ஷீர்டி சாயி சத்சரிதம்
எத்தனையோ ஆண்டுகளாக பாபாவிடம் ஒரு செங்கல் இருந்து வந்தது. யோகாசனமாக அமரும்போது பாபா அச் செங்கல்லின் மீது ஒரு கையை வைத்துக்கொள்வார்.
ஏகாந்தமான இரவுநேரத்தில் அச் செங்கல்லின்மீது ஆதாரமாக ஒரு கையை ஊன்றிக்கொண்டு அமைதியான மனத்துடன் யோகாசனத்தில் பாபா அமர்ந்திருப்பார்.
இந்த கிரமம் எத்தனையோ ஆண்டுகளாக சிரமமின்றியும் தடங்கலின்றியும் நடந்துவந்தது. கிரமம் உடையவேண்டுமென்றும் எதிர்பாராதது நடக்கவேண்டுமென்றும் விதிக்கப்பட்டிருக்கும்போது, எவ்வளவு முறைதவறாத நியமமாயினும், அது சொல்லாமற் போகிறது!
ஒரு சமயம் பாபா மசூதியில் இல்லாதிருந்தபோது ஒரு பையன் தரையைப் பெருக்கிக்கொண்டிருந்தான். அடியில் சுத்தமாகப் பெருக்கவேண்டும் என்பதற்காகச் செங்கல்லைக் கொஞ்சம் தூக்கினான்.
உடையவேண்டிய வேளை வந்துவிட்டபடியால், செங்கல் பையனுடைய கையிலிருந்து நழுவியது. தடாலென்று கீழே விழுந்து உடனே இரண்டு துண்டுகளாக உடைந்தது.
இதுபற்றிக் கேள்வியுற்ற பாபா சொன்னார், "உடைந்தது செங்கல் அன்று; என்னுடைய விதி உடைந்துவிட்டது." இவ்வாறு கூறியபின் பாபா மிகவும் கொந்தளிப்படைந்தார். நேத்திரங்களிலிருந்து துக்கக்கண்ணீர் வடிந்தது.
கையை ஊன்றிக்கொண்டு தினமும் யோகாசனத்தில் அமரும் செங்கல் உடைந்தபோது, அவருடைய இதயமும் உடைந்தது. துக்கம் தொண்டையை அடைத்தது.
எத்தனையோ ஆண்டுகளாக யோகாசனத்திற்கு மூலபீடமாக விளங்கிய பழைய செங்கல் இவ்வாறு திடீரென்று உடைந்தது கண்டு, அவருக்கு மசூதியே வெறிச்சோடிப்போனது போலத் தெரிந்தது.
தம்முடைய பிராணனைவிட அதிகமாக நேசித்த செங்கல்லை அந்த நிலையில் பார்த்த பாபா மனமுடைந்துபோனார். அவருடைய சித்தம் கலங்கியது.
அந்தச் செங்கல்லின்மீது தான் பாபா கையை ஊன்றிக்கொண்டு யோகாசனத்தில் அமர்ந்து மணிக்கணக்கில் யோகம் பயில்வார். அதனிடம் அவர் பெரும்பிரேமை வைத்திருந்தது இயல்பே.
"எதனுடைய கூட்டுறவில் ஆத்மசிந்தனை செய்தேனோ, எதை என் உயிருக்குயிராக நேசித்தேனோ, எது என்னுடைய சங்கத்திலிருந்து விடுபட்டுவிட்டதோ, அது இல்லாமல் நானும் இருக்கமுடியாது.-
"அந்தச் செங்கல், இந்த ஜென்மத்து நண்பன், என்னைப் புறக்கணித்துவிட்டுப் போய்விட்டது". இவ்வாறு அதன் நற்குணங்களை ஞாபகப்படுத்திக்கொண்டு பாபா அழ ஆரம்பித்தார்.
ஒரு சந்தேகம் இங்கு எழுவது சகஜமே (இயல்பே). செங்கல் ஒருகணத்தில் அழியக்கூடிய பொருள்தானே? சோகப்படுவதில் என்ன அர்த்தம் இருக்கிறது? மக்கள் என்ன நினைப்பார்கள்? என்ன பேசுவார்கள்?