valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 25 April 2024

 ஷீர்டி சாயி சத்சரிதம்


ஒவ்வொரு வீட்டிலும் குழப்பம் நிலவியது; மக்கள் கூக்குரலிட்டனர்; இதயம் படபடவென்று துடிக்க இங்குமங்கும் ஓடினர்.

மஹராஜ் தேகத்தை விடுத்துவிட்டார். கிராம மக்கள் அனைவரும் தங்களுடைய உயிருக்கே உலைவந்தது போல் உணர்ந்தனர். "இறைவா! எவ்வளவு கொடுமையான வேளை இது! இதயத்தைப் பிளக்கிறதே !" என்று மக்கள் கூவினர்.

அனைவரும் மசூதியை நோக்கி ஓட ஆரம்பித்தனர். சபாமண்டபம் நிரம்பி வழிந்தது. இதயத்தைப் பிளக்கும் காட்சியைக் கண்டு மக்கள் துக்கத்தால் தொண்டை அடைக்க விம்மி விம்மி அழுதனர்.

'ஷிர்டியின் வைபவம் தொலைந்துபோயிற்று!  சுக சௌபாக்கியங்கள் அனைத்தையும் இழந்துவிட்டோம்' என்று நினைத்து எல்லாருடைய கண்களிலும் கண்ணீர் நிரம்பியது. மக்கள் அனைவரும் தைரியம் இழந்தனர்.

அந்த மசூதியின் மஹத்துவந்தான் என்னே! முக்தி தரும் சப்தபுரிகளில் ஒன்றாகக் கருத்தப்பட்டதன்றோ ! 'துவாரகா மாயி' என்று பாபா சர்வ நிச்சயமாகப் பெயரிட்ட இடமன்றோ?

நிர்யாணமாக (கடைசிப் பயணமாக)  இருப்பினும், துவாரகா மாயியே இறையுடன் ஒன்றாகக் கலக்கக்கூடிய தலம். எவர் இறைவனை இடையறாது சிந்திக்கிறாரோ அவருக்கு அங்கு இடம் உண்டு.

காருண்யம் மிகுந்த தாயுந்தந்தையுமானவரும் , பக்கதர்களுக்கு விச்ராந்தி அளிக்கும் புகலிடமானவருமான குருராஜர், சாயீராயர், இத்தன்மை படைத்தவர்; என்றும் ஞாபகத்தில் இருப்பவர்.

பாபா இல்லாமல் ஷீர்டி பாழடைந்தது. பத்துத் திசைகளும் சூனியமாக தெரிந்தன. பிராணனை இழந்த உடல்போல் ஷீர்டி காட்சியளித்தது.

குளத்தில் நீர் வற்றிப்போகும்போது மீன்கள் துள்ளிப் புரண்டு துடிக்கும். அதுபோலவே ஷீர்டி மக்களும் துக்கத்தால் துடித்தனர்; களை இழந்தனர்.

தாமரை இல்லாத நீர்நிலையைப் போலவும், புத்திரன் இல்லாத இல்லதைப் போலவும், தீபம் இல்லாத கோயிலைப் போலவும், மசூதியும் சுற்றுப்புறமும் களையிழந்து போயின.

தலைவன் இல்லாத குடும்பத்தைப் போலவும், அரசன் இல்லாத நகரத்தைப் போலவும், செல்வம் இல்லாத கஜானா போலவும், பாபா இல்லாத ஷீர்டி வனமாகியது.

சிசுவுக்குத் தாயார் எப்படியோ, சாதகப் பறவைகளுக்கு மேகநீர் எப்படியோ, அப்படியே ஷிர்டியில் வாழ்த்த மக்களுக்கும் சகல பக்தர்களுக்கும் பாபாவின் அன்பு.

ஷீர்டி, ஹீனமும் தீனமும் அடைந்து மரணமுற்றதுபோல் ஒளியிழந்தது. நீரிலிருந்து அகற்றப்பட்ட மீன்களை போல மக்கள் வேதனையால் துடிதுடித்தனர்.

மக்களனைவரும், கணவனால் கைவிடப்பட்ட பெண்மணியைப் போலவும், தாயிடமிருந்து பிரிக்கப்பட்ட குழந்தையைப் போலவும், வழி தவறிய பசுவின் கன்றைப் போலவும் பரிதவித்தனர்.