valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Friday 14 February 2020

ஷீர்டி சாயி சத்சரிதம்

ஒரு ஞானியின் பாதங்களில் மரணமடையும் பிராணி உடனே உத்தாரணம் செய்யப்படுகிறது. புலிக்கு இந்த ஜென்மத்தில் விளைந்த மிகப் பெரிய லாபம் அதுவே.

பாக்யசாலியாக இல்லாவிட்டால், ஒரு பிராணி ஞானியின் கண்முன்னாக உயிர்நீத்து முக்தியடைய முடியுமா?

ஒரு சாதுவின் கண்முன்னாக மரணமடைவதென்பது, குடித்த விஷம் அமிருதமாக மாறியது போன்ற அதிருஷ்டமன்றோ! அவ்விதமான மரணத்தில் மகிழ்ச்சியும் இல்லை; துக்கமும் இல்லை.

இந்தப் பிராணியின் மரணம் ஒரு ஞானியின் கண்ணெதிரிலும் அவருடைய பாதங்களிலும் ஏற்படுகிறதோ, அந்தப் பிராணி பெரும்பேறு பெற்றது. ஏனெனில் அதனுடைய உடல் ஸ்ரீகிருஷ்ணனுக்கு அர்ப்பணமாகி மறுபிறவியே இல்லாமற் போகிறது.

ஞானிகளின் சந்நிதியில் ஏற்படும் மரணம் மரணமேயன்று; அது வைகுண்ட சுகம். அவ்வாறு மரணமடைபவர் யமலோகத்தை ஜெயித்துவிடுகிறார்; மறுபிறவி என்னும் சோகம் அவருக்கில்லை.

ஞானியரின் கண்களுக்கெதிராக உடலை உகுத்தவர்கள் மறுபடியும் பிறப்பதில்லை. அச் செய்கையே பாவங்களை நிவிர்த்திசெய்து மோட்சகதியை அளித்துவிடுகிறது.

ஞானியரைத் தலையிலிருந்து கால்நகம் வரை பார்த்துக்கொண்டே தேகத்தை வீழ்த்துவதை மரணமென்று எப்படிச் சொல்லமுடியும்? இல்லவேயில்லை; அது மரணமிலாப் பெருவாழ்வே!

இந்நிகழ்ச்சியை ஏற்கனவே விதிக்கப்பட்டதாக கருதினால், இப் புலி முன்ஜன்மத்தில் ஒரு புண்ணியவானாக இருந்திருக்கவேண்டும். கல்விச் செருக்கினால் ஒரு ஹரிபக்தரை அவமானம் செய்திருக்கலாம்.

அவருடைய சாபத்தால் கொடிய மிருகமாகப் பிறந்திருக்கலாம். அதே ஹரிபக்தர் சாபவிமோசனம் அளித்ததால் பாபாவின் சரணங்களை அடைந்திருக்கலாம். ஹரிபக்தர்களின் செயல்கள் அபிநவம் (என்றும் புதியவை) அல்லவோ!

சாபவிமோசனம் பெற்றதால்தான், புலிக்கு சாயிதரிசனம் கிடைத்ததென்று எனக்குத் தோன்றுகிறது. தரிசனம் பாவங்களை எரித்து பந்தங்களை அறுத்துத் துன்பங்களுக்கும் ஒரு முற்றுப்புள்ளி வைத்தது. அதன் பயனாக, புலி வெளித்தூண்டுதலின்றி தானாகவே உத்தாரனம் பெற்றது.

பூரணமான சௌபாக்கியம் இன்றி, ஞானியின் கண்ணுக்கெதிராக மரணம் எப்படி ஏற்படும்? புலியைப் பொறுத்தவரை, முக்குணங்களும் முத்தாபங்களும் நாசமாகி, இறைவனுடன் ஒன்றிவிட்டது.

இவ்விதமாக, பூர்வ கர்மானுபந்தத்தினால் விளைந்த கொடிய தேகத்தின் சம்பந்தம் அறுந்தது; பிணைத்துவைத்த இரும்புச் சங்கலிகளும் அறுந்தன! இறைவன் செயல்படும் வழிவகை இவ்வாறே.

சாதுக்களின் மற்றும் ஞானியரின் பாதங்களில் அன்றி, மோட்சப் பாதையை வேறெங்கே காணமுடியும்? புலிக்கு அது கிடைத்தபோது தர்வேசிகள் திருப்தியடைந்தனர்.