valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Friday 12 April 2019

ஷீர்டி சாயி சத்சரிதம்

ஆனால், முடியாது என்று சொன்னால் சாதே சினம் கொள்வார்; போகிறேன் என்று ஒத்துக்கொண்டால் நரகந்தான் கிட்டும். என்ன செய்யலாம் என்று அவரால் யோசிக்க முடியவில்லை. அவர் மனம் கவலையில் உளைந்தது.

பேய்க்கும் பெருங்குடலுக்கும் இடையே மாட்டிக்கொண்ட நிலைமை.  அவர் மனம் அலைபாய்ந்து அமைதியிழந்தது. ஆனால், சாடேவோ மனப்பூர்வமாக அவரைப் போகும்படி வற்புறுத்திக்கொண்டிருந்தார். 'சரி, போய்த் தரிசனம் செய்துவிட்டு வரலாம்' என்று மேகா முடிவெடுத்தார்.

பின்னர் மேகா ஷிர்டிக்கு வந்துசேர்ந்தார். முற்றத்தினுள் சென்று மசூதியின் படிகளில் ஏற ஆரம்பித்தார். பாபா தம் லீலையை ஆரம்பித்தார்!

உக்கிரமான முகத்துடன் கையில் ஒரு கல்லை எடுத்துக்கொண்டே இரைச்சலிட்டார், "ஜாக்கிரதை! படிமேல் கால் வைத்து ஏறினால் தெரியும் சேதி! இது ஒரு யவனன் (முஸ்லீம்) வாழும் இடம்.-

"ஓ, நீரோ உயர்குலத்து பிராமணன். நானோ நீசனிலும் நீசனான யவனன். உம்மேல், தீட்டு ஒட்டிக்கொண்டுவிடும். போம் வெளியே; இக்கணமே திரும்பிவிடும்!"

கடுமையான இவ்வார்த்தைகள் மேகாவின்மீது தணலைப் போலக் கொட்டின. பாபா பிரளய கால ருத்திரனைபோலக் காட்சியளித்தார். இதை பார்த்து கொண்டிருந்தவர்கள் வெலவெலத்தனர். மேகா பயத்தால் நடுநடுங்கிபோனார்.

இந்தக் கோபமென்னவோ ஒரு நடிப்புதான்; உள்ளே இதயம் தயையால் நிரம்பி வழிந்துகொண்டிருந்தது. மேகா வியப்பால் நிறைந்து செயலிழந்து போனார். "என் உள்ளத்தின் ஆழத்தில் இருந்த எண்ணங்களை இவர் எப்படி அறிந்தார்?-

"எங்கோ இருக்கும் கேட்டா ஜில்லா எங்கே? வெகுதூரத்தில் இருக்கும் அஹமத் நகரம் எங்கே? என்னுடைய மனக்கோணலும் சந்தேகங்களுமே பாபாவின் கோபமாக உருவெடுத்தன போலும்!"

பாபா மேகாவை அடிப்பதற்கு நெருங்க, நெருங்க, மேகாவின் தைரியம் அவரைக் காலைவாரிவிட்டது. ஒவ்வொரு பாய்ச்சலுக்கும் ஓரடி பின்னுக்கு வைத்தார். கிட்ட நெருங்க தைரியம் இல்லாது போயிற்று.

இந்நிலையிலே, பாபாவின் மனநிலையை அறிந்துகொள்ள முயற்சி செய்து கொண்டு ஷிர்டியில் சில நாள்களை தள்ளினார். முடிந்த அளவிற்கு ஏதோ சேவை  செய்தாரே தவிர, திடமான விசுவாசம் ஏற்படவில்லை.

பின்னர் மேகா தம்முடைய சொந்த ஊருக்கே சென்றார். அங்கு ஜுரத்தில் படுத்து மீண்டார். இந்நிலையில் பாபாவைப்பற்றிய ஏக்கம் உள்ளிருந்து வளர்ந்தது. மறுபடியும் ஷீரடிக்கே திரும்பி வந்தார்.

திரும்பிவந்த பிறகு மனம் சந்தோஷமடைந்தது; ஷிர்டியிலேயே தங்கினார். சாயி பாதங்களில் விசுவாசம் வளர்ந்து அனன்னிய பக்தரானார். சாயியைவிட்டால் வேறு தெய்வமில்லை என்னும் நிலைக்கு உயர்ந்தார்.

மேகா ஏற்கெனவே ஒரு சிவபக்தர். சாயி பாதங்களின்மேல் ஈடுபாடு வளர, வளர சாயிநாதனில் சிவனைப் பார்த்தார். சாயிநாதனே அவருக்கு உமாநாதன் (சிவன்).