ஷீர்டி சாயி சத்சரிதம்
கர்மவினையின் சூத்திரம் ஆகாயத்தைப் போலப் பெரியது. அதை எவராலும் புரிந்துகொள்ளமுடியாது. மஹா பண்டிதர்களும் இந்த விஷயத்தில் ஏமாற்றமடைகின்றனர். (BHA) பாவமுள்ள பக்தர்களோ, அதிகம் படிக்காதவர்களாயினும் காப்பாற்றப்படுகின்றனர்.
அதுபோலவே, இறைவனின் நியமத்தைத் தாண்டுவது இயலாத காரியம். அதனுடைய கிரமத்தை எவரால் மீறமுடியும்? ஆகையால், உலகியல் வாழ்க்கைக்கு விதிக்கப்பட்டுள்ள தருமநெறிகளின்படி ஒழுகி, எப்பொழுதும் கடமைகளைச் செவ்வனே செய்யுங்கள்.
அவ்வாறு செய்யாமல் அதருமநெறியில் வாழ்வபவன், மரணத்திற்குப் பிறகு, தான் என்னென்ன தீவினைகளை செய்தானோ, அவற்றுக்கேற்றவாறு அடுத்த ஜன்மம் எடுக்கிறான்.
மரணத்திற்குப் பிறகு, தன்னுடைய கர்மவினைகளுக்கும் கேள்விஞானத்திற்கும் ஏற்றவாறு சுக்கிலபீஜமாக (விந்தாக) மாறி, யோனித்துவாரத்திற்குள் அவர் பிரவேசிக்கிறான். மறுபடியும் மனிதஜென்மம் எடுக்கிறான். வேறொருவன் அதே சட்டத்தின்படி ஸ்தாவர (நகரமுடியாத பொருளாக) ஜன்மம் எடுக்கிறான்.
'கடைசி பிரக்ஞை எப்படியோ அப்படியே மறுபிறப்பு' என்னும் வேதவசனத்தின் பொருளை அறியாதவர் யார்? இன்னொரு பிறவி எடுக்கவேண்டுமென்று விரும்புபவர், அவர் ஆசைப்படும் பிறவியைப் பெறவேண்டாமா?
இன்னுமொரு சரீரமும் எடுக்கவேண்டுமென்று ஆர்வம் கொள்ளும் அஞ்ஞானத்தால் சூழப்பட்ட மூடர்கள், அவர்கள் சம்பாதித்த பாவபுண்ணியங்களுக்கு ஏற்றவாறு தான் அடுத்த சரீரம் கிடைக்கும் என்பதை நன்கு அறிய வேண்டும்.
ஆகையால், விலைமதிப்பற்ற மனிதஜென்மம் எடுக்கும் வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு, தேகம் கீழே விழுவதற்கு முன்னதாகவே ஆத்மஞானம் பெறுபவனை உண்மையிலேயே விவேகமுள்ளவன் என்று சொல்லுவேன்.
அவனே சம்சார பந்தத்திலிருந்து விடுதலையடைகிறான். மற்றவர்கள் வாழ்க்கைச் சுழலில் மாட்டிக்கொள்கிறார்கள். அவர்களால் இன்னுமொரு பிறவி எடுப்பதைத் தவிர்க்கமுடியாது. மறுபிறவியின் யாதனைகளையும் தடுக்கமுடியாது.
இந்தக் கதையின் சிறப்பு என்னவென்றால், 'இந்த உடல்தான் நான்' என்னும் தீய இயல்பு கீழே அமிழ்த்தப்பட்டு சாத்துவிகமான அஷ்டபாவம் எழுப்பப்படும்.
கோடிகோடியாய்ப் பணத்தை வைத்துக்கொண்டு சுபாவத்தில் கடுங்கஞ்சனாக வாழ்பவனின் ஜீவன் பரிதாபத்திற்குரியது. மரணப்பரியந்தம் (மரணடையும்வரை) அவன் அலுப்பையும் சலிப்பையுமே அனுபவிப்பான்.
மேலும், விரோதத்தை வளர்ப்பது எக்காலத்தும் நன்றன்று. விரோதம் தோன்ற முயலும்போது, உன் மனத்தால் அதை அடக்கு. அடக்காவிட்டால், அது உன் வாழ்வையே நாசம் செய்துவிடும்.
பரஸ்பர விரோதம் உத்தமமான ஜன்மத்திலிருந்து இழிவான ஜன்மத்துக்கு இழுத்துச் செல்லும். கடம், விரோதம், கொலை இவற்றின் விளைவுகள், ஒரு மனிதனை ஜன்மத்தை அடுத்து ஜென்மமாக, வினை தீரும்வரை தொடரும்.