ஷீர்டி சாயி சத்சரிதம்
ஒரு சமயம் மகால்சாபதியுடன் பாபா மசூதியில் இருந்தபோது அவருக்கு திடீரென்று தாம் ஒருகாலத்தில் பலகையின்மேல் படுத்துறங்கிய ஞாபகம் வந்தது.
ஒன்றேகால்சாண் (சுமார் பதினொன்று அங்குலம்) அகலமிருந்த மரப்பலகை, இரு பக்கங்களிலும் கிழிந்த ஆடைகளால் பிணைக்கப்பட்டு மசூதியின் கூரையிலிருந்து ஓர் ஊஞ்சலைப் போலத் தொங்கவிடப்பட்டது.
யாரும் இருட்டில் படுத்து உறங்கக்கூடாது. ஆகவே, தலைமாட்டிலும் கால்மாட்டிலும் விளக்குகளை எரியவிட்டுக்கொண்டு பாபா இரவில் மரப்பலகையின்மேல் படுத்து உறங்குவார்.
இந்தப் பலகையின் விருத்தாந்தம் முந்தைய அத்தியாயம் ஒன்றில் (அத். 10 ) விவரிக்கப்பட்டுவிட்டது. ஆகவே, இப்போது அப் பலகையின் மகத்துவத்தை மட்டும் கேளுங்கள்.
ஒருசமயம், அந்தப் பலகையின் மஹிமையை பாபா உணர்ச்சிப் பெருக்குடன் வர்ணித்தார். அதைக் கேட்ட காகா சாஹிபின் மனத்தில் எழுந்த எண்ணம் என்னவென்று விவரம் கேளுங்கள்.
அவர் பாபாவிடம் கூறினார், "நீங்கள் மரப்பலகையில் தூங்க விரும்பினால் நான் பிரீதியுடன் மறுபடியும் ஒரு பலகையைத் தொங்கவிடுகிறேன். அதன் பின்னர், நீங்கள் பலகையின்மேல் நிம்மதியாகப் படுக்கலாம். "
பாபா அவருக்குப் பதிலுரைத்தார். "மகால்சாபதியைக் கீழே விட்டுவிட்டு நான் எப்படித் தனியாகத் தூங்க முடியும்? தற்பொழுது இருப்பது போலக் கீழே இருப்பதே எனக்குத் திருப்தி. "
இதைக் கேட்ட காகா மிகுந்த அன்புடன் மீண்டும் சொன்னார், "அப்படியானால், நான் இன்னுமொரு பலகையையும் தொங்கவிடுகிறேன். நீங்கள் ஒரு பலகையிலும் மகல்சாபதி இரண்டாவது பலகையிலும் படுத்துறங்கலாம்."
பாபா இதற்கு என்ன பதில் சொன்னார் என்பதைக் கேளுங்கள், "மகால்சாபதியால் பலகையில் தூங்க முடியுமா என்ன? எவர் அங்கமெல்லாம் நற்குணங்கள் நிரம்பியவரோ, அவரே மரப்பலகையில் படுத்து உறங்க முடியும்.-
"பலகையில் படுப்பது சுலபமா என்ன? என்னைத் தவிர வேறு யாரால் பலகையில் படுக்கமுடியும்? தூக்கத்தை விரட்டிவிட்டுக் கண்களைத் திறந்துகொண்டு இருக்க முடிந்தவர்தாம் பலகையில் படுக்கலாம். -
"நான் படுக்கப் போகும்போது மகால்சாபதிக்கு ஆணையிடுகிறேன், 'கையை என்னுடைய இதயத்தின்மேல் வைத்துக்கொண்டு எதிரில் உட்கார்ந்திரும்' என்று, -
"அந்த வேலையைக் கூட அவரால் செய்யமுடியவதில்லை. உட்கார்ந்தவாறே தூங்கிவிடுகிறார். அவருக்குப் பலகையால் பயன் ஏதும் இல்லை. மரப்பலகை எனக்குதான் படுக்கையாகும்.-
"'என்னுடைய இதயத்தில் நாமஸ்மரணம் இடைவிடாது ஓடிக்கொண்டிருக்கிறது. நீர் உம்முடைய கையை வைத்து என்னைக் கண்காணியும். நான் தூங்குவதாகத் தெரிந்தால் என்னை எழுப்பிவிடும். ' இவ்வாறு நான் ஆணையிட்டிருக்கும்போது ,-