valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 1 September 2016

ஷீர்டி சாயி சத்சரிதம்

"பிறகு அஞ்ஞானத்தால் விளைந்த கர்மபந்தங்கள் ஒவ்வொன்றாக அறுந்து விழும். இக் காரியத்தை செய்யலாம். இக் காரியத்தை செய்யக் கூடாது, என்பது போன்ற நிர்பந்தங்களும் விலகிவிடும். முக்தியின் ஆனந்தம் அனுபவிக்கப்படும். -

"முதலில், 1. ஆத்மா என்று ஒன்று இருக்கிறதா, இல்லையா? 2. ஓர் உயிரினுள் உறையும் ஆத்மாவும் மற்றொரு உயிரினுள் உறையும் ஆத்மாவும் ஒன்றேயா, வெவ்வேறா? 3. ஆத்மா 'செயல்புரிபவனா', 'செயல்புரியாதவனா'? என்ற கேள்விகளுக்குப் பதிலை ஆறு சாஸ்திரங்களையும் அலசித் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும்.-

"எல்லா உயிர்களிலும் உறையும் ஆத்மாவும் ஒன்றே என்று உணர்வதே ஆத்ம விஞ்ஞானத்தின் எல்லை. மோக்ஷமும் பரமானந்தமும் இந்த உணர்விலிருந்துதான் பிறக்கின்றன. -

"பிருஹஸ்பதியை (தேவகுரு) போன்று சொல்வன்மை படைத்த அறிஞரை நீர் கொண்டு வந்தாலும், அவருடைய நாவன்மை குருடனுக்கு யானை எப்படி இருக்கும் என்பதை விளக்கி அவன் மனதில் ஏற்ற முடியாது. சொல்லுக்கு அப்பாற்பட்டதைச் சொல்லால் விளக்க முடியாது! -

"பேசுபவர்களின் நாக்கும் கேட்பவர்களின் செவியும், இல்லாத பார்வையைக் கொண்டுவர முடியுமா என்ன? யானையின் உருவத்தை பார்ப்பதற்கு கண்களே தேவை.-

"கண்பார்வையின்றி, யானையைக் கண்ட அனுபவத்தை ஒரு குருடன் எவ்வாறு பெறமுடியும்? அது போலவே, திவ்வியமான பார்வையை குரு அளித்த பிறகுதான், ஞானப் பொக்கிஷம் கைக்கு எட்டும்." (பாபாவின் திருவாய் மொழி இங்கு முடிவதாக எடுத்துக் கொள்ளலாம்).

"சாயியின் சொரூபமே உண்மையான, பரிபூரணமான ஞானமும் விஞ்ஞானமும் ஆகும். அவருடைய நிஜமான சொரூபத்தை உண்மையாகவும் முழுமையாகவும் அறிந்துகொள்வதே தியானமாகும். அதுவே அவருடைய தரிசனம். -

"அஞ்ஞானத்தில் இருந்தும் காமத்தில் இருந்தும் கர்மவினைகளில் இருந்தும் முற்றும் விடுபட, வேறு சாதனை எதுவுமே இல்லை. இதை உங்களுடைய மனதில் உறுதியாக நிலைப்படுத்துங்கள். -

"சாயி கேவலம் உம்முடையவரோ அல்லது நம்முடையவரோ அல்லர். எல்லா உயிர்களிலும் உறைகின்றார். சூரியன் எவ்வாறு இவ்வுலகம் முழுமைக்கும் சொந்தமோ, அவ்வாறே அவரும்"  - தபோல்கருடைய கூற்றாகக் கருதலாம்.