valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday, 22 December 2016

ஷீர்டி சாயி சத்சரிதம்

"என்னய்யா! இதில் என்ன பெரிய கடினம் இருக்கிறது? நீர் எங்கிருந்து வந்தீரோ அங்கே திரும்பிப் போகும்போது , காகாவின் வீட்டு வேலைக்காரி உம்முடைய சந்தேகத்தை நிவாரணமும் செய்துவிடுவாள்!"

காகாவென்று இங்கே குறிப்பிடப்பட்டவர் பாவூசாஹெப் தீக்ஷிதர், பாபாவினுடைய அத்யந்தமான(மிக நெருக்கமான) பக்தர்; மனதாலும் வாக்காலும் உடலாலும் பாபாவுக்கு சேவை செய்துவந்தவர்.

இந்த ஹரிபாவூ பம்பாய் நகரத்தின் புறநகர்ப்பகுதியான விலேபார்லேவில் வசித்து வந்தார்.

அவருக்குப் பெற்றோர்கள் இட்ட பெயர் ஹரி; மக்கள் அவரைப் பாவூசாஹெப் என்றழைத்தாலும், பாபா அவருக்கு முற்றிலும் வித்தியாசமான வேறொரு பெயரையே அளித்தார்.

காகா மஹாஜனியை 'பெரிய காகா' என்றும் நானா சாஹேப் நிமோன்கரை 'கிழவர் காகா' என்றும், பாவூசாஹெப்பை  சில சமயங்களில் 'நொண்டிக் காகா' என்றும் சில சமயங்களில் 'பம்பாய் காகா' என்றும் அழைத்தார்.

பெற்றோர் குழந்தைகளுக்கு ஒரு பெயரிடுகின்றனர்; ஜாதகத்தில் வேறொரு பெயர் காணப்படுகிறது. சில மனிதர்கள் பரிஹாஸப் பெயரால் அழைக்கப்படுகின்றனர். பெயரிடுவதில் விதவிதமான முறைகள் வழங்குகின்றன.

எப்பொழுது சாயி மஹராஜ் ஒரு பக்தருக்குப் பெயரிட்டாலும், அந்தப் பெயரே நிலைத்து விட்டது. பக்தர்களும் அதை அன்புடன் ஏற்றுக் கொண்டனர். பாபா அளித்த பெயரை ஒரு விருதாகவும் பட்டமாகவும் கருதினர்.

சில சமயங்களில் பிட்சு என்றும் சில சமயங்களில் காகா என்றும் தீக்ஷிதருக்கு பாபா முத்திரை அளித்தார். ஷிர்டியில் வாழ்ந்த மக்களிடையே காகா என்ற பெயரே பிரசித்தியாகிவிட்டது.

தாசகணு ஆச்சரியம் அடைந்தார். எல்லாருமே ஆச்சரியமடைந்தனர். என்ன! இதனை நபர்கள் இருக்க, காகாவின் வேலைக்காரியா! அவள் எப்படி புதிருக்கு விடையளிக்கப் போகிறாள்?

வேலைக்காரி, வேலைக்காரிதானே! அவளுக்கென்ன படிப்பிருக்கும்? அவளுக்கென்ன பொது அறிவும் ஞானமும் இருக்கும்? இதொன்றும் சரியாகத் தோன்றவில்லையே!

வேதங்களின் சூக்குமமான தாத்பரியங்களை விளக்குவதற்கு தேவையான பாண்டித்தியம் எங்கே? ஒரு வீட்டு வேலைக்காரியின் அறிவுறுத்திறம் எங்கே? சாயி மஹராஜ் ஏதோ பரிகாசம் செய்கிறார் என்று மக்கள் பேசிக்கொண்டார்கள்.

பாபா ஏதோ பரிகாசம் செய்கிறார் என்றுதான் எல்லாருமே நினைத்தனர். ஆனால், தாசகணுவோ தமாஷாக சொன்னதையும் சத்தியமாகவே எடுத்துக் கொண்டார்.

மேலெழுந்த வாரியாக பார்த்த மக்களுக்கு பாபாவின் திருவாய் மொழி நையாண்டி வார்த்தைகளாகவே தோன்றியது. தாசகணு அவ்வாறு கருதவில்லை; அதை சத்திய வாக்காகவே எடுத்துக் கொண்டார்.