valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Friday 1 February 2019

ஷீர்டி சாயி சத்சரிதம்

நிந்தையையும் பொய்களையும் கெட்ட கதைகளையும் கேட்ட பாவம் ஒழிந்து போகும். எப்பொழுதும் புனிதமானதும் தூய்மையளிப்பவையுமான ஞானிகளின் கதைகளை மீண்டும் மீண்டும் படிப்போமாக, கேட்போமாக.

கதை கேட்பவர்களே, சாயியின் கருணையை ஒவ்வொரு கட்டத்திலும் வெளிப்படுத்தும் இந்தக் கதையின் பயபக்தியுடன் கேளுங்கள்.

'ராலி சகோதரர்கள்' என்பது ஒரு கிரேக்க நாட்டுக்கு கம்பெனி, ஒவ்வொரு நகரத்திலும் ஒரு கிளை அமைத்து, அகில இந்திய ரீதியில் வியாபாரம் செய்துவந்த இந்தக் கம்பெனிக்கு பம்பாயிலும் ஒரு கிளை இருந்தது.

லக்மீச்சந்துக்கு அங்கேதான் கம்பெனி அதிகாரிகளின் கீழ் வேலை கிடைத்தது. குமாஸ்தாவாக இருந்த அவர் மிகுந்த விசுவாசத்துடன் கீழ்ப்படிந்து நடந்துகொண்டார்.

ஆரம்பத்தில் அவர் ரயில்வே உத்தியோகம் பார்த்தார். அதன் பிறகு வேங்கடேச அச்சகத்தில் வேலை செய்தார். அப்பொழுதுதான் அவருக்கு  சாயியின் சங்கமும் உறவும் கிட்டியது. இது எவ்வாறு கிடைத்ததென்பதை  கேளுங்கள்.

"என்னுடைய மனிதன் (பக்தன்) வேறு தேசத்திலிருந்தாலும் சரி, ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் இருந்தாலும் சரி, சிட்டுக்குருவியின் காலில் நூல்கட்டி இழுப்பதுபோல் அவனை என்னிடம் கொண்டுவந்து சேர்ப்பேன்."

பல சந்தர்ப்பங்களில் பாபா இவ்விதமாக திருவாய் மொழிந்திருக்கிறார். உலகத்து மக்கள் பலர் இதைக் கேட்டிருக்கின்றனர்; அவர்களுடைய அனுபவமும் அவ்வாறே! இப்பொழுது இந்த லீலையை சொல்கிறேன்.

நம்பிக்கையுள்ள, கபடமற்ற குழந்தைகளைப் பல மாநிலங்களில் இருந்து பாபா ஷிர்டிக்கு இழுத்தார். இக் குழந்தைகளில் ஒன்றே லக்மீச்சந்த் .

மோகத்தால் விளைந்த தாமஸகுணம் நாசமடைந்து பல ஜென்மங்களாகச் சேர்த்துவைத்த நற்செயல்களின் பலன் மேலோங்கும்போது , ஒருவருக்கு ஞானியிடம் வந்துசேரும் பாக்கியம் லாபமாகிறது.

இதற்குப்பின், விவேகமெனும் அக்கினி கொழுந்து விட்டு எரிய ஆரம்பிக்கிறது; துறவு மனப்பான்மை உதித்து ஞானத்தைக் கொணர்கிறது; எஞ்சியிருக்கும் பாவங்கள் நலிந்து போகின்றன; பிரவிபி பயனை எய்துகிறோம்.

ஒருமுறை சாயிநாதரின் காட்சி கிடைத்துவிட்டால், வேறெதெற்குமே இடமில்லாமல் போகிறது. கண்களை மூடியபோதும், அவர்களுக்கு எங்கும் நிறைந்த சாயிபாபாவே தெரிகிறார்.

லாலாஜியை (லக்மீச்சந்த்) ஒருமுறை நான் பேட்டி கண்டேன். அவர் விவரித்த சொந்த அனுபவங்களை பிரேமையுடன் என்னுடைய இதயமெனும் பெட்டகத்தில் பாதுகாப்பாக வைத்திருக்கிறேன். அதை உங்களுக்கு விவரிப்பதற்கு மிகுந்த உற்சாகமாக இருக்கிறேன்.

பாபாவிடமிருந்து அவருக்கு வந்த அழைப்பே ஒரு தெய்வீக லீலை. விசுவாசமுள்ள பக்தர்கள் இதயத்தைக் காதுகளுக்குக் கொணர்ந்து கேட்கட்டும்.

1910 ஆம் ஆண்டு கிருஸ்துமஸ் பண்டிகையின் போது லாலாஜிக்கு ஷீர்டி பிரயாண யோகம் கிடைத்தது.