valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 8 February 2024

 ஷீர்டி சாயி சத்சரிதம்


தட்டுகளில் பரிமாறப்பட்ட உணவு ஆறிப்போகலாம்; சாப்பிட உட்கார்ந்தவர்கள் காத்திருக்கும்படி நேரலாம்; ஆனாலும் லக்ஷ்மீ பாயியின் சோளரொட்டி வரும்வரை உணவு தொடப்படாது.

பிற்காலத்தில், தினமும் பிற்பகல் மூன்றரை மணியளவில் லக்ஷ்மீயின் கைகளால் செய்யப்பட்ட இடியாப்பம் வேண்டுமென்று பாபா கேட்பார். அவரருகிலேயே உட்கார்ந்து அதை உண்பார். இது சில நாள்களுக்கு நடந்தது.

பாபா அதில் சிறிதளவே உண்பார். மீதியை லக்ஷ்மீயின் மூலமாகவே ராதாகிருஷ்ண பாயிக்கு கொடுத்தனுப்புவார். காரணம், ராதாகிருஷ்ண பாயீக்கு பாபா அருந்திய உணவில் மீதியை உண்பதில் பிரியம் அதிகம்.

பாபா தேகத்தை உதறிய விவரத்தைச் சொல்லிக்கொண்டிருக்கும்போது சம்பந்தமில்லாத சோளரொட்டி பற்றிய வெறும்பேச்சு எதற்கு என்று கதை கேட்பவர்கள் நினைக்க வேண்டா. சாயி எங்கும் நிறைந்தவர் என்பதற்கு நிதரிசனம் (எடுத்துக்காட்டு) இக் கிளைக்கதை.

கண்ணுக்குத் தெரியும் இவ்வுலகின் நகரும் நகராப் பொருள்கள் அனைத்திலும், அவ்வாறே மேலுலகத்திலும் சாயி நிரந்தரமாக வியாபித்திருக்கிறார். எவர் பிறப்பும் இறப்பும் இல்லாவதரோ , அவரே இந்த சாயீ.

சோளரொட்டிக் கதையின் சாராம்சம் இந்த ஒரு தத்துவமே. லக்ஷ்மீ பாயீ பற்றிய இனிமையான இக் காதலி தானாகவே என் மனத்தில் உதித்தது, கதைகேட்பவர்களின் நன்மைக்காகவே என்று நான் மனப்பூர்வமாக நம்புகிறேன்.

லக்ஷ்மீ பாயீயின் சேவை மகத்தானது! சாயீ அதை எப்படி மறக்கமுடியும்? அவர் அதை ஞாபகத்தில் வைத்திருந்தார் என்பதை நிதரிசனம் செய்யும் அற்புதத்தைச் சொல்கிறேன்; பயபக்தியுடன் கேளுங்கள்.

பிராணன் தொண்டைவரை வந்துவிட்டிருந்த போதிலும், சரீரத்தில் கொஞ்சமும் திராணி இல்லாதுபோன போதிலும், உயிர் பிரியும் நேரத்தில் பாபா தமது கைகளாலேயே லக்ஷ்மீ பாயீயிக்குக்குத் தானம் கொடுத்தார்.

தம்முடைய பாக்கெட்டில் கையை விட்டு முதல் தடவை ஐந்து ரூபாயும் இரண்டாவது தடவை நான்கு ரூபாயும் வெளியே எடுத்து லக்ஷ்மீ பாயீயின் கையில் வைத்தார். இதுவே பாபாவின் கடைசி செயல்!

இச் செயல் நவவித பக்திபற்றி பாபா அளித்த சூசகமா? அல்லது, நவராத்திரிப் பண்டிகையில் செய்யப்படும் துர்க்கா பூஜையையொட்டி சிலன்கண் (விஜயதசமி) நாளன்று எல்லையைக் கடக்கும் சடங்கில் அளிக்கப்படும் தக்ஷிணையா?

அல்லது, ஸ்ரீமத் பாகவதத்தில் ஸ்ரீகிருஷ்ணர் உத்தவருக்கு அளித்த உபதேசத்தில் விவரித்த, சிஷ்யர்களுக்குண்டான ஒன்பது ஒழுங்கு நெறிமுறைகளை ஞாபகப்படுத்தினாரா?

ஸ்ரீமத் பாகவதத்தில் 11  ஆவது காண்டத்தில் 10 ஆவது அத்தியாயத்தில் 6  ஆவது சுலோகத்தின் அற்புதத்தைப் பாருங்கள். இந்த சுலோகம் குருவிடமிருந்து சிஷ்யன் எவ்வாறு பயனடைய வேண்டும் என்பதையும், எந்தெந்த ஒழுங்கு நெறிமுறைகளைக் கையாளவேண்டும் என்பதையும் விவரிக்கிறது.