ஷீர்டி சாயி சத்சரிதம்
46 . காசி - கயா புனிதப் பயணம் - இரண்டு ஆடுகளின் காதை
ஓம் ஸ்ரீ விநாயகனே போற்றி! ஸ்ரீ சரஸ்வதியே போற்றி!
ஸ்ரீ குருமஹாராஜனே போற்றி! குலதேவதைக்கும் ஸ்ரீ சீதாராமச்சந்திரனுக்கும்
என்னுடைய பணிவான வணக்கங்கள். பூஜ்யகுரு ஸ்ரீசாயிநாதனை
பக்தியுடன் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.
ஸ்ரீ சாயி பாபா! உம்முடைய பொற்கமலப் பாதங்கள் புனிதமானவை; உம்முடைய நினைவு புனிதமானது; உம்முடைய தரிசனம் புனிதமானது. இம் மூன்றும் எங்களைக் கர்மத்தின் தளைகளிலிருந்து விடுவிக்கக்கூடிய சக்தி பெற்றவையாகும்.
தற்காலம் உருவமற்ற நிலையில் இருந்தாலும், விசுவாசத்துடனும் பக்தியுடனும் உம்முடன் ஒன்றிவிட்டால், சமாதியிலுள்ள உமது ஜோதி கண்மலர்கிறது. பக்தர்கள் இன்றும் இதை அனுபவபூர்மாக உணர்கின்றனர்.
எவ்வளவு முயற்சி செய்யினும் எங்கள் கண்களுக்குப் புலப்படாதவாறு செய்துவிடுகிறீர்; அவ்வளவு மெல்லியதாக நூலைப் பிடித்திருக்கிறீர். எப்படியிருந்தால் என்ன? இந்த தேசத்தில் இருப்பினும், அல்லது வேறு தேசத்தில் வசிப்பினும், பக்தர்களை இந்த நூலால் உம் திருவடிகளுக்கு இழுத்துவிடுகிறீர் அல்லீரோ?
அவ்வாறு இழுத்துவந்து அவர்களைக் கட்டியணைக்கிறீர், ஒரு தாய் தம் குழந்தைகளை போஷிப்பதுபோல சிரமமின்றி அவர்களை சுலபமாகப் பராமரிக்கிறீர்.
நீர் எங்கிருக்கிறீர் என்று எவருக்கும் தெரியாத வகையில் நூலை இழுக்கிறீர்; ஆனாலும், விளைவுகள் என்னவோ, பக்தர்களுக்குப் பின்னால் நீர் எந்நேரமும் அரணாக நிற்கிறீர் என்பதை அவர்கள் உணர்ந்துகொள்ளும்படி செய்கின்றன.
மெத்தப் படித்த பண்டிதர்களும் சாமர்த்தியசாலிகளும் அழகர்களும் அகந்தையால் இவ்வுலக வாழ்வெனும் சேற்றில் மாட்டிக்கொள்கிறார்கள். ஆனால் நீரோ , எளிமையும் நம்பிக்கையும் உடையவர்களுடனும், அப்பாவி மக்களுடனும் உம்முடைய சக்தி கொண்டு விளையாடுகிறீர்.
அகமுகமாக வியூகங்களை வகுத்து எல்லா விளையாட்டுகளையும் நீர் ஆடுகிறீர்; ஆனாலும், வெளிபார்வைக்குத் தனிமைவிரும்பி போலவும் சம்மந்தமில்லாதவர்போலவும் பாசாங்கு செய்கிறீர். எல்லாக் காரியங்களையும் செய்துவிட்டு 'நான் செயலற்றவன்' என்று சொல்லிக்கொள்கிறீர். உம்முடைய செயல்முறைகளை அறிந்தவர் எவரும் உளரோ!