valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 3 October 2019

ஷீர்டி சாயி சத்சரிதம்

சாயி லீலை என்னும் இந்தக் கற்பக விருட்சம் சந்தேகமேயின்றிப் பூவாகவும் காயாகவும் பழமாகவும் அருளும். ஆயினும், சிறந்த பாக்கியவானால்தான் அவற்றை பூமிக்கு கொண்டுவர முடியும்.

ஆன்மிகம் நாட்டமுள்ளவர்களுக்கு மோட்சம் அளிப்பதிலும் எல்லாருக்குமே மங்களம் விளைவிப்பதிலும், எல்லாச் சாதனங்களிலும் தலைசிறந்த சாதனமாகிய இப் பரம புனிதமான கதைகளைக் கேளுங்கள்; கேளுங்கள்.

இந்த சாயி கதையாகிய அமிருத பானம், ஜடம் போன்ற மனிதனையும் உத்தாரணம் செய்யும்; மோட்சத்தை நாடுபவர்களுக்கு மோட்ச சாதனம்; உலகியல் வாழ்வில் ஈடுபட்டவர்களுக்கு சுமைதாங்கி!

ஒரு கதையை இங்கே சொல்லப் புகும்போது, பல கதைகள் ஞாபகத்திற்கு வருகின்றன. ஆகவே, கேட்பவர்களைக் கவனத்துடன் கேட்கும்படி ஹேமாட் பணிவுடன் வேண்டுகிறேன்.

இம்மாதிரியாக ஒவ்வொரு கதையாக கேட்டுகொண்டுவந்தால், சாயிலீலை ரசவாதம் புரியும். பிறவியென்னும் காட்டுத்தீயில் மாட்டிக்கொண்டு தவிப்பவர்கள் திருப்தியும் சுகமும் பெறுவர். சமர்த்த சாயி மகத்தான சக்தி பெற்றவர் அல்லரோ!

நாசிக் ஜில்லாவில், வணி கிராமத்தில், காகாஜி வைத்யா என்று பெயர் கொண்ட ஒருவர் வசித்து வந்தார். அங்கிருந்த தேவியின் கோவிலில் உபாத்தியாயராக (பூசகர் - பூஜை செய்பவர்) இருந்தார்.

தேவியின் பெயர் சப்தசிருங்கி. வாழ்க்கையில் ஏற்பட்ட சோதனைகளால் வேதனைகளாலும் துன்புற்ற பூஜகர் மனவுளைச்சலுற்றார்.

காலச்சக்கரம் கேடுகளைக் கொண்டுவரும்போது, மனம் நீர்ச்சுழியைப்போல் சுழல்கிறது. உடல் இங்குமங்கும் அலைகிறது. ஒருகணமும் சாந்தி கிடைப்பதில்லை.

மிகுந்த சோகமுற்ற காகாஜி, கோயிலுக்குச் சென்று தம்மைக் கவலைகளில் இருந்தும் சஞ்சலங்களில் இருந்தும் விடுவிக்குமாறு தேவியை வேண்டினார்.

தேவியின் அருள் வேண்டி மனமாரப் பிரார்த்தனை செய்தார். தேவியும் அவருடைய பக்தியையும் பாவத்தையும் மெச்சித்  திருப்தியடைந்தார். அன்றிரவே அவருக்கொரு காட்சியளித்தார். கதை கேட்பவர்கள்! இந்த அற்புதத்தைக் கேளுங்கள்!

தேவி சப்தசிருங்கி மாதா காகாஜியின் கனவில் தோன்றி, "பாபாவிடம் செல்வீராக; மனம் அமைதியுறும்" என்று கூறினார்.

'யார் இந்த பாபா? அவரை எங்கே போய்க் காண்பது?' என்பதை தேவி மேலும் தெளிவுபடுத்துவார் என நினைத்துக் காத்திருந்தபோதே அவர் விழித்துக்கொண்டார்.

மேற்கொண்டு விவரம் தெரிந்துகொள்ளவேண்டும் என்ற விருப்பம் நிறைவேறுவதற்கு முன்பாகவே சட்டென்று கனவு மறைந்துவிட்டது. தேவி குறிப்பிட்ட பாபா யாராக இருக்கக்கூடுமென்று தம்முடைய புத்திக்கெட்டியவாறு அனுமானித்தார்.