valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 26 December 2019

ஷீர்டி சாயி சத்சரிதம்

"இறைவன் சந்தோஷமடைந்து, உம்முடைய துக்கங்கள் அனைத்திற்கும் ஒரு முடிவுகட்டிவிடுவான். மாயையும் மோகமும் விலகும். அத்யந்தமான சுகம் கிடைக்கும்.

"தினமும் காலைக்கடன்களை முடித்துவிட்டு, ஹரிபாதங்களில் மனத்தை ஈடுபடுத்தி இந்த விரதத்தை (மூன்று சப்தாஹம்) முடித்தால் விடுதலை கிடைக்கும்".

பாபாவும் மேற்சொன்ன வழிமுறையையே கடைபிடித்தார் அல்லரோ! தம்முடைய தேகத்திற்கு முடிவு வரப்போகிறதென்று தெரிந்தவுடன் 'ராமவிஜயம்' படிக்கச் சொல்லிக் கேட்டார். 'ராமவிஜயம்' படிப்பதாலும் கேட்பதாலும் மிருத்யுஞயர் (காலனை வென்றவர் - சிவன்) சந்தோஷமடைகிறார்.

அடுத்த நாள் காலை நேரத்தில், சந்நியாசி தம்மை சுத்தம் செய்துகொண்டு பாபாவுக்குப் புஷ்பாஞ்சலி செய்துவிட்டு பாபாவின் பாததூளியை நெற்றியில் இட்டுக்கொண்டார்.

பாகவதத்தை கையில் இடுக்கிக்கொண்டு வாசிப்பதற்குத் தேவையான தனிமையை அளித்த, அமைதியும் சாந்தமும் நிறைந்த லெண்டித் தோட்டத்திற்குச் சென்றார்.

யோகாசனத்தில் அமர்ந்து பாராயணம் செய்ய ஆரம்பித்தார். சந்நியாசி முழுநேரமாகப் படித்து இரண்டு சப்தாஹங்களை வெற்றிகரமாக முடித்தார்.

மூன்றாவது கற்றை ஆரம்பித்த சமயத்தில் திடீரென்று நிலைகுலைந்தார்; ஜீவசக்தி வடிந்துபோவது போல் உணர்ந்தார். பாராயணத்தை அந்தக் கட்டத்திலேயே நிறுத்திவிட்டார்.

வாடாவிற்கு திரும்பிவந்து இரண்டு நாள்கள் சிரமப்பட்டார். மூன்றாவது நாள் பொழுது விடியும் சமயத்தில் சந்நியாசி கண்மூடினார்.

பக்கீர் பாபாவின் மடியில் தலையைச் சாய்த்தவர் சாய்த்தவர்தான். தேகத்திலிருந்து விடுதலை பெற்றுவிட்டார்.

சந்நியாசி மரணமடைந்த செய்தியைக் கேட்ட பாபா, ஒரு நாள் வரை உடலைப் பாதுகாக்கும்படி ஆணையிட்டார்.

பாபா சொன்னார், "உடலை உடனே புதைக்க வேண்டா." பாபா இவ்வாறு சொன்னதால், சந்நியாசி மறுபடியும் உயிர்பெற்றுவிடுவார் என்ற நம்பிக்கையில் மக்கள் உற்சாகத்துடன் உடலைப் பாதுகாத்தனர்.

ஒருமுறை உயிர் பிரிந்துவிட்டால் மறுபடியும் வந்து புகுந்துகொள்ளுமா என்ன? ஆயினும் பாபாவில் சொல் பிரமாணமன்றோ!  ஆகவே மக்கள் பிணத்தைப் பாதுகாத்தனர்.

அந்த ஆணைக்கும் பிறகு பலன் கிடைத்தது!  சொந்தம் கொண்டாட யாருமில்லாத பிணம் பாதுகாக்கப்பட்டது. போலீஸ்காரர்களுக்கு சந்தேகம் எதுவும் ஏற்படக் காரணம் இல்லாமற்போயிற்று. இறந்த பின் உடலில் ஜீவன் எப்படி இருக்கும்?

பாபாவுக்கு இறந்தவர்களை உயிர்ப்பிக்கத் தெரியாதா என்ன?(அவருக்கு  அந்த சக்தி இருந்தது.) ஆயினும், அனாதை பிணம் முறையான விசாரணையின்றி பூமியில் புதைக்கப்படக்கூடாது என்பதுதான் அவருடைய இலக்கு!