valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 24 August 2023

 ஷீர்டி சாயி சத்சரிதம்


41 . கருணையும் அருள்மழையும்


ஓம் ஸ்ரீ விநாயகனே போற்றி  ! ஸ்ரீ சரஸ்வதியே போற்றி!
ஸ்ரீ குருமஹாராஜனே  போற்றி! குலதேவதைக்கும் ஸ்ரீ சீதாராமச்சந்திரனுக்கும்
என்னுடைய பணிவான வணக்கங்கள். பூஜ்யகுரு ஸ்ரீ சாயிநாதனை
பக்தியுடன் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்!


மேலும் மேலும் கேட்பதற்கு தூண்டுகோல் ஏதும் தேவைப்படாத மஹிமை பெற்றது. சாயியின் சரித்திரம். வாஸ்தவமாக, கதைகேட்பவர்களே விட்ட இடத்தை ஞாபகம் வைத்துக்கொண்டு மேற்கொண்டு கேட்பதில் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர்.

கேட்பவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் மனமொன்றியும் கேட்கும்போது அவர்களைக் கவனமாகக் கேட்கும்படி வேண்டுவதில் என்ன அர்த்தம் இருக்கிறது?

குருவின் மஹிமையைப் பாடுவதாலும்  கேட்பதாலும் சித்தம் தூய்மையடைகிறது. நாம ஜபம் செய்துகொண்டே தியானம் செய்தால், ஆனந்தமளிக்கும் அவருடைய உருவம் வெளிப்படும்.

விரதங்களின் உத்தியாபன விழா சிறப்பாக நடந்தேறியதையும் என்னுடைய கனவு பலித்ததுபற்றியும் கடந்த அத்தியாயத்தில்  விரிவுரை கேட்டீர்கள்.

அதுபோலவே, பக்தனின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காகச் சற்றும் எதிர்பாராத விதத்தில், கடைசி நிமிடத்தில், களிமண்ணாலான புடைச்சிற்பம் வந்துசேர்ந்த கதையைக் கேளுங்கள்.

ஒரு ஹோலிப் பண்டிகை தினத்தில் என் கனவில் தோன்றி, "இன்று நான் சாப்பாட்டிற்கு வருவேன்"என்றுசொல்லி, என்னுடைய இதயத்தின் ஆழத்திலிருந்து எழுந்த விருப்பமொன்றை நிறைவேற்றினார்.

இந்தக்காதை முன்பே விஸ்தாரமாகச் சொல்லப்பட்டது.இன்று, அந்தப் பிரதையை சரியான நேரத்தில் எப்படி வந்துசேர்ந்ததென்ற அற்புதத்தை பயபக்தியுடன் கேளுங்கள்.

அல்லீ முஹம்மது அந்தக் காதையை முழுவதும் சொன்னபோது நான் பரம ஆச்சரியம் அடைந்தேன். யோசித்துப்பார்த்தால், அதுவும் பாபாவின் வினோதமான லீலைகளில் ஒன்றன்றோ!

ஹோலிப் பண்டிகை தினத்தன்று மதிய நேரத்தில் நாங்கள் சாப்பிடபோனபோது கடைசி நிமிடத்தில் வந்து, எங்களை மகிழ்வித்தவர்தான் அல்லீ முஹம்மது .

இது முன்னமேயே சொல்லப்பட்ட காதை. கதைகேட்பவர்களே! இப்பொழுது மேற்கொண்டு விவரங்களை சொல்கிறேன்; கவனமாகக் கேளுங்கள். சாயியின் சரித்திரம் புனிதமானது!