valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Saturday 9 February 2019

ஷீர்டி சாயி சத்சரிதம்

பாபாவை நேருக்குநேர் தரிசனம் செய்ததும் அவருக்கு அதுதான் முதல் தடவை. ஆனால், அந்த விஜயத்தைப் பற்றி ஓரிரண்டு மாதங்களுக்கு முன்பாகவே அவருக்கு ஒரு சூசகம் கிடைத்தது. அது எப்படி நடந்ததென்று கேளுங்கள்.

அவர்  அப்பொழுது சாந்தாகுரூஸ்சில் (பம்பாயின் புறநகர்ப் பகுதி) வசித்து வந்தார். ஷிர்டியைப் பற்றிய சிந்தனையே ஏதும் இல்லாத காலம் அது. திடீரென்று ஒருநாள் கனவில் அற்புதக் காட்சியொன்று தோன்றியது.

தாடியுடன் கூடிய சாது ஒருவர் கனவில் தோன்றினார். அந்த மஹாத்மாவைச் சுற்றி அநேக பக்தர்கள் நின்றுகொண்டிருந்தனர். லாலாஜி பிரேமையுடன் அவருக்கு நமஸ்காரம் செய்தார்.

பின்னர் ஒரு சமயம் அவர் தத்தாத்திரேய மஞ்சுநாத் பீஜோர் என்பவரின் இல்லத்திற்கு தாசகணுவின் உபந்நியாசம் (சமய சொற்பொழிவு) கேட்கச் சென்றார்.

உபந்நியாசம் செய்யும்போதெல்லாம் பாபாவின் படத்தை தம் அருகே வைத்துக்கொள்வது தாசகணுவின் தவறாத பழக்கம். படத்தைப் பார்த்தவுடனே லக்மீசந்துக்கு கனவில் கண்ட உருவம் ஞாபகத்திற்கு வந்தது.

அதே பிராயம், அதே தாடி, அதே அவயங்கள், அதே பாதங்கள் - அந்த மஹாத்மா பாபாதான்என்று தெரிந்தவுடன் அவர் மனம் லயத்தில் மூழ்கியது.

கீர்த்தனம் செய்பவரோ தாசகனு; சர்க்கரை பந்தலில் தேன்மழை பொழிந்தாற்போல், கதையோ துக்காராமினுடையது! கனவில் ஏற்கெனவே சாதுவின் தரிசனம் வேறு ஆகியிருந்தது! லாலாஜியின் மனம் வானத்தில் சிறகடித்துப் பறந்தது!

மென்மையான மனம் படைத்த லக்மீச்சந்தின் கண்களில் அன்புக் கண்ணீர் பெருகியது. 'இவ் உருவத்தின் மீது எப்பொழுது என் பார்வையைப் பதிப்பேன்' என்று அவருடைய இதயம் துடித்தது.

கனவுக்கு காட்சியில் எந்த உருவதைக் கண்டாரோ, எந்த உருவத்தின் நகல் உபந்நியாசத்தில் இருந்த படத்தில் காணப்பட்டதோ, அந்த உருவம் அவருக்குள்ளே புகுந்துவிட்டது. அவருடைய சிந்தனையில் வேறெதுவும் நுழைய முடியவில்லை.

'என்னுடன் ஷிர்டிக்கு வரக்கூடிய நண்பரை எப்பொழுது சந்திப்பேன்? எப்பொழுது இந்த ஞானியைப் ப்ரத்யக்ஷ்மாக தரிசனம் செய்து அவர் பாதங்களில் தலைசாய்ப்பேன்?-

'இந்த சாதுவின் தரிசனம் எப்பொழுது கிடைக்கும்? அவருடைய பிரேமானந்தம் எனக்கு எப்பொழுதாவது கிடைக்குமா? லக்மீச்சந்தின் மனத்தில் இடைவிடாத சஞ்சலமாக இருந்தது.

'மேலும், பயனச் செலவுக்குப் பணம் வேண்டும். நான் இப்பொழுது என்ன செய்ய வேண்டும்? தாமதம் செய்யாமல் தரிசனம் பெறுவது எப்படி? அதற்கான உபாயங்களை பற்றிச் சிந்தித்தார்.

இறைவன் பக்தர்களின் அன்புக்கும் விசுவாசத்திற்கும் ஏங்குபவன் அல்லனோ! என்ன அற்புதம் நிகழ்ந்ததென்று பாருங்கள்! அன்றிரவே 8 மணியளவில் நண்பரொருவர், வீட்டின் வாசற்கதவை தட்டினார்.