valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 8 October 2020


ஷீர்டி சாயி சத்சரிதம் 


"ஒரு சிறுவன் ரூ.50 /- மதிப்பீட்டுக்கு வேலை செய்திருந்தான். இரண்டாமவன் ரூ.100 /- மதிப்பீட்டுக்கு வேலை செய்திருந்தான். மூன்றாமவன் ரூ.150 /- மதிப்பீட்டுக்கு வேலை செய்திருந்தான். என்னுடைய வேலை இம்மூவரின் வேலையைவிட இரண்டு மடங்காக மதிப்பிடப்பட்டது. -

"என்னுடைய கைத்திறமையை அறிந்த முதலாளி மகிழ்ச்சி அடைந்தார். என்மீது வாஞ்சைக்கொண்டு என்னை கௌரவப்படுத்தினார்.-

"அவர் எனக்கு ஓர் உடையைப் பரிசாக அளித்தார். ஒரு தலைப்பாகையும் உடல் முழுவதையும் தழையத் தழைய மறைக்கும் ஓர் ஆடையையும் (சேலை) அளித்தார். ஆனால், கொடுத்தவுடனே அதை நான் மூட்டை கட்டி ஒரு மூலையில் வைத்துவிட்டேன். -

"பிறர் கொடுப்பது நமக்கு எப்படி போதும்? எவ்வளவு கொடுக்கப்பட்டாலும் அது குறைவாகத்தான் இருக்கும். ஆனால், இறைவன் நமக்கு அளிப்பதோ முடிவில்லாத செல்வம். யுகம் முடிந்தாலும் முடியாத செல்வம். -

"என் சர்க்கார் (இறைவன்) கொடுப்பதே கொடுப்பது. மற்றவர்கள் கொடுப்பதை இதனுடன் எப்படி ஒப்பிட முடியும்? மரியாதைக்கு அவமரியாதையை பூஷணம் (அணிகலன்) ஆக்க முடியுமோ? -

"என் சர்க்கார், 'எடுத்துச் செல்லுங்கள்; எடுத்துச் செல்லுங்கள்!' என்று சொல்கிறார். ஆனால், எல்லோரும், 'கொடுங்கள்; எனக்கு மட்டும் கொடுங்கள்! என்று கேட்கின்றனர். ஆயினும், யாரும் நான் சொல்வதைக் கேட்பதில்லை; என்னுடைய வார்த்தைகளை லட்சியம் செய்வதில்லை.-

"என்னுடைய கஜானா நிரம்பிவழிகிறது; அனால், யாருக்குமே வண்டிகளை கொண்டுவரும் சிரத்தை இல்லை. தோண்டு என்று சொன்னால் யாரும் தோண்டுவதில்லை; ஒருவரும் பிரயத்தனம் செய்வதில்லை.-

"அந்தச் செல்வத்தை தோண்டியெடுத்து, வண்டி வண்டியாக எடுத்துச் செல்லுங்கள் என்று நான் சொல்கிறேன். ஆயினும், தன் தாயின் செக்கப் பொன்னான மைந்தனே இந்தக் கஜானாவை எடுத்துச் செல்வான். -

"பார்க்கப் போனால், நம்முடைய உடலின் கதியும் விதியும் என்ன? மண் மண்ணோடு சேரும், காற்று காற்றோடு கலந்துவிடும். இந்த நல்வாய்ப்பை நழுவவிட்டுவிட்டால், மறுபடியும் கிடைக்காது!

"ஆயினும் என் பக்கீரின் கலைகளும் என் பகவானின் லீலைகளை என் சர்க்காரின் லயமான செயல்பாடுகளும் ஒப்பற்றவை; தனித்தன்மை வாய்ந்தவை.-

"நானும் சில சமயங்களில் சில இடங்களுக்குச் செல்கிறேன். போய் அதே இடத்தில் ஓய்வாக உட்கார்ந்துகொள்கிறேன். ஆயினும் என் ஜீவன் மாயையில் சிக்கிக்கொண்டு சுழற்காற்றில் சிக்கிய காகிதப்பட்டம் போல் கீழ்நோக்கிப் பாய்கிறது.-

"இந்த மாயையிலிருந்து விடுபடுவது கடினமான காரியம். அது என்னை ஹீனனாகவும் தீனனாகவும் ஆகிவிடுகிறது. இரவுபகலாக என் மக்களைப்பற்றியே சிந்திக்க வைக்கிறது.