valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 2 February 2023

 ஷீர்டி சாயி சத்சரிதம்


சாயியின் கதைகள் எண்ணற்றவை. அவையனைத்தையும் பாடினால், பெரியதாக புராணம் ஆகிவிடும். சுருக்கமாகச் சொல்லவேண்டுமென்று சங்கற்பம் செய்துகொண்டேனினும், கதை கட்டுப்படாமல் விரிந்துகொண்டே போகிறது.

கேட்பவர்களின் உற்சாகம் எப்படிப் பெருகுகிறதோ அப்படியே கதைசொல்பவரின் ஆர்வமும். ஆகவே, நாம் பரஸ்பரம் ஆவலைத் தணித்துக்கொண்டு உண்மையான ஆன்மீக முன்னேற்றம் அடைவோம்.

இங்கு சாயியே கப்பலின் தலைவர். ஒருமுனைப்பட்ட கேள்வியே பயணக் கட்டணம். இக் கதையைப் பயபக்தியுடன் சிரத்தையாக கேட்பவர் தாமதமின்றி அக்கரை சேர்ந்துவிடுவார்.

சென்ற அத்தியாயத்தில் ஹண்டி வர்ணனை சுருக்கமாகச் சொல்லப்பட்டது. தத்தாத்திரேய பக்தி வலுப்படுத்தப்பட்ட விவரமும் நைவேத்தியம் பக்தர்களுக்கு விநியோகம் செய்யப்பட்ட விவரமும் சொல்லப்பட்டன.

கதை சொல்லும் திட்டத்தில், ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவிலும் அடுத்த அத்தியாயத்தின் விஷயம் பற்றி குறிப்பளிக்கப்படுவது அனைவருக்கும் தெரிந்ததே.

ஆனால், சென்ற அத்தியாயத்தை முடிக்கும் தறுவாயில், அடுத்துச் சொல்லவேண்டிய கதை எனக்கு ஞாபகத்திற்கு வரவில்லை. ஆகவே, சாயி எதை ஞாபகப்படுத்துகிறாரோ  அதை எழுதலாம் என்று நினைத்தேன்.

ஏற்கெனவே தெளிவாக அறிவித்தவாறு, சாயியின் கிருபையால் எது ஞாபகப்படுத்தப்பட்டதோ அதை விவரிக்கிறேன்.

ஆகவே, இடைஞ்சல்களை தூரமாகத் தள்ளிவைத்துவிட்டு சாந்தமான மனத்துடன் முழுகவனத்துடனும் கேட்கும் படி கதைகேட்பவர்களை பிரார்த்தனை செய்கிறேன். உங்களுடைய மனம் ஆனந்தமடையும்.

ஒருசமயம், சிறந்த பக்தரான நானா சாந்தோர்கர் மசூதியில் உட்கார்ந்துகொண்டு பாபவின் பாதங்களை பிடித்துவிட்டுக்கொண்டே,ஸ்ரீ மத் பகவத் கீதையின் சுலோகங்களை மெல்லிய குரலில் ஓதிக்கொண்டிருந்தார்.

பாபாவின் பாதங்களை பிடித்துவிட்டுக்கொன்டே கீதையின் நான்காவது அத்தியாயத்தை மெல்லிய குரலில் ஓதிக்கொண்டிருந்தார். அப்பொழுது என்ன அற்புதம் நடந்ததென்று பார்க்கலாம்!

நடந்தது, நடந்துகொண்டிருப்பது, நடக்கப்போவது; அனைத்தையும் அறிந்த சமர்த்த சாயி, நானாவுக்கு கீதையின் அர்த்தத்தை விளக்கவேண்டுமென்று எண்ணம் கொண்டார்.

கீதையில் 'ஞானகர்மசந்யாச யோகம்' என்ற தலைப்பில் அமைந்த நான்காவது அத்தியாயத்தை தமக்குள்ளேயே நானா முணுமுணுத்துக் கொண்டிருந்ததை ஒரு சாக்குபோக்காக உபயோகித்து பாபா அவரை ஒரு கேள்வி கேட்டார்.

'ஓ பார்த்தனே, எல்லாச் செயல்களும் மொத்தமாக ஞானத்தில் முடிகின்றன' என்று முடியும் முப்பத்துமூன்றாவது சுலோகத்தை முடித்துவிட்டு, 'பணிவுடனும் வணக்கமாகவும் அறிவாயாக' என்று ஆரம்பிக்கும் முப்பத்துநான்காவது சுலோகத்தை நானா தொடர்ந்தார்.