valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday, 31 July 2025

 ஷீர்டி சாயி சத்சரிதம் 


48 .  சந்தேகிகளுக்கும் அருள்!


ஓம் ஸ்ரீ விநாயகனே போற்றி! ஸ்ரீ சரஸ்வதியே போற்றி!
ஸ்ரீ குரு மஹாராஜனே போற்றி! குலதேவதைக்கும் ஸ்ரீ சீதாராமச்சந்திரனுக்கும் 
என்னுடைய பணிவான வணக்கங்கள். பூஜ்யகுரு ஸ்ரீசாயிநாதனை 
பக்தியுடன் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன். 

இந்த அத்தியாயத்தைத் தொடங்கும் சமயத்தில், கதையை மிகுந்த பக்தியுடன் கேட்பவர்களில் ஒருவர், "ஸ்ரீ சாயி ஒரு குருவா, சத்குருவா?" என்ற கேள்வியை எழுப்பினார். 

அவருக்கு விளக்கமளிக்கும் வகையில் ஒரு சத்குருவின் லட்சணங்களை (சிறப்பு இயல்புகளை) சுருக்கமாக எடுத்துரைப்போமாக.  பின்னர், சமர்த்த ஸ்ரீசாயியின் பாதங்களில் அந்த லக்ஷணங்களை நம்மால் காணமுடிகிறதா என்றும் பார்ப்போமாக!

வேதங்களை ஓதுவிப்பவர்களையோ, ஆறு சாஸ்திரங்களில் அடங்கிய ஞானத்தைக் கற்பிப்பவர்களையோ, வேதாந்த நிரூபணம் செய்து அறிவைப் பெருக்குவர்களையோ, சத்குரு என அறிஞர்கள் அழைப்பதில்லை. 

சிலர் மூச்சை அடக்குகின்றனர்.  சிலர் மதச்சின்னங்களை உடம்பில் முத்திரையாக சூடுபோட்டுக்கொள்கின்றனர். சிலர் சமயச் சொற்பொழிவு ஆற்றிக் கேட்பவர்களை மகிழ்விக்கின்றனர்.  இவர்களில் யாரையும் சத்குருவென்று  விஷயமறிந்தவர்கள் அழைப்பதில்லை. 

சிலர் சாஸ்திரங்களில் விதிக்கப்பட்டவாறு சிஷ்யர்களுக்கு மந்திர உபதேசம் அளித்து, ஜபம் செய்யும்படியாக ஆணையிடுகின்றனர். ஜபம், எப்பொழுது என்ன பயன் அளிக்கும் என்பது யாருக்குமே உறுதியாகத் தெரியாது!

வார்த்தை ஜாலத்துடன் செய்யப்படும் பிரம்ம தத்துவ நிரூபணம், கேட்பதற்கு மிக இனிமையாக இருக்கலாம். ஆனால், சுயானுபவம் விளைவிக்காத ஞானம் வெறும் ஏட்டுச்சுரைக்காய்!

கவனமாக நிரூபணத்தைக் கேட்பவர்களின் மனத்தில் இவ்வுலக, மேலுலக இன்பங்களின்மேல் விரக்தி ஏற்படலாம்.  ஆயினும், பிரம்ம ஞானத்தைத் தாமே அனுபவித்தவர்தாம், அந்த இனிமையான அனுப்புவதை பிறருக்குப் பிரகடனம் செய்யமுடியம். 

வேதங்களை முழுமையாக அறிந்து, பூரணமான அனுபவத்தைப் பெற்றுக் கண்கூடாக அவ்வனுபவத்தை சிஷ்யனுக்கு அளிக்கும் சக்தி பெற்றவருக்குதாம், சிஷ்யனை எழுப்பிவிடும் அதிகாரம் உண்டு. அவரைத்தாம் சத்குரு என்று அழைக்கலாம்.