valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 10 February 2022

 ஷீர்டி சாயி சத்சரிதம் 


ஆயினும், நீண்ட வர்ணனை என்று சொல்வதும் பொருத்தமாகாது. எனக்கே, அது முழுமையாகத் தெரியாத நிலையிலும், நான் கதை கேட்பவர்களுடைய நன்மை கருதி சுருக்கமாகச் சொல்லியிருக்கிறேன்.

கதை கேட்பவர்களுக்கு இதுவே என் பிரார்த்தனை. சாயியை வழிபடுங்கள். உங்களுடைய அனுபவத்தை நீங்களே காணலாம். என்னுடைய பேச்சை ஒருமுறையாவது கேளுங்கள்!

இங்கு காரணவாதமும் தர்க்கமும் செல்லாது; பூஜிக்க வேண்டுமென்ற பாவமே தேவை. புத்தியின் சாதுர்யமும் இங்கு எடுபடாது; உன்னதமான சிரத்தையே தேவைப்படுகிறது.

சிரத்தையில்லாத தர்க்கவாதிகளும் அறிவுஜீவிகளும் வாதப்பிரதிவாதங்களில் நாட்டமுள்ளவர்களும் எதையும் உரித்துப் பார்க்கும் சுபாவம் உள்ளவர்களும் ஞானிகளிடமிருந்து எந்தப் பலனும் பெறமாட்டார்கள். சுத்தமான பாவம் உடையவரே ஞானம் பெறுவார்.

கதையில் ஏதாவது குறைபாடுகள் நுழைந்திருந்தால், அவற்றையும் சாயி எனக்களித்த அருள் வெளிப்பாட்டின் ஒரு பகுதியாகவே கருதி, இந்த சத் சரித்திரத்தைப் படிக்கும்போது தெரியும் தோஷங்களை ஒருபொருட்டாகக் கருதாது விட்டுவிடுங்கள்.

இந்த சத் சரித்திரத்தை ரசித்து வாசிப்பவர்களின் இதயத்தில், எப்பொழுதும் கருணை ததும்பி வழியும் சாயியின் நிஜமான சொரூபம், அவர்கள் என்றென்றும் நினைவில் வைத்திருக்கும் வகையில் ஸ்தாபிதம் ஆகட்டும். (நிலைபெறட்டும்)

கோவா எங்கே இருக்கிறது? ஷீர்டி எங்கே இருக்கிறது? அங்கு நடந்த திருட்டைப் பற்றிய சுவாரசியமான கதையை ஆதியிலிருந்து அந்தம் வரை விவரமாக சாயி எடுத்துரைத்தார். அடுத்ததாக அதைச் சொல்கிறேன்.

ஆகவே, ஹேமாட் மனப்பூர்வமாக சாயி பாதங்களில் பணிகிறேன். கதை கேட்பவர்களை பயபக்தியுடன் கேட்கும்படி பணிவாகக் கேட்டுக்கொள்கிறேன்.

எல்லாருக்கும் க்ஷேமம் உண்டாகட்டும்! ஞானிகளாலும் சான்றோர்களால் உணர்வூட்டப்பட்டு, சாயி பக்தன் ஹேமாட் பந்தால் இயற்றப்பட்ட, 'ஸ்ரீ சமர்த்த சாயி சத் சரித்திரம்' என்னும் காவியத்தில், 'சோதிக்க வந்தவர்களைக் கையாண்ட விநோதமும் உதீயின் அற்புத சக்தியும்' என்னும் முப்பந்தைந்தாவது அத்தியாயம் முற்றும்.

 

 ஸ்ரீ சத்குரு சாயிநாதர்க்கு அர்ப்பணம் ஆகட்டும்.


சுபம் உண்டாகட்டும்.