valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 14 February 2019

ஷீர்டி சாயி சத்சரிதம் 

கதவைத் திறந்து பார்த்தபோது, லக்மீச்சந்த் ஷிர்டிக்கு வர விரும்புகிறாரா என்று கேட்கும் நோக்கத்துடன் நண்பர் சங்கர் ராவ் வந்திருந்தார். 

சங்கர் ராவ் முதலில் நாராயண மஹாராஜை தரிசனம் செய்ய கேட்காங்வ் செல்ல வேண்டுமென்று நினைத்திருந்தார். பிறகு அவர் மனம் மாறி முதலில் ஷிர்டிக்குப் போகலாம் என்று முடிவெடுத்தார். 

எந்த இலக்குக்காக லக்மீச்சந்த் எல்லா முயற்சிகளையும் எடுக்கவேண்டுமென்று நினைத்தாரோ, அது பிரயாசை ஏதுமில்லாமலேயே அவருடைய வாயிற்படி தேடி வந்தது! லக்மீச்சந்தின் மகிழ்ச்சி கரை கடந்தது. 

தம் சிற்றப்பனின் மகனிடமிருந்து ரூ.15 /- கடன் வாங்கிக் கொண்டார். நண்பர் சங்கர் ராவும் அவ்வாறே செய்தார். இருவரும் கிளம்பத் தயாராயினர். 

மூட்டை முடிச்சுகளைக் கட்டிக்கொண்டு இருவரும் கிளம்பினர். ரயில் நிலையத்திற்கு நேரத்தோடு சென்று பயணச் சீட்டுகளை வாங்கிக்கொண்டு சௌகரியமாக ரயில் வண்டியைப் பிடித்தனர். 

சங்கர் ராவ் ஒரு பஜனைப்  பிரியர்.  ஆகவே இருவரும் ரயில் வண்டியிலேயே பஜனை பாட ஆரம்பித்தனர். இயல்பாகவே விஷய ஆர்வம் கொண்ட லக்மீச்சந்த், வழியிலேயே தகவல்களை அறிந்துகொள்ள முயன்றார். 

தங்களுடைய நம்பிக்கையை விருத்தி செய்துகொள்வதற்காக, ஷிர்டியிலிருந்து வந்த மக்கள் எவர்களையாவது சந்திக்க நேர்ந்தால், அவர்களுக்கு வணக்கம் தெரிவித்து சாயிபாபாவின் மஹிமையைச் சொந்த அனுபவத்தால் அறிந்தவாறு விளக்கும்படி கேட்டுக்கொண்டனர். 

இருவரும் விசாரித்தனர், "சாயி பாபா ஒரு பெரிய மஹான்; அஹமத் நகரப் பிராந்தியத்தில் பெரும் புகழுடையவர் என்பது எங்களுக்கு தெரியும். ஆயினும் உங்களுடைய சொந்த அனுபவங்களை எங்களுக்கு அறுதியிட்டுச் சொல்லுங்கள்."

அவர்கள் பயணம் செய்த பெட்டியில் ஷிர்டியின் அருகிலிருந்து வந்த நான்கு முஸ்லீம்கள் இருந்தனர். அவர்களுடன் சம்பாஷணை செய்ததில்  இருவருக்கும் மிகுந்த திருப்தி கிடைத்தது. 

எளிமையும் நம்பிக்கையும் நிறைந்த பக்தரான லக்மீச்சந்த், அன்புடன் அவர்களிடம் கோரினார், "உங்களுக்கு சாயி பாபாவைப்பற்றி ஏதாவது தெரிந்திருந்தால் தயவு செய்து சொல்லுங்கள்."

அவர்கள் பதில் கூறினர், "சாயி பாபா ஒரு பெரிய மஹான். ஷிர்டியில் பல ஆண்டுகளாக வசித்து வருகிறார். அவர் ஒரு தலைசிறந்த அவலியா (இஸ்லாமிய முனிவர்); சித்த புருஷர்."

இவ்விதமாக சம்பாஷணை செய்துகொண்டே சந்தோஷமாக பயணம் செய்து அவர்கள் கோபர்காங்வை அடைந்தபோது, சட்டென்று லக்மீச்சந்துக்கு ஞாபகம் வந்தது. 

"சாயி பாபாவுக்கு கொய்யாப்பழங்கள் மீது பிரியம்; கொய்யா கோபர் காங்வில் அமோகமாக விளைகிறது. கோதாவரி நதிக்கரையில் விற்பனை நடக்கும். நாம் கொய்யாப்பழங்களை பாபவுக்கு சமர்ப்பிக்கலாம். "