valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 1 December 2022

 ஷீர்டி சாயி சத்சரிதம்


பக்தர்களின் எண்ணிக்கைப் பெருக பெருக, பாபாவுக்கு ராஜோபசாரங்கள் செய்யப்பட்டன. பல இன்னிசை வாத்தியங்கள் ஒலிக்க, தலைக்குமேல் குடை பிடிக்கப்பட்டது. சாமரம் வீசப்பட்டது.

அவருடைய புகழ் திக்கெட்டும் பரவியது. மக்கள் பாபாவைத் தோத்திரம் செய்யவும் புகழ்பாடவும் ஆரம்பித்தனர். ஷீர்டி, புனிதப் பயணிகளுக்குப் புண்ணிய க்ஷேத்திரம் ஆகியது.

அந்த நிலையில் ஹண்டிக்குத் தேவை இல்லாமல் போய்விட்டது. பக்கீர்களும் ஏழைஎளியவர்களும் வயிறார உண்டு திருப்தியடைந்த பிறகும், உணவு மீந்துபோகும் அளவிற்கு நைவேத்தியம் வந்து குவிந்தது.

இப்பொழுது இன்னுமொரு காதை சொல்கிறேன்; கேட்டால் மனமகிழ்ச்சி அடைவீர்கள். பக்தர்கள் ஆராதனை செய்யவேண்டிய தெய்வங்களை அனாதரவாக விட்டுவிடும்போது பாபா அகம் குவிந்தார்.

ஜாதியே இல்லாதவருடைய ஜாதியைப் பலர் பலவிதமாக அனுமானம் செய்தனர். சிலர் சாயியே பிராமணர் என்று நினைத்தனர்; சிலர் முஸல்மான் என்று நினைத்தனர்.

அவர் எந்த ஊரில் பிறந்தார்? எந்த ஜாதியில் எப்பொழுது பிறந்தார்? அவருடைய பெற்றோர்கள் பிராமணர்களா முஸ்லீம்களா? இவற்றில் எதுவமே தெரியாமல் கற்பனையில் அனுமானம் செய்தனர்.

அவர் முஸ்லீம் என்ற அனுமானத்தை ஏற்றுக்கொண்டால், அவர் எப்படி மசூதியில் அக்கினி வழிபாட்டை அனுமதித்தார்? துளசி பிருந்தாவனம் இருந்திருக்குமா? மணி அடிப்பதை எப்படி சகித்துக்கொண்டார்?

சங்கு ஊதுவதையும் தாளம், மிருதங்கம் போன்ற இன்னிசை வாத்தியங்களுடன் நடந்த கதாகீர்த்தனத்தையும் ஹரிநாம கோஷத்தையும் மசூதியில் அனுமதித்திருப்பாரா?

அவர் முஸ்லீமாக இருந்திருந்தால், மசூதியில் உட்கார்ந்துகொண்டிருக்கையில் நெற்றியில் சந்தனம் இட அனுமதித்திருப்பாரா? சமபந்தி போஜனம் செய்திருப்பாரா?

அவர் முஸ்லீமாக இருந்திருந்தால், தம்முடைய பாக்கெட்டிலிருந்து பணம் கொடுத்து இந்து ஆலயங்களை புனருத்தாரணம் செய்திருப்பாரா? அவருடைய காதுகள் குத்தப்பட்டிருந்தனவே!

ஸ்னானம் செய்தபிறகு பட்டுப் பீதாம்பரங்களை தமக்கு அணிவிக்க அனுமதித்திருப்பாரா? ஆராதனை செய்யவேண்டிய தெய்வங்களை அனாதரவாக விட்டுவிடுவதை அவரால் ஒருகணமும் பொறுத்துக்கொள்ள இயலவில்லை.

நான் இதை எழுதிக்கொண்டிருக்கும்போதே இது சம்பந்தமான ஒரு கதை ஞாபகத்திற்கு வருகிறது. மிக வினயமாக அதை உங்களுக்கு சொல்கிறேன். அமைதியான சித்தத்துடன் கேளுங்கள்.

ஒரு சமயம் இவ்வாறு நிகழ்ந்தது. பாபா அப்பொழுதுதான் லெண்டியிலிருந்து திரும்பிவந்து மசூதியில் அமர்ந்திருந்தார். பக்தர்களும் தரிசனத்திற்காகக் கூடியிருந்தனர்.