valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Friday 1 March 2019

ஷீர்டி சாயி சத்சரிதம்

பிரேமை மிகுந்த பக்தரான லக்மீச்சந்த், குருவருளில் மூழ்கி ஆனந்தமடைந்து தேனீ தாமரையில் அமர்வதுபோல் சாயியின் பாதகமலங்களுக்கு அருகில் அமர்ந்தார்.

பாபா அப்பொழுது கடிந்துகொண்டார், "அயோக்கிய பயல்கள்! வழியில் பஜனை செய்துகொண்டே மற்றவர்களிடம் கேள்விமேல் கேள்வி கேட்கிறார்கள்! பிறரிடம் கேட்டுது தெரிந்துகொள்வதற்கு என்ன இருக்கிறது?

"தனக்குத் தானே பார்த்துத் தெரிந்துகொள்ள வேண்டியதுதானே ? மற்றவர்களிடம் எதற்காகக் கேள்வி கேட்கவேண்டும்? அவ்வளவு தூய கனவு எப்பொழுதாவது பொய்யாக இருக்கமுடியுமா? உம்முடைய சிந்தனையை நீரே தெளிவு செய்துகொள்ளும். -

"மார்வாரியிடமிருந்து கடன் வாங்கிக்கொண்டு தரிசனத்திற்கு வரவேண்டிய நிறைவேறியதா?" இந்த வார்த்தைகளைக் கேட்ட இருவரும்  வியந்தனர்.

"வரும் வழியில் நாம் செய்த விசாரணைப்பற்றி இங்கிருந்தபடியே பாபா எப்படி அறிந்தார்? லக்மீச்சந்த் இவ்வற்புதத்தை நினைத்துப் பரம ஆச்சரியமடைந்தார்.

"கனவு என்னுடைய இல்லத்தில் தோன்றியது; பஜனை செய்ததோ ரயில்வண்டியில்; பாபாவுக்கு இதெல்லாம் எப்படித் தெரிந்தது? என்ன அற்புதமான அந்தர்ஞானம் இது!-

"நான் பாபாவை தரிசனம் செய்ய பேராவல் கொண்டது உண்மை. என்னிடம் தேவையான பணம் இல்லை; ஆகவே கடன் வாங்கிக்கொண்டேன். அது எப்படி இவருக்குத் தெரிந்தது!"

வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவிற்கு லக்மீச்சந்த் ஆச்சரியமடைந்தார். தாமரையால் கவரப்படும் தேனீக்களைப்போல் பாபாவின் திருவடித்தாமரையை நாடி வந்திருந்த பக்தர்களும் ஆச்சரியமடைந்தனர். பாபாவின் லீலைகள் கற்பனைக்கு எட்டாதவை அல்லவோ!

கடன் வாங்கிப் புனிதப் பயணம் சென்றோ பண்டிகைகளை கொண்டாடியோ கடனாளி ஆவது பாபாவுக்கு அறவே பிடிக்காத விஷயம். இது இங்கு முக்கியமான படிப்பினை.

பின்னர், மற்ற பக்தர்களுடன் லக்மீச்சந்த் சந்தோஷமாக சாடே வாடாவுக்குச் சென்றார். மத்திய வேளையில் சாப்பாட்டுக்கு கோஷ்டியில் உட்கார்ந்தார்.

அதுசமயம், யாரோ ஒரு பக்தர் கொண்டுவந்த சாஞ்சா பாபாவின் பிரசாதமாக ஒவ்வொரு தட்டிலும் சிறிது பரிமாறப்பட்டது. இதை உண்ட லாலாஜி திருப்தியும் மகிழ்ச்சியும் அடைந்தார்.

அடுத்த நாள் சாப்பாட்டு நேரத்தில் லாலாஜிக்கு சாஞ்சா ஞாபகம் வந்தது. ஆனால், சாஞ்சா தினமும் பரிமாறப்படும் உணவுப்பண்டம் அன்று. ஆகவே, அவருடைய ஆசை நிறைவேறாமற்போயிற்று.