valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 16 February 2023

 ஷீர்டி சாயி சத்சரிதம் 

 

நானா சொன்னார், "குருவின் பாதங்களில் பணிவுடன் நமஸ்காரம் செய்து அவருடைய சேவையில் வாழ்நாள் முழுவதையும் கழிக்கத் தயாராகி, மரியாதையுடன் அவரைக் கேள்வி கேட்பவனுக்கு ஞானிகள் தத்துவ விளக்கத்தை அளிக்கின்றனர்.-

"கிருபாமூர்த்தியான ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு அன்புடன் கூறியதன் சாராம்சம் என்னவென்றால், 'குருவைத் தொழுவதும் குருசேவையுமே ஞானத்தை பெறும் மார்க்கங்களாகும். -

"ஓ, அர்ஜுனா! இந்த மார்க்கத்தில் நீ நடந்தால் தத்துவ தரிசனம் பெற்ற ஞானிகள் உனக்கு ஞானம் பெறும் வழியைக் காட்டுவர்'. பாபா, நான் புரிந்துகொண்ட அர்த்தம் இதுவே".

ஆதிசங்கரர், ஆனந்தகிரி, சங்கரானந்தர், ஸ்ரீதரர், மதுசூதனர், நீலகண்டர் -இவர்கள் அனைவரும் தேவனின் உபதேசத்திற்கு இவ்வ்வறே வியாக்கியானம் செய்திருக்கின்றனர்.

சமர்த்த சாயி சுலோகத்தின் முதல் அடியின் அர்த்தத்தை சரியென்று ஒப்புக்கொண்டார். இரண்டாவது அடியைப்பற்றி சாயி என்ன சொன்னார் என்பதை கேளுங்கள்.

அங்கிருந்த சகோரப் பக்ஷிகளான பக்தர்களும் சாயியின் சந்திரவதனத்திலிருந்து பொழியவிருந்த அமிருதத்தை பருக 'ஆ' வென்று வாயைத் திறந்துகொண்டிருந்தனர்.

 (பாபா அருளிய விஷேஷ விளக்கம் இங்கு ஆரம்பமாகிறது)

பாபா சொன்னார், "நானா, சுலோகத்தின் இரண்டாவது அடியைப் பூரணமாகப் புரிந்துகொள்ள மறுபடியும் முயற்சி செய்யும். 'ஞானம்' என்னும் பதத்தின் முன்னால் , தொக்கிநிற்கும் உயிரெழுத்தாகிய 'அ' வைச் சேர்த்து அர்த்தத்தின் சூக்குமத்தைப் பாரும். -

"நான் விபரீதமாகப் பேசுகிறேனென்றோ அர்த்தத்தை அநர்த்தமாக்குகிறேன் என்றோ நீர் நினைக்கவேண்டிய அவசியம் இல்லை. பழைய வியாக்கியானங்கள் எல்லாம் எப்படி அசத்தியமாகும்?-

"தத்துவ தரிசனம் பெற்ற ஞானிகள் உனக்கு ஞானத்தை உபதேசம் செய்வர்' என்று நீர் அர்த்தம் சொல்கிறீர். ஆனால், 'ஞானம்' என்ற பதத்திற்குப் பதிலாக 'அஞ்ஞானம்' என்ற பதத்தைப் பொருத்தினால் யதார்த்தமான அர்த்தம் வெளிப்படும். -

"ஞானம் என்பது பேச்சுக்குரிய விஷயமன்று. அப்படியிருக்க, அதை உபதேசம் செய்வதெப்படி? ஆகவே, ஞானத்தின் எதிர்மறை வார்த்தையை எடுத்துக்கொண்டு சுலோகத்திற்கு அர்த்தம் செய்துபாரும்.-

"ஞானம் என்ற சொல்லை பொருத்தி நீர் சொன்ன அர்த்தத்தை நான் கேட்டேன். ஆனால், அது இருக்கும் இடத்தில் அஞ்ஞானம் என்ற சொல்லை பொருத்தி அர்த்தம் பார்ப்பதில் நஷ்டமென்ன? அஞ்ஞானம் பேச்சிற்குரிய விஷயமாகிறது. ஞானம் இயல்பால் பேச்சிற்கு அப்பாற்பட்டதன்றோ?-