valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Friday 30 August 2019

ஷீர்டி சாயி சத்சரிதம்

சாயியின் கைகளால் தொடப்பட்டு புனிதமாக்கப்பட்ட ஒரு ரூபாய் நாணயமொன்றைத் தம்முடைய இல்லத்தில் வைத்திருக்கவேண்டும் என்ற ஆசை காப்டன் ஹாடேவின் மனத்தில் எழுந்தது. சாயி இந்த ஆசையை நிறைவேற்றிவைத்தார்.

மனத்தில் கோடானுகோடி ஆசைகள் எழுகின்றன. கெட்ட எண்ணங்களை விலக்கிவிட்டு, நல்லெண்ணங்களை பின் தொடருங்கள். பக்தரின் கையைப் பிடித்துக்கொண்டு சாயி வழிநடத்தும் திறமையை அப்பொழுது பாருங்கள்.

ஒரு நல்ல விருப்பம் மனத்தில் தோன்றினால் அது உடனே பலன் அளித்துவிடுகிறது. சாயி தரிசனத்தை விரும்பிய நண்பரொருவர் ஷிர்டிக்கு உடனே புறப்பட்டுக் கொண்டிருந்தார்.

சாயி நிறைவேற்ற வேண்டுமென்றால், விருப்பம் நியாயமானதாக இருக்க வேண்டும். நல்லெண்ணங்களை விரும்பி தருமவழி நடக்கும் பக்தருக்காக எவ்வளவு வளைந்து கொடுத்துச் செல்லங்கொடுக்க வேண்டும் அவருடைய ஆளுமையில்தான் இருக்கிறது.

ஹாடே மிகப் பிரீதியுடன், "மறக்காமல் இதை பாபாவின் கையில் கொடுங்கள்" என்று சொல்லி ஒரு ரூபாயை நண்பருடைய கையில் கொடுத்தார்.

நண்பர் ஷிர்டிக்குச் சென்றவுடனே சாயி தரிசனம் செய்தார். பாபாவின் பாதங்களுக்கு வந்தனம் செய்துவிட்டு பாபாவின் சந்நிதியில் உட்கார்ந்தார்.

பாபா தக்ஷிணைக்காக கைநீட்டியபோது, முதலில் தம்முடைய தக்ஷிணையைக் கொடுத்தார். பாபா அதை வாங்கி உடனே பாக்கெட்டில் போட்டுக்கொண்டார். நண்பர், காப்டன் ஹாடேவின் தக்ஷிணையை எடுத்தார்.

இரு கைகளையும் கூப்பிக்கொண்டு, "டாக்டர் ஹாடே என் மூலமாக இந்த தக்ஷிணையைக் கொடுத்தனுப்பினார்" என்று சொல்லிக்கொண்டே அந்த ரூபாயையும் பாபாவின் கையில் வைத்தார்.

எல்லாருடைய இதயத்திலும் வசிக்கும் இந்த சாயி, ஹாடே குவாலியரில் இருந்ததாலும் அவருடைய விருப்பம் என்னவென்று அறிந்திருந்தார். அந்த ரூபாயையே பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார்.

முகத்தில் பிரேமை பொங்க, அந்த ரூபாயைத் தமக்கெதிராக பிடித்துக்கொண்டு உற்றுப் பார்த்துகொண்டேயிருந்தார். சுற்றி இருந்தவர்கள் பாபாவை வியப்புடன் பார்த்தனர்.

வலக்கைக் கட்டைவிரலால் அந்த நாணயத்தைக் காற்றில் சுண்டிவிட்டுவிட்டுப் பிறகு பிடித்தார். இதுபோல் பல தடவைகள் செய்தார். இவ்விதமாக அந்த நாணயத்துடன் சிறிது நேரம் விளையாடிவிட்டு அதைத் திருப்பிக்கொடுத்தார்.

பாபா சொன்னார், "இது யாருக்குச் சொந்தமோ அவரிடம் கொடுத்துவிடுங்கள். இத்துடன் உதீ பிரசாதத்தையும் எடுத்துச் செல்லுங்கள். அவருடையது எதுவும் நமக்கு வேண்டா என்று அவரிடம் சொல்லுங்கள். அவரை நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் வாழும்படி சொன்னேன் என்று சொல்லுங்கள்".

பாபாவின் பாதங்களுக்கு நமஸ்காரம் செய்துவிட்டு உதீ பிரசாதத்தைப் பத்திரப்படுத்திக்கொண்டு பாபாவிடம் அனுமதி பெற்றபின் நண்பர் வீடு திரும்பினார்.