார் வீரபத்ரப்பா? அதுபோலவே, யார் இவ்விருவரில் சனபசப்பா? இவர்களுடைய விரோதத்துக்குக் காரணம் என்ன? எனக்கு அனைத்து விவரங்களையும் சொல்வீர்களா?"