valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 7 January 2021


 ஷீர்டி சாயி சத்சரிதம்

வண்டியைப் போலவே குதிரைகளும் கம்பீரமாக இருந்தன. அவை வாடகைவண்டிக் குதிரைகளா என்ன? இலக்கை நோக்கி உற்சாகத்துடன் ஓடி, மற்ற வண்டிகளைப் பின்னுக்குத் தள்ளின.

இரவு பதினொன்று மணியளவில் கிளம்பிய வண்டி, இரவெல்லாம் வேகமாக ஓடி விடியற்காலையில் ஓர் ஓடைக்கருகில் நின்றது.

வண்டியோட்டி குதிரைகளைத் தண்ணீர் குடிப்பதற்கு அவிழ்த்துவிட்டுவிட்டு, "நான் இதோ வந்துவிடுகிறேன். நாம் சாவகாசமாகச் சிறிது சிற்றுண்டி உண்ணலாம்" என்று சொன்னான்.

"நான் போய்க் கொஞ்சம் குடிப்பதற்குத் தண்ணீர் கொண்டுவருகிறேன். பிறகு நாம் மாம்பழம், பேடா, குள் பாபடி (கோதுமை மாவை நெய்யில் வறுத்து, வெல்லம் சேர்த்துச் செய்யும் இனிப்பு) எல்லாம் உண்ணலாம். அதன் பிறகு குதிரைகளை பூட்டிக்கொண்டு நம் பயணத்தைக் தொடரலாம்" என்று வண்டியோட்டி கூறினான்.

இந்த வார்த்தைகளைக் கேட்ட கோசாவியின் மனத்தில் சந்தேகம் ஏற்பட்டது. 'தாடி வைத்துக்கொண்டு முஸ்லீமைபோல் காட்சியளிக்கும் இவன் அளிக்கும் சிற்றுண்டியை நான் ஏற்றுக்கொள்வதா வேண்டாவா?'

ஆகவே, அவர் வண்டியோட்டியிடம் ஜாதிபற்றி விசாரித்தார். வண்டியோட்டி பதில் சொன்னான், "நீங்கள் ஏன் இப்படி சந்தேகத்தால் மனம் உளைகிறீர்கள்? நான் கார்வாலைச் சேர்ந்த இந்து க்ஷத்திரியன். ராஜபுதன ஜாதியைச் சேர்ந்தவன்.

"மேலும், இவ்வுணவுப் பொருள்கள் நானாவால் உங்களுக்கென்று என்னிடம் கொடுக்கப்பட்டன. ஆகவே, சிறிதளவும் சந்தேகம் இன்றி அமைதியான மனத்துடன் சிற்றுண்டி அருந்துங்கள்".

இவ்விதமாக கோசாவிக்கு நம்பிக்கை ஏற்பட்டவுடன் இருவரும் சிற்றுண்டி அருந்தினர். குதிரைகள் மறுபடியும் வண்டியில் பூட்டப்பட்டுப் பயணம் தொடர்ந்தது; சூரியோதய சமயத்தில் முடிந்தது.

குதிரைவண்டி கிராமத்தினுள் நுழைந்தவுடனே நானாவின் கச்சேரி (அரசு அலுவலகம்) தெரிந்தது. குதிரைகளும் சிறிது ஓய்வெடுத்தன. ராம்கீர் புவாவின் மனம் சாந்தியடைந்தது.

புவா சிறுநீர் கழிப்பதற்காகச் சாலையின் மறுபக்கம் சென்றார். அதே இடத்திற்குத் திரும்பிவந்தபோது அவருக்காக ஓர் ஆச்சரியம் காத்திருந்தது.

வண்டியைக் காணோம்; குதிரைகளைக் காணோம்; வண்டியோட்டியையும் காணோம்! யாருமே இல்லாமல் அவ்விடம் வெறிச்சென்றிருந்தது.

ராம்கீர், 'இதென்ன அற்புதம்' என்று நினைத்து வியந்தார். "என்னை இவ்வளவு தூரம் அழைத்து வந்தவர் எப்படி திடீரென்று எங்கோ போய்விட்டார்?".

இருந்தபோதிலும், நாணவைச் சந்திக்கவேண்டுமென்ற ஆவலில் புவா கச்சேரிக்குள் சென்றார். நானா அவரது இல்லத்தில் இருந்தாரென்று அறிந்தார். ஆகவே புவா நானாவின் இல்லத்தை நோக்கி விரைந்தார்.