ஷீர்டி சாயி சத்சரிதம்
அவருடைய அளவிலா மஹிமையைப் பாடுவதற்கு நுழைபவர்களில் யாருக்குக் கதை சொல்லும் சாமர்த்தியம் இருக்கிறது? பராவே (பேச்சின் முதல் நிலையே) திறமையின்றிப் பின்வாங்கும்போது, பச்யந்தி, மத்யமா (இடை நிலைகள்) இவற்றின் கதி என்னவோ!
இம் மூன்றும் வாயை மூடிக்கொண்டு இருக்கும்போது நான்காவதாகிய வைகரீ (கடைநிலை) என்ன செய்ய முடியும்? ஈதனைத்தையும் நான் சம்பூர்ணமாக அறிவேன்; ஆயினும், என் மனம் சும்மா இருக்க மறுக்கிறது!
சத்குருவின் பாதங்களில் மூழ்காமல், அவருடைய யதார்த்தமான சொரூபம் கைக்கு எட்டாது. ஆகவே, ஸ்ரீ ஹரியின் சொரூபமான ஞானிகளைக் கைகூப்பி, கிருபை செய்யும்படி பிரார்த்தனை செய்தல் வேண்டும்.
குருவின் பாதங்களில் ஒட்டிக்கொள்வதே நமக்கு எல்லாவற்றுக்கும் மேன்மையான லாபம். ஆகவே, நாம் ஞானிகளின் சகவாசத்திற்கும், பல கோணங்களில் உருவெடுக்கும் அவர்களுடைய அன்புக்கும் எங்கும் பண்பை அபிவிருத்தி செய்துகொள்வோமாக.
முழுக்க முழுக்கத் தேகாபிமானம் உள்ளவனுக்கு பக்தன் என்று சொல்லிகொள்ளத் தகுதியில்லை. தேகாபிமானத்தைப் பூரணமாகத் துறந்தவன்தான் உண்மையான பக்தன்.
எவனிடம் ஞானகர்வம் உள்ளதோ, எவனிடம், தான் சிறந்தவன் என்னும் தற்பெருமை உண்டோ, எவர் டம்பத்தின் வசிப்பிடமோ, அவனிடம் என்ன புகழ் சேரும்?
தம் குருவின் கீர்த்தியைப் பாடாத அபாக்கியவான்களும், செவிப்புலனைப் பெற்றிருந்தபோதிலும் குருவின் பெருமையைக் கவனமாக கேட்காதவர்களும், மந்தமதியே உருவெடுத்து வந்தவர்கள் அல்லரோ!
தீர்த்த யாத்திரை, விரதம் , யாகம், தானம் இவற்றைவிட மேன்மையானது தவம். அதனினும் மேன்மையானது ஹரிபஜனை. எல்லாவற்றையும் விட மேன்மையானது குருபாதங்களின்மீது தியானம்.
சாயியே சாயிபக்தர்களின் தியானம். சாயியே தேவர்களுக்கும் தேவிகளுக்கும் அவர்கள் செய்யும் அர்ச்சனை. சாயியே அவர்களுடைய ரகசியப் பொக்கிஷமும்கூட! இப் பொக்கிஷத்தை அவர்கள் ரட்சிக்க வேண்டும்; ஆனால், கஞ்சத்தனம் கூடாது!
எப்பொழுதாவது ஒருசமயம் என்னைச் சோம்பல் அண்டும். ஆனால், அந்தர்மியமான (என்னுள் உறையும்) சாயிக்கு அது என்னவென்றே தெரியாது. கதை சொல்ல நான் மறந்தால், சரியான நேரத்தில் அவர் ஞாபகமூட்டுகிறார்.
சிறிது நேரம் ஓய்வெடுக்கலாம் என்று நான் நினைக்கலாம். ஆயினும், என்னுடைய சட்டம் இங்கே செல்லுபடியாவதில்லை. ஏனெனில், திடீரென்று என் மனத்தில் உதிக்கும் கதை என்னைப் பேனாவைக் கையிலெடுக்கச் செய்கிறது.
அவருடைய அற்புதங்கள் நிறைந்த, கணக்கற்ற கதைகளை பக்தர்களுக்கு அளிப்பதற்காகவும் மற்றும் என்னுடைய நன்மைக்காகவும் இந்த சத் சரித்திரத்தை எழுத என்னை ஊக்குவிக்கிறார்.
